Thursday, August 13, 2009

மூலப் பொருட்கள் விலை உயர்ந்தாலும் பிஸ்கெட் விலை தற்போதைக்கு உயராது : ரிப்போர்ட்

பிஸ்கெட் தயாரிப்புக்கான மூலப் பொருட்களான பால் மற்றும் சர்க்கரையின் விலை உயர்ந்துள்ள நிலையிலும் தற்போதைக்கு பிஸ்கெட் விலை உயராது என சந்தை நிலவரம் தெரிவிக்கின்றது. இருப்பினும் எடையை குறைப்பது குறித்து பிஸ்கெட் தயாரிக்கும் நிறுவனங்கள் பரிசீலித்து வருதாக ஒரு அறிக்கை தெரிவிக்கிறது. பிஸ்கெட் தயாரிக்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான பார்லே பிராடக்ட்ஸ் மார்கெட்டிங் மேனேஜர் ப்ரவீன் குல்கர்னி : தற்போதைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க பிஸ்‌கெட்டு பார்க்கெட்டகளின் எடையை குறைப்பது மட்டும் தான் ஒரே வழி என்று தெரிவித்துள்ளார். மேலும் விலையை உயர்த்துவது என்ற முடிவில் பரவலாக எல்லா பிஸ்கெட் நிறுவனங்கள் பொறுத்திருந்து பார்ப்போம் என்ற கொள்கையுடன் தான் இருக்கிறது என்றார். பிஸ்கெட் நிறுவனங்கள் மத்தியில் நிலவும் போட்டா போட்டியில், வி‌லையை குறைப்பது என்பது மார்க்கெட்டை பாதிக்கும் என்பதால் தான் இந்த தயக்கம் என்றும் விளக்கியுள்ளார். இதனால் ஒன்று பிஸ்கெட் விலை 10 சதவீதம் உயர்த்தப்படலாம் இல்லையால் பேக்கேஜில் 10 கிராம் எடை குறைக்கப்படலாம் என பேசப்படுகிறது.
நன்றி : தினமலர்


ஹிட்லரின் கையெழுத்திடப்பட்ட அவருடைய சுயசரிதை ஏலத்துக்கு வருகிறது

ஹிட்லரின் கையெழுத்துடன் உள்ள அவருடைய சுயசரிதையான மெய்ன் கேம்ப் - (எனது போராட்டம்) என்ற புத்தகத்தின் பிரதி தற்போது ஏலத்துக்கு வந்துள்ளது. சர்வாதிகரி ஹிட்லர் லேண்ட்ஸ்பெர்க் சிறையில் இருந்த போது ஏற்பட்ட அனுபவங்களை அந்த புத்தகத்தில் எழுதியுள்ளார். இந்நிலையில் அந்த புத்தகத்தின் பழைய பிரதி ஒன்றில் ஹிட்லரின் கையெழுத்து இடம் பெற்றுள்ளது. இதை பாதுகாத்து வைத்துள்ள முல்லக்ஸ் என்ற ஏல நிறுவனம், தற்போது அதை ஏலத்தில் விட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்


ஏழு நகரங்களில் 5000 பட்ஜெட் வீடுகள் : யுனிடெக் கட்டுமான நிறுவனம் புது முயற்சி

யுனிடெக் நிறுவனம் ஏழு நகரங்‌களில் சுமார் 5000 பட்ஜெட் வீடுகள் கட்டித்தர முடிவு செய்துள்ளது. நொய்டாவில் 10 முதல் 30 லட்சம் ரூபாய் செலவுக்குள் பட்ஜெட் வீடுகள் கட்டியது யுனிடெக் நிறுவனம். இந்த சோதனை திட்டம் வெற்றிகரமாக அமைந்த நிலையில், இதே பாணியில், 7 நகரங்களில் 5000 பட்ஜெட் வீடுகளை கட்ட நாட்டின் கட்டுமான நிறுவனங்களில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமான யுனிடெக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தை 6000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தவும், யுனி ஹோம்ஸ் என்ற பிராண்ட் பெயரில் வெளியிடவும் தயாராகி விட்டது. யுனிடெக் நிறுவனம் இதுவரை லக்சுரி வீடுகள் மட்டுமே கட்டி பிரபலமாகியிருந்த நிலையில் அந்நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் , அந்நிறுவனம் சந்தித்த இழப்பீடுகளை சமாளிக்க துவக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தினமலர்


பயந்தால் எப்படி?

வருமுன் காப்பது என்கிற விஷயமே இந்திய நிர்வாகத்துக்கு மறந்து போய்விட்டதோ என்று சிலநேரம் சந்தேகப்படத் தோன்றுகிறது. பன்றிக் காய்ச்சலின் கடுமை நான்கு மாதங்களுக்கு முன்னால் மெக்சிகோவை இந்தத் தொற்றுநோய் தாக்கியபோது தெரியத் தொடங்கியது. அப்போதே, ஏனைய உலக நாடுகளைப்போல இந்திய அரசும், நிர்வாகமும் இந்த விஷயத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டாமா?

அமெரிக்காவில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை, மெக்சிகோவை பன்றிக் காய்ச்சல் தாக்கிய நொடியிலிருந்து ஊடகங்கள் மூலம் எச்சரித்து, இந்தத் தொற்றுநோயின் அறிகுறிகள், தற்காப்பு நடவடிக்கைகள், விளைவுகள், நோய்க்கான நிவாரணம் என்று பன்றிக் காய்ச்சலைப் பற்றிய அத்தனை தகவல்களையும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தியது. அத்தனை மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முடுக்கிவிட்டு, பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் வைத்தது.

கடந்த ஜூன் மாத இறுதியில், அமெரிக்காவில் மட்டும் 27,000 நோயாளிகள் இந்த நோயால் தாக்கப்பட்டிருப்பது அதிகாரபூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 3000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள். 130-க்கும் அதிகமானவர்கள் நோய்க்குப் பலியாகி இருந்தனர். அமெரிக்க நிர்வாகம் அறிவித்தது என்ன தெரியுமா? சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தங்களது பார்வைக்கு எட்டியது மிகமிகக் குறைந்தவர்கள் மட்டுமே என்றும் துணிந்து அறிவித்தது.

அதற்கு நேர் எதிர்மாறாக இருக்கிறது நமது மத்திய சுகாதாரத் துறையின் செயல்பாடு. போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய சுகாதாரத் துறை, ஒரு சிலர் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தொற்றுநோய் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டது. விளைவு? பன்றிக் காய்ச்சல் காட்டுத் தீயாய் பரவத் தொடங்கி, ஆங்காங்கே மரணங்களும் ஏற்பட்டபோது, மத்திய மற்றும் மாநில சுகாதாரத் துறைகள் அசடு வழிகின்றன. அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மையங்கள் திறக்கப்படுகின்றன என்று முதலில் அறிவித்துவிட்டு, கட்டுக்கடங்காத கூட்டம் புணே நகரின் அரசு மருத்துவமனையில் கூடியபோது செய்வதறியாது தவித்த முட்டாள்தனம் அரசும், நிர்வாகமும் எந்த அளவுக்கு முன்யோசனை இல்லாமல் செயல்படுகின்றன என்பதற்கு இன்னொரு உதாரணம்.

உலக மக்கள்தொகையில் 30 விழுக்காடு மக்களை இந்தத் தொற்றுநோய் பாதிக்கக்கூடும். அதேநேரத்தில், பன்றிக் காய்ச்சல் என்பது மரணத்தில்தான் முடியும் என்று பயப்படவும் தேவையில்லை. இதுவரை கிடைத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், இந்தத் தொற்றுநோயால் தாக்கப்பட்டவர்களில் 10 சதவிகிதம் பேர்தான் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற நேரிடும். அதிகபட்சம் 1 சதவிகிதம்தான் மரணமடைவார்கள் என்று தெளிவாக்குகிறது உலக சுகாதார நிறுவனத்தின் சுற்றறிக்கை.

பலருக்கும் இதன் அறிகுறிகள் மிகவும் குறைவாக இருந்து அதை சட்டை செய்யாமல் இருந்துவிடக்கூடும். அவர்களுக்கு சிகிச்சையும் தேவைப்படாது. மருத்துவ சிகிச்சையே இல்லாமல், பன்றிக் காய்ச்சலால் தாக்கப்பட்ட பாதிக்கும் மேற்பட்டவர்கள் மிகக் குறைவான அறிகுறிகளுடன் ஒரே வாரத்தில் குணமடையவும் செய்வார்கள். அதனால், பன்றிக் காய்ச்சல் பற்றிய பீதியோ, பயமோ அடைவது என்பதும் அனாவசியம்.

