Wednesday, June 8, 2011

யாரிடம் சொல்லி அழ?


கடந்த வாரம் ஜெர்மானிய அரசு ஒரு முடிவு எடுத்தது. அதாவது, நாட்டில் உள்ள அனைத்து அணுஉலைக் கூடங்களையும் படிப்படியாக 11 ஆண்டுகளில் மூடிவிட வேண்டும். 2022-ம் ஆண்டில் ஜெர்மனியில் அணுஉலைக் கூடங்களே இல்லாத நிலை ஏற்பட வேண்டும் என்பதுதான் அது.


இதற்கு அவசியமில்லை என்று ஜெர்மனியின் அதிபர் ஆஞ்செலா மெர்க்கெல் தனிப்பட்ட முறையில் சில மாதங்களுக்கு முன்பும்கூட கருத்து தெரிவித்திருந்தாலும், அவரும் நாடாளுமன்றத்தின் இந்த முடிவை ஏற்றுக்கொள்கிறார். வேறு வழியில்லை. இதற்கு ஜப்பானில் நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை என இரண்டு இயற்கைச் சீற்றங்களும் ஒருசேரத் தாக்கியதில் ஃபுகுஷீமா அணுஉலை பாதிக்கப்பட்டது முதல் உலக நாடுகள் மற்றும் மக்கள் மனதில் ஏற்பட்டிருக்கும் அச்சமும் விழிப்புணர்வும்தான் காரணம். இப்போது உடனடியாக 7 அணுஉலைக் கூடங்கள் மூடப்பட்டுவிட்டன.

அதேசமயம் இந்தியாவில் ஒரு நிலைப்பாடு மேற்கொள்ளப்படுகிறது. ஜெய்தாபூரில் அணுஉலைக்கூடம் அமைத்தே தீருவோம் என்று அரசு சொல்கிறது.

இதற்கு அரசுத் தரப்பில் தரப்படும் விளக்கம்: இத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை. அணுஉலைக் கூடம் மூலம் மின்உற்பத்தி மிகமிக அவசியத் தேவையாக இருக்கிறது. இப்போது அணுஉலைக் கூடங்கள் மூலம் நம் நாட்டுக்குக் கிடைக்கும் மின்சாரத்தின் அளவு 3 விழுக்காடு மட்டுமே. 2020-ம் ஆண்டு இது 6 விழுக்காடாக உயரும். 2030-ம் ஆண்டு இது 12 விழுக்காடாக உயரும். பாதுகாப்பு முறைகளில்தான் சிறிது மாற்றங்கள் தேவை. அதில் முழுமையாகக் கவனம் செலுத்தினால் பிரச்னையே இல்லை.

இதை இந்திய அரசு சொல்லும்போது நாம் ஜெர்மனியை நினைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ஜெர்மனியில் அணுமின் உலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் 22 விழுக்காடு. அதாவது நான்கில் ஒரு பங்கு மின்சாரம் அணுஉலைக் கூடங்கள் மூலம்தான் அவர்களுக்குக் கிடைத்து வருகிறது. ஆனாலும் அதை இழக்கத் துணிகிறார்கள். எதற்காக? மக்கள் நல்வாழ்வுக்காக.

ஃபுகுஷீமா அணுஉலை விபத்தால் குடிநீரிலும்கூட கதிர்வீச்சின் தாக்கம் இருக்கும் நிலைமையைக் கண்கூடாகக் கண்டுவிட்டதால் ஏற்பட்ட முடிவு இது. மக்கள் நலன் கருதி இந்த முடிவை அவர்கள் மேற்கொள்கிறார்கள். பிற இயற்கை ஆதாரங்கள் மூலமாக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முடிவை ஏற்றுக் கொள்கிறார்கள். மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டுமே தவிர, ஆபத்தைத் தெரிந்தே அரவணைப்பது மடமை என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.

அணுஉலைக் கூடங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் முறைகள் ஜெர்மனி அரசுக்கும்கூட நன்றாகத் தெரியும். அவர்கள் நம்மைவிட பொறுப்பாக இந்தப் பணிகளில் ஈடுபட்டு, பாதுகாப்புக்கு அதிக அக்கறை தரக்கூடியவர்கள்தான். ஆனால் அவர்கள் அறிந்திருக்கிறார்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் என்பவை யாவும் இயற்கைச் சீற்றங்களுக்கு முன்பாக அர்த்தமற்றவை என்பதை.

இந்தியாவின் அணுஉலைக் கூடங்கள் பாதுகாப்பற்றவை என்பது மட்டுமல்ல, இவற்றுள் தீவிரவாதிகள் புகுந்து அணுஆயுதம் செய்வதற்கான மூலப்பொருள்களைத் திருடிச் செல்வதென்பது வேறு எந்த நாட்டைக் காட்டிலும் இந்தியாவில் மிகவும் எளிது என்பதை நாம் சொல்லத் தேவையில்லை. இதை மும்பைத் தாக்குதல் தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் ஹெட்லி அளித்துவரும் வாக்குமூலத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. இவ்வளவு இருந்தும் இந்திய அரசு சொல்கிறது - பாதுகாப்பு ஏற்பாடுகளைச் சரி செய்துவிட்டால் போதுமானது. அணுஉலைக் கூடங்களால் பிரச்னை இருக்காது என்று. எவ்வளவு பொறுப்பற்றதனம்?

அண்மையில் ஜெய்தாபூரில், அணுஉலைக் கூடத்துக்கு எதிராக எழுந்த மக்கள் எழுச்சியை அரசு அடக்கி ஒடுக்கிவிட்டது என்றே சொல்லலாம். இந்த மக்களின் எதிர்ப்பு அரசியலாக்கப்பட்டு, அரசியல் சண்டையாக மாற்றப்பட்டதால் மக்களின் ஈனக்குரல் அமுங்கிவிட்டது. அங்கே அனுமதிக்கப்பட்டிருக்கும் அணுஉலைக் கூடம்தான் இந்தியாவிலேயே மிகப் பெரியது. இந்த அணுஉலைக் கூடத்தின் மின்உற்பத்தித் திறன் 9,900 மெகாவாட். இதற்காக இங்கே 2,400 ஏக்கர் நிலத்தை அரசு ஆக்கிரமிப்பு செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

ஜெய்தாபூரில் அணுஉலை அமையவிருக்கும் பகுதி பல்லுயிர் பெருக்கத்துக்குப் புகழ்பெற்ற இடங்களில் முக்கியமானது. ஆனாலும் அந்த இடத்தைத்தான் இந்திய அணுமின் கழகம் தேர்வு செய்துள்ளது. அதற்கு அணு ஆற்றல் துறையும் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த இடத்தில் அணுஉலை அமையுமானால், இந்த பல்லுயிர் பெருக்கம் அழிந்துபோகும் அபாயம் இருக்கிறது.

மேலும், நிலநடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் கொண்ட 4-வது நிலையில் உள்ள பகுதி இது என்று பட்டியலிடப்பட்டுள்ள நிலையில் இந்த இடத்தில் அணுமின் உலை வைப்பது எந்த விதத்தில் சரியான முடிவாக இருக்கும்? அமைக்கப்படவுள்ள ஈபிஆர் எனப்படும் புதிய தொழில்நுட்பத்திலான உலைகள், இதுவரை பரிசோதனைக்கு உட்படாதவை. இவற்றின் நன்மை தீமையை யார் அறிவார்? பிறகு எந்த தைரியத்தில் எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டதாக அரசு கூறுகிறது?

இந்தியாவில் கிடைக்கும் யுரேனியம் 10,000 மெகாவாட் மின்சார உற்பத்திக்கு மட்டுமே போதுமானது. இதற்கும் மேலாக, அணுமின் உற்பத்தியை அதிகரித்தால் யுரேனியத்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்தாக வேண்டும். இதற்கு ஆயிரம் கெடுபிடிகள், ஒப்பந்தங்கள், தடைகள். இதையும் மீறி இறக்குமதி செய்தாலும் அவற்றின் விலை அப்போது மேலதிகமாக இருக்கும் என்பது நிச்சயம்.

இந்தியாவின் மின் தேவை ஒவ்வோராண்டும் 10 விழுக்காடு அதிகரிப்பதாகவும் அதனால்தான் இத்தகைய முடிவுகளை மேற்கொள்வதாகவும் அரசு காரணம் கூறுகிறது. இது ஒரு நொண்டிச் சாக்கு. இந்தியாவின் மின்உற்பத்தி தட்டுப்பாடு 13 விழுக்காடு என்றால், மின்விநியோகத்தில் வழித்தட இழப்பு 28 விழுக்காடாக இருக்கிறது. இப்போது இருக்கும் மின்உற்பத்தி நிலையங்களை அதன் முழுஉற்பத்தித் திறனுக்குப் பயன்படுத்தி, வழித்தட மின்இழப்பை 10 விழுக்காடாகக் குறைத்தாலே போதும். மின்தட்டுப்பாடு நீங்கிவிடும்.

மக்களைப் பற்றியும், நாளைய தலைமுறை பற்றியும் கவலைப்படாமல் பன்னாட்டு நிறுவனங்களின் மின்தேவையைப் பற்றி மட்டுமே அரசு கவலைப்பட்டால், இப்படியெல்லாம்தான் முடிவுகள் எடுக்கப்படும்!
நன்றி : தினமணி