இந்த போன்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும்போது அதுகுறித்த விவரங்கள் மொபைல் சேவை வழங்கும் ஆபரேட்டர் மையத்தில் உடனடியாக பதிவாகி விடும். இதன் காரணமாக, அடையாள எண்ணை உடைய போனை யார் பயன்படுத்தினாலும், அவர் எந்த இடத்தில் இருந்து பேசுகிறார் என்ற விவரம் ஆபரேட்டருக்கு தெரிந்து விடும்.இதுபோன்ற போன்கள் திருடப்பட்டாலும், அடையாள எண் உதவியுடன் அதை தற்போது பயன்படுத்துவோரின் இடத்தை கண்டுபிடித்து விட முடியும்.
சமீபகாலமாக அடையாள எண் இல்லாத மொபைல் போன்கள் அதிகமாக விற்பனைக்கு வருகின்றன.பிரபல நிறுவனங்களால் தயாரிக்கப்படாத இந்த போன்கள் மிக குறைந்த விலைக்கு கிடைக்கின்றன. சாதாரண மக்கள் இதை அதிகமாக வாங்கி பயன்படுத்துகின்றனர்.சமூக விரோதிகள் தங்கள் சதித் திட்டங்களை நிறைவேற்ற இதுபோன்ற அடையாள எண் இல்லாத போன்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர்.
குறிப்பாக, பயங்கரவாதிகளுக்கு இந்த போன்கள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.அடையாள எண் இல்லாத போனை அவர்கள் பயன்படுத்துவதால், எங்கிருந்து பேசுகின்றனர் என்பதை ஆபரேட்டரால் கண்டுபிடிக்க முடியாது. இப்பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தொலை தொடர்பு துறை அதிரடி திட்டம் தீட்டியுள்ளது.
இதன்படி, அடையாள எண் இல்லாத போன்களுக்கு வழங்கப்படும் இணைப்புகளை துண்டிக்கும்படி சம்பந்தப்பட்ட மொபைல் போன் சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.முன்னதாக, கடந்தாண்டு டிசம்பருக்குள் இணைப்பை துண்டிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.
பின்னர் பல்வேறு காரணங்களுக்காக இதற்கான காலக் கெடு இந்தாண்டு ஏப்ரல் 15ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.எனவே, வரும் 15ம் தேதி முதல் அடையாள எண் இல்லாத போன்களுக்கு வழங்கப்பட்டு வரும் இணைப்புகள் துண்டிக்கப்பட உள்ளன. இதன் காரணமாக, நாடு முழுவதும் 2.5 கோடிக்கும் அதிகமான மொபைல் போன்களுக்கான இணைப்பு துண்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நடவடிக்கையால் மொபைல் போன் சேவை நிறுவனங்களுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்படும் எனத் தெரிகிறது.
நன்றி : தினமலர்
No comments:
Post a Comment