Tuesday, July 29, 2008

2008ல் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க ஹூண்டாய் இந்தியா முடிவு


ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், 2008ம் ஆண்டில் அதன் ஏற்றுமதியை இரட்டிப்பாக்க திட்டமிட்டிருக்கிறது. 2007ல் 1.26 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்திருந்த அந்த நிறுவனம் 2008ல் 2.4 லட்சம் கார்களை ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருக்கிறது. மேலும் 2013ல் 250 மில்லியன் அமெரிக்க டாலர்களை இங்கு முதலீடு செய்யவும் திட்டமிட்டிருக்கிறது. ஹூண்டாய் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்தார். இந்தியாவில் இரண்டாவது பெரிய கார் கம்பெனியாக இருக்கும் ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனையில் 45 சதவீதம் ஏற்றுமதி மூலம் நடக்கிறது. இது 2007ம் ஆண்டு 38 சதவீதமாகத்தான் இருந்தது. 2012 - 13ல் நாங்கள் இங்கு 250 அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய இருக்கிறோம். இதன் மூலம் எங்களின் மொத்த முதலீடு ஒரு பில்லியன் டாலரை தாண்டிவிடும் என்று ஹூண்டாய் நிறுவன செய்தி தொடர்பாளர் ராஜிவ் மித்ரா தெரிவித்தார். ஏற்கனவே நாங்கள் இங்கு 733 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்திருக்கிறோம் என்றார் அவர். இந்த வருடத்தில் நாங்கள் 2.4 லட்சம் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிட்டிருக்கிறோம். அதில் சுமார் 1.5 லட்சம் கார்கள் சான்ட்ரோ மற்றும் ஐ10 கார்களாக இருக்கும் என்றும் மற்றவை கெட்ஸ் மற்றும் ஆக்ஸன்ட் மாடல்களாக இருக்கும் என்றும் மித்ரா தெரிவித்தார். ஏற்கனவே எங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து 50 ஆயிரம் ஐ10 கார்களுக்கு ஆர்டர் இருக்கிறது என்று சொன்ன மித்ரா, நாங்கள் இங்கிருந்து சுமார் 95 நாடுகளுக்கு எங்களது கார்களை ஏற்றுமதி செய்கிறோம் என்றார். உள்நாட்டிலும் வெளிநாடுகளிலுமாக சேர்த்து இந்த வருடத்தில் நாங்கள் 5.3 லட்சம் கார்களை விற்க திட்டமிட்டிருக்கிறோம். இது 2007 விற்பனையான 3.37 லட்சம் கார்களை விட 60 சதவீதம் அதிகம் என்றும் மித்ரா தெரிவித்தார்.

நன்றி : தினமலர்


No comments: