Saturday, August 9, 2008

சிமென்ட் விலை குறையுமா?வாய்ப்பே இல்லை


வட மாநிலங்களில் சிமென்ட் விலை குறைந்துள்ளது. ஆனால், தென் மாநிலங்களில் இப்போதைக்கு குறைய வாய்ப்பில்லை.தமிழகம் உட்பட, பல மாநிலங் களில் ரியல் எஸ்டேட் வர்த்தகம் பல மடங்கு பெருகி விட்டது. வானளாவ கட்டடங்கள் கட்டும் திட்டங்கள் பல மாநிலங்களில் நிறைவேற்றப் பட்ட வண்ணம் உள்ளன. அரசு, தனியார் வர்த்தக கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. தென் மாநிலங்களை ஒப்பிட்டால், வட மாநிலங்களில் சிமென்ட் உற்பத்தி பெருக்கத்துக்கு ஏற்ப அதன் தேவை அதிகரிக்கவில்லை. அம்புஜா சிமென்ட் நிறுவன நிர்வாக இயக்குனர் கபூர் கூறுகையில்,'சிமென்ட் விலை இன்னும் ஓராண்டில் 50 கிலோ மூட்டை 10 ரூபாய் குறையும் என்று எதிர் பார்க் கப்படுகிறது. வட மாநிலங்களில் அதிக அளவில் சிமென்ட் இருப்பு உள்ளது. வரும் மாதங்களில் உற்பத்தி இன்னும் அதிகமாக இருக்கும் என்பதால், இருப்பு அதிகமாகி, மொத்த லாபம் குறையும் என்று எண்ணுவதால் விலை குறைய வாய்ப்பு உள்ளது' என்றார்.'சிமென்ட் உற்பத்தியாளர்களுக்கு அதிக லாபம் கிடைத்து வந்த காலம் போய்விடும். அந்த அளவுக்கு நிலைமை மாறி வருகிறது. வட இந்தியாவில், தேவை குறைந்து போய், அதிக அளவில் சிமென்ட் கிடைக்கும் நிலை உருவாகும்' என்றும் அவர் தெரிவித்தார். குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் இப்போதே சிமென்ட் விலையை உற்பத்தியாளர்கள் குறைத்துவிட்டனர்.இந்தாண்டு முதல் அரையாண்டில் இரண்டு கோடி டன் அதிக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஆண்டுக்கு 21 கோடி டன் சிமென்ட் உற்பத்தி இருக்கும். அடுத்த ஆண்டில், உற்பத்தி 26 கோடி டன்னை எட்டி விடும். இது தேவைக்கு அதிகமான அளவு என்பதால், விலையை குறைக்காமல் விற்பனை செய்ய வாய்பப்பில்லை என்றும் உற்பத்தியாளர்கள் தரப்பில் கருத்து நிலவுகிறது.
நன்றி : தினமலர்


ஒவ்வொரு மாதமும் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த வேண்டும்: மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை


'பெட்ரோல், டீசல் விலையை ஒவ்வொரு மாதமும் உயர்த்த வேண்டும்' என, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரை செய்துள்ளது.பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு உயர்த்தியது. இருந்தாலும், சர்வதேச அளவில் நிலவும் கச்சா எண்ணெய் விலையோடு ஒப்பிடுகையில், பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 11.60 ரூபாய் குறைவாகவும், டீசல் 23.23 ரூபாய், கெரசின் 39.55 ரூபாய், சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு 348.84 ரூபாய் குறைவாகவும் விற்கப்படுகிறது. இதனால், நடப்பு நிதியாண்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங் களுக்கு இரண்டு லட்சத்து ஐந்தாயிரத்து 740 கோடி ரூபாய் இழப்பு ஏற் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.அதனால், பெட்ரோலிய பொருட்கள் விலை குறித்து ஆய்வு செய்யவும், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட என்ன செய்வது என்பது குறித்த யோசனைகள் வழங்கவும், கேபினட் செயலர் சதுர்வேதி தலைமையில் கமிட்டி ஒன்றை பிரதமர் மன்மோகன் சிங் நியமித்தார். அந்த கமிட்டி தனது பரிந்துரைகளை சமீபத்தில் சமர்ப்பித்துள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:
ஒவ்வொரு மாதமும் பெட்ரோல், டீசல் விலையை சிறிதளவு உயர்த்த வேண்டும். அப்படி உயர்த்தினால், அடுத்த சில மாதங்களில், இந்த விலைகள் எல்லாம் சர்வதேச விலை நிலவரங்களுக்கு சமமாக வந்து விடும். பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவது குறைந்து விடும். உதாரணமாக, பெட்ரோல் விலை தற்போது சர்வதேச விலையை ஒப்பிடுகையில், 11.60 ரூபாய் குறைவாக விற்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சிறிதளவு பெட்ரோல் விலையை உயர்த்தினால், அடுத்த 11 முதல் 12 மாதங்களில் சர்வதேச விலை நிலவரங்களுக்கு இணையாக உள்ளூர் விலையும் உயர்ந்து விடும். அதேபோல், டீசல் விலையை உயர்த்தினால், அடுத்த 22 முதல் 23 மாதங்களில் நஷ்டம் இல்லாத விலை உயர்ந்து விடும்.மேலும், 1999ம் ஆண்டுக்கு முன்னர் ஏலம் இல்லாமல் வழங்கப் பட்ட எண்ணெய் வயல்களுக்கு 'சூப்பர் லாப வரி' விதிக்க வேண்டும். அதன்மூலம் கிடைக்கும் பணத்தை, சமையல் எரிவாயு சிலிண்டர்களை குறைவான விலைக்கு விற்பதன் மூலம் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த, 'சூப்பர் லாப வரியால்' பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு பாதிப்பு இருக்காது. ரிலையன்ஸ், கெய்ர்ன், பி.ஜி., மற்றும் வீடியோகான் போன்ற நிறுவனங்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருந்தாலும், அடுத்த சில மாதங்களில் பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், இந்த பரிந்துரைகள் அமல்படுத்தப்படுமா என்பது சந்தேகமே.
கச்சா எண்ணெய் விலை குறைவு: லண்டன்: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 116 டாலர் என்று நேற்று குறைந்தது.கடந்த இருநாட்களாக இனி விலை ஏறும் என்ற நிலையை முற்றிலும் மாற்றியிருக்கிறது. துருக்கியில் இருந்து கச்சா எண்ணெய் கொண்டு வரப்படும் ராட்சத குழாயை, குர்திஷ் பிரிவினைவாத அமைப்பு துண்டித்ததால், இனி விலை உயரும் என்று கூறப்பட்டது.மேலைநாடுகளுக்கு சப்ளை செய்யும் வழி அடைபட்டதால், விலை அதிகரிக்கும் என்ற நிலை நேற்று மாறியது. அதிக அளவு விலையேற்றத்தால், அமெரிக்காவில் கச்சா எண்ணெய் தேவையை சிறிது குறைத்துக் கொண்டதும், அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி குறைந்திருப்பதும் இந்த விலை இறக்கத்திற்கு காரணம் என்று கூறப்பட்டது.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு : பேரலுக்கு 114 டாலராகியது

ஜூலை துவக்கத்தில் சர்வதேச சந்தையில் பேரலுக்கு 147 டாலர் வரை உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை கொஞ்ச காலமாகவே 118 டாலறை ஒட்டியே இருந்து வந்தது. நேற்று வெள்ளி அன்று அது 116 டாலருக்கும் கீழே குறைந்து விட்டது. லண்டனில் பிரன்ட் நார்த் ஸீ குரூட் ஆயில் ( செப்டம்பர் டெலிவரிக்கானது )விலை பேரலுக்கு 3.80 டாலர் குறைந்து 114.06 டாலராக இருந்தது. அமெரிக்காவின் லைட் ஸ்வீட் குரூட் ஆயில் விலை ( செப்படம்பர் டெலிவரிக்கானது ) 3.74 டாலர் குறைந்து 116.28 டாலராக இருந்தது. டாலரின் மதிப்பு உயர்ந்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஜூலை 11ம் தேதி பேரலுக்கு 147 டாலருக்கு மேல் உயர்ந்திருந்த கச்சா எண்ணெய் விலை இப்போது 20 சதவீதம் வரை குறைந்திருக்கிறது. டாலரின் மதிப்பு உயர உயர கச்சா எண்ணெய் விலை குறையத்தான் செய்யும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். ஐரோப்பாவின் மத்திய வங்கி, வட்டியை விகிதத்தை உயர்த்தி இருப்பதால் யூரோவுக்கு எதிரான டாலரின் மதிப்பு உயர்ந்திருப்பதாக சொல்கிறார்கள். ஈராக்கில் கடந்த 20 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எண்ணெய் எடுக்கும் வேலை இப்போது மீண்டும் துவங்கப்பட்டிருப்பதால் சந்தைக்கு அதிக அளவில் கச்சா எண்ணெய் வரும் என்று எதிர்பார்க்கிறார்கள். இப்போது 2.5 மில்லியன் பேரல்களை சந்தைக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் ஈராக் இன்மேல் அதை 3 மில்லியனாக உயர்த்தும் என்கிறார்கள்.
நன்றி : தினமலர்