Tuesday, August 11, 2009

கோவை விசைத்தறி ஊழியர்கள் வேலைநிறுத்தம் 7வது நாளாக தொடர்கிறது

கோவை மாவட்டம் விசைத்தறி ஊழியர்கள் வேலைநிறுத்தம் 7வது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது. சுமார் 16,000 பேர் ‌வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைநிறுத்தம் குறித்து விசைத்தறி ஊழியர்கள் சம்மேளன உறுப்பினர் ஒருவர் கூறுகையில் : விசைத்தறி உரிமையாளர்களிடம் நாங்கள் அநாவசியமாக கோரிக்கை எதுவும் வைத்து நிர்பந்திக்கவில்லை, எங்களுக்கு அளிக்கப்படும் வேலைக்கான அடிப்படையில் , ஊதியத்தை திருத்தி அமைக்குமாறு ம‌ட்டும் தான் கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார். இந்த விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை இரண்டு முறை தொழிலாளர் இணை கமிஷனர் முன் நடந்தது, விசைத்தறி உரிமையாளர்கள் இருமுறையும் பேச்சுவார்த்தையை புறக்கணித்தனர். இந்நிலையில் பிரச்னைக்கு சுமூக தீர்வு காண அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று கோவை மாவட்ட விசைத்தறி யூனிட்டுகள் சங்க தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் விசைத்தறி யூனிட்டுகள் ஸ்டிரைக் காரணமாக முடங்கி கிடப்பதால், நாள் ஒன்றுக்கு சுமார் 15 முதல் 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றார். கூலி உடன்படிக்கையை அத்துமீறி விசைத்தறியாளர்கள் கடந்த மாதத்தில் இருந்து எங்களுக்கு அளிக்கப்பட்டு வரும் கூலியில்10 சதவீதம் குறைத்துள்ளனர் என்றும் இது சற்றும் நியாமே இல்லாத நடவடிக்கை என குமாரசாமி குற்றம் சாட்டினார். ஏற்கனவே விசைத்தறிகளை நவீனபடுத்த முடியாமல் திணறி கொண்டிருக்கும் போது இத்தகைய நடவடிக்கை மேலும் தங்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது என்றார். ஊதிய விகிதம் மாற்றியமைத்தல் தவிர தமிழ்நாடு மின்சார வாரியம் விதித்துள்ள சுமார் 80 லட்சம் அபராதத்தையும் திரும்ப‌ப்பெறுமாறு கோரிக்கை வைத்துளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தினமலர்

சச் கா சாம்னா!

ஒரு சராசரி இந்திய அரசியல்வாதிக்கும் மிகச் சிறந்த பிரெஞ்சு சமூகவியல் சிந்தனையாளருக்கும் முடிச்சு போடுவது நகைப்புக்குரியதாக இருக்கலாம். ஆனால், நடந்து முடிந்த மாநிலங்களவைக் கூட்டத்தில், சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர் கமல் அக்தர் முன்வைத்த சில கருத்துகள், ழான் பால் சார்த்ருக்குப் பின்னர் பிரெஞ்சு சமூகத்தின் பெரிய அறிவுஜீவியாக மதிக்கப்படும் சமூகவியல் சிந்தனையாளர் பியர் பூர்தியுவின் கருத்துகளை நினைவூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை.

கடந்த கூட்டத்தொடரில் கேள்வி நேரம் முடிந்தபிறகு பேசிய அக்தர், பார்வையாளர்களைக் கவருவதற்காக (டிஆர்பி) தொலைக்காட்சி நிறுவனங்கள் மேற்கொள்ளும் அத்துமீறல்கள் குறித்து பிரச்னையைக் கிளப்பினார்.

இதற்கு உதாரணமாக தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் பிரபலமாகிவரும் "சச் கா சாம்னா' (உண்மையை எதிர்கொள்) நிகழ்ச்சியை அக்தர் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்ச்சி ஓர் அசல் காட்சி (ரியாலிட்டி ஷோ) வகை நிகழ்ச்சியாகும். அண்மையில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒரு பெண்ணிடம் அவருடைய கணவரின் முன்னிலையிலேயே நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்ட கேள்வி: ""உங்கள் கணவரைத் தவிர்த்து வேறு எவருடனும் நீங்கள் உறவு கொண்டிருக்கிறீர்களா?''

இதற்கு அந்தப் பெண் அளித்த பதில்: ""இல்லை.''

ஆனால், உண்மையைக் கண்டறியும் சோதனை (பாலிகிராஃப் டெஸ்ட்) அந்தப் பெண் பொய்யான பதிலை அளிப்பதாகக் கூறியது.

இத்தனையும் தொலைக்காட்சியில் அந்தப் பெண்ணின் கணவரின் முன்னிலையிலேயே அரங்கேறியது. இந்நிகழ்ச்சி அந்தத் தம்பதியின் வாழ்வில் எத்தகைய மோசமான ஓர் அனுபவமாக இருந்திருக்கும் என்பதை விளக்க வேண்டியதில்லை.

மாநிலங்களவையில் அக்தர் இதைக் குறிப்பிட்டார். சமூகத்துக்கு எதிரான பெரிய தீய சக்தியாக தொலைகாட்சி அலைவரிசைகள் மாறிவருவதைச் சுட்டிக்காட்டினார்.

இதற்கு அரசு எடுக்கப்போகும் எதிர் நடவடிக்கை என்னவென்று கேள்வி எழுப்பினார். இத்தகைய சூழலை எதிர்த்துப் போராட வேண்டும் என்று குரல் கொடுத்தார்.

தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசைகளின் நிலையும் ஏறத்தாழ இப்படித்தான் இருக்கிறது. தமிழ் நகைச்சுவைத் தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் அண்மையில் இப்படி ஒரு காட்சியைக் காண நேர்ந்தது. சாலையில் செல்வோரையெல்லாம் நிகழ்ச்சித் தொகுப்பாளர் துடைப்பத்தால் அடிக்கிறார். அதாவது, கையில் துடைப்பத்துடன் செல்லும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் சாலையில் வருவோர் - போவோர் மீதெல்லாம் அந்த துடைப்பம் படுமாறு செல்கிறார்.

இதற்கு அந்த அப்பாவிகள் காட்டும் எதிர்வினையைக் காட்டி எல்லோரையும் சிரிக்கச் சொல்கிறார்கள்.

தொலைக்காட்சி என்ற ஊடகம் தனி மனித வாழ்க்கையின் மீதும் சமூகத்தின் மீதும் செலுத்தும் அடையாள வன்முறைக்கு எளிய உதாரணங்களாக இந்நிகழ்ச்சிகளைச் சொல்லலாம். இதற்கு முக்கியமான காரணம், தொலைக்காட்சி நிறுவனங்கள் எடுத்துக்கொள்ளும் அதீதமான சுதந்திரமும் அதை நம் அரசும் சமூகமும் அனுமதிப்பதுமாகும்.

பொதுவாகவே, பத்திரிகையாளர்களுக்கான சுதந்திரம் தமக்கும் பொருந்தும் என்று தொலைக்காட்சி அலைவரிசைகள் (அவை பொழுதுபோக்கு அலைவரிசைகளானாலும்கூட) கற்பிதம் செய்துகொள்கின்றன.
பெரும்பாலான அலைவரிசைகள் செய்திகளையும் கொஞ்ச நேரம் ஒளிபரப்புவதால் அல்லது கூடுதலாக ஒரு பிரத்யேக செய்தி அலைவரிசையையும் நடத்துவதால் இது நியாயமானதாகவும்கூட வாதிடப்படுகிறது.

ஆனால், பொறுப்புணர்வு என்ற தளத்தில் தொலைக்காட்சி அலைவரிசைகள் எதையுமே பொருட்படுத்தத் தயாராக இல்லை.

இதன் மோசமான விளைவு என்னவென்றால், தொலைக்காட்சி அலைவரிசைகளின் அதே பொறுப்பற்றதனமும் வியாபாரப் போட்டியும் பத்திரிகைத் துறையையும் பீடிக்கத் தொடங்கியிருப்பதுதான்.
தேசிய அளவிலான பிரபல இதழொன்று சில மாதங்களுக்கு முன் பாலியல் சிறப்பிதழ் வெளியிட்டது. இதற்காக, ""இந்தியாவில் அதிகமான ஆண்கள் உறவுகொள்ள ஏங்கும் பெண் பிரபலம் யார்'' என்ற ஆய்வை (?!) மேற்கொண்ட அந்த இதழ், ஆய்வின் முடிவாக ஐஸ்வர்யா (பச்சன்) பெயரை அவருடைய கவர்ச்சியான படத்துடன் வெளியிட்டது (எப்பேர்ப்பட்ட முற்போக்குப் பத்திரிகையாளரும் தன் மனைவியைப் பற்றி இப்படியொரு செய்தியை அனுமதிப்பார் என்று தோன்றவில்லை).

அதாவது, போட்டியை எதிர்கொள்ள - சந்தையைக் கையகப்படுத்த எந்தவொரு நிலைப்பாட்டுக்கும் ஊடகத் துறை தயாராக இருக்கிறது. தொலைக்காட்சி அலைவரிசைகள் இதை முன்னெடுக்கின்றன; ஒட்டுமொத்த ஊடகத் துறையையும் தம்மோடு சேர்த்து இழுக்கின்றன.

பூர்தியு இதைத்தான் சொன்னார்: ""ஊடக உலகம் ஒரு களம். ஆனால், தொலைக்காட்சி அலைவரிசைகளோ பார்வையாளர் கணிப்பின் வாயிலாக பொருளாதாரக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே இயங்குகின்றன'' என்றார். பொருளாதாரத் தேவையின் சுமை தொலைக்காட்சி அலைவரிசைகளை அழுத்துகிறது. தொலைக்காட்சி அலைவரிசைகளின் சுமை மற்ற பத்திரிகைகள் மீதும் இதழாளர்கள் மீதும் அழுத்தப்படுகிறது'' என்றார். மேலும் ""ஜனநாயகத்தின் பெயரால் இத்தகைய சூழலுக்கு எதிராக நாம் போராட வேண்டும்'' என்கிறார் அவர்.

அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் பகுத்துப் பயன்படுத்தத் தெரிந்த ஐரோப்பிய சமூகத்தின் முன், உன்னதங்களைப் பற்றி அக்கறையோடு பேசும் பிரெஞ்சு சமூகத்தின் முன் நின்று இப்படி அறைகூவல் விடுத்தார் பூர்தியு.
அக்தரோ, அரசியல் கனவு வந்த அடுத்த க்ஷணமே தொலைக்காட்சி அலைவரிசையையோ, பத்திரிகையையோ தொடங்கத் திட்டமிடும் இந்தியச் சமூகத்தின் முன் நின்று அறைகூவல் விடுக்கிறார். ஜனநாயகத்தின் பெயரால் நாம் போராடித்தான் ஆக வேண்டும்!

கட்டுரையாளர் :சமஸ்
நன்றி : தினமணி

பன்றிக்காய்ச்சல் நோய்க்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் முதல் இந்திய நிறுவனமாகிறது சி.பி.எல்

பன்றிக்காய்ச்சல் நோய்க்கு தடுப்பு மருந்து தயாரிக்கும் முதல் இந்திய நிறுவனமாகிறது சி,பி,எல் - கேடில்லா ஃபார்மாசிட்டிக்கல்ஸ் லிமிட்டெட்.. உலகையே உலுக்கியுள்ள பயங்கர தொற்று நோய் எச்1என்1 வைரஸ் நோய்(பன்றிக்காய்ச்சல்). இந்த நோய்க்கான தடுப்பு மருந்தை பல்வேறு மருந்து நிறுவனங்களும் போட்டாபோட்டியில் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் கேடில்லா நிறுவனம் அமெரிக்க மருந்து நிறுவனமான நோவாவாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்து தயாரித்துள்ளது. மருந்து குறித்த அறிக்கையை மத்திய அரசுக்கு இன்னும் ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்கிறது. மத்திய அரசு ஒப்புதல் கிடைத்த பிறகு, இந்தியாவில் இருக்கும் பன்றிக்காய்‌ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் என கேடில்லா ஃபார்மாசிட்டிக்கல்ஸ் சேர்மன் தெரிவித்துள்ளார்.
நன்றி : தினமலர்


குறைந்த தண்ணீர் செலவில் அரிசி சாகுபடி : இலங்கை அரசு புதிய யுக்தி

குறைந்த தண்ணீர் செலவில் அரிசி சாகுபடியை அதிகமாக்கும் வகையில் இலங்கை அரசு புதிய தொழில்நுட்ப யுக்தியை கண்டுபிடித்துள்ளது. தற்போது வழக்கத்தில் இருப்பதை விட மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் மட்டுமே செலவழித்து அதிக மகசூல் பெறக் கூடிய தொழில் நுட்ப யுக்தியை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தற்போது நிலவரப்படி 1 கிலோ அரிசி உற்பத்தி செய்ய, 3000 லிட்டர் வரை தண்ணீர் செலவழிக்க வேண்டியுள்ளது. ஆனால் புதிய தொழில்நுட்பத்தின் படி 800 லிட்டர் தண்ணீர் செலவில் ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்யப்படும் என ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்த முறை தொழில்நுட்பம், இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதி விவசாயிகளுக்கு சோதனையின் அடிப்படையில் சொல்லி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த முறையில் போனஸ் நன்மை என்னவென்றால் , ரசாயன உரங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கை உரங்களையும் பயன்படுத்தலாமாம்.
நன்றி : தினமலர்


பிக் பஜாரில் 5 நாள் 'மகா பாசட்' தள்ளுபடி

இந்தியாவின் மிகப் பெரிய ஹைபர் மார்க்கெட்டான பியூச்சர் குரூப்பின், பிக் பஜார் சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசியளவிலான ஐந்து நாள் 'மகா பாசாட்' தள்ளுபடி விற்பனையை அறிவித்துள்ளது.
நாளை முதல் தொடங்கி, வரும் 16ம் தேதி வரை, ஐந்து நாட்கள் நாடு முழுவதிலும் உள்ள 116 பிக் பஜார் ஸ்டோர்களிலும், இந்த தள்ளுபடி விற்பனை நடைபெறும். இந்திய வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான ஷாப்பிங் அனுபவத்தை கொடுக்கும் வகையில், பிக் பஜார் நிறுவனம், இந்த தள்ளுபடி விற்பனையை அளிக்கிறது. இந்த தள்ளுபடி விற்பனை, பிக் பஜார் ஸ்டோர்கள் போன்றே பர்னிச்சர் பஜார், ஹோம் பஜார், நவராஸ் மற்றும் ஒன் மொபைல் ஸ்டோர்களிலும், கிடைக்கும்.
இந்த தள்ளுபடி குறித்து பிக் பஜார் கான்சப்ட் தலைவர், சதாசிவ் நாயக் கூறுகையில், 'இது நான்காவது ஆண்டு தள்ளுபடி விற்பனை. ஐந்து நாள் 'மகா பாசாட்' நாடு முழுவதிலும் உள்ள பல லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் ஷாப்பிங்கை மதிப்புடையதாகும். இந்த 'மகா பாசாட்' சலுகையை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பதற்காக, கடந்த ஆறு மாதங்களாக திட்டமிட்ட பின் அறிவித்தோம்' என்றார்.
இந்த தள்ளுபடியில், 3,990 ரூபாய் விலையில், போர்பஸ் யுவி வாட்டர் பியூரிபையர், 22 காரட் ஹால்மார்க் தங்க நகைகள் செய்கூலியில், 50 சதவீதம் தள்ளுபடி, நோக்கியா மொபைல் போன்களுக்கு எம்.ஆர்.பி.,விலையில் இருந்து 20 சதவீதம் தள்ளுபடி உட்பட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
நன்றி : தினமலர்