Tuesday, November 10, 2009

நீரோக்களும், லூயிக்களும்...

விலைவாசி உயர்ந்துவிட்டதாக அன்றாடம் செய்தி வெளியிட்டு பத்திரிகைகள் பரபரப்பை ஊட்டுகின்றன; உண்மையில் விலைவாசி உயர்ந்தால் அதன் பலன் விவசாயிகளுக்கும்தான் சென்று சேருகிறது என்று பேசியிருக்கிறார் மத்திய திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா.

இதை உடனடியாக வன்மையாகக் கண்டித்திருப்பதுடன் விலைவாசி உயரவில்லையா, மக்கள் அதனால் பாதிக்கப்படவில்லையா, அதன் பலன் விவசாயிகளுக்குக் கிடைக்கிறதா, அப்படி என்றால் எத்தனை சதவீதம் அவர்களுக்குப் பணம் கிடைக்கிறது என்று நியாயமான கோபத்துடன் கேள்விக் கணைகளைத் தொடுத்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பரதன்.

உருளைக்கிழங்கு 100.82%-ம், வெங்காயம் 49.91%-ம், பருப்பு வகைகள் 23%-ம், அரிசி 12.19%-ம், கோதுமை 7.47%-ம் விலை உயர்ந்துள்ளது. பால், சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை பற்றிச் சொல்லவே வேண்டாம் என்றும் பரதன் சுட்டிக்காட்டியிருக்கிறார். வறுமைக்கோடு எது என்பதை நிர்ணயிக்க பிரதமர் தலைமையில் குழு அமைத்திருப்பதையும் அவர் சாடியிருக்கிறார்.
வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கிறவர்கள் 28% பேர்தான் என்று மத்திய திட்டக்குழுவும், 40% பேர் என்று சாம்பிள் சர்வே நடத்தும் மத்திய அரசின் புள்ளிவிவரத்துறையும், 50% என்று ஊரக வளர்ச்சித்துறையும் தெரிவிக்கின்றன. இவை மூன்றுமே மத்திய அரசின் அங்கங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதே பணியை மேற்கொண்ட அர்ஜுன் சென் குப்தா தலைமையிலான குழுவோ வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை 77% என்று ஒரே போடாகப் போட்டிருக்கிறது. இந்த நிலையில் பிரதமர் தலைமையிலான குழு எந்த அடிப்படையைக் கையாளப் போகிறது என்று தெரியவில்லை.

மொத்தவிலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்க விகிதம் குறைந்துவிட்டது, மைனஸôகிவிட்டது, கட்டுக்குள் வந்துவிட்டது என்றெல்லாம் கடந்த சில மாதங்களாக மத்திய அரசின் வெவ்வேறு துறைகள் சார்பில் மாற்றிமாற்றி அறிவித்துக் கொண்டிருந்தார்கள். உண்மையில் மக்கள் அன்றாடம் வாங்கிப் பயன்படுத்தும் பண்டங்களின் விலை எதுவும் இறங்கு முகமாக அல்ல, நிலையாக அதே விலையில்கூட விற்கப்படவில்லை. எனவே மான்டேக் சிங் அலுவாலியாவை, கம்யூனிஸ்ட் தலைவர் பரதன் கண்டித்திருப்பதில் நியாயம் இருக்கிறது.

அடுத்து விலைவாசியைக் கட்டுக்குள் வைக்க, பரதன் பயனுள்ள யோசனை ஒன்றையும் சொல்லியிருக்கிறார். அரிசி, பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட 14 அவசியப் பண்டங்களை ரேஷன் கடைகள் மூலம், வருவாய் வரம்பு ஏதும் விதிக்காமல் அனைவருக்கும் நியாய விலையில் விற்க வேண்டும் என்பதுதான் அது. இதன் மூலம், கொள்ளை லாபம் அடிக்கும் வியாபாரிகளை வழிக்குக்கொண்டுவர முடியும். அத்துடன் விவரம் தெரிந்தவர்கள் ரேஷன் கடைகளுக்குப் போகிறார்கள் என்றால்தான் அங்கு வேலையும் ஓரளவுக்கு நடக்கும்.

உள்நாட்டு, வெளிநாட்டு பெரு வர்த்தக நிறுவனங்களின் சங்கிலித்தொடர் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு பச்சைக் கொடி காட்டும் மத்திய அரசு, இந்த யோசனைகளைப் பரிசீலிக்கக்கூட முன்வருமா என்பது சந்தேகமே.
மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்த காலத்திலிருந்து மத்திய பட்ஜெட்டுகளில் இடைவிடாமல் மக்களுக்குக் கூறப்படும் மற்றொரு உறுதிமொழி, நாடு முழுக்க உணவு தானியங்களையும், காய்கறி, பழங்களையும் சேமித்து விநியோகிக்க சங்கிலித் தொடராக உணவு தானியக் கிடங்குகளும், குளிர்பதனக் கிடங்குகளும் மிகப் பிரம்மாண்டமாகக் கட்டித்தரப்படும் என்பதாகும். இதுவும் உதட்டளவிலேயே இருக்கும் வாக்குறுதியாகும்.

மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள உணவுப் பாதுகாப்பு மசோதா நன்மையைத் தராது. மாறாக, இந்திய விவசாயிகளுக்கு துரோகத்தை இழைக்கும் என்று எச்சரித்திருக்கிறார் பரதன். உணவு தானிய பற்றாக்குறையை எப்படிச் சமாளிப்பது என்று நடத்திய ஆலோசனையில் வெளிநாடுகளிலிருந்து குவிண்டால் ரூ.1,600 விலையில் கோதுமையை இறக்குமதி செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. உள்நாட்டு விவசாயிகளுக்கு இப்போது குவிண்டாலுக்கு ரூ.1,100 தருவதற்குக்கூட தாராளம் காட்டாத அரசு, இறக்குமதிக்கு அதிக விலை தருவதன் ரகசியத்துக்கும், சுவிஸ் வங்கி சேமிப்புக்கும் சம்பந்தம் இருக்காது என்று நம்புவோமாக!

கோதுமை சாகுபடிக்கு ஊக்குவிப்புக் கிடைக்க, குவிண்டாலுக்கு ரூ.1,500 கொள்முதல் விலை நிர்ணயிக்கலாம் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் அரசுக்கு யோசனை கூறியிருப்பதையும் பரதன் சுட்டிக்காட்டியிருக்கிறார். வேளாண் பொருள்களுக்குக் கொள்முதல் விலை நிர்ணயம் செய்ய நியமிக்கப்படும் குழுவில் (ஏ.பி.சி.) தங்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்று விவசாயிகள் பல ஆண்டுகளாகக் கோரி வருகின்றனர். அதிகார வர்க்கமும், மக்களிடமிருந்து அன்னியப்பட்டுவிட்ட ஆட்சியாளர்களும் நியாயங்களை யார் சொன்னாலும் ஏற்கும் பக்குவம் பெற்றாலே இந்த நாட்டின் பிரச்னைகளில் பெரும்பாலானவை தீர்ந்துவிடும்.
""ரொட்டி இல்லாவிட்டால் கேக் சாப்பிடுவதுதானே?'' என்று பிரெஞ்சுப் புரட்சியின்போது கேட்ட பிரெஞ்சு மகாராணியின் மனப் போக்கிலேயே மான்டேக் சிங் அலுவாலியாக்கள் இருந்தால் வறுமை ஒழிவது எப்போது? நீரோக்களும், லூயிக்களும் ஆட்சியாளர்களாக இருந்தால், இப்படியெல்லாம் நடக்காமல் இருந்தால்தான் ஆச்சரியம்!
நன்றி : தினமணி

2 comments:

அஹோரி said...

யோசிக்க வைக்கிறீர்கள்.

பாரதி said...

அஹோரி வருகைக்கு நன்றி