Saturday, July 4, 2009

பார்தி ஏர்டெல்லுக்கு நூறு கோடி டாலர் கடன் : ஸ்டேட் பாங்க் கொடுக்கிறது

தென் ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய மொபைல் நிறுவனமான எம்.டி.எம்.,ஐ வாங்கும் முயற்சியில் இந்தியாவின் பார்தி ஏர்டெல் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதற்கான பேச்சுவார்த்தையில் இரு நிறுவனங்களும் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் எம்.டி.எம்.,மை தன்னுடன் இணைத்துக்கொள்ள, பார்தி ஏர்டெல்லுக்கு 4 பில்லியன் டாலர்கள் ( சுமார் 19,200 கோடி ரூபாய் ) கடன் தேவைப்படும் என்று சொல்லப் படுகிறது. அதில் ஒரு பில்லியன் டாலர்கள் ( சுமார் 4,800 கோடி ரூபாய் ) கடனை இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா கொடுக்க முன் வந்திருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக் கின்றன.இந்தியாவில் கொடுக்கப்படும் மொத்த வங்கி கடனில் நான்கில் ஒரு பங்கை இந்திய அரசு நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாதான் கொடுத்து வருகிறது. பொதுவாக வெளிநாட்டு வங்கிகள் தான் இம்மாதிரியான வேறு நிறுவனங்களை வாங்க தேவையான கடனை கொடுப்பதில் அதிக ஆர்வம் காட்டும். இப்போது அந்த வரிசையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவும் சேர்ந்திருக்கிறது. எம்.டி.எம்.,மை பார்தி ஏர்டெல் வாங்கி, அதை தம்முடன் இணைத்துக்கொண்டால், அது உலகின் மூன்றாவது மிகப்பெரிய மொபைல் நிறுவனமாகி விடும். அப்போது அந்த நிறுவனத்திற்கு 20 கோடி சந்தாதாரர்கள் இருப்பார்கள். வருடத்திற்கு 20 பில்லியன் டாலர் ( சுமார் 96,000 கோடி ரூபாய் ) வரை வருமானம் கிடைக்கும். இது குறித்து பெயர் தெரிவிக்க மறுத்த ஒரு ஸ்டேட் பாங்க் உயர் அதிகாரி, எங்களது வாடிக்கையாளர்களில் ஒன்றான பார்தி ஏர்டெல்லுக்கு, எம்.டி.எம்.,நிறுவனத்தை வாங்க தேவையான பணத்தில், ஒரு பில்லியன் டாலர்களை கடனாக கொடுக்க தீர்மானித்திருக்கிறோம் என்றார். மேலும் அவர் தெரிவித்தபோது, அந்த கடன் மூன்று முதல் ஐந்து வருடங்களுக்குள் கொடுக்கப்படும் என்றார். ஒரு பில்லியன் டாலர் போக மீதி மூன்று பில்லியன் டாலர்களை, பார்தி எர்டெல்லுக்கு இந்த விஷயத்தில் ஆலோசகராக செயல்படும் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு பேங்க் கொடுக்கும் என்று தெரிகிறது.
நன்றி : தினமலர்


2 comments:

நினைவுகள்-செந்தில் said...

intersting news.
thanks for sharing.

பாரதி said...

நினைவுகள்-செந்தில் வருகைக்கு நன்றி