இந்தப் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்படக் கூடியவர்களில் பெரும்பாலோர் கர்ப்பிணிப் பெண்கள், ஆஸ்த்மா போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள், இதய நோயாளிகள், சர்க்கரை வியாதி உடையவர்கள், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் மற்றும் அதிக உடல் பருமன் கொண்டவர்கள் ஆகியோர். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் வளரும் பட்டணத்து மற்றும் அதிக வருவாய்ப் பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் இந்தப் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படலாம்.

குறைந்த ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்காத, வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தத் தொற்றுநோயின் முக்கிய இலக்கு என்பதால் நகர்ப்புறங்களைவிட இந்தியா போன்ற நாடுகளில் கிராமப்புறங்கள் அதிக அளவில் பாதிக்கப்படலாம். அதை எதிர்கொள்ள நமது சுகாதாரத்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? தமிழகத்தின் பல மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சலுக்கான மருந்துகள் சென்றடையவில்லை என்கிற குற்றச்சாட்டு நிலவுகிறது. இடைத்தேர்தலில் காட்டும் முனைப்பைப் பன்றிக் காய்ச்சல் தடுப்புக்கும் காட்டலாகாதா?

கைக்குட்டைகளில் ஒரு சொட்டு நீலகிரித் தைலத்தை விட்டு வைத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது முகர்ந்து கொள்ளுங்கள். சுலபமான தடுப்புமுறை இதுதான் என்று தேசிய தொற்றுநோய் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதேபோல, அறிகுறிகள் தெரிந்தால் வீட்டிற்குள்ளேயே ஓய்வெடுத்தாலே, குணமாகிவிடும். தாக்கம் மிகவும் அதிகமானால் மட்டும் மருத்துவமனைக்குப் போனால்போதும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

இதுபோன்ற எதிர்பாராத தொற்றுநோய்களுக்கான மருந்து உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு போர்க்கால நடவடிக்கையில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதற்கும் விநியோகிப்பது என்பது எளிதான விஷயமல்ல. இயற்கைக்கு எதிரான வாழ்க்கை முறைகளை நாம் வசதி என்கிற பெயரில் விரும்பி ஏற்றுக்கொள்ளும்போது, இதுபோன்ற உலகளாவிய தொற்றுநோய்களையும் எதிர்கொள்ளத்தானே வேண்டும். பயந்தால் எப்படி?

நன்றி : தினமணி

நாட்டின் பணவீக்கம் -1.74 சதவீதமாக குறைந்தது

கடந்த முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவாக, ஆகஸ்ட் ஒன்றாம் தேதியுடன் முடிந்த வாரத்தில் இந்தியாவின் பணவீக்க விகிதம் மைனஸ் 1.74 சதவீதமாக குறைந்திருக்கிறது. இத்தனைக்கும் பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் ஆகியவைகளின் விலை உயர்ந்திருந்த போதும் பணவீக்கம் இந்தளவுக்கு குறைந்திருக்கிறது. இதற்கு முந்தைய வாரத்தில் பணவீக்க விகிதம் மைனஸ் 1.58 சதவீதமாகவும், கடந்த வருடம் இதே காலகட்டத்தில் 12.91 சதவீதமாகவும் இருந்திருக்கிறது.
நன்றி : தினமலர்


பயணிகள் அதிகம், வருமானம் கம்மி : புலம்பும் விமான போக்குவரத்து நிறுவனங்கள்

ஏர்லைன்ஸ் அதிகமாக பயணிகளை ஏற்றிச் சென்ராலும் குறைவான லாபம் ஈட்டும் நிலையிலேயே தொடர்ந்த இருக்கிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் விமான போக்குவரத்து நிறுவனங்கள் கடும் சரிவில் இருந்தன. விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டன. சரிவில் இருந்து மீண்டு வந்துள்ள விமான போக்குவரத்து நிறுவனங்கள், தற்போது பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தாலும், வருமானம் கம்மி தான் என அலுத்துக் கொள்ளகின்றன. இதற்கு காரணம் லோ காஸ்ட் ஆபரஷேன் என தான் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். முன்பு விமான கட்டணங்கள் இருந்த அளவை விட தற்போதைய மிகவும் குறைந்து அளவில் இருக்கின்றன. இதனால் விமானத்தில் பயணிக்கும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது நல்ல விஷயம் தான் என்றாலும், ஆபரேஷனல் காஸ்ட்டுகளால் லாபம் சொர்ப்பம் தான். விமான போக்குவரத்து இயக்குநரகம் தயாரித்துள்ள பட்டியிலின்படி இந்த ஆண்டு ஜூ‌லை மாதம் வரை 35.97 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி : தினமலர்