Wednesday, July 8, 2009

ஸ்டீம் டர்பைன் தொழிற்சாலை : ஜப்பான் நிறுவனம் ஒப்பந்தம்

ஆயிரம் மெகாவாட் வரை திறன் கொண்ட ஸ்டீம் டர்பைன்கள், ஜெனரேட்டர்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலையை சென்னையில் நிறுவுவதற்கான ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது. தமிழக அரசு செய்திக்குறிப்பு: மிகுந்த செயல்திறன் கொண்ட சூப்பர் அனல் மின் நிலையங்களில் அமைக்கப்படும், 1,000 மெகாவாட் வரை திறன் அளிக்கக்கூடிய ஸ்டீம் டர்பைன்களையும், ஜெனரேட்டர்களையும் தயாரிப்பதற்காக, தோஷிபா மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ., நிறுவனங்கள் இணைந்து, 'தோஷிபா ஜே.எஸ்.டபிள்யூ., டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் பிரைவேட் லிமிடெட்' என்ற கூட்டு முயற்சி நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. தமிழகத்தில், இந்நிறுவனத்தை நிறுவுவதற்கு உகந்த சூழ்நிலைகள் நிலவுவதையும், இதர உள்கட்டமைப்பு வசதிகள் நிறைந்துள்ளதையும் கருதி, சென்னை, எண்ணூருக்கு அருகில் இத்தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்தது. 800 கோடி ரூபாய் முதலீட்டில், 500 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்புகளை அளிக்கும் இத்தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று நடந்தது. தமிழக அரசின் சார்பாக தொழில் துறை முதன்மைச் செயலர் பரூக்கி, தோஷிபா ஜே.எஸ்.டபிள்யூ., டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பாக அதன் மேலாண்மை இயக்குனர் இடாரு இஷிபாஷி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஜப்பான் நாட்டுத் தூதுவர் காசோ மினகாவா, தமிழக அரசின் தலைமைச் செயலர் ஸ்ரீபதி மற்றும் முக்கிய அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.
நன்றி : தினமலர்


No comments: