Tuesday, November 10, 2009

பயன்படாத பயிர்க் காப்பீடு

நாட்டின் 100 சதவீத உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதுடன், கிட்டத்தட்ட 60 சதவீதம் பேருக்கு வேலை வாய்ப்பையும் வழங்குவது விவசாயம். இத்தகைய பெருமைமிகு விவசாயத்தைப் பாதுகாக்க வேண்டியது அரசின் தலையாய கடமை. ஆனால், விவசாயத்தைக் காக்கும் திட்டங்கள் எதுவும் ஆக்கப்பூர்வமானதாகவோ போதுமானதாகவோ இல்லை.

ஆந்திரப் பிரதேசத்தின் பல பகுதிகள் கடந்த ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்டன. காரீப் பருவத்தில் பயிரிடப்பட்ட பெருமளவு பயிர்கள் மடிந்தன. நஷ்டமடைந்த விவசாயிகள் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீட்டுத் தொகை கோரி விண்ணப்பித்தனர். பல மாதங்களாகியும் இழப்பீடு கிடைக்கவில்லை. முதல்வர் ரோசய்யாவும், வேளாண் அமைச்சரும் பலமுறை கடிதம் எழுதிய பிறகும்கூட எதுவும் நடக்கவில்லை. இழப்பீடு வழங்குவதில் மத்திய அரசின் பங்குத் தொகை இன்னும் கிடைக்காததே இதற்குக் காரணம்.

மத்திய அரசு தர வேண்டிய ரூ.358.58 கோடியால் மட்டும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்குப் பெரிய நிவாரணம் கிடைத்துவிடப்போவதில்லை. எனினும், விவசாயிகளின் பிரச்னையில் மத்திய அரசுக்கு உரிய அக்கறையில்லை என்பதைத் தெரிந்து கொள்ள இது ஓர் உதாரணமாக அமைந்துவிட்டது.

ஆந்திர விவசாயிகள் கோரியிருக்கும் மொத்த இழப்பீட்டுத் தொகையே ரூ. 806.07 கோடிதான். நஷ்டத்தில் சிறு துரும்புதான் இது. இதற்குக் காரணம் விவசாயிகள் அனைவரும் பயிர்க்காப்பீடு என்கிற பாதுகாப்பின்கீழ் வராததுதான்.

பயிர்க்காப்பீடு செய்தவர்கள்கூட, அவர்களாக முன்வந்து அதைச் செய்யவில்லை. அவர்களுக்குக் கடன் கொடுத்த வங்கிகள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் எனக் கட்டாயப்படுத்தியதன் விளைவாக, வேறு வழியில்லாமல் இந்தத் திட்டத்தில் அவர்கள் சேர்ந்தார்கள்.

நடைமுறையில் சிறு விவசாயிகளும், குத்தகைக்கு விவசாயம் செய்வோரும் வங்கிகள் மூலமாகக் கடன் பெறுவதில்லை. இதனால், பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் சேரும் விவசாயிகளின் எண்ணிக்கை மிகக் குறைந்த விகிதத்தில் இருக்கிறது. அதுவும், தானாக முன்வந்து காப்பீடு செய்வோர் மிகச் சொற்பம்.

காப்பீடு செய்வோரின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், பிரீமியத் தொகை அதிகமாக இருக்கிறது. பருவத்தையும், பயிரையும் பொறுத்து 2 முதல் 20 சதவீதம் வரை பிரீமியம் வசூலிக்கப்படுகிறது. கடன்களுக்கு அரசு வழங்கும் வட்டித் தள்ளுபடியைக் காட்டிலும் இது அதிகமானது என்பது வருந்தத்தக்க விஷயம்.

நாடு விடுதலையடைந்த காலத்திலேயே பயிர்க்காப்பீட்டின் அவசியத்தை தலைவர்கள் உணர்ந்திருந்தார்கள். 1947-48-ல் இதுபற்றி ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது. இரண்டுவிதமான காப்பீட்டு மாதிரிகளை இந்தக் குழு ஆய்வு செய்தது. பயிர்கள் நாசமாகும்போது, ஒவ்வொரு விவசாயியின் நஷ்டத்தையும் தனித்தனியே கணக்கிட்டு அதன்படி இழப்பீடு வழங்க வேண்டும் என்பது முதலாவது மாதிரி. அப்படியில்லாமல், ஒரே மாதிரியான பருவநிலை கொண்ட கிராமம், யூனியன், தாலுகா போன்றவற்றில் ஏற்பட்டிருக்கும் மொத்த நஷ்டத்தைக் கணக்கிட்டு, அதற்கேற்ப விவசாயிகளுக்கு இழப்பீடு தரலாம் என்பது இரண்டாவது மாதிரி.

ஒவ்வொரு விவசாயியின் தனித்தனி இழப்பீட்டைக் கணக்கிடுவதில் சிரமம் ஏற்படும் எனக் கருதப்பட்டது. தவறான நஷ்டக் கணக்கு காட்டப்படலாம், வேறு மாதிரியான முறைகேடுகளும் சாத்தியம் என்பதால், இந்தியாவில் முதலாவது மாதிரி, நடைமுறைக்கு ஒத்துவராது என முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து இரண்டாவது காப்பீட்டு மாதிரியை நடைமுறைப்படுத்துவதற்காக மாநிலங்களின் ஒப்புதல் கோரி மத்திய அரசு அனுப்பியது. எனினும், இந்தத் திட்டத்தால் தங்களுக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமையைக் காரணம் காட்டி பல மாநிலங்கள் இதை ஏற்க மறுத்தன.

1965-ம் ஆண்டில் மீண்டும் இதே திட்டம் கொண்டுவரப்பட்டபோதும் இதே கதைதான். மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பைச் சரிக்கட்டும் வகையில், மறுகாப்பீடு செய்யும் பணியை மத்திய அரசே செய்யும் எனக் கூறியபிறகும், எந்த மாநிலமும் திட்டத்தை ஏற்க முன்வரவில்லை.

1970-ல் எச்-4 பருத்திக்கு மட்டும் பிரத்யேகமான காப்பீட்டுத் திட்டத்தை எல்ஐசி அறிமுகப்படுத்தியது. அந்தச் சூழலில் 1972-ம் ஆண்டு காப்பீட்டுத் துறை தேசியமயமாக்கப்பட்டது. இதனால், ஜிஐசி எனப்படும் பொதுக்காப்பீட்டு நிறுவனம் எச்-4 பருத்திக்குக் காப்பீடு வழங்கும் பணியை ஏற்றது. இதன்பிறகு, நிலக்கடலை, கோதுமை, உருளைக்கிழங்கு போன்ற பயிர்களும் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டன. எனினும், தமிழகம், குஜராத், மகாராஷ்டிரம், ஆந்திரம், கர்நாடகம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மட்டும் இந்தக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் இருந்தது. 1978-79 வரை அமலில் இருந்த இந்தத் திட்டத்தில், ரூ. 3,110 விவசாயிகள் மட்டுமே சேர்ந்திருந்தனர். மொத்தம் வசூலான பிரீமியத் தொகை ரூ. 4.54 லட்சம். காப்பீட்டு நிறுவனம் சார்பில் வழங்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை ரூ. 37.88 லட்சம்.

இதன் பிறகு, 1979-ல் விவசாயக் கடன் பெறுவோர் கட்டாயமாகப் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும் என்கிற திட்டம் அறிமுகமானது. 1984-85 வரை ஒட்டுமொத்தமாக இந்தத் திட்டத்தில் 13 மாநிலங்களைச் சேர்ந்த 6.23 லட்சம் விவசாயிகள் சேர்ந்தனர். இந்தத் திட்டத்தில் ரூ.1 கோடியே 97 லட்சம் பிரீமியத் தொகை வசூலானது. ரூ. 1 கோடியே 57 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

ஒட்டுமொத்த பயிர்க் காப்பீட்டுத் திட்டம் எனப்படும் புதிய திட்டம் 1985-ம் ஆண்டில் அறிமுகமானது. 1999-வரை இந்தத் திட்டத்தில் 7.62 கோடி விவசாயிகள் சேர்ந்தனர். ரூ. 24 ஆயிரத்து 922 கோடி மதிப்பிலான பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டன. இந்தக் காலகட்டத்தில் ரூ. 403 கோடி பிரீமியம் வசூலிக்கப்பட்டது. ரூ. 2,365 கோடி இழப்பீடாக வழங்கப்பட்டது.

இந்த இழப்பீட்டுத் தொகையில் ரூ. 803 கோடியை மாநிலங்களும் மீதியை மத்திய அரசும் வழங்கின. பிரீமியத் தொகையைக் காட்டிலும் இழப்பீட்டுத் தொகை மிக அதிகமாக இருந்ததால், பிரீமியத் தொகையை மாற்றியமைக்கத் திட்டக்குழு முடிவு செய்தது.

இதையடுத்து, 1999-ல் தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டம் என்கிற புதிய திட்டம் அறிமுகமானது. முன்பிருந்த காப்பீட்டுத் திட்டத்தில் இழப்பீட்டுத் தொகையின் மூன்றில் ஒருபகுதியை காப்பீட்டு நிறுவனம் வழங்கியது. புதிய திட்டத்தில் காப்பீட்டு நிறுவனத்தின் பங்களிப்பு நீக்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசும் மாநில அரசும் சரிபாதியாகப் பகிர்ந்து வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

இதன் பிறகு வேளாண் காப்பீட்டு நிறுவனம் 2002-ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பொதுக் காப்பீட்டு நிறுவனம், நேஷனல், ஓரியண்டல், யுனைடெட் ஆகிய காப்பீட்டு நிறுவனங்களும் நபார்டும் சேர்ந்து இந்த அமைப்பை நிறுவின. தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியதே இதன் பணி.

இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதிலிருந்து இதுவரை 19 பருவங்கள் முடிந்திருக்கின்றன. இழப்பீடு கோருவதில் ஆந்திரப் பிரதேசம் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றன. ஆந்திரப் பிரதேசத்துக்கு இதுவரை ரூ.1,762.46 கோடி இழப்பீடு வழங்கப்பட்டிருக்கிறது. இன்னும் ரூ.801.20 கோடி நிலுவையில் உள்ளது. அதேபோல், தமிழகத்துக்கு ரூ.436.5 கோடி இழப்பீடு கிடைத்திருக்கிறது. இன்னும் ரூ.663.82 கோடி வர வேண்டியுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் இந்த ஆண்டின் இழப்பீட்டுத் தொகை மட்டும் ரூ.663.82 கோடியாக இருக்கிறது.

இது இந்தியா முழுவதுமான ஒட்டுமொத்த இழப்பீட்டுத் தொகையில் கிட்டத்தட்ட 30 சதவீதமாகும். ஆனால் பலன் பெறுவது என்னவோ வெறும் 11 லட்சம் விவசாயிகள் மட்டுமே. மொத்த விவசாயிகளின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் இது மிக மிகக் குறைவு.

காப்பீட்டுத் திட்டம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளைச் சென்றடையவில்லை என்பதையே இந்தப் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. இதற்குக் முழுக் காரணம் அரசின் வணிக ரீதியான அணுகுமுறைதான்.

தற்போதைய அனுபவத்தின் மூலமாவது, விவசாயிகளின் உண்மையான பிரச்னைகளை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். பயிர்கள் மடிந்த பிறகு, மிகத் தாமதமாக இழப்பீடு வழங்குவது நடைமுறைக்கு ஒவ்வாதது. உடனடியாக நிவாரண உதவிகளை வழங்கி, தொடர்ந்து பயிரிடுவதற்கான வழியை ஏற்படுத்தித் தரவேண்டும். விவசாயத்தின் உண்மையான பிரச்னைகளைப் புரிந்து கொள்ளாமல் ஏதோ கணக்கீட்டின் அடிப்படையில் இழப்பீடு வழங்குவதால் மட்டும் இந்தச் சிக்கல்கள் தீர்ந்துவிடாது.
கட்டுரையாளர் :பி.எஸ்.எம்.ராவ்
நன்றி : தினமணி

மாற்றங்களை எதிர்நோக்கும் மருத்துவக் கல்வி!

சென்னை பள்ளி ஒன்றில் அண்மையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் தங்களது படைப்பாக்கத்திறனை, அறிவாற்றலை அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தனர். அறிவியல் வினாக்களுக்கு அவர்கள் பளிச்பளிச் என்று பதில் அளித்தனர். இந்திய இளம் மூளைகளின் ஆற்றல் பிரமிக்க வைத்தது.

பிளஸ் டூ படிக்கும் மாணவர்களிடம் அடுத்து என்ன படிக்கப் போகிறீர்கள் எனக் கேட்டபொழுது, பலரும் மருத்துவம் பயில வேண்டும் என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தினர்.

ஒரு முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த மாணவி ""நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டால் எனக்கு எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. முப்பது லட்சம், நாற்பது லட்சம் கொடுத்து தனியார் கல்லூரிகளிலும் படிக்க முடியாது'' என்ற தனது மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்தார். பணம் இல்லை, வசதி இல்லை, எம்.பி.பி.எஸ். இடங்கள் போதுமானதாக இல்லை, அரசு ஒதுக்கீட்டில்கூட தனியார் கல்லூரியில் படிக்க வசதியில்லை என்றெல்லாம் மாணவர்கள் தங்களது பரிதாப நிலைமைகளை எடுத்துக் கூறினர்.

மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திட 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே தடைகள் இப்பொழுதும் நீடிப்பது வேதனைக்குரியது.

இன்றைய மக்கள்தொகைக்கேற்ப போதிய மருத்துவக் கல்லூரிகளை நமது மத்திய, மாநில அரசுகள் உருவாக்கத் தவறிவிட்டன. மருத்துவக் கல்வி தனியார்மயமாகி லாபம் கொழிக்கும் வியாபாரமாகிவிட்டது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் 106 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. தற்பொழுது ஏறத்தாழ 280 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சரிபாதிக்கும் மேல் தனியார் கல்லூரிகள். 1995-ல் 47-ஆக இருந்த தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 2006-ல் 131-ஆக அதிகரித்தது. அதாவது 84 புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகள் தோன்றின.

இதே காலகட்டத்தில் 1995-ல் 109-ஆக இருந்த அரசு மருத்துவக் கல்லூரிகள் 2006-ல் 131-ஆக உயர்ந்தன. அதாவது வெறும் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளே உருவாக்கப்பட்டன.

கல்விக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் போதிய நிதி ஒதுக்காததும், அரசுகளின் அலட்சியமுமே இந்தப் பரிதாப நிலைக்குக் காரணம். மருத்துவக் கல்லூரிகளும் நாடு முழுவதும் பரவலாகத் தொடங்கப்படாமல் ஒரு சில மாநிலங்களிலேயே அதிகம் தொடங்கப்பட்டன. மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழகம், குஜராத் போன்ற ஆறு மாநிலங்களில் மட்டும் 63 விழுக்காடு மருத்துவக் கல்லூரிகளும், 67 விழுக்காடு எம்.பி.பி.எஸ். இடங்களும் குவிந்துள்ளன. மருத்துவத் துறையில் பல பிரச்னைகளுக்கு இது வழிவகுத்துள்ளது.

தற்பொழுது இந்தியாவில் 6.90 லட்சம் மருத்துவர்கள் உள்ளனர். நமது மக்களின் தேவைக்கு இன்னும் 6 லட்சம் மருத்துவர்கள் தேவை. 6 லட்சம் மருத்துவர்களை உருவாக்கத் தற்போது உள்ள மருத்துவக் கல்லூரிகள் போதாது. எனவே மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் நலனையும், மக்கள் நலனையும் கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகள் 250-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும், தனியார் கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்வி - விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்குமென தி.மு.க. தனது சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால், புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் திட்டமோ ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.

ஏழை மாணவர்களின் கட்டணங்களை ஏற்கும் திட்டத்தை அரசு மறந்தேவிட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களிடம் அரசால் நியமிக்கப்பட்ட குழு நிர்ணயித்த கட்டணங்களைத் தவிர பல்வேறு வகையிலும் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதனால் நடுத்தர வகுப்பு குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர்.

புதிய மருத்துவக் கல்லூரிகளையும் மருத்துவப் பாடப் பிரிவுகளையும் தொடங்க அனுமதி வழங்கும் அதிகாரம் இந்திய மருத்துவக் கவுன்சிலிடமிருந்து மாநில மருத்துவக் கவுன்சில்களுக்கு மாற்றப்பட வேண்டும். மாநில மருத்துவக் கவுன்சில்களின் கட்டமைப்பாக மட்டுமே இந்திய மருத்துவக் கவுன்சில் இருக்க வேண்டும்.

மருத்துவக் கவுன்சில்களின் செயல்பாட்டில் கூடுதல் வெளிப்படைத் தன்மையும் ஜனநாயகமும் வேண்டும்.

புதிய மருத்துவக் கல்லூரிகளையும், பாடப்பிரிவுகளையும் தொடங்குவதற்கான விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும். அதேசமயம் மருத்துவக் கல்வியின் தரம் குறையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவக் கல்வி போதனைகளிலும் நவீன நுட்பங்களைப் புகுத்த வேண்டும்.

மருத்துவக் கவுன்சிலைக் கலைத்துவிட்டு புதிய உயர்கல்வி அமைப்பின்கீழ் மருத்துவக் கல்வியைக் கொண்டு வரவேண்டும் என்ற யஷ்பால் குழுவின் பரிந்துரை மேலும் அதிகாரக் குவியலையும், ஊழல் முறைகேடுகளையும் உருவாக்கும். எனவே அப்பரிந்துரை கைவிடப்பட வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மிகப்பெரிய தடையாக உள்ளது. இதைப் போக்க வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உடற்கூறியியல், உடல்இயங்கியல், உயிர்வேதியியல் போன்ற சிகிச்சை சாரா மருத்துவப் பேராசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகள், வசதிகளுடன் ஒரு லட்சம் ரூபாய் வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு நிறுவனங்களிலும் ஊதியமும், இதர படிகளும், சலுகைகளும் அதிகமாக உள்ளன. ஆனால் தமிழக அரசு போன்ற மாநில அரசுகள் குறைவான ஊதியத்தையே வழங்குகின்றன.

சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையில் மத்திய அரசுக்கு இணையான பதவி உயர்வையோ, படிகளையோ, இதர சலுகைகளையோ சிகிச்சை சாரா மருத்துவப் பேராசிரியர்களுக்கு வழங்கவில்லை. ஒருசில சிகிச்சை சார்ந்த துறைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு விருப்ப ஓய்வு பெறும் வாய்ப்பை அளித்துள்ள அரசு, சிகிச்சை சாரா மருத்துவப் பேராசிரியர்களுக்கு அவ்வாய்ப்பை வழங்கவில்லை.

பதவி உயர்வையும், படிகளையும், இதர சலுகைகளையும் மத்திய அரசுக்கு இணையாக வழங்க மாட்டேன், விருப்ப ஓய்வும் வழங்க மாட்டேன் என்பது ஒருவகை கொத்தடிமைத்தனமாகவே உள்ளது. உளம் வெதும்பும் இப்பேராசிரியர்களின் குறைபாடுகள் களையப்பட்டால்தான் இத்துறைகளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரிய இளைய தலைமுறையினர் முன்வருவர்.

மேலும், முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக உடற் கூறியியல், உடல் இயங்கியியல், உயிர் வேதியியல், நோய் குறியியல், நுண்ணுயிரியியல் போன்ற சிகிச்சை சாரா முதுநிலை மருத்துவக் கல்வி இடங்கள் அதிகப்படுத்தப்பட வேண்டும்.

முதுநிலை மருத்துவக்கல்வி இடங்களில் குறைந்தபட்சம் 50 விழுக்காட்டை அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கே அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும் வழங்க வேண்டும். அவ்வாறு அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவம் பயிலும் மருத்துவர்கள் குறிப்பிட்ட காலம் வரை அரசுப்பணியில் நீடிக்கும் வகையில் உத்தரவாதத்தைப் பெற வேண்டும்.

இவற்றைச் செய்யாமல் மருத்துவப் பேராசிரியர் பற்றாக்குறையையும் போக்க முடியாது. போதிய புதிய மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்க முடியாது.

பிளஸ் டூ வரை தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்கள் மருத்துவக் கல்வியில் முதலாம் ஆண்டில் திடீரென ஆங்கில வழியில் பயில்வதில் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். புதிய சூழல், ராகிங் போன்றவையும் கூடுதல் பிரச்னைகளாகின்றன.

மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட இப் பிரச்னைகளால் தேர்வில் முதல் தோல்வியைச் சந்திக்கின்றனர். முதலாம் ஆண்டில் மூன்று பாடங்களில் ஆறு தாள்களுக்கான தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது. ஏதேனும் ஒரு தாளில் செய்முறைத் தேர்விலோ அல்லது கோட்பாட்டுத் தேர்விலோ தேர்ச்சி பெறாவிட்டால்கூட அவர்கள் அடுத்த கட்ட வகுப்புகளுக்குச் செல்ல முடியாது.

ஆறு மாதம் கழித்து வரும் தேர்வில் குறிப்பிட்ட தாளில் தேர்ச்சி பெற்ற பிறகே அடுத்த கட்ட வகுப்புகளுக்குச் செல்ல முடியும். இதனால் தேர்வில் தோல்வியடைபவர்கள் தங்களோடு முதலாமாண்டில் சேர்ந்த இதர மாணவர்களைவிட ஆறுமாதங்கள் கல்வியில் பின்தங்க நேரிடுகிறது.

ஐந்தரை ஆண்டுகளில் முடிக்க வேண்டிய படிப்பை ஆறு ஆண்டுகளில் முடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அடுத்து வரும் தேர்விலும் வெற்றி பெறவில்லையெனில் மேலும் ஆறுமாதங்கள் விரயமாகி விடும். ஒரே ஒரு தாளில் கோட்பாட்டுத் தேர்விலோ அல்லது செயல்முறைத் தேர்விலோ தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணில் ஒரு மதிப்பெண் குறைந்தால் ஏற்படும் தோல்வியால் கூட ஆறு மாதங்கள் விரயப்படும் என்பது கொடுமையானது.

இக்கொடுமையைப் போக்க "பிரேக் சிஸ்ட'த்தை ரத்து செய்ய வேண்டும். தேர்வு முடிவுகள் வந்த உடன் ஒரு மாத காலத்துக்குள் மறுதேர்வை வைத்து அடுத்தகட்ட வகுப்புகளுக்கு மாணவர்கள் சென்றிட வழி காண வேண்டும்.

மாணவர்கள் தேர்வில் தோல்வியுறுவதைத் தடுத்திட குறைந்தபட்சம் முதலாமாண்டிலாவது தேர்வுகளை தாய்மொழியில் எழுதவும் தாய்மொழியில் வாய்மொழித் தேர்வில் பதில் அளிக்கவும் வாய்ப்பளிக்க வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்குமா? மருத்துவக் கல்வியில் மாற்றங்கள் வருமா?
கட்டுரையாளர் : ஜி . ஆர். ரவீந்திரநாத்
நன்றி : தினமணி

நீரோக்களும், லூயிக்களும்...

விலைவாசி உயர்ந்துவிட்டதாக அன்றாடம் செய்தி வெளியிட்டு பத்திரிகைகள் பரபரப்பை ஊட்டுகின்றன; உண்மையில் விலைவாசி உயர்ந்தால் அதன் பலன் விவசாயிகளுக்கும்தான் சென்று சேருகிறது என்று பேசியிருக்கிறார் மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா.

இதை உடனடியாக வன்மையாகக் கண்டித்திருப்பதுடன் விலைவாசி உயரவில்லையா, மக்கள் அதனால் பாதிக்கப்படவில்லையா, அதன் பலன் விவசாயிகளுக்குக் கிடைக்கிறதா, அப்படி என்றால் எத்தனை சதவீதம் அவர்களுக்குப் பணம் கிடைக்கிறது என்று நியாயமான கோபத்துடன் கேள்விக் கணைகளைத் தொடுத்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பரதன்.

உருளைக்கிழங்கு 100.82%-ம், வெங்காயம் 49.91%-ம், பருப்பு வகைகள் 23%-ம், அரிசி 12.19%-ம், கோதுமை 7.47%-ம் விலை உயர்ந்துள்ளது. பால், சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை பற்றிச் சொல்லவே வேண்டாம் என்றும் பரதன் சுட்டிக்காட்டியிருக்கிறார். வறுமைக்கோடு எது என்பதை நிர்ணயிக்க பிரதமர் தலைமையில் குழு அமைத்திருப்பதையும் அவர் சாடியிருக்கிறார்.
வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறவர்கள் 28% பேர்தான் என்று மத்திய திட்டக்குழுவும், 40% பேர் என்று சாம்பிள் சர்வே நடத்தும் மத்திய அரசின் புள்ளிவிவரத்துறையும், 50% என்று ஊரக வளர்ச்சித்துறையும் தெரிவிக்கின்றன. இவை மூன்றுமே மத்திய அரசின் அங்கங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே பணியை மேற்கொண்ட அர்ஜுன் சென் குப்தா தலைமையிலான குழுவோ வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 77% என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் தலைமையிலான குழு எந்த அடிப்படையைக் கையாளப் போகிறது என்று தெரியவில்லை.

மொத்தவிலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் குறைந்துவிட்டது, மைனஸôகிவிட்டது, கட்டுக்குள் வந்துவிட்டது என்றெல்லாம் கடந்த சில மாதங்களாக மத்திய அரசின் வெவ்வேறு துறைகள் சார்பில் மாற்றிமாற்றி அறிவித்துக் கொண்டிருந்தார்கள். உண்மையில் மக்கள் அன்றாடம் வாங்கிப் பயன்படுத்தும் பண்டங்களின் விலை எதுவும் இறங்கு முகமாக அல்ல, நிலையாக அதே விலையில்கூட விற்கப்படவில்லை. எனவே மான்டேக் சிங் அலுவாலியாவை, கம்யூனிஸ்ட் தலைவர் பரதன் கண்டித்திருப்பதில் நியாயம் இருக்கிறது.

அடுத்து விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க, பரதன் பயனுள்ள யோசனை ஒன்றையும் சொல்லியிருக்கிறார். அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 14 அவசியப் பண்டங்களை ரேஷன் கடைகள் மூலம், வருவாய் வரம்பு ஏதும் விதிக்காமல் அனைவருக்கும் நியாய விலையில் விற்க வேண்டும் என்பதுதான் அது. இதன் மூலம், கொள்ளை லாபம் அடிக்கும் வியாபாரிகளை வழிக்குக்கொண்டுவர முடியும். அத்துடன் விவரம் தெரிந்தவர்கள் ரேஷன் கடைகளுக்குப் போகிறார்கள் என்றால்தான் அங்கு வேலையும் ஓரளவுக்கு நடக்கும்.

உள்நாட்டு, வெளிநாட்டு பெரு வர்த்தக நிறுவனங்களின் சங்கிலித்தொடர் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பச்சைக் கொடி காட்டும் மத்திய அரசு, இந்த யோசனைகளைப் பரிசீலிக்கக்கூட முன்வருமா என்பது சந்தேகமே.
மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த காலத்திலிருந்து மத்திய பட்ஜெட்டுகளில் இடைவிடாமல் மக்களுக்குக் கூறப்படும் மற்றொரு உறுதிமொழி, நாடு முழுக்க உணவு தானியங்களையும், காய்கறி, பழங்களையும் சேமித்து விநியோகிக்க சங்கிலித் தொடராக உணவு தானியக் கிடங்குகளும், குளிர்பதனக் கிடங்குகளும் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டித்தரப்படும் என்பதாகும். இதுவும் உதட்டளவிலேயே இருக்கும் வாக்குறுதியாகும்.

மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள உணவுப் பாதுகாப்பு மசோதா நன்மையைத் தராது. மாறாக, இந்திய விவசாயிகளுக்கு துரோகத்தை இழைக்கும் என்று எச்சரித்திருக்கிறார் பரதன். உணவு தானிய பற்றாக்குறையை எப்படிச் சமாளிப்பது என்று நடத்திய ஆலோசனையில் வெளிநாடுகளிலிருந்து குவிண்டால் ரூ.1,600 விலையில் கோதுமையை இறக்குமதி செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. உள்நாட்டு விவசாயிகளுக்கு இப்போது குவிண்டாலுக்கு ரூ.1,100 தருவதற்குக்கூட தாராளம் காட்டாத அரசு, இறக்குமதிக்கு அதிக விலை தருவதன் ரகசியத்துக்கும், சுவிஸ் வங்கி சேமிப்புக்கும் சம்பந்தம் இருக்காது என்று நம்புவோமாக!

கோதுமை சாகுபடிக்கு ஊக்குவிப்புக் கிடைக்க, குவிண்டாலுக்கு ரூ.1,500 கொள்முதல் விலை நிர்ணயிக்கலாம் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அரசுக்கு யோசனை கூறியிருப்பதையும் பரதன் சுட்டிக்காட்டியிருக்கிறார். வேளாண் பொருள்களுக்குக் கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய நியமிக்கப்படும் குழுவில் (ஏ.பி.சி.) தங்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர். அதிகார வர்க்கமும், மக்களிடமிருந்து அன்னியப்பட்டுவிட்ட ஆட்சியாளர்களும் நியாயங்களை யார் சொன்னாலும் ஏற்கும் பக்குவம் பெற்றாலே இந்த நாட்டின் பிரச்னைகளில் பெரும்பாலானவை தீர்ந்துவிடும்.
""ரொட்டி இல்லாவிட்டால் கேக் சாப்பிடுவதுதானே?'' என்று பிரெஞ்சுப் புரட்சியின்போது கேட்ட பிரெஞ்சு மகாராணியின் மனப் போக்கிலேயே மான்டேக் சிங் அலுவாலியாக்கள் இருந்தால் வறுமை ஒழிவது எப்போது? நீரோக்களும், லூயிக்களும் ஆட்சியாளர்களாக இருந்தால், இப்படியெல்லாம் நடக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்!
நன்றி : தினமணி

அவுட் சோர்ஸிங் முறையில் நானோ கார் உற்பத்தி

இந்தியாவின் மிக குறைந்த விலை கார் என்ற பெருமைக்குரியது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார். ஒரு லட்சம் ரூபாய் விலை கொண்ட இந்த காருக்காக, 2.5 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில், ஒரு லட்சம் பேர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு தான் தற்போது நானோ கார் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
நானோ காருக்காக, மேற்கு வங்கம் சிங்குரில் தான் முதலில் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது. ஆனால், உள்ளூரில் ஏற்பட்ட எதிர்ப்பு காரணமாக, இந்த தொழிற்சாலை குஜராத் மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. இந்த தொழிற்சாலை ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்தது. ஆனால், இன்னும் முழுமையாக ரெடியாக வில்லை. அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் தொழிற்சாலை செயல்பட துவங்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால், அதற்குள் ஒரு லட்சம் பேருக்கு நானோ காரை சப்ளை செய்ய முடியுமா என்பது கேள்விக்குரியாக உள்ளது. இது குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தரப்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வந்தது.
இந்த சூழ்நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் ரவி காந்த் லண்டனில் நடந்த ஒரு விழாவில் பங்கேற்றார். அங்கு அவர் கூறுகையில்,' ஆண்டுக்கு 10 ஆயிரம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் படைத்த சிறு தொழிற்சாலைகளுக்கு, நானோ காரை அசெம்பள் முறையில், மாற்று பெயரில் தயாரிக்க அனுமதி அளிக்கப்படுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்' என்று கூறினார். இது இந்திய கார் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட அவுட்சோர்ஸிங் முறையில் இப்பணி மேற்கொள்ளப்படும் என்று தெரிகிறது.
நன்றி : தினமலர்