Wednesday, July 8, 2009

சரிந்தது பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தையில் இன்று ரியாலிட்டி, பேங்கிங், இன்ஃப்ராஸ்டிரக்சர், மெட்டல், டெலிகாம், ஆயில் அண்ட் கேஸ் துறை பங்குகள் அதிகம் விற்கப்பட்டதால், சென்செக்ஸ் 14,000 புள்ளிகளுக்கு கீழும் நிப்டி 4,100 புள்ளிகளுக்கு கீழும் சென்று விட்டது. அமெரிக்க மற்றும் ஆசிய பங்கு சந்தைகளில் ஏற்பட்ட சரிவு நிலையும் இந்திய பங்கு சந்தையை பாதித்தது. மே 18, 2009 க்குப்பிறகு முதல் முறையாக, வர்த்தகம் ஆரம்பித்த முதல் 15 நிமிடங்களிலேயே நிப்டி 4,100 புள்ளிகளுக்கு கீழே சென்று விட்டது. பின்னர் அது எவ்வளவு முயன்றும் 4,100 ஐ அடைய முடியவில்லை. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 401.30 புள்ளிகள் ( 2.83 சதவீதம் ) குறைந்து 13,769.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 123.25 புள்ளிகள் ( 2.93 சதவீதம் ) குறைந்து 4,078.90 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
nandri : dinamalar


சென்னையில் டீசல் இஞ்சின் தயாரிப்பை துவங்கும் ஹூண்டாய்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா, சென்னைக்கு அருகே இருக்கும் அதன் தொழிற்சாலையில், அடுத்த ஆண்டு முடிவில் இருந்து டீசல் இஞ்சின் தயாரிப்பை துவங்குகிறது. 50,000 இஞ்சின்களை தயாரிக்க வசதியுள்ள ஹண்டாய் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் டீசல் இஞ்சின்கள், அதன் ஐ - 20 மற்றும் வெர்னா மாடல் டீசல் கார்களுக்கு பயன்படுத்தப்படும். இப்போதைக்கு நாங்கள் டீசல் இஞ்சின்களை இறக்குமதிதான் செய்து கொண்டிருக்கிறோம். இங்கேயே அடுத்த வருடத்தின் இறுதியில் இருந்து தயாரிக்க இருக்கிறோம் என்றார் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மேலாண் இயக்குனர் மற்றும் சி.இ.ஓ., ஹெச்.எம்.லீம். டில்லியில் ஐ - 20 டீசல் காரை அறிமுகப்படுத்தி பேசிய அவர், இதனை தெரிவித்தார். ஐ - 20 டீசல் கார்களின் விலையில் 25 சதவீதம், அதன் டீசல் இஞ்சினுக்கே போய் விடுகிறது என்றார் லீம். இங்கேயே டீசல் இஞ்சின்களையும் மற்ற உதிரி பாகங்களையும் தயாரித்தால் மொத்த காரின் விலை குறிப்பிட்ட அளவு குறைந்து விடும் என்று சொன்ன லீம், நாங்கள் டீசல் கார்களை அதிக அளவில் இங்கு விற்க முயற்சிப்பதற்கு அது மிக உதவியாக இருக்கும் என்றார். நேற்று ஹூண்டாய் நிறுவனம், அதன் ஐ - 20 கார்களின் டீசல் மாடலை டில்லியில் அறிமுகம் செய்தது. 1.4 லிட்டர் டீசல் இஞ்சின் பொருத்தப்பட்ட அதன் ஆரம்ப மாடல் விலை ரூ.6.19 லட்சமாகவும், அதிலேயே உயர் ரக மாடல் ரூ.7.20 லட்சமாகவும் இருக்கிறது.
நன்றி : தினமலர்


ஸ்டீம் டர்பைன் தொழிற்சாலை : ஜப்பான் நிறுவனம் ஒப்பந்தம்

ஆயிரம் மெகாவாட் வரை திறன் கொண்ட ஸ்டீம் டர்பைன்கள், ஜெனரேட்டர்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலையை சென்னையில் நிறுவுவதற்கான ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது. தமிழக அரசு செய்திக்குறிப்பு: மிகுந்த செயல்திறன் கொண்ட சூப்பர் அனல் மின் நிலையங்களில் அமைக்கப்படும், 1,000 மெகாவாட் வரை திறன் அளிக்கக்கூடிய ஸ்டீம் டர்பைன்களையும், ஜெனரேட்டர்களையும் தயாரிப்பதற்காக, தோஷிபா மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ., நிறுவனங்கள் இணைந்து, 'தோஷிபா ஜே.எஸ்.டபிள்யூ., டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் பிரைவேட் லிமிடெட்' என்ற கூட்டு முயற்சி நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. தமிழகத்தில், இந்நிறுவனத்தை நிறுவுவதற்கு உகந்த சூழ்நிலைகள் நிலவுவதையும், இதர உள்கட்டமைப்பு வசதிகள் நிறைந்துள்ளதையும் கருதி, சென்னை, எண்ணூருக்கு அருகில் இத்தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்தது. 800 கோடி ரூபாய் முதலீட்டில், 500 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்புகளை அளிக்கும் இத்தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று நடந்தது. தமிழக அரசின் சார்பாக தொழில் துறை முதன்மைச் செயலர் பரூக்கி, தோஷிபா ஜே.எஸ்.டபிள்யூ., டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பாக அதன் மேலாண்மை இயக்குனர் இடாரு இஷிபாஷி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஜப்பான் நாட்டுத் தூதுவர் காசோ மினகாவா, தமிழக அரசின் தலைமைச் செயலர் ஸ்ரீபதி மற்றும் முக்கிய அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.
நன்றி : தினமலர்