Thursday, August 13, 2009

பயந்தால் எப்படி?

வருமுன் காப்பது என்கிற விஷயமே இந்திய நிர்வாகத்துக்கு மறந்து போய்விட்டதோ என்று சிலநேரம் சந்தேகப்படத் தோன்றுகிறது. பன்றிக் காய்ச்சலின் கடுமை நான்கு மாதங்களுக்கு முன்னால் மெக்சிகோவை இந்தத் தொற்றுநோய் தாக்கியபோது தெரியத் தொடங்கியது. அப்போதே, ஏனைய உலக நாடுகளைப்போல இந்திய அரசும், நிர்வாகமும் இந்த விஷயத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்க வேண்டாமா?

அமெரிக்காவில் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை, மெக்சிகோவை பன்றிக் காய்ச்சல் தாக்கிய நொடியிலிருந்து ஊடகங்கள் மூலம் எச்சரித்து, இந்தத் தொற்றுநோயின் அறிகுறிகள், தற்காப்பு நடவடிக்கைகள், விளைவுகள், நோய்க்கான நிவாரணம் என்று பன்றிக் காய்ச்சலைப் பற்றிய அத்தனை தகவல்களையும் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தியது. அத்தனை மருத்துவமனைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முடுக்கிவிட்டு, பன்றிக் காய்ச்சலை எதிர்கொள்ளத் தயார் நிலையில் வைத்தது.

கடந்த ஜூன் மாத இறுதியில், அமெரிக்காவில் மட்டும் 27,000 நோயாளிகள் இந்த நோயால் தாக்கப்பட்டிருப்பது அதிகாரபூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 3000 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள். 130-க்கும் அதிகமானவர்கள் நோய்க்குப் பலியாகி இருந்தனர். அமெரிக்க நிர்வாகம் அறிவித்தது என்ன தெரியுமா? சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தங்களது பார்வைக்கு எட்டியது மிகமிகக் குறைந்தவர்கள் மட்டுமே என்றும் துணிந்து அறிவித்தது.

அதற்கு நேர் எதிர்மாறாக இருக்கிறது நமது மத்திய சுகாதாரத் துறையின் செயல்பாடு. போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டிய சுகாதாரத் துறை, ஒரு சிலர் மட்டுமே பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தொற்றுநோய் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருப்பதாகவும் தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டது. விளைவு? பன்றிக் காய்ச்சல் காட்டுத் தீயாய் பரவத் தொடங்கி, ஆங்காங்கே மரணங்களும் ஏற்பட்டபோது, மத்திய மற்றும் மாநில சுகாதாரத் துறைகள் அசடு வழிகின்றன. அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மையங்கள் திறக்கப்படுகின்றன என்று முதலில் அறிவித்துவிட்டு, கட்டுக்கடங்காத கூட்டம் புணே நகரின் அரசு மருத்துவமனையில் கூடியபோது செய்வதறியாது தவித்த முட்டாள்தனம் அரசும், நிர்வாகமும் எந்த அளவுக்கு முன்யோசனை இல்லாமல் செயல்படுகின்றன என்பதற்கு இன்னொரு உதாரணம்.

உலக மக்கள்தொகையில் 30 விழுக்காடு மக்களை இந்தத் தொற்றுநோய் பாதிக்கக்கூடும். அதேநேரத்தில், பன்றிக் காய்ச்சல் என்பது மரணத்தில்தான் முடியும் என்று பயப்படவும் தேவையில்லை. இதுவரை கிடைத்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பார்த்தால், இந்தத் தொற்றுநோயால் தாக்கப்பட்டவர்களில் 10 சதவிகிதம் பேர்தான் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற நேரிடும். அதிகபட்சம் 1 சதவிகிதம்தான் மரணமடைவார்கள் என்று தெளிவாக்குகிறது உலக சுகாதார நிறுவனத்தின் சுற்றறிக்கை.

பலருக்கும் இதன் அறிகுறிகள் மிகவும் குறைவாக இருந்து அதை சட்டை செய்யாமல் இருந்துவிடக்கூடும். அவர்களுக்கு சிகிச்சையும் தேவைப்படாது. மருத்துவ சிகிச்சையே இல்லாமல், பன்றிக் காய்ச்சலால் தாக்கப்பட்ட பாதிக்கும் மேற்பட்டவர்கள் மிகக் குறைவான அறிகுறிகளுடன் ஒரே வாரத்தில் குணமடையவும் செய்வார்கள். அதனால், பன்றிக் காய்ச்சல் பற்றிய பீதியோ, பயமோ அடைவது என்பதும் அனாவசியம்.

இந்தப் பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்படக் கூடியவர்களில் பெரும்பாலோர் கர்ப்பிணிப் பெண்கள், ஆஸ்த்மா போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள், இதய நோயாளிகள், சர்க்கரை வியாதி உடையவர்கள், நரம்புத் தளர்ச்சி உள்ளவர்கள் மற்றும் அதிக உடல் பருமன் கொண்டவர்கள் ஆகியோர். உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியே இல்லாமல் வளரும் பட்டணத்து மற்றும் அதிக வருவாய்ப் பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் இந்தப் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்படலாம்.

குறைந்த ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்காத, வறுமையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தத் தொற்றுநோயின் முக்கிய இலக்கு என்பதால் நகர்ப்புறங்களைவிட இந்தியா போன்ற நாடுகளில் கிராமப்புறங்கள் அதிக அளவில் பாதிக்கப்படலாம். அதை எதிர்கொள்ள நமது சுகாதாரத்துறை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? தமிழகத்தின் பல மாவட்டங்களில் பன்றிக் காய்ச்சலுக்கான மருந்துகள் சென்றடையவில்லை என்கிற குற்றச்சாட்டு நிலவுகிறது. இடைத்தேர்தலில் காட்டும் முனைப்பைப் பன்றிக் காய்ச்சல் தடுப்புக்கும் காட்டலாகாதா?

கைக்குட்டைகளில் ஒரு சொட்டு நீலகிரித் தைலத்தை விட்டு வைத்துக் கொள்ளுங்கள். அவ்வப்போது முகர்ந்து கொள்ளுங்கள். சுலபமான தடுப்புமுறை இதுதான் என்று தேசிய தொற்றுநோய் நிறுவனம் அறிவித்திருக்கிறது. அதேபோல, அறிகுறிகள் தெரிந்தால் வீட்டிற்குள்ளேயே ஓய்வெடுத்தாலே, குணமாகிவிடும். தாக்கம் மிகவும் அதிகமானால் மட்டும் மருத்துவமனைக்குப் போனால்போதும் என்கிறது உலக சுகாதார நிறுவனம்.

இதுபோன்ற எதிர்பாராத தொற்றுநோய்களுக்கான மருந்து உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டு போர்க்கால நடவடிக்கையில் தயாரிக்கப்பட்டு உலகம் முழுவதற்கும் விநியோகிப்பது என்பது எளிதான விஷயமல்ல. இயற்கைக்கு எதிரான வாழ்க்கை முறைகளை நாம் வசதி என்கிற பெயரில் விரும்பி ஏற்றுக்கொள்ளும்போது, இதுபோன்ற உலகளாவிய தொற்றுநோய்களையும் எதிர்கொள்ளத்தானே வேண்டும். பயந்தால் எப்படி?

நன்றி : தினமணி

No comments: