Friday, September 19, 2008

அமெரிக்காவின் தலையீட்டால் மீண்டும் எழுந்தது பங்கு சந்தை

கடந்த 10 மாதங்களாக அமெரிக்க பொருளாதாரத்தை ஆட்டம் காண செய்து வரும் நிதி நிறுவனங்களின் நிதி நெருக்கடியை சமாளித்து, சகஜ நிலைக்கு கொண்டு வர அமெரிக்க அரசு திட்டமிட்டிருப்பதாக வந்த செய்தியை அடுத்து, உலகம் முழுதிலும் இன்று பங்கு சந்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. சீனாவும் அதன் பங்கிற்கு, பங்குகளை வாங்குபவர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த ஸ்டாம்ப் டூட்டியை நிறுத்தி விட்டது.இதன் காரணமாக அங்குள்ள ஹாங்செங் 9.61 சதவீதம் உயர்ந்திருந்தது. ஜப்பானின் நிக்கி 3.76 சதவீதம், தைவான் 5.82 சதவீதம், கோஸ்பி 4.55 சதவீதம், ஸ்டெரெயிட்ஸ் டைம்ஸ் 5.78 சதவீதம், ஜகர்தா 5.82 சதவீதம் உயர்ந்திருந்தது. ஐரோப்பிய பங்கு சந்தையிலும் எப்.டி.எப்.சி., 8 சதவீதம், சி.ஏ.சி.,6.4 சதவீதம், டி.ஏ.எக்ஸ்.,4 சதவீதம் உயர்ந்திருந்தது. கடந்த திங்களில் இருந்து நேற்று வரை 21 சதவீத புள்ளிகளை இழந்திருந்த ரஷ்ய பங்கு சந்தைகள் இன்று 20 சதவீத புள்ளிகளை மீட்டன. உலகம் முழுவதிலுமிருந்து வந்த இந்த சாதகமான செய்தியை அடுத்து இந்திய பங்கு சந்தையிலும் நல்ல ஏற்ற நிலை ஏற்பட்டது. மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பித்ததில் இருந்தே உயரத்துவங்கிய சென்செக்ஸ், மாலை வர்த்தக முடிவில் 726.72 புள்ளிகள் ( 5.46 சதவீதம் ) உயர்ந்து 14,042.32 புள்ளிகளில் முடிந்தது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 207.10 புள்ளிகள் ( 5.13 சதவீதம் ) உயர்ந்து 4,245.25 புள்ளிகளில் முடிந்தது. இன்றைய வர்த்தகத்தில் பெரும் லாபம் பார்த்தது ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ், ஐ.சி.ஐ.சி.ஐ.பேங்க், இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ், ஹெச்.டி.எப்.சி., ஓ.என்.ஜி.சி., எல் அண்ட் டி, ஹெச்.டி.எப்.சி.பேங்க், பார்தி ஏர்டெல், சத்யம் மற்றும் பெல் நிறுவனங்கள்.
நன்றி : தினமலர்