Friday, July 31, 2009

இருவேறு காஷ்மீர்களின் கதை

சீனாவிற்கும் ஒரு காஷ்மீர் பிரச்னை உண்டு என்பதும், இந்தியாவின் காஷ்மீர் பிரச்னையைப் போலவே இஸ்லாமியப் பிரிவினைவாதிகளால் பிரச்னைகள் உண்டு என்பதும் நம்மில் பலருக்குத் தெரியாத விஷயம். ஏன் வெளியுலகம் அதிகமாக அறியாத விஷயம் என்றுகூடச் சொல்லலாம்.

""சிங்கியாங்'' என்கிற சீனப் பிரதேசம்தான் சீனாவின் காஷ்மீர் ஆகும். சிங்கியாங் இந்தியாவின் லடாக் பகுதியை ஒட்டிய எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. 18 லட்சம் சதுர கி.மீ. பரப்பளவுள்ள அப்பகுதி சீனாவில் ஆறில் ஒரு பங்கு. இந்தியாவில் பாதி நிலப்பரப்புக்கு சமமான பகுதி.

இந்தியாவில் காஷ்மீர் 2,65,000 ச.கி.மீ. பரப்பாகும். அதிலும் 86,000 ச.கி.மீ. பாகிஸ்தான் வசம் உள்ளது. 37,500 ச.கி.மீ. சீனாவின் வசமும் மீதமுள்ள 1,41,000 ச.கி.மீ. மட்டுமே இந்தியாவின் வசம் உள்ளது. இன்று சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் இந்தியாவின் காஷ்மீர் (சுமார் 1,45,000 ச.கி.மீ.) சிங்கியாங்கில் நூறில் ஒரு பங்குதான். எனவே, சீனாவின் காஷ்மீர் இந்தியாவின் காஷ்மீரைப்போல நூறு மடங்கு பெரிது என்பதால் அதனால் வரும் பிரச்னையும் பெரிது. ஆனாலும்கூட பலருக்கும் இதுகுறித்து அதிகம் தெரிவதில்லை என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

அதற்கான காரணம் என்னவென்றால், இந்தியாவின் காஷ்மீர் சர்வதேசப் பிரச்னையாக்கப்பட்டதுபோல் சீனா சிங்கியாங் பிரச்னையை சர்வதேசப் பிரச்னையாக்கவில்லை. 1949-ல் துருக்கிய முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட சிங்கியாங்கின்மீது படையெடுத்து சீனா தன் எல்லைகளை மீட்டுக் கொண்டது. ""சிங்கியாங்'' என்பதற்கே கூட, ""பழைய எல்லைகள் திரும்புகின்றன'' என்றுதான் பொருள். அதற்கு மாறாக, 1948-ல் இந்தியா, பாகிஸ்தான் வசமிருந்த பெரும்பான்மையான காஷ்மீர் பகுதியை வென்றது, ஆனால் தானாகவே முன்வந்து காஷ்மீரை சர்வதேசப் பிரச்னையாக்கியது. அதனால், அது பிரச்னையாகவே இன்றுவரை தொடர்கிறது.
ஐ.நா.வுக்குச் சென்று சர்வதேசப் பிரச்னையாக மாற்றியது இந்தியாதான். பாகிஸ்தான் அல்ல. அதனால், இது இருதரப்புப் பிரச்னைதான் என்பதைச் சொல்லவே இப்போது இந்தியா திணறிக் கொண்டிருக்கிறது. சீனா எவ்வாறு தனது காஷ்மீரை (சிங்கியாங் என்று படிக்கவும்) தன்னுடன் ஒருங்கிணைத்தது என்பதை கூர்ந்து கவனித்தால், நாம் எந்த அளவுக்கு ராஜதந்திர ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் பலவீனமானவர்களாக இருக்கிறோம் என்பது புரியும்.

சிங்கியாங் பிரதேசம் 2 கோடி மக்கள்தொகை கொண்டது. அதில் 45 சதவீதம் ""உய்கர்'' முஸ்லிம்கள், 12 சதவீதம் மற்ற முஸ்லிம்கள். 41 சதவீதம் ""ஹன்'' எனும் சீன மக்கள். 1949-ல் ஹன் மக்கள்தொகை வெறும் 6 சதவீதம்தான். அறுபது ஆண்டுகளில் 7 மடங்கு அதிகரித்திருக்கிறது. இது எப்படி நடந்தது?

சீனா தனது ராணுவத்தை மாத்திரமே சிங்கியாங்கை நிர்வகிப்பதற்கு நம்பவில்லை. மாறாக, சீனா தனது மக்களை நம்பியது. ஹன் சீன மக்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக அப்பகுதியில் அதிகரிக்கும்படி சீனா பார்த்துக் கொண்டது. இப்போதைய 41 சதவீதம் மக்கள்தொகையானது அங்குள்ள ராணுவ வீரர்களோ, அவர்களது குடும்பத்தினரையோ, இடம்பெயர்ந்து அங்கு வசிக்கும் தொழிலாளர்களையோ உள்ளடக்கியது அல்ல.

சிங்கியாங் ஒருகாலத்தில் விவசாயத்தில் பெயர்போன பகுதியாக விளங்கியது. ஆனால் இப்போது அதன் நிலைமை என்ன? அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2004-ல் 28 பில்லியன் டாலராக இருந்து 2008-ல் 60 பில்லியன் டாலராக உயர்ந்திருக்கிறது. அதனுடைய சராசரி தனிநபர் உற்பத்தி 2864 டாலர்கள்.

சிங்கியாங் நிறைய தாதுக்களும் எண்ணெய் வளமும் நிறைந்துள்ளது. எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அப்பகுதியில் பூதாகரமாக வளர்ந்து வருகிறது. ஷாங்காய் நகருடன் இப்பகுதி எண்ணெய்க் குழாய் மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது. தன்னுடைய இயற்கை வளங்களாலும் மக்கள்தொகையாலும் பெரிய நிலப்பரப்பினாலும் சிங்கியாங் சீனாவுக்கு நிறைய அனுகூலங்களைச் செய்து வருகிறது.

இதற்கு நேர்மாறாக, இந்தியாவில் காஷ்மீருக்கு இந்தியா கொடுத்து வரும் விலை அபரிமிதமானது. காஷ்மீருக்கான இந்திய அரசின் மானியங்களைக் கணக்கிட்டால் ஒவ்வொரு காஷ்மீரிக்குமான சராசரி மத்திய மானியம் ரூ. 8,092 ஆகும். மற்ற இந்திய மாநிலங்களில் இந்தச் சராசரி வெறும் ரூ. 1,137 மட்டும்தான். ஐந்து பேர் கொண்ட ஒரு காஷ்மீர் குடும்பத்துக்கு நேரடியாக அரசாங்கம் மானியத் தொகையை மணியார்டர்கள் மூலம் அனுப்பினால் ஒவ்வொரு குடும்பமும் ரூ. 40,460-ஐ ஆண்டுதோறும் பெற்றுக் கொள்ளும்.

இன்னும்கூட ""உய்கர்'' முஸ்லிம்கள் கம்யூனிஸ்ட் சீன அரசின் மீது மகிழ்ச்சியுடன் இல்லை. ஜெர்மனியைச் சார்ந்த ரெபியா காதிர் என்ற பெண் தொழிலதிபர் ""உலக உய்கர் காங்கிரஸ்'' என்ற அமைப்பை தலைமை தாங்கி நடத்தி உய்கர்களின் விடுதலைக்காகப் போராடி வருகிறார்.

சிங்கியாங் பகுதியில் வன்முறையும் பயங்கரவாதமும் இருந்தாலும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு சீனாவுக்கு நட்பாக இருப்பதால் காஷ்மீரில் நடக்கும் அளவுக்கு வன்முறையின் அளவு இல்லை. எனவே உய்கர்கள் பாகிஸ்தானிடம் இருந்து எந்த ஆதரவையும் பெற முடியவில்லை.

ஆனாலும், பயங்கரவாதமும் வளர்ந்து வருகிறது என்பதை மறுப்பதற்கில்லை. சென்ற ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகளுக்கு மூன்று நாள்கள் முன்பாகக்கூட சிங்கியாங்கில் பயங்கரவாதத் தாக்குதலில் 16 போலீஸôர் கொல்லப்பட்டனர். ஆகஸ்ட் 11-ம் தேதி ஒலிம்பிக்ஸ் நடந்து கொண்டிருக்கும்போதுகூட பெய்ஜிங்கில் ஒரு தாக்குதலில் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

ஜூலை 6-ம் தேதி உய்கர் முஸ்லிம்களுக்கும் ""ஹன்'' சீன மக்களுக்குமிடையே பெரிய கலவரம் நடந்தது. சிங்கியாங்கின் தலைநகர் உரும்கியில் நடைபெற்ற கலவரத்தில் 184 பேர் கொல்லப்பட்டனர். 1000 பேர் காயமுற்றனர். இத்தனைக்கும் உரும்கியின் நான்கில் மூன்று பங்கு ஹன் சீன மக்கள்தான். இக்கலவரத்திற்கு சீனா என்ன நடவடிக்கை எடுத்தது என்பதைப் பார்ப்போம்.

சீன அதிபர் ஹூஜிண்டாவோ ஜி-8 மாநாட்டுக்குச் சென்றவர் உடனடியாகப் பறந்து வந்தார். அவருடைய அரசு பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் பயங்கரவாதம் இந்த மூன்று சக்திகளையும் எதிர்த்து யுத்தம் தொடுப்பதாகப் பிரகடனம் செய்தது.

சீன அரசு வெள்ளிக்கிழமை மசூதிகளில் நடைபெறும் தொழுகையைத் தடைசெய்து முஸ்லிம்கள் வீட்டிலேயே தொழுகை நடத்துமாறு அறிவித்தது. வேறு எந்த ஒரு நாடும் இப்படிச் செய்யத் துணியாது. அல் - காய்தாவே இந்தப் பிரச்னைகளுக்குக் காரணம் என்று சீனா சொல்லியது.

ஆம். சீனாவுக்கு இஸ்லாமியப் பிரிவினைவாதிகளுடனும் பயங்கரவாதிகளுடனும் பிரச்னை உள்ளது. ஆனால் சீனா இதைத் தனது உள்நாட்டுப் பிரச்னையாகவே கருதுகிறது. ஆனால் இந்தியாவோ அதன் சொந்தப் பிரச்னையான காஷ்மீரை சர்வதேசப் பிரச்னையாக்கிவிட்டது.

சீனா முஸ்லிம்கள் அல்லாத ஹன் சீன மக்களை 41 சதவீதம் அளவுக்கு வர வைத்து மக்கள்தொகையின் மதத் தொகுப்பை மாற்றியமைத்தது. இந்தியாவோ, சீனா போல காஷ்மீரின் மக்கள் தொகுப்பை மாற்ற முயற்சிக்கவில்லை என்பது மட்டுமல்ல, காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து ஹிந்துக்கள் வெளியேற்றப்பட்டதைக் கூடத் தடுக்க முயற்சிக்கவில்லை.

சிங்கியாங்கில் பாதிக்கு மேல் ஹன் சீன மக்களால் நிரப்பப்பட்டபோது இங்கே காஷ்மீரிலோ ஹிந்துக்களே இல்லாத நிலை ஏற்பட்டது. அதன் விளைவாக, இந்திய மக்களை நம்பி காஷ்மீரைக் காக்க முடியாமல் ராணுவத்தை நம்ப வேண்டியிருக்கிறது.

இந்தியா மட்டும் சீனா சிங்கியாங்கில் கையாண்ட அதே நடைமுறையைப் பின்பற்றி இருந்தால், காஷ்மீரை 370-வது ஷரத்தின் ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து காஷ்மீரில் குடியேறுபவர்களைத் தடுக்காமல் இருந்திருந்தால், காஷ்மீர் இன்று இந்தியாவுடன் இரண்டற இணைந்துவிட்டிருக்கும். எப்போதாவது நாம் சில உள்நாட்டுக் கலவரங்களைக் கையாள வேண்டியிருக்கும். ஆனால் இப்போதுபோல பாகிஸ்தானுடனும் அதன் பயங்கரவாதத்துடனும் ஒவ்வொரு நாளும் யுத்தம் நடத்த வேண்டிய அவசியம் இருந்திருக்காது.

இந்தியாவுக்கான பாடம் இதுதான் - மக்கள் தொகுப்பு. மக்கள்தொகையின் மதத்தொகுப்புச் சமன்நிலைதான் ஒரு நாட்டுக்கு குறிப்பாக அதன் எல்லைகளுக்கு உத்தரவாதமாகும். சீனா மெதுவாக சிங்கியாங்கை (அதன் காஷ்மீரை) தன் ஹன் சீன மக்கள் மூலமாக தேசிய நீரோட்டத்தில் இணைத்தது.

ஆனால் இந்தியா தனது அரசியல் சட்ட ஒப்பந்தத்தால் காஷ்மீர் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலக வழிவகுத்தது. அதுமாத்திரமல்ல, காஷ்மீரில் ஹிந்துக்கள் மொத்தமாகத் துடைக்கப்பட்டு சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் நிலையை ஏற்படுத்தியது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இதுதான் வேறுபாடு!

இன்னும் ஒரு வார்த்தை~

19-ம் நூற்றாண்டில் பிரெஞ்ச் தத்துவமேதை ""ஆகஸ்ட் சாம்டே'', "மக்கள் தொகுப்பே (மனித குல) விதி'' என்று கூறுகிறார். அவரை மேற்கோள் காட்டி ""எக்கனாமிஸ்ட்'' பத்திரிகை (ஆகஸ்ட் 24 - 31, 2002) மக்கள் தொகுப்புக்கு நாடுகள் மீதும் அவற்றின் பொருளாதாரம் மீதும் இருக்கிற தாக்கத்தை வலியுறுத்தி எழுதி இருந்தது. சீனா, மக்கள்தொகுப்பின் மகிமையைப் புரிந்துகொண்டது. இந்தியா, அதைப் புரிந்துகொள்ளவில்லை. இதுதான் இரு காஷ்மீர்களின் இருவேறுபட்ட கதை!

கட்டுரையாளர் : எஸ். குருமூர்த்தி
நன்றி : தினமணி

இன்போசிஸ் நிறுவனத்திற்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை பாதுகாப்பு

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான இன்போசிஸூக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை ( சி ஐ எஸ் எஃப் ) பாதுகாப்பு போடப்பட்டிருக்கிறது. ஒரு உதவி கமாண்டர் தலைமையில் ஒரு இன்ஸ்பெக்டர், 12 சப் இன்ஸ்பெக்டர்கள், 18 தலைமை காவலர்கள் மற்றும் 69 காவலர்கள் அடங்கிய 101 பேரை கொண்ட குழு இன்று முதல் இன்போசிஸ் நிறுவனத்தை 24 மணி நேரமும் பாதுகாக்கும். தீவிரவாதிகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்துக்கொள்ள இந்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. இந்திய கார்பரேட் உலகில் இதுவரை இல்லாத வகையில், ஒரு தனியார் நிறுவனத்திற்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு போடப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. சி ஐ எஸ் எஃப். பின் பாதுகாப்பிற்காக, இன்போசிஸ் நிறுவனம் வருடத்திற்கு ரூ.2.56 கோடியை கட்டணமாக கொடுக்க வேண்டும். மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த சட்டப்படி, பணம் கொடுக்க தயாராக இருந்தால் தனியார் நிறுவனங்களும் மத்திய பாதுகாப்பு படையினரை பாதுகாப்பிற்காக வைத்துக்கொள்ள வசதி இருக்கிறது. அதன்படி, தனியார் நிறுவனமான இன்போசிஸ்தான் முதன் முதலில் இந்த பாதுகாப்பை பெறுகிறது. ஆனால் அங்கிருக்கும் பாதுகாப்பு படையினர், அங்கு ' வாட்ச் அண்ட் வார்டு ' வேலையை பார்க்க மாட்டார்கள் என்றும், அதை ஏற்கனவே அங்கிருக்கும் தனியார் பாதுகாப்பு படையினரே பார்த்துக் கொள்வார்கள் என்றும், தீவிரவாத தாக்குதல் மற்றும் சதி வேலை போன்றவற்றில் இருந்து பாதுகாப்பது தான் எங்கள் வேலை என்று சி ஐ எஸ் எஃப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரிலையன்ஸின் ஜாம்நகர் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், விப்ரோ, தாஜ் ஹோட்டல் ( மும்பை ), டிரைடன்ட் ஹோட்டல்ஸ் ( எட்டு இடங்களில் இருப்பவை ), ஹோட்டல் மேரியோட் ( மும்பை ), டில்லி பப்ளிக் ஸ்கூல் ( டில்லியில் மூன்று இடங்களில் இருப்பது ), ஜேபி குரூப் ஆப் ஹோட்டல்ஸ் ( எட்டு ஹோட்டல்கள் ), டோரன்ட் பவர்ஸ் ( அகமதாபாத் ) ஆகியவையும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பிற்காக விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள்.

நன்றி : தினமலர்


துணைபோவதும் குற்றமே!

நேர்மையாளர், அப்பழுக்கற்றவர், கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர் என்று எதிர்க்கட்சியினரேகூட ஏற்றுக்கொள்ளும் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில், ""கோடிகள்'' என்பது சர்வ சகஜமாக ஊழல்களிலும், முறைகேடான வர்த்தக நடவடிக்கைகளிலும் இடம்பெறுவது வருத்தமாக இருக்கிறது.

அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மத்திய தகவல் தொடர்புத்துறை கையாளும் வழிமுறைகளால் மத்திய அரசுக்கு வர வேண்டிய கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் குறைந்துவிட்டது, ""முதலில் மனுச் செய்தவருக்கே முதலில் அனுமதி'' என்ற கொள்கையால் அரசுக்கு லாபம் ஏதும் இல்லை என்று இடைவிடாமல் கூறிவரும் நிலையில் "2-ஜி' அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் அதே முறையைக் கடைப்பிடித்துள்ளதாகவும், ஏற்கெனவே இப்படித்தான் நடந்திருக்கிறது என்றும் அத்துறைக்கான அமைச்சர் மீண்டும் கூறியிருக்கிறார்.

அடித்தளக் கட்டமைப்புத் துறையை மேம்படுத்தத் தேவைப்படும் திட்டங்களுக்காக அரசின் நவரத்தினங்களான அரசுத்துறை நிறுவனங்களின் பங்குகளைக் கூட விற்றால் பரவாயில்லை என்ற அளவுக்கு நிதியைத் தேடும் ஓர் அரசு, இன்னமும், ""முதலில் வருபவருக்கு முதலில் அனுமதி'' என்ற கொள்கையைக் கடைப்பிடிப்பதன் மர்மம்தான் அம்பலமாகவில்லை.

இதில் ஊழல் நடைபெறுகிறது, கோடிக்கணக்கான பணம் கைமாறுகிறது என்பதெல்லாம் ஊகிக்க முடியாத விஷயங்கள் அல்ல. ஆனால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாத வகையில் நன்கு திட்டமிட்டு, (நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா பாஷையில் சொல்வதானால்) விஞ்ஞான முறைப்படி நடைபெறுகிறது என்பதல்லவா உண்மை.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் தீருபாய் அம்பானியின் மறைவுக்குப் பிறகு அவருடைய பிள்ளைகள் முகேஷ் அம்பானியும் அனில் அம்பானியும் சொத்துகளைப் பிரித்துக் கொண்டதும், அதில் அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டதும், அவர்களிடையே தொழில்ரீதியாகப் போட்டி ஏற்பட்டதும் அவர்களுடைய சொந்த விவகாரங்கள். ஆனால் நாட்டையே பாதிக்கும் ஒரு விஷயத்தை அந்தச் சகோதரர்களில் ஒருவர் சில நாள்களுக்கு முன்னால் தன்னுடைய நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் கலந்துகொண்ட பொதுக்குழு கூட்டத்தில் கூறியிருக்கிறார். அது உண்மையா அல்லது வியாபாரப் போட்டிக்காகக் கூறப்பட்டதா என்று விசாரித்து மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதாகக் கூட மத்திய கம்பெனிகள் விவகாரத்துறையும் சட்டத்துறையும் காட்டிக் கொள்ள மறுக்கிறதே, அது ஏன் என்று நமக்கே கேட்கத் தோன்றுகிறதே, பிரதமர் மன்மோகன் சிங்கால் எப்படி எதுவுமே தெரியாததுபோல இருக்க முடிகிறது?

தேசிய அனல் மின் நிலையத்துக்குக் கூடத் தராமல் கோதாவரி-கிருஷ்ணா வடிநிலத்தில் கிடைக்கும் இயற்கை எரிவாயு முழுவதையும் தன்னுடைய சகோதரர் விற்றுக் காசாக்கப் பார்க்கிறார் என்று அம்பானி சகோதரர்களில் ஒருவரான அனில் அம்பானி குற்றம்சாட்டியிருக்கிறார். விசாரணைகூட இல்லாமல் போனால் எப்படி?

அடுத்ததாக வந்திருக்கிறது பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதியில் 2500 கோடி ரூபாய்க்கு நடந்திருப்பதாகக் கூறப்படும் புதிய ஊழல். இதை மக்களவையிலேயே எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வியாழக்கிழமை எழுப்பியிருக்கிறார்கள். இதில் உண்மையை வெளிக்கொண்டுவர நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குழுவை நியமிக்க வேண்டும் என்றுகூட ஒருமித்த குரலில் கோரியிருக்கிறார்கள். ""இது அவசியம் இல்லை, வெறும் அரசு விசாரணையே போதும்'' என்று மத்திய அமைச்சர் கூறிவிட்டார்.

ஆப்பிரிக்க நாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்ய முற்பட்ட நிறுவனங்கள் எவை என்று வெளிப்படையாகத் தெரியவில்லையாம்; அந்த நாடுகளில் இந்த அரிசியை வாங்கும் நிறுவனங்கள் எது என்றும் தெரியவில்லையாம். அதைவிட வேடிக்கை, சில நாடுகளுக்கு இந்த அரிசியே போகவில்லையாம். அப்படியானால் ஏற்றுமதியானதாகக் கணக்கு காட்டப்பட்டு அந்த அரிசி இங்கேயே பதுக்கப்பட்டு, விலை ஏறும்போது விற்பதற்குப் பயன்படுத்தப்பட உள்ளதா? முன்பேர வர்த்தகத்தைத் தடை செய்ய வேண்டும் என்று நடுநிலையாளர்கள் கோரும்போதெல்லாம் அரசு அதை நிராகரிப்பது இது போல ஊழல்கள் நடந்தால்தான் தங்களுக்குத் தேர்தல் நிதி கிடைக்கும் என்பதாலா? 2,500 கோடி, 50,000 கோடி என்பதெல்லாம் வெறும் சைபர்கள்தானா, அந்த ரூபாய்க்கெல்லாம் மதிப்பே கிடையாதா? மக்கள் தொடர்ந்து ஏமாற வேண்டியதுதானா?

தவறுக்கு மேல் தவறு நடக்கிறது. அதைத் தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர்கள் கண்டும் காணாமல் இருப்பதும், தவறுக்குத் துணை போவதற்குச் சமம்தானே! குற்றம் செய்பவர்களைவிடக் குற்றத்துக்குத் துணை போவதல்லவா அதைவிடத் தவறு? பொருளாதார மேதையாகவும், கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரராக இருந்தாலும் போதுமா? தவறைத் தட்டிக் கேட்கவும், தடுக்கவும் திராணி இல்லாதவர்களும் தலைமைப் பதவியில் இருப்பதுபோன்ற ஆபத்து வேறு எதுவும் இருக்க முடியாது. இனியாவது, பிரதமர் சற்று சுதாரித்துக் கொண்டு செயல்பட்டால் அவருக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது!

நன்றி : தினமணி

ஹோண்டா - முத்தூட் ஒப்பந்தம்

ஹோண்டா நிறுவனம், தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் தனது வாடிக்கையாளர்கள் நிதிச் சேவைக்காக, முத்தூட் பப்பச்சன் துணை நிறுவனமான முத்தூட் கேபிடல் சர்வீசசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
ஜப்பானின் ஹோண்டா நிறுவனம், தனது இந்திய நிறுவனம் மூலம் பல்வேறு இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்தியாவின் முத்தூட் பப்பச்சன் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து, கடன் நிதிச் சேவைகளை செய்து வருகிறது. பத்து லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்டது இந்நிறுவனம். முத்தூட் பப்பச்சன் நிறுவனத்தின் துணை நிறுவனமான முத்தூட் கேபிடல் சர்வீசசுடன், ஹோண்டா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் புறநகர் மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் ஹோண்டா நிறுவனம் தனது இரு சக்கர வாகனங்களை, முத்தூட் கேபிடல் சில்லரை மையங்கள் மூலம் விற்பனை செய்ய உள்ளது. இதே போல், ஹோண்டா நிறுவன விற்பனை மையங்களில் வாடிக்கையாளர்கள் கடன் தேவைகளுக்கு முத்தூட் கேபிடல் மூலம் நிதிச் சேவை அளிக்கப்படும். 'பிளெக்சி' என்ற புதிய திட்டத்தை முத்தூட் கேபிடல் அறிமுகம் செய்துள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள், கடன் தொகையை
தவணைக் காலத்திற்குள், தங்கள் கையிருப்பு வசதிப்படி தினம்தோறும், வாரம்தோறும் அல்லது மாதம்தோறும் தங்கள் வசதிக்தேற்ப திருப்பிச் செலுத்தலாம். இத்திட்டத்தை, முத்தூட் கேபிடல் சர்வீசஸ் விற்பனை மற்றும் சந்தைப் பிரிவு அதிகாரி பால கிருஷ்ணன் வழி நடத்தவுள்ளார். தற்போது சந்தையில் நிலவும் கட்டணங்களுக்கு ஏற்ப இந்த சேவைகள் இருக்கும். இந்த ஒப்பந்தம் தற்போது தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் அமல்படுத்தப் பட்டுள்ளது; பின்னர் படிப்படியாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்.
நன்றி : தினமலர்


பொதுமனிதனையும் பொறுப்பாக்குவோம்!

பிளாஸ்டிக் பொருள்களைக் கட்டுப்படுத்தும் கடுமையான சட்டத்தைத் தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று ஒரு பொதுநலவழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு ஏற்கெனவே அறிமுகப்படுத்திய பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி, விற்பனை, இருப்பு வைத்தல் தொடர்பான சட்ட மசோதாவை மறுபரிசீலனை செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

20 மைக்ரான் திடம் குறைவான பிளாஸ்டிக் கைப் பைகள் தயாரிப்புக்கு இந்தச் சட்ட மசோதா தடை விதித்திருந்தது. இதற்குப் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இச்சட்டத்தால் தொழில் நசிவும், பல்லாயிரம் பேருக்கு வேலையிழப்பும் நேரிடும் என்று அவர்கள் கூறியதால், சட்ட மசோதாவைக் கிடப்பில் போட்டது தமிழக அரசு.

மகாராஷ்டிர மாநிலத்திலும் இதேபோன்றுதான் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் அரசை அச்சுறுத்தினர். ஆனாலும், 2005-ம் ஆண்டு பெய்த பெருமழையில் மும்பை மாநகரம் முழுவதுமே வெள்ளத்தில் மிதக்கவும், மக்கள் வீடு திரும்ப முடியாத அளவுக்கு தனித் தீவுகள் உருவாகவும் நேர்ந்தபோது, அதற்குக் காரணம் சாக்கடையை அடைத்துக்கொண்ட பிளாஸ்டிக் கைப்பைகள் மற்றும், மறுசுழற்சி செய்யவியலாத பிளாஸ்டிக் பொருள்கள் என்று தெரியவந்தது. அதன்பிறகு எந்த எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், சட்டத்தை அமல்படுத்தியது மகாராஷ்டிர அரசு. 50 மைக்ரான் திடம் குறைவாக கைப்பைகள் உற்பத்தி, விற்பனை கூடாது என்றும், ஒவ்வொரு பையின்மீதும் உற்பத்தியாளர் தனது முகவரியை அச்சிட வேண்டும் என்றும் சட்டம் வகை செய்துள்ளது. இதுவரை விதிமுறை மீறலுக்காக 21 நிறுவனங்கள் தண்டிக்கப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் பைகளைத் தடை செய்தால் மும்பையில் பால் விநியோகம் (நாளொன்றுக்கு 20 லட்சம் லிட்டர்) மிகப் பெரும் பாதிப்பைச் சந்திக்க நேரும் என்றுகூட அச்சம் இருந்தது. ஆகவே, 50 மைக்ரான் திடம் குறைவான பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. பால் பாக்கெட், சமையல் எண்ணைய் பாக்கெட். ஷாம்பு பாக்கெட் (மிகச் சிலவற்றைத் தவிர) அனைத்துமே 50 மைக்ரான் தடிமன் கொண்டவை. இந்த பிளாஸ்டிக் பைகள் மறுசுழற்சிக்கு ஏற்றவை.

இந்தியாவில் ஆண்டுக்கு 45 லட்சம் டன் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் குறைந்தது 40 சதவீதம் "பேக்கேஜ்' துறை பயன்பாட்டில் உள்ளன. 50 மைக்ரான் திடம் குறைவான பிளாஸ்டிக் கைப் பைகளுக்குத் தடை விதிக்கப்படுமேயானால், 90 சதவீத பிளாஸ்டிக் கைப் பைகளை மறுசுழற்சிக்கு உட்படுத்த முடியும்.

மறுசுழற்சிக்கு லாயக்கற்ற பிளாஸ்டிக் பொருள்கள் என்று கருதப்படுபவை- மெலிதான பிளாஸ்டிக் கைப் பைகள், ஒருமுறை பயன்படுத்தப்படும், குவளைகள், கோப்பைகள், உணவுகள் அடைக்கப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் டப்பாக்கள், தட்டுகள், குடிநீர் போத்தல்கள் ஆகியவைதான். இவை பெரும்பாலும் ஓட்டல்களில்தான் பயன்படுத்தப்படுகின்றன. ஓட்டல்கள் 50 மைக்ரான் தடிமனுக்குக் குறைவான பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தத் தடை விதித்தாலே போதும், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு மிகமிகக் குறைந்துவிடும். தற்போது பல ஓட்டல்களில் பார்சலுக்குத் தனிக் கட்டணம் வசூலிக்கப்படும் நிலையில், 50 மைக்ரான் திடம் கொண்ட பிளாஸ்டிக் கைப் பைகளையே பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதால் அவர்களுக்குப் பெரிய இழப்பு ஏற்படப்போவதில்லை.

ஓட்டல்துறைக்கு அடுத்தபடியாக, மறுசுழற்சிக்குப் பயன்படாத பிளாஸ்டிக் குப்பை என்பது, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் போத்தல்கள்தான். கோலா, பெப்ஸி பானங்களின் பெட் பாட்டில்களை வாங்கிக்கொள்ளும் பழைய பேப்பர் கடைக்காரர்கள், நகரம் முழுவதிலும் இறைந்து கிடக்கும் இந்தக் குடிநீர் போத்தல்களை வாங்குவதே கிடையாது. பிளாஸ்டிக் குப்பைகளைச் சேகரிப்பவர்களும், இந்த போத்தல்களின் மூடிக்கு மட்டுமே மரியாதை கொடுத்து எடுத்துச் செல்கின்றனர். நகரச் சாக்கடைகளிலும், ரயில் பாதையிலும், நெடுஞ்சாலைகளிலும் இந்த குடிநீர்ப் போத்தல் குப்பைகள் முடிவற்றுக் கிடக்கின்றன. பால் பாக்கெட்டுகளைப் போலவே 50 மைக்ரான் திடம் கொண்ட, வண்ணம் இல்லாத பிளாஸ்டிக் பைகளில் ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் குடிநீர் விற்கப்படுமேயானால், விலை அதிகம் இல்லாமலும் மறுசுழற்சிக்கு உதவி செய்யும் வகையிலும் அமையும்.

தமிழக அரசின் மசோதாவில் பிளாஸ்டிக் பொருள் உற்பத்தியாளர்கள் அதைப் பயன்படுத்தும் தொழிற்கூடங்கள் மட்டுமே கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகின்றன. இதைப் பயன்படுத்தித் தூக்கியெறியும் பொறுப்பற்ற பொதுமக்கள் கண்டுகொள்ளப்படவில்லை. எந்தவொரு பிளாஸ்டிக் குப்பையையும் தெருவில் வீசியெறியும் நபருக்கு அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய விதியையும் அந்த மசோதாவில் சேர்ப்பதுதான், தமிழகத்திற்கு மிகப்பெரும் நன்மையைக் கொண்டுவரும்.
நன்றி : தினமணி

பங்கு சந்தையில் நல்ல ஏற்ற நிலை : இந்த வருடத்தின் மிக உயர்ந்த நிலையில் சென்செக்ஸ்

சர்வதேச அளவில் பங்கு சந்தைகளில் ஏற்பட்ட நல்ல முன்னேற்றம் காரணமாக இன்று காலை நேர வர்த்தகத்தில் இந்திய பங்கு சந்தையிலும் நல்ல ஏற்ற நிலை காணப்படுகிறது. வர்த்தகம் துவங்கிய நிமிடத்தில் இருந்தே உயர்ந்திருந்த மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், காலை 10.40 மணி அளவில் 316.03 புள்ளிகள் உயர்ந்து 15,703.99 புள்ளிகளாக இருந்தது. இது, இந்த வருடத்தின் மிக உயர்ந்த நிலை. அதே போல் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண்ணான நிப்டியும் 88 புள்ளிகள் உயர்ந்து 4,659.45 புள்ளிகளாக இருந்தது. அதிக அளவில் பங்குகளை வாங்கும் போக்கு காணப்படு வதால் பங்கு சந்தை குறியீட்டு எண்கள் வேகமாக உயர்ந்து வருகின்றன. ஆயில் அண்ட் கேஸ், ஆட்டோ, ரியாலிட்டி, மெட்டல் மற்றும் இன்ஃராஸ்டிரக்சர் பங்குகள் விலை உயர்ந்திருக்கின்றன. தேசிய பங்கு சந்தையில் 660 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்திருந் தன.கெய்ர்ன், ஸ்டெர்லைட் இன்டஸ்டிரீஸ், சுஸ்லான்,டிஎல்எஃப், எம் அண்ட் எம், டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் கேப்பிட்டல், எஸ்பிஐ, எல் அண்ட் டி, ஓஎன்ஜிசி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ரான்பாக்ஸி லேப்ஸ், ஹீரோ ஹோண்டா மற்றும் ஹெச்டிஎப்சி நிறுவன பங்குகள் விலை உயர்ந்திருக்கின்றன.
நன்றி : தினமலர்


கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவாக அமெரிக்க பங்கு சந்தைகள் உயர்ந்தன

கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவாக அமெரிக்க பங்கு சந்தைகள் நேற்று திடீரென உயர்ந்தன. எதிர்பார்த்ததையும் மீறி அமெரிக்க நிறுவனங்கள் லாபம் சம்பாதித்திருப்பதாக வந்த அறிக்கையை அடுத்து, அங்குள்ள முதலீட்டாளர்களிடையே புதிய நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. வேலையில்லா திண்டாட்டமும் கொஞ்சம் குறைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து டவ்ஜோன்ஸ் இன்டஸ்டிரியல் இன்டக்ஸ் 83 புள்ளிகள் ( 0.9 சதவீதம் ) உயர்ந்திருக்கிறது. கடந்த நவம்பர் 4 ம் தேதிக்குப்பின் இது தான் மிக உயர்ந்த நிலை. 2009 ல் இதுவரை இல்லாத உயர்ந்த நிலையும் இதுதான். எஸ் அண்ட் பி 500 இன்டக்ஸூம், கடந்த நவம்பர் 4 ம் தேதிக்குப்பின் நேற்று 11 புள்ளிகள் ( 1.2 சதவீதம் ) உயர்ந்திருக்கிறது. நாஸ்டாக் காம்போசைட் இன்டக்ஸ், கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதிக்குப்பின் 16 புள்ளிகள் ( 0.8 சதவீதம் ) உயர்ந்திருக்கிறது.
நன்றி :தினமலர்


வாழு, வாழவிடு!

கோவை-பாலக்காடு ரயில் வழித்தடத்தில் யானைகள் விபத்தில் இறந்துபோகும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதால், அந்த வழித்தடத்தில் ரயில்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும், ரயிலின் வேகத்தைக் குறைக்கவும் ரயில்வே நிர்வாகம் முன்வந்திருக்கிறது.

யானைகள் ரயிலில் அடிப்பட்டுச் சாகின்றன என்பது உண்மையே என்றாலும், நியாயமாகப் பார்த்தால் இதற்கு முழுப் பொறுப்பு ஏற்க வேண்டியது வனத்துறைதான்.

இந்த ரயில் வழித்தடம் புதியதல்ல. இந்த ரயில்தடத்தின் ஒரு சிறுபகுதி, சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவு, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள்ளும் அதையொட்டியும் செல்கிறது என்பதும் புதிதல்ல. கடந்த 30 ஆண்டுகளில் இந்த ரயில் வழித்தடத்தில் 13 யானைகள் இறந்துள்ளன. இவற்றில், 2008 பிப்ரவரி முதல் 2009 ஜூலை வரையிலான 18 மாதங்களில் இந்த ரயில் வழித்தடத்தில் 4 விபத்துகளில் 8 யானைகள் இறந்துள்ளன என்பதை எண்ணிப்பார்த்தால், இந்தச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று நிவாரண நடவடிக்கையில் ஈடுபட வேண்டியது வனத்துறைதான் என்பது புரியும்.

ஏன் இப்போது மட்டும் ரயிலில் யானைகள் விபத்தில் சிக்கி இறப்பது அதிகரித்திருக்கிறது என்ற உண்மையை நுட்பமாகப் பார்த்தால் கேரள, கர்நாடக, தமிழக வனத்துறை தனது பொறுப்பைத் தட்டிக் கழித்ததும், தான் செய்திருக்கவேண்டிய கடமையைச் சரியாகச் செய்யத் தவறியதும்தான் காரணம் என்பது வெளிப்படையாகத் தெரியவரும்.

பன்னெடுங்காலமாக மேற்குத் தொடர்ச்சி மலையில் யானைகள் குறிப்பிட்ட காலகட்டத்தில் மைசூர் தொடங்கி ஏற்காடு வரை வந்து திரும்பும் யானைப் பாதை உள்ளது என்பது வனத்துறைக்குத் தெரியாதது அல்ல. ஆனால், யானைப் பாதை குறுக்கிடும் என்று தெரிந்திருந்தும், தேயிலை, காப்பித் தோட்டங்கள் விரிவாக்கம் மற்றும் பல்வேறு தொழில்களுக்காக குத்தகைக்கு அனுமதி அளித்தது வனத்துறைதான். இதற்கு அரசியல் தலைவர்களின் நிர்பந்தம் மற்றும் பெருந்தொகை கையூட்டு என எது காரணமாக இருந்தாலும், வனத்துறைதான் இப்போது பொறுப்பேற்க வேண்டும்.

இத்தகைய அனுமதியில், யானைப் பாதைக்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது என்று ஒரு ஷரத்து வெறும் பெயரளவுக்கு இருந்தாலும், முதலீடு செய்தவர்கள் இதைப் பற்றி கவலைப்படுவதில்லை. வழிகளை ஆக்கிரமித்து அடைத்துவிட்டார்கள். இதனால்தான் யானைகள் புதிய வழிதேடி (வழிதவறிய யானைகள் என்று சொல்வது யானையை சிறுமைப்படுத்துவதாக அமையும்) அலைகின்றன.

யானைகள் ரயிலை மட்டுமே தேடி வரவில்லை. அண்மைக்காலமாக, அரூர், குடியாத்தம், திருப்பத்தூர், ஜவ்வாது மலை, ஒசூர், தேன்கனிக்கோட்டை என எல்லா இடங்களிலும் கூட்டமாக வருகின்றன. பயிர்களைச் சேதம் செய்வதும் நடைபெறுகிறது. சில நேரங்களில் யானைகளால் மனிதர்கள் உயிரிழக்கிறார்கள். சில நேரங்களில் மனிதர்களால் யானைகள் சாகின்றன.

யானைகள் மீது வனத்துறைக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால், யானைப் பாதையை தடைகள் இல்லாதபடி செய்வதும், அந்தப் பாதையில் யானைக்குத் தேவையான உணவுப் பயிர்களை மானியம் கொடுத்து விளைவிக்கச் செய்வதும், யானைகளுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்க உறுதி செய்வதும்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும். இதற்கு கேரள, கர்நாடக, தமிழக வனத்துறை மூன்றும் இணைந்து செயல்பட வேண்டும்.

ரயில்களின் வேகத்தைக் குறைப்பதும், இந்த வழித்தடத்தில் உணவுப் பொட்டலங்களை வீச வேண்டாம் என்று பயணிகளுக்குப் போதிப்பதும், ரயில்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும் சரியான தீர்வுகள் அல்ல. ரயில் தடத்தைவிட்டு பஸ் தடத்துக்கு யானைகள் வந்தால் அப்போது என்ன செய்வார்களோ? ரயில் பாதைக்கு அருகே சில இடங்களில் மின்வேலி அமைக்கும் யோசனையும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்வேலியிலும் யானைகள் சிக்கி இறக்கின்றன என்பதை அறிந்தால், இதையெல்லாம் பற்றி யோசிக்கவே மாட்டார்கள்.

வனப்பகுதியில் எல்லா நீர்ஆதாரங்களும் எஸ்டேட்களின் தேவைக்காகத் திசை திருப்பப்படுகின்றன. தவறான நடைமுறைகளால், காட்டாறுகள் திசைமாறி மண்அரிப்பை ஏற்படுத்தி, மழைநீர் வீணாகி வருகிறது. முன்பு அதிமுக ஆட்சியில் காட்டு விலங்குகளுக்குத் தண்ணீர் கிடைக்கும் வகையில் காட்டுக்குள் பல இடங்களில் தண்ணீர் தொட்டிகள் கட்டினார்கள். தலைமையைத் திருப்திசெய்ய "ஜே' ஆங்கில எழுத்துவடிவத்திலேயே தொட்டிகள் அமைக்கப்பட்டன.

விலங்குகளுக்குத் தேவையான உணவும் நீரும் காட்டுக்குள்ளேயே கிடைக்குமானால் அவை மனிதர்கள் வாழும் பகுதிக்கு வருவதைக் கொஞ்சம்கூட விரும்பாது.

யானைகளின் வாழ்வாதாரத்தைப் பறித்துக்கொண்டு, அவை "வழிதவறி' வருவதாகவும், பயிர்களை அழிப்பதாகவும், ரயில் விபத்துகளில் சிக்கி அவை இறப்பதாகவும் குறைசொல்வது மனிதர்களால் மட்டுமே இயலும்.
மனிதா, வாழு, வாழவிடு! - குறைந்தபட்சம் விலங்குகளையாவது!

நன்றி : தினமணி