Tuesday, April 7, 2009

நானோ காரை விட அதிக விலையுள்ள புல்லட் பைக்

டாடாவின் நானோ கார் ஒரு லட்சம் ரூபாய்க்கு கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதர வரிகள் எல்லாம் சேர்த்தால் ரூ.ஒரு லட்சத்தை விடவும் கொஞ்சம் அதிகம் வரும் என்று சொன்னாலும், அதன் எக்ஸ் ஃபேக்டரி விலை ரூ. ஒரு லட்சம் தான். ஆனால் அதைவிடவும் அதிக விலையில் விற்கப்படும் பொருட்கள் எவ்வளவோ இருக்கின்றன. அதில் ஒன்று ராயல் என்ஃபீல்ட்டின் புல்லட் மேசிஸ்மோ மாடல் பைக். இதன் இப்போதைய விலை ரூ.1,06,000.
நன்றி : தினமலர்


வட்டியை மேலும் குறைக்க வங்கிகள் முன்வர வேண்டும் : ரிசர்வ் வங்கி கவர்னர் வேண்டுகோள்

இந்தியாவின் பணவீக்கம் ஜீரோ சதவீதத்தை ஒட்டியே இருந்து வருவதால், வங்கிகள், வட்டியை மேலும் குறைக்கலாம் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கேட்டுக்கொண்டுள்ளார். மும்பையில் இந்திய தொழில் வர்த்தக கூட்டமைம்பு ஏற்பாடு செய்திருந்த ஒரு செமினாரில் கலந்து கொண்டு பேசிய சுப்பாராவ், ரிசர்வ் வங்கி, முக்கிய வட்டி விகிதத்தை குறைத்திருக்கிறது. நிதி கொள்கையையும் எளிதாக்கியிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மற்ற வங்கிகளும் வட்டியை குறைக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பணவீக்கம் குறைந்து வருவதையடுத்து கடந்த அக்டோபரில் இருந்து பல தடவைகள் ரிசர்வ் வங்கி வட்டியை குறைத்திருக்கிறது. மற்ற வங்கிகளும் கடந்த காலத்தில் வட்டியை குறைத்திருக்கின்றன. இருந்தாலும் அவைகள் மேலும் வட்டியை குறைக்கலாம் என்றார் சுப்பாராவ். வங்கிகளில் கூடுதல் பணப்புழக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் ரிசர்வ் வங்கி, ரிபோ ரேட்டை 5 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரிபோ ரேட்டை 3.5 சதவீதம் வரையிலும் குறைத்திருக்கிறது.
நன்றி : தினமலர்


சார்லஸ் டிக்கன்ஸின் ' பிளீக் ஹவுஸ் ' விற்பனைக்கு வருகிறது

பிரபல ஆங்கில நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸின் இரு நூறு ஆண்டு கால பழமையான வீடு விற்பனைக்கு வருகிறது. இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் பிராட்ஸ்டேர்ஸ் என்ற இடத்தில் இருக்கும் பிளீக் ஹவுஸில் என்ற அவரது வீட்டில் இருந்து தான், டேவிட் காப்பர்ஃபீல்ட் என்ற பிரபல நாவலை அவர் எழுதினார். ஆறு படுக்கை அறைகளைக்கொண்டு, ஒரு கோட்டையைப் போல காட்சியளிக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க வீடு தான் இப்போது விற்பனைக்கு வருகிறது. டெரன்ஸ் பெயின்டர் புராபர்டீஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் இதனை விற்க இருப்பதாக அறிவித்திருக்கிறது. இதன் விலை 2 மில்லியன் பவுன்ட்ஸ் ( சுமார் 15 கோடி ரூபாய் ) என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. கடற்கரையை ஒட்டியி ருக்கும் இருக்கும் இந்த வீடு, இங்கிலாந்தில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க வீடுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 1801ம் வருடம் கட்டப்பட்ட இந்த வீடு, 2006ல் நடந்த தீ விபத்தில் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு, 40,000 பவுன்ட்ஸ் செலவு செய்து சரிசெய்யப்பட்டது. இந்த வீடு இப்போது எதற்காக விற்கப்படுகிறது என்பது தெரிய வில்லை. இத்தனைக்கும் இந்த வீட்டின் இப்போதைய சொந்தக்காரரான ரிசர்ட் ஹில்டன், ஒரு பிரபல ஜூவல்லரியின் உரிமையாளர். சமீப காலமாக அவரது ஜூவல்லரி பிசினஸ் கொஞ்சம் டல் அடிப்பதாக சொல்லப் படுகிறது. ஹில்டனின் மகள் கெல்லி, கடந்த மாதம் ஜூவல்லரி விற்பனையின் போது, ஹால்மார்க் மோசடி ஒன்றில் சிக்கி இருக்கிறார். இப்போது அவர், அதற்காக தண்டனையை எதிர்நோக்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இப்படி பல்வேறு பிரச்னையில் ரிச்சர்ட் ஹில்டன் சிக்கி இருப்பதால் தான் அவர் அந்த வீட்டை விற்க முன் வந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.
நன்றி : தினமலர்


பிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் முழு கட்டுப்பாடும் நுஸ்லி வாடியா குரூப்பிடம் வருகிறது

இந்தியாவின் மிகப்பெரிய பிஸ்கட் நிறுவனமான பிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் முழு கட்டுப்பாடும் நுஸ்லி வாடியா குரூப்பிடம் வருகிறது. பிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் 25.48 சதவீத பங்குகளை வைத்திருந்த பிரஞ்ச் உணவு நிறுவனமான தானோன் குரூப், அந்த 25.48 சதவீத பங்குகளை நுஸ்லி வாடியா குரூப்பிற்கு சொந்தமான லீலாலேண்ட்ஸ் நிறுவனத்திற்கு விற்க சம்மதித்திருக்கிறது. ஏப்ரல் 14ம் தேதி இந்த பங்குகள் லீலாலேண்ட்ஸ் நிறுவனத்திற்கு கைமாறும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. சுமார் 200 மில்லியன் டாலர் ( சுமார் 1,000 கோடி ரூபாய் ) கொடுத்து தானேன் குரூப்பிடமிருந்த 60.86 லட்சம் பிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் பங்குகளை ( 25.48 சதவீதம் ) வாங்குவதன் மூலம், பிரிட்டானியா இன்டஸ்டிரீஸின் முழு கட்டுப்பாடும் லீலாலேண்ட்ஸ் இடம் வந்து விடுகிறது. இந்த பங்குகளை வாங்குவது தொடர்பாக, கடந்த மூன்று வருடங்களாக தானோன் குரூப்புக்கும் லீலாலேண்ட்ஸ் நிறுவனத்திற்கு மிடையே நடந்து வந்த கடும் போராட்டம் இதன் மூலம் முடிவுக்கு வருகிறது.
நன்றி : தினமலர்


2.5 கோடி மொபைல் போன்களுக்கு வரும் 15ம் தேதி முதல் இணைப்பு துண்டிப்பு

அடையாள எண் இல்லாத மொபைல் போன்களுக்கு வழங்கப்பட்டுள்ள இணைப்பை துண்டிக்கும்படி மொபைல் போன் சேவை நிறுவனங்களுக்கு தொலை தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், வரும் 15ம் தேதி முதல், 2.5 கோடிக்கும் அதிகமான மொபைல் போன்களுக்கான இணைப்பு துண்டிக்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் ஒவ்வொரு மொபைல் போன்களிலும் 15 இலக்கங்களை கொண்ட அடையாள எண்கள் (ஐ.எம்.இ.ஐ.,) குறிப்பிடப் பட்டு இருக்கும்.
இந்த போன்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்போது அதுகுறித்த விவரங்கள் மொபைல் சேவை வழங்கும் ஆபரேட்டர் மையத்தில் உடனடியாக பதிவாகி விடும். இதன் காரணமாக, அடையாள எண்ணை உடைய போனை யார் பயன்படுத்தினாலும், அவர் எந்த இடத்தில் இருந்து பேசுகிறார் என்ற விவரம் ஆபரேட்டருக்கு தெரிந்து விடும்.இதுபோன்ற போன்கள் திருடப்பட்டாலும், அடையாள எண் உதவியுடன் அதை தற்போது பயன்படுத்துவோரின் இடத்தை கண்டுபிடித்து விட முடியும்.
சமீபகாலமாக அடையாள எண் இல்லாத மொபைல் போன்கள் அதிகமாக விற்பனைக்கு வருகின்றன.பிரபல நிறுவனங்களால் தயாரிக்கப்படாத இந்த போன்கள் மிக குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. சாதாரண மக்கள் இதை அதிகமாக வாங்கி பயன்படுத்துகின்றனர்.சமூக விரோதிகள் தங்கள் சதித் திட்டங்களை நிறைவேற்ற இதுபோன்ற அடையாள எண் இல்லாத போன்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
குறிப்பாக, பயங்கரவாதிகளுக்கு இந்த போன்கள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.அடையாள எண் இல்லாத போனை அவர்கள் பயன்படுத்துவதால், எங்கிருந்து பேசுகின்றனர் என்பதை ஆபரேட்டரால் கண்டுபிடிக்க முடியாது. இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தொலை தொடர்பு துறை அதிரடி திட்டம் தீட்டியுள்ளது.
இதன்படி, அடையாள எண் இல்லாத போன்களுக்கு வழங்கப்படும் இணைப்புகளை துண்டிக்கும்படி சம்பந்தப்பட்ட மொபைல் போன் சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.முன்னதாக, கடந்தாண்டு டிசம்பருக்குள் இணைப்பை துண்டிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.
பின்னர் பல்வேறு காரணங்களுக்காக இதற்கான காலக் கெடு இந்தாண்டு ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.எனவே, வரும் 15ம் தேதி முதல் அடையாள எண் இல்லாத போன்களுக்கு வழங்கப்பட்டு வரும் இணைப்புகள் துண்டிக்கப்பட உள்ளன. இதன் காரணமாக, நாடு முழுவதும் 2.5 கோடிக்கும் அதிகமான மொபைல் போன்களுக்கான இணைப்பு துண்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையால் மொபைல் போன் சேவை நிறுவனங்களுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.
நன்றி : தினமலர்