Tuesday, August 19, 2008

சரிவில் முடிந்த இன்றைய பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தை இன்று சிறிது புள்ளிகளை இழந்து முடிந்துள்ளது. இன்றைய காலைநேர வரத்தகத்தில் பெருமளவு புள்ளிகளை இழந்திருந்த மும்பை பங்கு சந்தையும் தேசிய பங்கு சந்தையிலும், மாலை நடந்த அரை மணி நேர வர்த்தகத்தில் மும்பை பங்கு சந்தை 175 புள்ளிகளையும் தேசிய பங்கு சந்தை 50 புள்ளிகளையும் மீட்டது. எனினும் மாலை பங்கு சந்தை முடிவில் மும்பை பங்கு பங்கு சந்தையிலில் சென்செக்ஸ் 101.93 புள்ளிகள் ( 0.70 சதவீதம் ) குறைந்து 14,543.73 புள்ளிகளில் முடிந்தது. தேசய சந்தையில் நிப்டி 24.80 புள்ளிகளை ( 0.56 சதவீதம் ) இழந்து 4363.25 புள்ளிகளில் முடிந்தது. ஏசிசி, ஐடியா செல்லுலார், மாருதி சுசுகி, ஹெச் டி எஃப் சி, சத்யம் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் விலை குறைந்திருந்தன.
நன்றி : தினமலர்


கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் நஷ்டம் நாலில் ஒரு பங்கு குறைந்தது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், எண் ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டு வந்த வருவாய் இழப்பு நான்கில் ஒரு பங்கு குறைந்துள்ளது. இருப்பினும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வாய்ப்பு இல்லை என, பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் கெரசின் விற்பனையில் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்து வந்தன. அதனால், கடந்த ஜூன் மாதம் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்த்தப்பட்டது. இருப்பினும், இந்த விலை உயர்வால், எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை முழுமையாக ஈடுகட்ட முடியவில்லை. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய மூன்று பொதுத்துறை நிறுவனங்களும், நாள் ஒன்றுக்கு 600 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை சந்தித்து வந்தன. ஆனால், சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்து வருகிறது. ஜூலையில், ஒரு பேரல் கச்சா எண்ணெய் 5,960 ரூபாயாக விற்றது. தற்போது, இந்த விலை 5,145 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. இதனால், நாள் ஒன்றுக்கு 600 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்த நிறுவனங்கள் தற்போது 450 கோடி ரூபாய் அளவுக்கு மட்டுமே நஷ்டத்தை எதிர்கொள் கின்றன. ஆகஸ்ட் முற்பகுதி நிலவரப்படி, பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு 7.07 ரூபாயும், டீசல் விற்பனையில் 16.22 ரூபாயும், கெரசின் விற்பனையில் 39.55 ரூபாயும், சமையல் எரிவாயு விற்பனையில் 348.89 ரூபாயும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இழப்பைச் சந்திக்கின்றன.
ஜூலை மாதத்தில் பெட்ரோல் விற்பனையில் 11.60 ரூபாயும், டீசல் விற்பனையில் 23.23 ரூபாயும் இழப்பு ஏற்பட்டது. அதை ஒப்பிடுகையில், தற்போதுள்ள இழப்பு குறைவே. பெட்ரோல், டீசல் விலைகள் 15 நாட்களுக்கு ஒரு முறையும், கெரசின் மற்றும் சமையல் காஸ் விலைகள் ஒரு மாதத்திற்கு ஒரு முறையும் கணக்கிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய நிலை நீடித்தால், மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும், நடப்பு நிதியாண்டின் இறுதியில், ஒரு லட்சத்து 85 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பை சந்திக்கும். 15 நாட்களுக்கு முன், கணக்கிடும் போது, இரண்டு லட்சத்து 5,750 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. 'சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவது ஒரு நல்ல திருப்பமே. அது பொதுத் துறை நிறுவனங்களுக்கு நிவாரணம் அளிக்கும். இருப்பினும், அந்த கம்பெனிகள் இன்னும் இழப்பை சந்தித்து வருவதால், பெட்ரோலிய பொருட்களின் விலைகளை குறைப்பதற்கான வாய்ப்பே இல்லை' என, மத்திய பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் கூறினர்.
நன்றி : தினமலர்


தங்கம் விலை மேலும் குறையும்: வர்த்தகர்கள் தகவல்

தங்கம் விலை அடுத்த சில நாட்களில் மேலும் குறையும். 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை 11 ஆயிரம் ரூபாயை எட்டும் என, மும்பை தங்க மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, கடந்த நான்கு வாரங் களாக தங்கத்தின் விலையில் 15 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரத்தில் 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை 12 ஆயிரத்து 900 ரூபாயாக இருந்தது. அதே மாதத்தின் மத்திய பகுதியில், 13 ஆயிரத்து 567 ஆக உயர்ந்தது. ஜூலை 26ம் தேதி முதல் இந்த விலையில் வீழ்ச்சி காணப்படுகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி, 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை 11 ஆயிரத்து 300 ரூபாய். சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை ஒரு அவுன்சு (31.103 கிராம்) 36 ஆயிரம் ரூபாய்க்கும் கீழ் குறைந்துள்ளது. டிசம்பர் 2007ம் ஆண்டிற்குப் பின், இப்போது தான் முதல் முறையாக இந்த அளவுக்கு குறைந்துள்ளது. தங்கத்தின் விலை குறைந்துள்ளதால், உள்நாட்டுச் சந்தையில் விற்பனை அதிகரித்துள்ளது. தீபாவளி மற்றும் திருமணத்திற்கு தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தோர், முன்பே வாங்கத் துவங்கியுள்ளனர். இருந்தாலும், டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதாலும், கச்சா எண்ணெய் விலை குறைவதாலும், தங்கத்தை இருப்பு வைப்போர் மற்றும் நகைகள் தயாரிப்போர் மத்தியில் தேவை குறைந்திருப்பதாலும், அடுத்த சில நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறையும் என, மும்பை தங்க மார்க்கெட் வர்த்தகர்கள் கூறியுள்ளனர். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், தங்க இறக்குமதி 50 சதவீதம் அளவுக்கு குறைந்தது. முதல் மூன்று மாதங்களில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 101 டன். கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் அளவு 193 டன்.

இன்டர்நெட் போன்: 'டிராய்' அனுமதி எஸ்.டி.டி., கட்டணங்கள் குறையும்

'இன்டர்நெட் தொலைபேசி சேவை'க்கு டிராய் அனுமதியளித்துள்ளது. இதையடுத்து, எஸ்.டி.டி., கட்டணங்கள் வெகுவாகக் குறையும். இன்டர்நெட் இணைப்பு பெற்றவர்கள் தற்போது, கம்ப்யூட்டரில் இருந்தபடி மற்றொரு கம்ப்யூட்டரில் உள்ள நபரிடம் இன்டர்நெட் மூலம், 'வாய்ஸ் கால்' தொடர்பு கொள்ள அனுமதிக்கப்பட்டது. இதை மாற்றி, கம்ப்யூட்டரில் இருந்து நிரந்தர இணைப்பு கொண்ட தொலைபேசி லைன் மற்றும் மொபைல் போனுடன் தொடர்பு கொள்ள முடியும். மேலும், இன்டர்நெட் சேவை மையங்கள் இன்டர்நெட் தொலைபேசி சேவையை நடத்த அனுமதிக்கப்படும். இதன் மூலம், இன்டர்நெட் சேவை மையங்களுக்கு அதிக வருவாய் கிடைக்கக்கூடும். எஸ்.டி.டி., தொலைபேசியை வழங்கும் ஆபரேட்டர்கள், இன்டர்நெட் சேவை மையங்களுடன் இணைந்து இன்டர்நெட் வழியாக எஸ்.டி.டி., சேவையை நடத்தலாம். இதன் மூலம், இரு தரப்பினரும் பயன் பெற முடியும் என டிராய் தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது. இன்டர்நெட் தொலைபேசிக்கான எண்கள் ஒதுக்கீடு குறித்து தொலைதொடர்பு இன்ஜினியரிங் மையம் மற்றும் தொலைதொடர்புத் துறையின் தொழில் நுட்பக் குழுவும் இணைந்து முடிவு செய்யும். 'டிராய்' அமைப்பின் இந்த நடவடிக்கை காரணமாக எஸ்.டி.டி., கட்டணங்கள் வெகுவாகக் குறையும்.
நன்றி : தினமலர்