Friday, August 7, 2009

சிக்கியது யாகூ

இணையத்தில் நவீன தேடல் தொழில்நுட்பத்தின் முன்னோடி யாகூ. இன்று அதே தொழில்நுட்பத்துக்காக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திடம் கையேந்தியிருக்கிறது. இதற்காக கடந்த 29-ம் தேதி இரு நிறுவனங்களும் ஒப்பந்தமும் செய்து கொண்டிருக்கின்றன. உண்மையில் தோல்விக்கான யாகூவின் ஒப்புதல்தான் இந்த ஒப்பந்தம். யாகூவிடம் தனித்து வெற்றி பெறுவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை என்பதும் இதன்மூலம் வெளிப்படையாகியிருக்கிறது.

இரு நிறுவனங்களும் ஏதோ மனமுவந்து இந்தக் கூட்டுக்கு ஒப்புக்கொண்டிருக்கின்றன என நினைத்தால் அது தவறு. இந்த நிறுவனங்களுக்கு கைகோர்ப்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்பதுதான் உண்மை.

கடந்த சில ஆண்டுகளாகவே கூகுளின் வளர்ச்சியை எதிர்கொள்ள முடியாத மைக்ரோசாஃப்ட், யாகூவைக் கைப்பற்றுவதில் குறியாக இருந்தது. கடந்த ஆண்டில் 44 பில்லியன் டாலர்களுக்கு ஒட்டுமொத்தமாக யாகூவை விலை பேசியது. இந்த பேரம் படியாமல் போனதால், இப்போது புதிய ஒப்பந்தம் போட்டு யாகூவை வளைத்திருக்கிறது மைக்ரோசாஃப்ட்.

இந்த ஒப்பந்தப்படி, யாகூ இணையதளத்தில் இயங்கிவரும் தேடும் வசதி, மைக்ரோசாஃப்டின் "பிங்' தேடுபொறியின் தொழில்நுட்ப உதவியுடன் செயல்படும். இதற்குப் பதிலாக மைக்ரோசாஃப்டின் ஆன்லைன் விளம்பரங்களைச் சந்தைப்படுத்தும் பணியை யாகூ மேற்கொள்ளும். இதற்காக 400 பேர் கொண்ட யாகூ ஊழியர் குழுவை மைக்ரோசாஃப்ட் சுவீகரித்துக் கொள்ள இருக்கிறது. யாகூ தேடுபொறி, பிங் உதவியுடன் செயல்பட்டாலும் தேடல் வருவாயில் 88 சதவீதம் யாகூவுக்கே கிடைக்கும் என்கிறது இந்த ஒப்பந்தம்.

10 ஆண்டுகளுக்குச் செல்லத்தக்க இந்த ஒப்பந்தத்தின் முதல் நோக்கம், இணையத் தேடல் சந்தையில் 65 சதவீதத்தைத் தக்கவைத்துக் கொண்டிருக்கும் கூகுளை வீழ்த்துவதுதான் என்பதில் சந்தேகமேயில்லை.

இரண்டாவது நோக்கம், வீழ்ந்து கிடக்கும் யாகூவைச் சுதாரிக்கச் செய்வது. இதற்காக யாகூவுக்கு 4 பில்லியன் டாலர்களை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கொடுத்து உதவப் போவதாகவும் பேச்சு அடிபட்டது. இதனால், ஒப்பந்தம் கையெழுத்தாவதற்குச் சற்று முன்வரை யாகூவின் பங்குகளின் மதிப்பு சரசரவென உயர்ந்தது. ஆனால், எதிர்பார்த்தபடி, நிதியுதவி எதுவும் தரப்படாததால், யாகூ பங்குகள் சரியத் தொடங்கின. அதேநாளில் மைக்ரோசாஃப்ட் பங்குகளின் விலை சற்று உயர்ந்தது. இதிலிருந்தே ஒப்பந்தம் யாருக்குச் சாதகமானது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.

யாகூ முதலீட்டாளர்கள் இப்போது தலையில் கையை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டு ஒட்டுமொத்தமாக யாகூவை விற்றிருந்தால்கூட, ஒரு பங்குக்கு 33 டாலர்கள் கிடைத்திருக்கும். ஆனால், இன்று அந்த விலையில் பாதிக்கும் கீழே பங்குகளின் மதிப்பு குறைந்து கொண்டிருக்கிறது.

இருந்தாலும், இந்தப் புதிய கூட்டு மூலம் தேடுபொறிச் சந்தையிலும் பங்குகளின் விலையிலும் ஒரு குறிப்பிட்ட இலக்கை (அறிவிக்கப்படவில்லை) ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் (இதுவும் அறிவிக்கப்படவில்லை) எட்ட முடியாவிட்டால் உறவை முறித்துக் கொள்ளலாம் என்னும் விதி ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இது யாகூவுக்கு மிகச் சாதகமானது. எதிர்பார்த்த அளவுக்கு இல்லாவிட்டாலும், சிறிய அளவில் நிதியுதவியை அளிக்க மைக்ரோசாஃப்ட் முன்வந்திருக்கிறது. இப்போதைய நிதிநெருக்கடியைச் சமாளிக்க இந்த நிதி யாகூவுக்கு உதவும்.

இன்னொரு பக்கம், இந்த ஒப்பந்தத்துக்குப் பின்னால் யாகூவை வீழ்த்தும் சதி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. அதாவது, யாகூ இணையதளத்தில் பிங் தொழில்நுட்பத்துடன் கூடிய தேடல் வசதி அமைக்கப்பட்டாலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனம், தனது இணையதளங்களில் பிங் தேடும் வசதியைத் தொடர்ந்து இயக்கும். இதுபோக, தனியாக பிங் இணையதளமும் செயல்படும். இவற்றுக்கு எந்தக் கட்டுப்பாடும் ஒப்பந்தத்தில் இல்லை. இதனால், தேடல் சந்தையில் மைக்ரோசாஃப்டின் பங்கு தொடர்ந்து ஸ்திரமாக இருக்கும்.

அதேநேரம், இந்த ஒப்பந்தத்தின் மூலம் தமது தேடல் தொழில்நுட்பத்தை விட பிங் தொழில்நுட்பம் சிறந்தது என யாகூ மறைமுகமாக ஒப்புக்கொண்டிருக்கிறது. இதனால் பிங் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அந்தப் பரபரப்பு, யாகூ இணையதளத்தில் தேடுவதைவிட பிங் இணையதளத்துக்கே சென்று தேடலாம் என்கிற மனோபாவத்தை இணையத்தைப் பயன்படுத்துவோர் மத்தியில் ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. இதனால் பிங் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

ஆக, பிங் தேடுபொறியைப் புதிதாகப் பயன்படுத்துவோரில் பெரும்பாலானோர், யாகூவைக் கைவிட்டுவிட்டு வந்தவர்களாக இருப்பார்களேயொழிய, கூகுளிலிருந்து வந்தவர்களாக இருக்கப்போவதில்லை. இதனால், கூகுளை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறாமல் போவதுடன், தனது தேடல் சந்தையையும் யாகூ இழக்க வேண்டியிருக்கும்.

எப்படியோ மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஆக்டோபஸ் கரங்களில் யாகூ சிக்கிவிட்டது. தூக்கி விடுவதும் போட்டு உடைப்பதும் கால மாற்றங்களைப் பொறுத்தது.
கட்டுரையாளர் : பூலியன்
நன்றி : தினமணி

No comments: