Saturday, November 1, 2008

சி.ஆர்.ஆர்., மற்றும் ரிபோ ரேட்டை மேலும் குறைத்தது ரிசர்வ் வங்கி

வங்கிகளில் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் விதமாக, சமீபத்தில்தான் ரிசர்வ் வங்கி சி.ஆர்.ஆர்., மற்றும் ரிபோ ரேட்டை குறைத்து ரூ.1,85,000 கோடி பணப்புழக்கத்தை அதிகரித்திருந்தது. இப்போது ரிசர்வ் வங்கி, வங்கிகள் ரிசர்வ் வங்கியில் கட்டாயமாக வைத்திருக்க வேண்டிய ரொக்க கையிருப்பு விகிதத்தை ( சி.ஆர்.ஆர்.) மேலும் ஒரு சதவீதமும், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை ( ரிபோ ரேட் ) 0.5 சதவீதத்தையும் குறைத்திருக்கிறது. ஏற்கனவே 6.5 சதவீதமாக இருந்த சி.ஆர்.ஆர்., இப்போது 5.5 சதவீதமாக குறைத்திருப்பதால், வங்கிகளில் மேலும் ரூ.40,000 கோடி பணப்புழக்கத்தை அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த சி.ஆர்.ஆர்., குறைப்பு, இரண்டு கட்டமாக அமல்படுத்தப்படுகிறது. 0.5 சதவீதத்தை அக்டோபர் 25ம் தேதியிலிருந்தும் 0.5 சதவீதம் நவம்பர் 8ம் தேதியிலிருந்தும் அமல்படுத்துகிறது. இதுவரை 8 சதவீதமாக இருக்கும் ரிபோ ரேட்டை நவம்பர் 3 ம் தேதியில் இருந்து 7.5 சதவீதமாக குறைக்கிறது. இது தவிர, வங்கிகள் கவர்மென்ட் பாண்ட்களில் செய்ய வேண்டிய முதலீட்டிலும் ஒரு சதவீதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருக்கிறது. இப்போது அது 24 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையை பற்றி ஐசிஐசிஐ வங்கியின் ஜாயின்ட் மேனேஜிங் டைரக்டர் சந்தா கோச்சார், இது வங்கிகளின் பணப்புழக்கத்தை மேலும் அதிகரிக்கும் என்றும், இதன் மூலம் வங்கிகள் வட்டியை குறைக்க வழி ஏற்படும் என்றும் சொன்னார்.
நன்றி : தினமலர்


இந்தியன் ஆயில் கார்பரேஷனுக்கு ரூ.7 ஆயிரம் கோடி நிகர நஷ்டம் ஏற்பட்டுள்ளது

செப்டம்பர் 30ம் தேதியுடன் முடிந்த இந்த நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியன் ஆயில் கார்பரேஷன் ரூ.7,047.13 கோடி நிகர நஷ்டமடைந்திருக்கிறது. ஆனால் கடந்த வருடம் இதே காலாண்டில் ஐ.ஓ.சி., ரூ.3,817.75 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது. இந்த நிதி ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளிலுமே ஐ.ஓ.சி., நஷ்டம்தான் அடைந்திருக்கிறது. இதற்கு முன் அது, 2007 - 08 நான்காவது காலாண்டில்தான் நஷ்டத்தை சந்தித்திருந்தது. ரூபாயின் மதிப்பு குறைந்ததால் அதற்கு கிடைக்க வேண்டிய வெளிநாட்டு பண அளவு குறைந்து போனது, கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் இன்வென்ட்ரி வேல்யூவேஷனில் ஏற்பட்ட இழப்பு, வங்கியின் வட்டி விகிதம் அதிகரித்திருப்பதால் அதிகரித்து விட்ட செலவினம் போன்ற காரணங்களால், இந்த காலாண்டில் நஷ்டம் ரூ.7 ஆயிரம் கோடியாக அதிகரித்து விட்டதாக ஐ.ஓ.சி.,யின் சேர்மன் சர்தக் பெகுரியா தெரிவித்தார். ஆனால் நீண்ட இடைவேளைக்குப்பின் இன்று சனிக்கிழமையில் இருந்து அது லாபம் அடையும் என்று எதிர்பார்க்கிறார்கள். காரணம், கச்சா எண்ணெய் விலை கனிசமாக குறைந்திருப்பதுதான். இதுவரை பெட்ரோல் விற்பனையால் நஷ்டமடைந்து வந்த ஐ.ஓ.சி., இனிமேல் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோல் விற்கும் போதும் ரூ.4.12 லாபம் அடையும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் டீசல், சமையல் எரிவாயு, மண்ணெண்ணெய் விற்பனையின் போது தொடர்ந்து நஷ்டம்தான் அடையும் என்று சொல்கிறார்கள். ஒவ்வொரு லிட்டர் டீசலிலும் ரூ.0.96 ம், மண்ணெண்ணெயில் ரூ.22.40 ம், எல்.பி.ஜி.,யில் ரூ.343.49 ம் நஷ்டமடையும் என்கிறார்கள். இவைகளின் விற்பனையால் ஐ.ஓ.சி., நாள் ஒன்றுக்கு அடையப்போகும் நஷ்டம் ரூ.85 கோடி.
நன்றி : தினமலர்



கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 67 டாலராக உயர்ந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று 3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. நியுயார்க் சந்தையில் யு.எஸ்.லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 1.85 டாலர் உயர்ந்து 67.81 டாலராக இருந்தது. லண்டனின் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை 1.61 டாலர் உயர்ந்து 65.32 டாலராக இருந்தது. எனினும் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை குறைந்து வருவதால், அதற்கு முந்தைய மாதங்களுடன் ஒப்பிட்டால் அக்டோபர் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை மிக குறைவே. உலகில் அதிகம் பெட்ரோலை உபயோகிக்கும் நாடான அமெரிக்காவும் மற்ற நாடுகளும் பெட்ரோலிய உபயோகத்தை கனிசமாக குறைத்து விட்டதால் கச்சா எண்ணெய் விலை 32 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 147 டாலர் வரை உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது வெறும் 67.81 டாலர்தான். பாதிக்கும் மேலே குறைந்திருக்கிறது. கடந்த வாரம் கூடிய ஓபக் மாநாட்டில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, நாள் ஒன்றுக்கு 15 லட்சம் பேரல்கள் எண்ணெய் உற்பத்தியை அந்த நாடுகள் குறைத்த பின்னும் விலை ஒன்றும் அவ்வளவாக உயரவில்லை. ஓபக் நாடுகள் எண்ணெய் சப்ளையை குறைக்க இருப்பதாக வந்த தகவலால்தான் நேற்று கொஞ்சம் விலை உயர்ந்திருக்கிறது. குவைத்தும் அதன் பங்கிற்கு நவம்பர் மாதத்தில் 5 சதவீத சப்ளையை குறைக்கப்போவதாக அதன் வாடிக்கையாளர்களுக்கு தகவல் அனுப்பி விட்டது. நைஜீரியாவும் யுனைட்டட் அரபு எமிரேட்ஸ்ம் கூட சப்ளையை குறைக்கப்போவதாக சொல்லி விட்டது. ஆனால் உலகில் அதிகம் எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடான சவுதி அரேபியா இதுவரை இதுபற்றி எதுவும் சொல்லவில்லை. ஓபக் அமைப்பு நாடுகள்ற இன்னும் 10 லட்சம் பேரல் எண்ணெய் உற்பத்தியை தினமும் குறைக்க வேண்டும் என்றும், எண்ணெய் விலையை பேரல் ஒன்றுக்கு குறைந்தது 70 முதல் 80 டாலர் என்று முடிவு செய்ய வேண்டும் என்று வெனிசுலா சொல்லி வருகிறது.
நன்றி : தினமலர்