Tuesday, November 10, 2009

மாற்றங்களை எதிர்நோக்கும் மருத்துவக் கல்வி!

சென்னை பள்ளி ஒன்றில் அண்மையில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் சென்னையைச் சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ - மாணவியர் தங்களது படைப்பாக்கத்திறனை, அறிவாற்றலை அற்புதமாக வெளிப்படுத்தியிருந்தனர். அறிவியல் வினாக்களுக்கு அவர்கள் பளிச்பளிச் என்று பதில் அளித்தனர். இந்திய இளம் மூளைகளின் ஆற்றல் பிரமிக்க வைத்தது.

பிளஸ் டூ படிக்கும் மாணவர்களிடம் அடுத்து என்ன படிக்கப் போகிறீர்கள் எனக் கேட்டபொழுது, பலரும் மருத்துவம் பயில வேண்டும் என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தினர்.

ஒரு முன்னேறிய வகுப்பைச் சேர்ந்த மாணவி ""நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டால் எனக்கு எம்.பி.பி.எஸ். இடம் கிடைக்குமா என்று தெரியவில்லை. முப்பது லட்சம், நாற்பது லட்சம் கொடுத்து தனியார் கல்லூரிகளிலும் படிக்க முடியாது'' என்ற தனது மனக்குமுறலைக் கொட்டித் தீர்த்தார். பணம் இல்லை, வசதி இல்லை, எம்.பி.பி.எஸ். இடங்கள் போதுமானதாக இல்லை, அரசு ஒதுக்கீட்டில்கூட தனியார் கல்லூரியில் படிக்க வசதியில்லை என்றெல்லாம் மாணவர்கள் தங்களது பரிதாப நிலைமைகளை எடுத்துக் கூறினர்.

மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திட 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அதே தடைகள் இப்பொழுதும் நீடிப்பது வேதனைக்குரியது.

இன்றைய மக்கள்தொகைக்கேற்ப போதிய மருத்துவக் கல்லூரிகளை நமது மத்திய, மாநில அரசுகள் உருவாக்கத் தவறிவிட்டன. மருத்துவக் கல்வி தனியார்மயமாகி லாபம் கொழிக்கும் வியாபாரமாகிவிட்டது.

இருபது ஆண்டுகளுக்கு முன்னால் 106 மருத்துவக் கல்லூரிகள் இருந்தன. தற்பொழுது ஏறத்தாழ 280 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் சரிபாதிக்கும் மேல் தனியார் கல்லூரிகள். 1995-ல் 47-ஆக இருந்த தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 2006-ல் 131-ஆக அதிகரித்தது. அதாவது 84 புதிய தனியார் மருத்துவக் கல்லூரிகள் தோன்றின.

இதே காலகட்டத்தில் 1995-ல் 109-ஆக இருந்த அரசு மருத்துவக் கல்லூரிகள் 2006-ல் 131-ஆக உயர்ந்தன. அதாவது வெறும் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளே உருவாக்கப்பட்டன.

கல்விக்கும், மக்கள் நல்வாழ்வுத் துறைக்கும் போதிய நிதி ஒதுக்காததும், அரசுகளின் அலட்சியமுமே இந்தப் பரிதாப நிலைக்குக் காரணம். மருத்துவக் கல்லூரிகளும் நாடு முழுவதும் பரவலாகத் தொடங்கப்படாமல் ஒரு சில மாநிலங்களிலேயே அதிகம் தொடங்கப்பட்டன. மகாராஷ்டிரம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தமிழகம், குஜராத் போன்ற ஆறு மாநிலங்களில் மட்டும் 63 விழுக்காடு மருத்துவக் கல்லூரிகளும், 67 விழுக்காடு எம்.பி.பி.எஸ். இடங்களும் குவிந்துள்ளன. மருத்துவத் துறையில் பல பிரச்னைகளுக்கு இது வழிவகுத்துள்ளது.

தற்பொழுது இந்தியாவில் 6.90 லட்சம் மருத்துவர்கள் உள்ளனர். நமது மக்களின் தேவைக்கு இன்னும் 6 லட்சம் மருத்துவர்கள் தேவை. 6 லட்சம் மருத்துவர்களை உருவாக்கத் தற்போது உள்ள மருத்துவக் கல்லூரிகள் போதாது. எனவே மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் நலனையும், மக்கள் நலனையும் கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகள் 250-க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லூரிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்.

மாவட்டம்தோறும் மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும், தனியார் கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களின் கல்வி - விடுதிக் கட்டணங்களை அரசே ஏற்குமென தி.மு.க. தனது சட்டமன்றத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது. ஆனால், புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் திட்டமோ ஆமை வேகத்தில் நடைபெறுகிறது.

ஏழை மாணவர்களின் கட்டணங்களை ஏற்கும் திட்டத்தை அரசு மறந்தேவிட்டது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்களிடம் அரசால் நியமிக்கப்பட்ட குழு நிர்ணயித்த கட்டணங்களைத் தவிர பல்வேறு வகையிலும் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. இதனால் நடுத்தர வகுப்பு குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கின்றனர்.

புதிய மருத்துவக் கல்லூரிகளையும் மருத்துவப் பாடப் பிரிவுகளையும் தொடங்க அனுமதி வழங்கும் அதிகாரம் இந்திய மருத்துவக் கவுன்சிலிடமிருந்து மாநில மருத்துவக் கவுன்சில்களுக்கு மாற்றப்பட வேண்டும். மாநில மருத்துவக் கவுன்சில்களின் கட்டமைப்பாக மட்டுமே இந்திய மருத்துவக் கவுன்சில் இருக்க வேண்டும்.

மருத்துவக் கவுன்சில்களின் செயல்பாட்டில் கூடுதல் வெளிப்படைத் தன்மையும் ஜனநாயகமும் வேண்டும்.

புதிய மருத்துவக் கல்லூரிகளையும், பாடப்பிரிவுகளையும் தொடங்குவதற்கான விதிமுறைகளை எளிமையாக்க வேண்டும். அதேசமயம் மருத்துவக் கல்வியின் தரம் குறையாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். மருத்துவக் கல்வி போதனைகளிலும் நவீன நுட்பங்களைப் புகுத்த வேண்டும்.

மருத்துவக் கவுன்சிலைக் கலைத்துவிட்டு புதிய உயர்கல்வி அமைப்பின்கீழ் மருத்துவக் கல்வியைக் கொண்டு வரவேண்டும் என்ற யஷ்பால் குழுவின் பரிந்துரை மேலும் அதிகாரக் குவியலையும், ஊழல் முறைகேடுகளையும் உருவாக்கும். எனவே அப்பரிந்துரை கைவிடப்பட வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க மிகப்பெரிய தடையாக உள்ளது. இதைப் போக்க வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உடற்கூறியியல், உடல்இயங்கியல், உயிர்வேதியியல் போன்ற சிகிச்சை சாரா மருத்துவப் பேராசிரியர்களுக்கு பல்வேறு சலுகைகள், வசதிகளுடன் ஒரு லட்சம் ரூபாய் வரை மாத ஊதியம் வழங்கப்படுகிறது. மத்திய அரசு நிறுவனங்களிலும் ஊதியமும், இதர படிகளும், சலுகைகளும் அதிகமாக உள்ளன. ஆனால் தமிழக அரசு போன்ற மாநில அரசுகள் குறைவான ஊதியத்தையே வழங்குகின்றன.

சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசால் வெளியிடப்பட்ட அரசாணையில் மத்திய அரசுக்கு இணையான பதவி உயர்வையோ, படிகளையோ, இதர சலுகைகளையோ சிகிச்சை சாரா மருத்துவப் பேராசிரியர்களுக்கு வழங்கவில்லை. ஒருசில சிகிச்சை சார்ந்த துறைகளில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு விருப்ப ஓய்வு பெறும் வாய்ப்பை அளித்துள்ள அரசு, சிகிச்சை சாரா மருத்துவப் பேராசிரியர்களுக்கு அவ்வாய்ப்பை வழங்கவில்லை.

பதவி உயர்வையும், படிகளையும், இதர சலுகைகளையும் மத்திய அரசுக்கு இணையாக வழங்க மாட்டேன், விருப்ப ஓய்வும் வழங்க மாட்டேன் என்பது ஒருவகை கொத்தடிமைத்தனமாகவே உள்ளது. உளம் வெதும்பும் இப்பேராசிரியர்களின் குறைபாடுகள் களையப்பட்டால்தான் இத்துறைகளில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரிய இளைய தலைமுறையினர் முன்வருவர்.

மேலும், முதுநிலை மருத்துவக் கல்வி இடங்களை அதிகப்படுத்த வேண்டும். குறிப்பாக உடற் கூறியியல், உடல் இயங்கியியல், உயிர் வேதியியல், நோய் குறியியல், நுண்ணுயிரியியல் போன்ற சிகிச்சை சாரா முதுநிலை மருத்துவக் கல்வி இடங்கள் அதிகப்படுத்தப்பட வேண்டும்.

முதுநிலை மருத்துவக்கல்வி இடங்களில் குறைந்தபட்சம் 50 விழுக்காட்டை அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கே அனைத்து மாநில அரசுகளும், மத்திய அரசும் வழங்க வேண்டும். அவ்வாறு அரசு மருத்துவர்களுக்கான ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவம் பயிலும் மருத்துவர்கள் குறிப்பிட்ட காலம் வரை அரசுப்பணியில் நீடிக்கும் வகையில் உத்தரவாதத்தைப் பெற வேண்டும்.

இவற்றைச் செய்யாமல் மருத்துவப் பேராசிரியர் பற்றாக்குறையையும் போக்க முடியாது. போதிய புதிய மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்க முடியாது.

பிளஸ் டூ வரை தமிழ் வழியில் கல்வி பயின்ற மாணவர்கள் மருத்துவக் கல்வியில் முதலாம் ஆண்டில் திடீரென ஆங்கில வழியில் பயில்வதில் கடும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். புதிய சூழல், ராகிங் போன்றவையும் கூடுதல் பிரச்னைகளாகின்றன.

மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள்கூட இப் பிரச்னைகளால் தேர்வில் முதல் தோல்வியைச் சந்திக்கின்றனர். முதலாம் ஆண்டில் மூன்று பாடங்களில் ஆறு தாள்களுக்கான தேர்வுகளை எழுத வேண்டியுள்ளது. ஏதேனும் ஒரு தாளில் செய்முறைத் தேர்விலோ அல்லது கோட்பாட்டுத் தேர்விலோ தேர்ச்சி பெறாவிட்டால்கூட அவர்கள் அடுத்த கட்ட வகுப்புகளுக்குச் செல்ல முடியாது.

ஆறு மாதம் கழித்து வரும் தேர்வில் குறிப்பிட்ட தாளில் தேர்ச்சி பெற்ற பிறகே அடுத்த கட்ட வகுப்புகளுக்குச் செல்ல முடியும். இதனால் தேர்வில் தோல்வியடைபவர்கள் தங்களோடு முதலாமாண்டில் சேர்ந்த இதர மாணவர்களைவிட ஆறுமாதங்கள் கல்வியில் பின்தங்க நேரிடுகிறது.

ஐந்தரை ஆண்டுகளில் முடிக்க வேண்டிய படிப்பை ஆறு ஆண்டுகளில் முடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அடுத்து வரும் தேர்விலும் வெற்றி பெறவில்லையெனில் மேலும் ஆறுமாதங்கள் விரயமாகி விடும். ஒரே ஒரு தாளில் கோட்பாட்டுத் தேர்விலோ அல்லது செயல்முறைத் தேர்விலோ தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணில் ஒரு மதிப்பெண் குறைந்தால் ஏற்படும் தோல்வியால் கூட ஆறு மாதங்கள் விரயப்படும் என்பது கொடுமையானது.

இக்கொடுமையைப் போக்க "பிரேக் சிஸ்ட'த்தை ரத்து செய்ய வேண்டும். தேர்வு முடிவுகள் வந்த உடன் ஒரு மாத காலத்துக்குள் மறுதேர்வை வைத்து அடுத்தகட்ட வகுப்புகளுக்கு மாணவர்கள் சென்றிட வழி காண வேண்டும்.

மாணவர்கள் தேர்வில் தோல்வியுறுவதைத் தடுத்திட குறைந்தபட்சம் முதலாமாண்டிலாவது தேர்வுகளை தாய்மொழியில் எழுதவும் தாய்மொழியில் வாய்மொழித் தேர்வில் பதில் அளிக்கவும் வாய்ப்பளிக்க வேண்டும். இதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்குமா? மருத்துவக் கல்வியில் மாற்றங்கள் வருமா?
கட்டுரையாளர் : ஜி . ஆர். ரவீந்திரநாத்
நன்றி : தினமணி

No comments: