Friday, November 13, 2009

உலக(கே) ம(ô)யம்!

இடைத்தேர்தல் முடிவுகள் சாதாரணமாக ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அமைவதுதான் இயற்கை. பல்வேறு மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள், மாநில ஆளுங்கட்சிகளுக்கு எதிரானதாக இந்தியாவில் அமைந்திருப்பதுகூட ஆச்சரியமில்லை. எதுவுமே செய்யாமல் நோபல் பரிசு பெறும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் ஆட்சிக்கு எதிராகவும் அங்கே நடந்த தேர்தல் முடிவுகள் அமைந்திருப்பதுதான் ஆச்சரியம்.

அதிபர் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அடைந்து உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி, வெள்ளை மாளிகையை அலங்கரிக்கும் முதல் அமெரிக்கக் கறுப்பு இனத்தைச் சேர்ந்தவரான பராக் ஒபாமாவின் ஆட்சியின் மீது ஓராண்டுக்குள் மக்கள் அதிருப்தி அடைந்துவிட்டார்களோ என்கிற ஐயத்தை எழுப்புகிறது சமீபத்தில் நடந்து முடிந்த இரண்டு மாநில ஆளுநர்களுக்கான தேர்தல் முடிவுகள். கடந்த வாரம் நடந்த வர்ஜீனியா மற்றும் நியூஜெர்சி மாநில ஆளுநர் தேர்தல்களில் அதிபர் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பின்னடைவைச் சந்தித்திருப்பது பெரிய சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.

ஓராண்டுக்கு முன்னால் நடந்த அதிபர் தேர்தலில், யாரும் எதிர்பாராதவிதமாக வர்ஜீனியா மாநிலத்தில் அதிபர் ஒபாமா முன்னணி வகித்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. சமீபத்தில் நடந்து முடிந்த ஆளுநர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிரெய்க் டீட்ஸ், குடியரசுக் கட்சி வேட்பாளரான ராபர்ட் மெக்டொனால்டிடம் தோல்வி அடைந்து அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறார்.

நியூஜெர்சி மாநிலம் கடந்த 12 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சியின் வசம் இருக்கும் மாநிலம் என்பது மட்டுமல்ல, இந்த மாநிலத்தின் எல்லா தளத்திலும் ஜனநாயகக் கட்சியே அதிகாரத்திலும் இருக்கிறது. நியூஜெர்சியில் குடியரசுக் கட்சி வேட்பாளரான கிறிஸ்டோபர் கிரிஸ்டி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோன் கோர்சைனைத் தோற்கடித்து ஆளுநராகி இருக்கிறார்.

வேடிக்கை என்னவென்றால், தான் அதிபரான பிறகு நடக்கும் தேர்தல்கள் இவை என்பதால், பராக் ஒபாமா இந்த இரண்டு மாநிலங்களிலும் கடுமையான பிரசாரத்தில் ஈடுபட்டார் என்பதுதான். எப்படியும் இந்த இரண்டு மாநிலங்களிலும் வெற்றி பெறுவதன் மூலம் மட்டுமே, தனது செல்வாக்குச் சரிந்துவிடாமல் காப்பாற்றப்படும் என்று அதிபர் ஒபாமா கருதியதில் தவறு ஒன்றுமில்லை.

இந்த இரண்டு மாநில ஆளுநர் தேர்தல்களும் முக்கியத்துவம் பெற்றதன் காரணம், அடுத்த ஆண்டு நவம்பர் மாதம் 435 உறுப்பினர்கள் கொண்ட அமெரிக்க மக்களவைக்கான தேர்தல் நடைபெற இருப்பதுதான். அதுமட்டுமல்ல, அமெரிக்க மேலவை உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் ஓய்வு பெற்று, அந்த இடங்களுக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், வர்ஜீனியா மற்றும் நியூஜெர்சி மாநிலங்களில் பின்னடைவு ஏற்படுவது என்பது தனக்கு எதிரான மனோநிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்திவிடக்கூடும் என்று அதிபர் ஒபாமா பயப்பட்டதில் நியாயமில்லாமல் இல்லை.

கடந்த ஆண்டு, அதிபர் தேர்தல், மேலவைத் தேர்தல் மற்றும் மக்களவைக்கான இடைத்தேர்தல்கள் என்று தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வந்த குடியரசுக் கட்சியினருக்கு, இந்த இரண்டு மாநில ஆளுநர் தேர்தல் வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தை அளித்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. 2010-ல் நடைபெற இருக்கும் மக்களவைத் தேர்தலில் பெருவாரியான இடங்களை குடியரசுக் கட்சி வென்றுவிட்டால், அதிபர் ஒபாமா பலவீனமாகி விடுவார் என்பதால் ஜனநாயகக் கட்சியினர் மத்தியில் ஒருவித கலக்கம் ஏற்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மாநில அளவிலான பிரச்னைகளை முன்னிறுத்தித் தேர்தல் முடிவுகள் அமைந்ததாக ஜனநாயகக் கட்சியினர் சமாதானம் சொன்னாலும், பொருளாதாரப் பிரச்னைகளை ஒபாமா நிர்வாகம் சரியாகக் கையாளாததுதான் தோல்விக்குக் காரணம் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து. இந்த முறை சுயேச்சைகள் குடியரசுக் கட்சியை ஆதரித்திருப்பதும், அதிபர் தேர்தலில் பெரிய அளவில் தேர்தலில் கலந்துகொண்ட கறுப்பர் இனத்தவர்கள், இந்தத் தேர்தலில் உற்சாகம் இழந்து தேர்தலில் பங்கு பெறாததும்கூட, ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களின் தோல்விக்குக் காரணம் என்று கருத இடமிருக்கிறது.
இது ஒருபுறமிருக்க, நியூயார்க் மாநகராட்சியின் மேயராக மீண்டும் கோடீஸ்வரர் மைக்கேல் ப்ளூம்பர்க் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அதிலென்ன விசேஷம் என்று கேட்கிறீர்களா? இரண்டு தடவைக்கு மேல் ஒரு நபர் மேயர் பதவியில் தொடரக்கூடாது என்று அமெரிக்காவில் சட்டம் இருந்தது. சுமார் 10 கோடி டாலர், அதாவது, 500 கோடி ரூபாய் செலவழித்து, அந்த விதியையே மாற்றி மூன்றாவது முறையாகத் தானே நியூயார்க்கின் மேயராகி இருக்கிறார் மைக்கேல் ப்ளூம்பர்க்! பணம் பாதாளம் வரை பாயும்தானே!

இடைத்தேர்தல் முடிவுகளிலும் சரி, பணம் பங்கு வகிப்பதிலும் சரி, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்று தெரிகிறது. யாரைப் பார்த்து யார் படித்தது? ஹும்... உலகமயம் என்பதில் இதுகூட சேர்த்தி போலிருக்கிறது...
நன்றி : தினமணி

No comments: