Friday, August 7, 2009

பெரியாறு: வஞ்சிக்கப்படும் தமிழக விவசாயிகள்! - பழ. நெடுமாறன்

கடந்த 30 ஆண்டுகாலமாகத் தொடர்ந்து ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் அதை மெய்யாக்கிவிட கேரள மாநில அரசியல்வாதிகள் முயன்று வருகிறார்கள். பெரியாறு அணைப் பிரச்னையில் இந்தத் தந்திரத்தைத்தான் அம்மாநிலத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் கடைப்பிடித்து வருகின்றன.

கேரள மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணியாக இருந்தாலும், இடதுசாரிக் கூட்டணியாக இருந்தாலும் பெரியாறு அணைப் பிரச்னையிலும், மேற்கே பாய்ந்தோடும் ஆறுகளின் விஷயத்திலும் மிகை நீரை அரபிக்கடலுக்கு விட்டாலும் விடுவோமே தவிர, தமிழகத்திற்குத் தரமாட்டோம் என்பதில் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் இருக்கிறார்கள்.

1963-ம் ஆண்டிலிருந்து திரும்பத் திரும்ப பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும் இதன் விளைவாக அணை உடையுமானால் பல்லாயிரக்கணக்கான மலையாளிகள் உயிரிழப்பார்கள் என முற்றிலும் பொய்யான கூக்குரலை கேரளம் எழுப்பி வருகிறது.

அதே ஆண்டில் மத்திய நீர்வள ஆணையத்தின் இயக்குநர், தமிழக - கேரள அரசுகளின் தலைமைப் பொறியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவை இந்திய அரசு அனுப்பியது. இந்தக் குழு அணையைப் பார்வையிட்டு அணை நல்ல நிலையில் இருப்பதாக அறிவித்தது. 1978, 1979-ம் ஆண்டுகளில் மத்திய பாசன ஆணையத்தின் தலைவரும் அதிகாரிகளும் அணையை மீண்டும் பரிசீலனை செய்து நல்ல நிலைமையில் இருப்பதாக அறிவித்தனர்.

எனினும் கேரளத்தின் அச்சத்தைப் போக்கும் வகையில் அணையைப் பலப்படுத்த சில யோசனைகளைக் கூறினர். 20 ஆண்டு காலத்திற்கு மேலாக கேரள அரசின் முட்டுக்கட்டைகளைத் தாண்டி ரூ. 27 கோடி செலவில் தமிழக அரசு இந்த அணையைப் பலப்படுத்தியது. மத்திய நீர் வள ஆணையம் கூறியபடி அனைத்து வேலைகளையும் தமிழக அரசு செய்து முடித்தது. இந்த வேலைகள் முடியும் காலம் வரை அணையின் நீர்மட்டம் 136 அடிக்குக் குறைக்கப்பட்டது. இந்த வேலைகள் முடிந்த பிறகும் அணையின் நீர்மட்டத்தை 152 அடிக்கு உயர்த்துவதற்கு ஒப்புக்கொள்ள கேரளம் பிடிவாதமாக மறுத்து வருகிறது. இதுதான் பெரியாறு அணைப் பிரச்னையின் அடிப்படை விவாதம்.

தமிழ்நாட்டில் பெரியாறு நீரினால் பாசனம் செய்யப்படும் நிலத்தின் பரப்பளவு 2 லட்சம் ஏக்கராகும். அணையின் நீர்மட்டம் 136 அடியாகக் குறைக்கப்பட்டதன் விளைவாகத் தரிசாக மாறிய நிலப்பரப்பு 38,000 ஏக்கராகும். இருபோக சாகுபடியாக இருந்து ஒருபோக சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 86,000 ஏக்கராகும். ஆற்று நீரை இழந்து ஆழ்குழாய்க் கிணறு சாகுபடியாக மாறிய நிலப்பரப்பு 53,000 ஏக்கராகும். இதன் விளைவாக ஆண்டுதோறும் விவசாய உற்பத்தி இழப்பு ரூ. 55.80 கோடி. ஆண்டுக்கு மின்னுற்பத்தி இழப்பு ரூ. 75 கோடி. 1980-ம் ஆண்டிலிருந்து 2008-ம் ஆண்டு வரை 29 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டிற்கு மொத்த இழப்பு ரூ. 3793.20 கோடி.

மத்திய நீர் வள ஆணையத்தின் பரிந்துரைகள் அனைத்தையும் மதித்து தமிழக அரசு நிறைவேற்றியபோதிலும் கேரள அரசு அப்பரிந்துரைகளை மதிக்கவில்லை. அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு அனுமதிக்கவுமில்லை. இதற்கெதிராக தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்பதுதான் அதைவிட அதிர்ச்சி அளிக்கும் விஷயம். பாதிக்கப்பட்ட முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகளின் சங்கங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தன. அணையின் நீர்மட்டத்தை உயர்த்தக் கூடாதென கேரள அணைப் பாதுகாப்புச் சங்கங்கள் கேரள உயர் நீதிமன்றத்தில் ரிட் மனுக்களைத் தாக்கல் செய்தன. எனவே அனைத்து மனுக்களும் உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு கேரள அரசும் தமிழக அரசும் இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொண்டன. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி மத்திய அரசு 10 உறுப்பினர்கள் கொண்ட தொழில்நுட்ப வல்லுநர் குழுவை நியமித்தது. இக்குழுவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த அனுபவமும் திறமையும் மிக்க பொறியியல் வல்லுநர்கள் இடம்பெற்றனர். மேலும் மத்திய அரசு மத்திய மண்வள ஆய்வுக்குழு வல்லுநர்களை அனுப்பி அணையின் கட்டுமானப் பொருள்களின் மாதிரிகளை எடுத்துச் சோதனைக்கூடங்களில் சோதனை செய்து அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் அளித்தது.

அணை பலவீனமாக இருக்கிறது. அது இடிந்தால் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் அரபிக்கடலில் பிணமாக மிதப்பார்கள். நிலநடுக்கம் ஏற்படும் பகுதியில் பெரியாறு அணை அமைந்திருக்கிறது. எனவே இந்த நிலையில் அணை இருப்பது ஆபத்தானது என்பது போன்ற கேரளம் கூறிய 12 காரணங்களையும் ஆராய்வதற்காக தொழில்நுட்ப வல்லுநர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இக்குழுவினரும் கேரளம் கூறிய காரணங்கள் அடிப்படையற்றவை எனத் திட்டவட்டமாகக் கூறிவிட்டனர்.

முல்லைப்பெரியாறு அணைப் பிரச்னையில் பத்து ஆண்டுகாலத்திற்கு மேலாக விசாரித்த உச்ச நீதிமன்றம் பல்வேறு வல்லுநர் குழுக்களை அமைத்து அவை அளித்த அறிக்கைகளின் அடிப்படையில் கடந்த 27-2-06 அன்று 142 அடி வரை அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என ஆணையிட்டது. உச்ச நீதிமன்றத்தின் ஆணையை மீறும் வகையில் கேரள நீர்ப்பாசன மற்றும் நீர்ப்பாதுகாப்புச் சட்டத்திற்கு கேரள காங்கிரஸ் அரசு ஒரு திருத்தம் கொண்டுவந்து கம்யூனிஸ்டு கூட்டணி உள்பட அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றியது. அதன்படி கேரளத்திலுள்ள 22 அணைகளின் முழு கொள்ளளவு மட்டத்தை வரையறுப்பதற்கு கேரள அரசுக்குத்தான் முழு அதிகாரம் உள்ளது என்றும் இதில் வேறு எந்த அரசும் அல்லது நீதிமன்றங்களும் குறுக்கிட முடியாது என்றும் தீர்மானம் நிறைவேற்றியது. இந்தச் சட்டம் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிரானது என்று கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் 31-3-06 அன்று ஒரு மனுவைத் தாக்கல் செய்தது.

ஏற்கெனவே அணையின் நீர்மட்டத்தை உயர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையையும் மதிக்காமல், கேரளம் பிறப்பித்த அவசரச் சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டிய உச்ச நீதிமன்றம், மீண்டும் பேச்சுவார்த்தையின் மூலம் இப்பிரச்னையை சுமூகமாகத் தீர்த்துக்கொள்ளும்படி இரு மாநில முதல்வர்களையும் வேண்டிக்கொண்டது.

30 ஆண்டுகாலமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்தப் பயனும் இல்லாமையால்தான் தமிழக விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டனர். விவசாயிகளின் இந்தக் குரலுக்கு எந்தப் பயனும் இல்லை. 29-11-06-அன்று அன்றைய மத்திய நீர்வளத் துறை அமைச்சர் சைபுதின் சோஸ் தலைமையில் தில்லியில் இரு மாநில முதல்வர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவு எதுவும் ஏற்படவில்லை. அடுத்தகட்டமாக இரு மாநில பாசனத்துறை அமைச்சர்களும் பேச்சுவார்த்தை நடத்தியும் பிரச்னைக்கு முடிவு காணப்படவில்லை.

இறுதியாக 20-11-06 அன்று கேரள முதலமைச்சர் அச்சுதானந்தன் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் கூடி உச்ச நீதிமன்றத்தின் ஆணையின்படி 142 அடிக்கு மேல் நீர்மட்டத்தை உயர்த்த முடியாது என்று கூறியதோடு, இப்போது இருக்கும் அணையை இடித்துவிட்டுப் புதிய அணை கட்ட வேண்டும் என்ற தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றினார்கள்.
புதிய அணை கட்டுவதால் முதலில் 999 ஆண்டுகளுக்கு நமக்கு உரிமை அளித்த பழைய உடன்பாடு செல்லாததாகிவிடும். அதுமட்டுமல்ல, புதிய அணையை தற்போதைய அணைக்குக் கீழே கட்டினால் கூடுதல் நிலங்கள் நீரில் மூழ்கும் என்பதுடன் கேரளத்தின் இடுக்கி அணைக்கு அதிக நீரும் கிடைக்கும். அதுவே அவர்களின் குறிக்கோள் ஆகும்.

அணையை வலுப்படுத்தும் பணியைச் செய்துவிடாமல் 21 ஆண்டுகள் இழுத்தடித்தார்கள். புதிய அணை கட்டுவதற்கு எத்தனை நூற்றாண்டுகளுக்கு இழுத்தடிப்பார்களோ, யாருக்குத் தெரியும்? பணிகள் முடியும்வரை நீர்மட்டம் 136 அடியில் இருக்கும். இதனால் தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 13.5 டி.எம்.சி. தண்ணீர் இழப்பு ஏற்படுவதுடன் 2 லட்சம் ஏக்கர் நிலங்களில் முழுமையான சாகுபடி செய்ய முடியாது போகும். இதைப் பற்றியெல்லாம் யாரும் கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

பெரியாறு அணை அருகே ரூ. 300 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவையும் கேரள அரசு நடத்திவிட்டது. ஆனால் இப்பகுதி புலிகள் சரணாலயம் என்பதால் மத்திய வனத்துறை இப்பகுதியில் சர்வே எடுக்கத் தடை விதித்துள்ளது. ஆனாலும் அந்தத் தடையை மீறி கேரள அரசு சர்வே பணியை நடத்தியது. துபாயைச் சேர்ந்த மிடில் ஈஸ்ட் சர்வே அண்டு பொறியியல் நிறுவனத்திடம் புதிய அணை கட்டும் ஒப்பந்தத்தை கேரள அரசு செய்து கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தையோ மத்திய அரசையோ கொஞ்சமும் மதிக்காமல் கேரள அரசு செயல்பட்டு வருகிறது. தட்டிக் கேட்க தமிழக அரசுக்கும் தைரியமில்லை. மத்திய அரசுக்கும் மனமில்லை.

இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருக்கும் ஏ.கே. அந்தோனி கேரள மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ்காரர். இதன் விளைவாக அவரின் துறைக்கு கொஞ்சமும் தொடர்பில்லாத பெரியாறு அணைப் பிரச்னையில் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்த முற்பட்டார். 22-11-06 அன்று இந்தியக் கடற்படையைச் சேர்ந்த நீர்மூழ்கி வீரர்கள் 15 பேர், அவர்களுக்குத் துணையாக 10 பேர், இடுக்கி மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் மற்றும் கேரள போலீஸ் படை ஆகியோர் பெரியாறு அணைப் பகுதிக்கு அனுப்பப்பட்டனர். பெரியாறு அணை பலமாக இருக்கிறதா? இல்லையா? என்பதை நீரில் மூழ்கி ஆராய்வதற்காகவே இவர்கள் அனுப்பப்பட்டனர். மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனியின் அத்துமீறிய இந்த நடவடிக்கை குறித்து அறிந்த தமிழகப் பொதுப்பணித்துறை பொறியாளர்கள் 3 மணி நேரத்திற்கு மேலாகப் போராடி இந்த தீய முயற்சியைத் தடுத்து நிறுத்தினர்.

இத்துடன் அவர்கள் நிற்கவில்லை. இந்திய தொழில்நுட்பக் கழகப் பேராசிரியர்கள் குழு ஒன்று பெரியாறு அணையை ஆய்வு செய்து அறிக்கை தந்துள்ளதாக கேரள அரசு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. யார் இந்தப் பேராசிரியர்கள்! எந்த வகையில் அவர்கள் இப்பிரச்னையை ஆராயத் தகுதி பெற்றவர்கள் என்பதைப் பற்றியெல்லாம் எதையும் கூறுவதற்குக் கேரளம் மறுத்துவிட்டது.

இப்பேராசிரியர்களின் அறிக்கையின்படி பெரியாறு அணையில் அதிகபட்சமாக வினாடிக்கு 2,75,000 மில்லியன் கன அடி வெள்ளம் வரும் என்றும் அப்போது அதைத் தாங்கும் சக்தி அணைக்குக் கிடையாது என்றும் கேரள அரசு கூறியுள்ளது. எனவே புதிய அணையைக் கட்ட வேண்டும் என்ற பழைய பல்லவியையே பாடியுள்ளது.

பெரியாறு அணையில் உள்ள வெள்ளநீர் வெளியேறும் தாம்போகி மற்றும் சுரங்கப்பாதை வழியாகவும் வெளியேற்றப்படும் வெள்ளநீர் வினாடிக்கு 1,27,000 மில்லியன் கன அடி ஆகும்.

மத்திய நீர்வள ஆணையம் பரிந்துரைத்தபடி வெள்ள அளவான வினாடிக்கு 2,12,000 கன அடி வெளியேறுவதற்காக கூடுதலாக 3 மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே 3,39,000 மில்லியன் கன அடி நீர் வெளியேற முடியும்.

பெரியாறு அணைக்கு கீழே 34 மைல் தொலைவில் இடுக்கி அணை அமைந்துள்ளது. பெரியாறு அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதைவிட 7 மடங்கு மிகப்பெரிய இடுக்கி அணை அதை ஏற்றுக் கொள்ளும். அதனால் அந்த அணைக்கு ஆபத்து ஒன்றும் நேராதென மத்திய அரசு அமைத்த வல்லுநர் குழு ஏற்கெனவே கூறியுள்ளது.

எந்தப் பொய்யும் எடுபடாமல் போன பிறகு 5.12.08-அன்று மற்றொரு நாடகத்தை கேரள அரசு அரங்கேற்றியது. இந்திய நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் ஆர்.சாம்பசிவராவ் மற்றும் உறுப்பினர்கள் பெரியாறு அணையைப் பார்வையிட்டனர். அணை பலவீனமாக உள்ளது; அணையின் கீழ்ப்பகுதியில் வாழும் மக்களின் அச்சம் நியாயமானது என அவர்கள் கருத்துரை வழங்கியுள்ளனர்.

நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களில் யாரும் நீரியியல் அல்லது பொறியியல் நிபுணர்கள் அல்லர். பத்து நிமிடங்கள் மட்டுமே அணைப்பகுதியில் இருந்த இக்குழுவினர் அதற்குள் எந்த அடிப்படையில் அணை பலவீனமாக உள்ளது என்பதைக் கண்டறிந்தார்கள் என்பதுதான் ஆச்சரியம். அது போகட்டும், பெரியாறு அணை குறித்து கேரள அரசின் கருத்துகளைக் கேட்டறிந்த குழுவினர் தமிழக அரசின் கருத்துகளைக் கேட்கவில்லையே, ஏன்? அதைப்பற்றி தமிழக அரசும் கவலைப்படவில்லையே, ஏன்?

அதுமட்டுமல்ல, அணை உடைவதுபோலவும் மக்கள் வெள்ளத்தில் சிக்கி அழிவது போலவும் கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கி அதனை கேரள மாநிலப் பகுதிகளில் தொலைக்காட்சிகள் மூலம் காட்டி மக்களிடையே அச்சத்தைப் பரப்பியது கேரள அரசு. பெரியாறு அணையில் இருந்து 80 கிலோ மீட்டருக்கு அப்பால் 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் கூறி, உடனடியாக ஒரு நிபுணர் குழுவை கேரள அரசு நியமித்து ஆய்வு நடத்தியது. அணையில் பல இடங்களில் வெடிப்புகளும், நீர்க்கசிவுகளும் ஏற்பட்டிருப்பதாக அந்தக் குழு அறிக்கையை அளித்தது. உடனடியாக கேரள முதல்வரும், அதிகாரிகளும் பிரதமரைச் சந்தித்து இதுகுறித்துப் புகார் செய்தனர்.
பெரியாறு அணை அமைந்திருக்கும் இடுக்கி மாவட்டத்தில் 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது உண்மையாக இருந்தால் தமிழ்நாட்டில் உள்ள வைகை அணையும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும். அவ்வாறு எதுவும் வைகை அணைப்பகுதியில் நேரவில்லை. பெரியாறு அணைப்பகுதியில் அல்லது இடுக்கி மாவட்டத்தில் 8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அதைத் தாங்கும் வகையில்தான் இந்த அணை வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பகுதியில் 8 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஒருபோதும் ஏற்படாது என நிலவியல் நிபுணர்கள் உறுதியும் கூறியுள்ளார்கள்.

பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு நீர் தேக்கப்பட்டிருக்கும்போது நிலநடுக்கம் வந்தாலும் அணைக்கு எந்தச் சேதமும் ஒருபோதும் வராது. மேலும் மத்திய நீர்வளத்துறையின் ஆணையின்படி தமிழக அரசு இந்த அணையில் கேபிள் ஆங்கரிங் என்ற முறையில் அதிக அழுத்த கம்பிகளும் துளையில் நிரப்பப்பட்ட காங்கிரீட்டும் இணைந்து பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் அணையின் பின்புறத்தில் 33 அடி அகலத்தில் அடித்தளத்திற்குக் கீழ் 10 அடியிலிருந்து தொடங்கி மேலே 145 அடி வரை காங்கிரீட் அமைக்கப்பட்டுள்ளது. பழைய அணையும், புதிய அணையும் மிகுந்த தொழில்நுட்ப உத்தியோடு இணைக்கப்பட்டு ஒரே கட்டுமானம்போல் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பெரியாறு அணை புதிய கட்டுமானத்திற்கும் மேலான வலிமை பெற்றுள்ளது. எனவே எத்தகைய நிலநடுக்கமும் அணையை ஒருபோதும் பாதிக்காது.

பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியில் ஐந்தில் ஒருபகுதி தமிழ்நாட்டில் உள்ளது. பெரியாறில் பாய்ந்தோடும் நீரின் மொத்த அளவு 4767.9 மில்லியன் கன மீட்டராகும். இதில் ஐந்தில் ஒரு பகுதி நீர் அதாவது சுமார் 960 மில்லியன் கன மீட்டர் நீர் தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது.

பெரியாறு அணை நீரில் கேரள மாநிலத்தின் பயன்பாட்டுக்குப் போக வீணாகக் கடலுக்குச் செல்லும் நீரின் அளவு 2313 மில்லியன் கன மீட்டராகும். அணையின் நீர்மட்டம் 152 அடி வரை உயர்த்தப்பட்டால் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும் நீர் வெறும் 126 மில்லியன் கன மீட்டர்தான்.
அரபிக்கடலில் வீணாகக் கலக்கும் நீரில் 18.34 சதவீத நீரை மட்டுமே நமக்குத் தருமாறு கேட்கிறோம். அதுவும் தமிழ்நாட்டு எல்லைக்குள் உற்பத்தியாகி பெரியாறில் கலக்கும் நீரில் சுமார் எட்டில் ஒரு பகுதி நீரையே நாம் கேட்கிறோம். அதைக்கூடத் தருவதற்கு கேரள அரசியல்வாதிகளுக்கு மனமில்லை.
இந்த உண்மைகளையும், தமிழக விவசாயிகளின் பக்கம் இருக்கக்கூடிய நியாயங்களையும் மத்திய அரசுக்கும் மற்றும் அகில இந்திய தலைவர்களுக்கும் உணர்த்தி அவர்களின் ஆதரவைப் பெற தமிழக அரசு இதுவரை எதுவும் செய்யவில்லை. ஆனால் வெறும் பொய்யை மட்டுமே முதலாகக் கொண்டு கேரள அரசியல்வாதிகள் 30 ஆண்டுகாலத்திற்கு மேலாக நமக்கு நீதி கிடைக்கவிடாமல் தடுத்து வருகிறார்கள். இன்னமும் தடுப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
கடந்த 30 ஆண்டு காலமாக கேரள அரசியல்வாதிகள் ஒன்றுபட்டு நின்று பொய்யான புள்ளிவிவரங்களை அள்ளிவீசியும், அதேவேளையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றாமலும் தொடர்ந்து தமிழக விவசாயிகளை வஞ்சித்து வருகிறார்கள். அதிலும் தற்போது மத்திய அரசில் கேரளத்தைச் சேர்ந்த 7 அமைச்சர்கள் முக்கிய பொறுப்புகளில் அமர்ந்திருக்கிறார்கள்.
கேரளத்தைச் சேர்ந்த பலர் செல்வாக்குமிக்க அதிகாரிகளாகவும் பதவி வகித்து வருகிறார்கள். எனவே இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி எப்படியும் புதிய அணை கட்டுவதற்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெற்றுவிட முடியும் என கேரளம் நம்புகிறது.

ஆனால் தமிழ்நாட்டின் நிலை என்ன? கடந்த 30 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டை தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கட்சிகளே ஆண்டு வந்திருக்கின்றன. இந்தக் காலகட்டத்தில் மத்திய அரசிலும் அமைச்சர்களாக இரு கழகங்களையும் சேர்ந்தவர்கள் இருந்திருக்கிறார்கள். இருந்து வருகிறார்கள். ஆனாலும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற மறுக்கும் கேரளத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசை வலியுறுத்த இவர்களால் முடியவில்லை.

தற்போது மத்திய அரசில் காங்கிரஸ், தி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த 9 தமிழர்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஆனாலும் என்ன பயன்?

கேரளம் தனது முயற்சியில் வெற்றி பெற்றுவிடுமானால் பெரியாறு பாசன விவசாயிகளின் எதிர்காலம் இருண்டுபோகும் என்பதைப் பற்றி யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
கட்டுரையாளர் : பழ. நெடுமாறன்
நன்றி : தினமணி

No comments: