Tuesday, June 23, 2009

ஆசிய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி

உலக பொருளாதாரம் வீழ்ந்து வருவதாக உலக வங்கி அறிக்கை வெளியிட்டதையடுத்து அமெரிக்க மற்றும் ஐரோப்பிய பங்கு சந்தைகள் கடும் வீழ்ச்சி அடைந்திருக்கின்றன. அதனையடுத்து இன்று ஆசிய பங்கு சந்தைகளும் கடும் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. ஜப்பானின் சந்தை குறியீட்டு எண் நிக்கி 3.4 சதவீத வீழ்ச்சியை கண்டிருக்கிறது. ஹாங்காங்கின் ஹோங்செங் 3.2 சதவீதம் சரிந்திருக்கிறது. உலக வங்கியின் அறிக்கையால் கச்சா எண்ணெய் விலை மற்றும் மெட்டல் விலை சரிந்திருக்கிறது. எனவே இது சார்ந்த தொழில்துறை பங்கு மதிப்பும் குறைந்திருக்கிறது. இன்று காலை வர்த்தகத்தின்போது, அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை பேரலுக்கு 1.10 டாலர் குறைந்து 66.40 டாலராக இருக்கிறது. திங்கள் அன்று அதன் விலை பேரலுக்கு 2.76 டாலர் குறைந்திருந்தது. லண்டனில் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் விலை பேரலுக்கு 98 சென்ட் குறைந்து 66 டாலராக இருக்கிறது. அமெரிக்காவின் டவ்ஜோன்ஸ் இன்டஸ்டிரியல் இன்டக்ஸ் திங்கள் அன்று 2.4 சதவீதம் குறைந்திருந்தது. லண்டனின் எஃப்.டி.எப்.சி. 100 ன் இன்டக்ஸ் 2.6 சதவீதம் குறைந்திருந்தது.ஆஸ்திரேலி பங்கு சந்தையிலும் 3 சதவீத சரிவு ஏற்பட்டிருக்கிறது. உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், முன்னேறும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 1.2 சதவீதம் தான் இருக்கும் என்று தெரிவித்திருக்கிறது. 2008ல் அதன் வளர்ச்சி 5.9 சதவீதமாகவும், 2007ல் அதன் வளர்ச்சி 8.1 சதவீதமாகவும் இருந்தது.
நன்றி : தினமலர்


சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸின் பெயர் மகிந்திரா சத்யம் என மாற்றம் செய்யப்பட்டது

ஊழல் சூறாவளியில் சிக்கித் திணறிய சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்தின் பெயர் மகிந்திரா சத்யம் என மாற்றப்பட்டுள்ளது. இது, மகிந்திரா குழுமத்தின் நற்பெயர் மற்றும் சத்யம் நிறுவனத்தின் வலிமை ஆகிய இரண்டையும் வெளிப்படுத்துவதாக அமையும் என மகிந்திரா குழுமத்தின் துணைத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆனந்த் மகிந்திரா தெரிவித்தார். நம்நாட்டில் இதுவரை எந்த நிறுவனமும் செய்தாத மோசடியை சத்யம் கம்ப்யூட்டர்ஸின் முன்னாள் தலைவர் ராமலிங்க ராஜூ செய்திருந்தார். சுமார் ரூ.8,000 கோடிக்கு நிதி நிலை கணக்குகளில் முறைகேடுகள் செய்ததை அவர் ஜனவரி மாதத்தில் ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, சத்யம் கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்திற்கு சர்வதேச அளவில் மிகப் பெரிய களங்கம் ஏற்பட்டது. இந்நிலையில், அந்த நிறுவனம் விற்பனைக்கு வந்ததையடுத்து, மகிந்திரா குழுமுத்தின் ஓர் அங்கமான டெக் மகிந்திரா நிறுவனம், சத்யம் நிறுவனத்தின் 31 சதவீத பங்குகளை ரூ.1,760 கோடிக்கு சென்ற ஏப்ரல் மாதத்தில் வாங்கியது. அப்போதே, அதன் பெயரை மாற்றம் செய்ய வேண்டும் என்று மகிந்திரா கருதியது. சத்யம் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களும் பெயரை மாற்ற வேண்டும் என டெக் மகிந்திரா நிறுவனத்தின் உயர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டிருந்தனர். இந்நிலையில், அண்மையில் ஐதராபாத்தில் நடைபெற்ற டெக் மகிந்திரா மற்றும் சத்யம் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் கூட்டத்தில், மகிந்திரா சத்யம் என பெயர் மாற்றம் செய்வது என்று முடிவு எடுக்கப்பட்டது.
நன்றி : தினமலர்


ஏர் - இந்தியா ஊழியர்களுக்கான சம்பளத்தில் 17 சதவீதம் குறைக்கப்படுகிறது

நாள் ஒன்றுக்கு ரூ.15 கோடி வரை நஷ்டம் அடைந்து வரும் ஏர் - இந்தியா நிறுவனம், செலவை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஊழியர்களுக்கான ஜூன் மாத சம்பளத்தை, ஜூன் கடைசி தேதிக்கு பதிலாக ஜூலை 15 ம் தேதி கொடுப்பதாக அறிவித்தது. பின்னர் அதன் உயர் அதிகாரிகள் எல்லோரும் ஜூலை மாதத்தில் சம்பளம் மற்றும் ஊக்கத்தொகை இல்லாமல் வேலை பாருங்கள் என்றது. இப்போது மூன்றாவதாக ஊழியர்களுக்கு செலவு செய்து வந்த வருடாந்தர தொகையில் 17 சதவீதத்தை அல்லது ரூ.500 கோடியை குறைக்க முடிவு செய்திருக்கிறது. அதற்காக ஒரு கமிட்டியை நியமனம் செய்திருக்கிறது. இப்போது அந்த நிறுவனத்தில் 31,000 பேர் வேலை பார்க்கிறார்கள். அவர்களுக்கு வருடந்தோறும் சம்பளம் மற்றும் மற்ற வசதிகளுக்கான தொகையாக ரூ.3,000 கோடி செலவு செய்யப்படுகிறது. இதிலிருந்து ரூ.500 கோடியை குறைத்து ரூ.2,500 கோடியாக மாற்ற முயற்றிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நான்கு பேரை கொண்ட அந்த கமிட்டி, ஊழியர்களுக்கும் ஏர் - இந்தியா நிர்வாகத்துக்கு மிடையே போடப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த ஒப்பந்தத்தை ஆராய்ந்து கொண்டிருக்கிறது.ற அந்த குழுவில் மனித வள மேம்பாட்டு துறையை சேர்ந்தவர்களும் நிதித்துறையை சேர்ந்தவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். இப்போது ஏர் - இந்தியாவின் மொத்த நிர்வாக செலவில் 35 சதவீதம், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் மற்ற வசதிகளுக்காகவே செலவு செய்யப்பட்டு வருகிறது. இதனை மாற்றி அமைப்பது குறித்து அந்த குழு ஆராய்ந்து, ஜூலை 15ம் தேதிக்கும் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
நன்றி : தினமலர்


சுவிஸ் வங்கியின் சேமிப்பு குறித்த விபரத்தை அளிக்க சுவிஸ் அரசு சம்மதம்

வரி கட்டுவதில் இருந்து தப்புவதற்காக சுவிஸ் வங்கிகளில் சேமிக்கப்படும் பணம் ( கருப்பு பணம் ) குறித்த விபரங்கள் தெரிவிக்கப்படும் என்று சுவிஸ் அரசாங்கம் தெரிவித்திருக்கிறது. போதைப்பொருள் விற்பனை அல்லது லஞ்சம் மூலம் பெற்ற பணம் ஆகிய இரண்டு வகையான பணத்தை மட்டுமே சுவிஸ் வங்கி இதுவரை பெற்றுக்கொள்ளாமல் இருந்தது. இந்த இரு வகையில் இல்லாமல் மற்ற எந்த வகையில் ஒருவர் பணம் சம்பாதித் திருந்தாலும் அவரது பணத்தை சுவிஸ் வங்கிகள் பெற்றுக்கொள்ளும். அது சம்பந்தமான விபரங்களை யாருக்கும் சொல்லாமல் ரகசியம் காக்கும். ஆனால் உலகம் முழுவதும் உள்ள பெரும் பணக்காரர்கள், வருமான வரித்துறைக்கு காட்டாமல் சம்பாதிக்கும் கருப்பு பணத்தையும் சுவிஸ் வங்கியில் சேமித்து வைக்க துவங்கினர். இதனால் அவர்கள் அந்தந்த நாட்டில் வரி கட்டுவதில் இருந்து தப்பித்து வந்தனர். இவ்வாறு வரி கட்டுவதில் இருந்து தப்பித்த இந்தியர் களின் பணமும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சுவிஸ் வங்கியில் சேமிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த கருப்பு பணம் யார் யார் பெயரில் எவ்வளவு தொகை சேமிக்கப்பட்டிருக்கிறது என்ற விபரம் நமக்கு தெரிவதில்லை. இதனை போக்கும் விதமாக இந்திய அரசு, சுவிட்சர்லாந்து அரசுடன் தொடர்பு கொண்டு, டபுள் டேக்ஷேசன் ஆவாய்டன்ஸ் அக்ரீமென்ட் ( டிடிஏஏ ) படி, வரி கட்டுவதில் இருந்து தப்புவதற்காக சுவிஸ் வங்கிகளில் சேமிக்கப்படும் பணம் குறித்த விபரத்தை எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறது. இதனை பரிசீலித்த சுவிட்சர்லாந்து அரசு, இந்திய அரசு கேட்டுக்கொண்டால் அந்த விபரங்கள் தெரிவிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறது.
நன்றி : தினமலர்