Wednesday, October 29, 2008

ஓரளவு வளர்ச்சியுடன் முடிந்த இன்றைய பங்கு சந்தை

இன்றைய பங்கு சந்தை ஓரளவு வளர்ச்சியுடன் முடிந்திருக்கிறது. இன்றைய வர்த்தகத்தில் மெட்டல், ஆயில், சில டெக்னாலஜி நிறுவன பங்குகள் அதிகம் வாங்கப்பட்டன. இருந்தாலும் பார்மா, குறிப்பிட்ட சில ரியாலிட்டி, கேப்பிடல் குட்ஸ் பங்குகள் பின்தங்கி இருந்தன. இன்று சென்செக்ஸ் அதிகபட்சமாக 9,297.76 புள்ளிகள் வரையிலும் குறைந்த பட்சமாக 8,894.34 வரையிலும் சென்றது. முடிவில் 36.43 புள்ளிகள் ( 0.4 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 9,044.51 புள்ளிகளில் முடிந்தது. நிப்டி, அதிகபட்சமாக 2,781.25 புள்ளிகள் வரையிலும் குறைந்த பட்சமாக 2,631.90 புள்ளிகள் வரையிலும் சென்று பின்னர் 12.45 புள்ளிகள் ( 0.46 சதவீதம் ) மட்டும் உயர்ந்து 2,697.05 புள்ளிகளில் முடிந்துள்ளது. ஹிண்டல்கோ மற்றும் டாடா கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் முறையே 18 மட்டும் 12 சதவீதம் உயர்ந்திருந்தது. மகிந்திரா அண்ட் மகிந்திரா, விப்ரோ, ஏசிசி, ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், அம்புஜா சிமென்ட்ஸ், மற்றும் பிபிசிஎல் போன்றவைகள் 4.5 சதவீதத்தில் இருந்து 8 சதவீதம் வரை உயர்ந்திருந்தனற. இருந்தாலும் சுஸ்லான் எனர்ஜி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், மற்றும் ரான்பாக்ஸி பங்குகள் 10 - 11.5 சதவீதம் சரிந்திருந்தன. டிஎல்எஃப், சத்யம், ஹெச்யுஎல், ஹெச்டிஎஃப்சி, சீமன்ஸ் மற்றும் ஐடியா செல்லுலார் ஆகியவை 3 - 9 சதவீதம் சரிந்திருந்தன.
நன்றி : தினமலர்

உலகம் முழுவதும் பங்கு சந்தைகளில் முன்னேற்றம்

உலகம் முழுவதிலும் உள்ள பங்கு சந்தைகளில் இன்று நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காலை நேர வர்த்தகத்தில் ஜப்பானின் நிக்கி 232.60 புள்ளிகள் உயர்ந்திருந்தது. அதே போல் வர்த்தக துவக்கத்தில் உயர்ந்திருந்த தென் கொரியாவின் கோஸ்பி பின்னர் குறைந்து மைனஸ் 30 புள்ளிகளாக இருந்தது. ஜப்பானை போலவே ஹாங்காங்கின் ஹேங்செங்க் 171 புள்ளிகள் உயர்ந்திருந்தது. தைவானின் இன்டக்ஸ் 35 புள்ளிகள் உயர்ந்திருந்தது. செவ்வாய் அன்று முடிவில் அமெரிக்க வால்ஸ்டிரீட்டில் 10 சதவீத புள்ளிகள் உயர்ந்திருந்ததை தொடர்ந்து இன்று ஆசிய மற்றும் இந்திய பங்கு சந்தைகளில் ஏறுமுகம் காணப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள டவ்ஜோன்ஸ் இன்டக்ஸ் நேற்று 10.88 சதவீதம் உயர்ந்திருந்தது. நாஸ்டாக் 9.53 சதவீதமும், எஸ் அண்ட் பி 10.79 சதவீதமும் உயர்ந்திருந்தது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி வட்டியை 0.5 சதவீதத்தில் இருந்து 1 சதவீதம் வரை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அங்கு பங்கு சந்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதாக சொல்கிறார்கள். அதே போல ஜப்பானிலும் பேங்க் ஆப் டோக்கியோ வட்டியை குறைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். இதன் காரணமாகத்தான் அங்கும் பங்கு சந்தையில் ஏறுமுகம் காணப்படுவதாக சொல்கிறார்கள்.ஏற்றுமதியையே பெரிதும் நம்பிஇருக்கும் ஜப்பான் கம்பெனிகளின் மதிப்பும் உயர்ந்திருக்கிறது. இதற்கு காரணம் ஜப்பான் கரன்சியான யென் னின் மதிப்பு குறைந்திருப்பதுதான் என்கிறார்கள். அமெரிக்காவை போலவே ஐரோப்பாவிலும் பங்கு சந்தைகளில் முன்னேற்றமே காணப்பட்டது. லண்டனின் எஃப்.டி.எஸ்.இ., 1.9 சதவீதம், பாரீசின் சிஏசி 1.6 சதவீதம், ஃபிராங்பர்ட்டின் டாக்ஸ் 11.3 சதவீதம் உயர்ந்திருந்தது. இந்தியாவை பொருத்தவரை இன்று காலை வர்த்தகம் ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.
நன்றி : தினமலர்


பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை : மத்திய அரசு அதிகாரிகள்


இப்போதைக்கு பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் எண்ணம் இல்லை என்றும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் போக்கை தொடர்ந்து கொஞ்சம் நாட்களுக்கு கண்காணித்தபின்பே அது பற்றி முடிவு எடுக்கப்படும் என்றும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் சுந்தரேசன் தெரிவித்தார். இன்னும் சில வாரங்களுக்கு கச்சா எண்ணெய் விலையின் போக்கை நாங்கள் கண்காணிக்க இருக்கிறோம். அதன் பின்னரே விலை குறைப்பு பற்றி முடிவு செய்ய வேண்டும் என்றார் அவர். கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 57 டாலருக்கும் குறைவாக வந்தால்தால் பெட்ரோல் விலை குறைப்பது பற்றி முடிவு செய்ய முடியும் என்று ஏற்கனவே மத்திய அரசு சொல்லி வந்துள்ளது. இந்தியா வாங்கும் பேஸ்கட் குரூட் ஆயில் விலை கடந்த வாரத்தில் பேரலுக்கு 64 டாலராக இருந்தது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று புதன் கிழமை பேரலுக்கு 1.99 டாலர் உயர்ந்து 64.72 டாலராக இருக்கிறது.

நன்றி : தினமலர்


தீபாவளியன்று ரூ.100 கோடி சரக்கு விற்பனை : முதல்நாளும் 'டாஸ்மாக்' சாதனை

தமிழக டாஸ்மாக் கடைகளில் தீபாவளியன்று சரக்கு விற்பனை இரு மடங்கு அதிகரித்தது. தீபாவளி தினத்தன்று மட்டும் 'டாஸ்மாக்'கில் மது விற்பனை 100 கோடி ரூபாய்க்கு எகிறியுள்ளது. முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமையும் 100 கோடி ரூபாய்க்கு விற்பனை எட்டியதால், மது விற்பனை வரலாற்றில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 6,700 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றின் மூலம், அரசுக்கு கிடைக்கும் வருமானம் 10 ஆயிரம் கோடி. இந்த வருமானத்தைக் கொண்டே அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக 'டாஸ்மாக்' விற்பனையை அதிகரிக்க, அரசு தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது. மாவட்ட வாரியாக சரக்கு விற்பனைக்கு இலக்கு நிர்ணயித்து, மாதந்தோறும் விற்பனையை பெருக்கி வருகிறது.
கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின்போது, சாதனை அளவாக, ஒரே நாளில் 60 கோடி ரூபாய்க்கு சரக்கு விற்பனை நடந்தது. சாதாரண நாட்களில் விற்பனை செய்யப்படும் மது வகைகளை விட, இரு மடங்கு மதுபான வகைகளும், மூன்று மடங்கு பீர் வகைகளும் விற்பனையாகின. சென்னையில் மட்டும் நான்கு கோடி ரூபாய்க்கு விற்பனையானது.
இந்த ஆண்டு தீபாவளியை யொட்டி, குடிமகன்களுக்கு தட்டுப்பாடின்றி சரக்கு கிடைக்க அனைத்து கடைகளிலும்
கூடுதலாக சரக்குகள் டெலிவரி செய்யப்பட்டன. தீபாவளிக்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை (26ம் தேதி) முதலே டாஸ்மாக் கடைகளில் குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. விடுமுறை நாளையொட்டி தீபாவளி வந்ததால், இரு நாட்களிலும் விற்பனை களை கட்டியது.
சாதாரண நாட்களில் அயல்நாட்டு மது வகைகள், ஒரு லட்சத்து 20 ஆயிரம் பெட்டிகள் முதல் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெட்டிகள் வரை நாள் ஒன்றுக்கு விற்பனையாகி வந்தது. தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாளான ஞாயிற்றுக்கிழமை (26ம் தேதி) ஆகிய இரு நாட்களிலுமே இந்த விற்பனை இரு மடங்கானது.
இதன்படி, இரு நாட்களிலும் சேர்த்து நான்கு லட்சம் பெட்டிகள் அயல்நாட்டு மது விற்பனையாகி, புதிய சாதனை படைக்கப் பட்டுள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 45 கோடி ரூபாய் முதல் 60 கோடி ரூபாய் வரை டாஸ்மாக் மூலம் விற்பனை நடந்து வருகிறது. இது, தீபாவளியன்றும், முந்தைய தினமான ஞாயிற்றுக்கிழமையும் தலா 100 கோடி ரூபாயை தாண்டி சாதனை படைத்துள்ளது.

நன்றி : தினமலர்



அடிமட்டத்திற்கு போனது ஏன்? : சேதுராமன் சாத்தப்பன்

நேற்று முன்தினம் சந்தை இன்னுமொரு பெரிய சரிவை சந்தித்தது. 1,000 புள்ளிகள் வரை சரிந்து 7,700 புள்ளிகளுக்கு வந்து நின்றது. பார்த்தவர்களில் பலருக்கு நிச்சியமாக அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும். காரணம், அமெரிக்க சந்தையில் வெள்ளியன்று ஏற்பட்ட சரிவைத் தொடர்ந்து, ஆசிய சந்தைகள் அனைத்தும், நேற்று முன்தினம் காலை கீழேயே துவங்கின. பல ஆசிய சந்தைகள் கடந்த ஐந்து வருட இறக்க அளவில் உள்ளன. இந்தியாவிலும் அதே நிலை நீடித்தது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விற்பது நிற்கவில்லை. ஆதலால், அடிமட்டத்தை தொட்டு வருகிறது. நல்ல ப்ளூ சிப் பங்குகள் அடிமாட்டு விலைக்கு கிடைத்தாலும் வாங்க யாரும் தயாராக இல்லை. மியூச்சுவல் பண்டுகளும், சிறிய முதலீட்டாளர்களும் ஒதுங்கியே இருக்கின்றனர். எப்.ஐ.ஐ.,க்கள் (வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள்) விற்பதை நிறுத்தினால் மற்றவர்கள் பயமில்லாமல் உள்ளே வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசும் நிலைமையை சரிசெய்ய பெரிய அளவில் கட்டுமானத்திட்டங்களை கொண்டு வரலாம். அதன் மூலம் அரசு திட்டங்கள் கம்பெனிகளுக்கு கிடைக்கலாம். இது, வேலை வாய்ப்பையும், தொழில் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். அதே சமயம் சந்தையையும் ஊக்குவிக்கும். ரிசர்வ் வங்கி ரெப்போ கட் மறுபடி செய்யப்படலாம். உலக அளவில் உள்ள மத்திய வங்கிகள் அனைத்தும் ஒன்று கூடி சந்தைகளை நிலைநிறுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றன. அது பலனளித்தால் சரிதான். இல்லாவிடில் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். முடிவாக மும்பை பங்குச் சந்தை 191 புள்ளிகள் குறைந்து 8,509 புள்ளிகளில் முடிவடைந்தது. டிரைவேடிங்க் டிரேடிங் நாளை முடிவடைவதால், ஷார்ட் கவரிங் பொசிஷன்களை பலரும் கவர் செய்ததால் சந்தை தப்பியது.
நன்றி : தினமலர்