Thursday, March 5, 2009

மூன்று ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்றது பங்குச் சந்தை

சந்தை மூன்று ஆண்டுகளுக்கு முன் எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலைக்கு சென்று விட்டது. மூன்று ஆண்டுகளுக்குள் சந்தைக்கு வந்தவர்கள் தான் அதிகம். மழைக்காக ஒதுங்கியவர்கள் எல்லாம், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட கதை தான் நடந்து கொண்டிருக்கிறது. இது தான் கீழே, இனிமேல் மேலே தான் செல்லும் என்று அறுதியிட்டுக் கூறமுடியாத அளவிற்கு சந்தை தடுமாறுகிறது. திங்களும், நேற்று முன்தினமும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விற்றுக் கொண்டே இருந்ததால் சந்தை கீழேயே இருந்தது. நேற்று முன்தினம் மட்டும் 750 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றனர். மும்பை பங்குச் சந்தை, திங்களன்று 285 புள்ளிகளும், நேற்று முன்தினம் 180 புள்ளிகளும் குறைந்து முடிவடைந்தது. இரண்டு நாட்களில் 465 புள்ளிகள் குறைந்தது அதிகம் தான். இது கடந்த மூன்று ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவு.
வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பணத்தை எடுத்துச் சென்றது ஏன்?: உற்பத்தி சதவீதம் குறைந்து வருவதாலும், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்குமோ என்று தெரியாததாலும் தற்போது போய் பின் வருவோம் என்ற நினைப்பில் பலர் தங்களது முதலீடுகளை எடுத்துச் செல்கின்றனர். அற்ற குளத்து அருநீர் பறவை போல் தான். நேற்று துவக்கம் கீழேயே இருந்தது. சீனாவின் சந்தைகளில் முன்னேற்றம் இருந்ததால் நஷ்டங்களை சரிக்கட்டி சிறிது லாபத்திலும் முடிந்தது. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 19 புள்ளிகள் கூடி 8,446 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 22 புள்ளிகள் கூடி 2,645 புள்ளிகளுடனும் முடிந்தது. பொருளாதார பிரச்னைகள், உலகம் முழுவதும் உள்ள கம்பெனிகளுக்கு நல்ல பாடங்களை கற்றுத் தந்து கொண்டிருக்கிறது. அதாவது, கையில் பணம் இருந்த கம்பெனிகள் வேறு கம்பெனிகளை என்ன விலை கொடுத்தாவது வாங்க வேண்டும் என்ற நினைப்பில் வாங்கிக் குவித்தன.
தற்போது பணத் தட்டுப்பாட்டில் அனைத்தும் தவிக்கின்றன. அது தவறு என்று தற்போது புரிந்திருக்கும்.
இந்நிலையிலும் சில பங்குகளின் முதலீடுகள் லாபங்களை வாரிக் கொடுத்துள்ளன. உதாரணமாக, ஜிந்தால் பாலி பிலிம், பிர்லா கார்ப், ஜிந்தால் ஸ்டீல் அண்டு பவர், ஆரக்கிள் பைனான்சியல், ரேணுகா சுகர், ஐ.வி.ஆர்.சி.எல்., இன்பிரா, ஆல்கார்கோ போன்றவை.
மியூச்சுவல் பண்டுகளின் வளர்ச்சி: மியூச்சுவல் பண்டுகள் கடந்த பிப்ரவரி மாதம் 8.6 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளன. அதாவது, பண்டுகளின் மொத்த மதிப்பு ஐந்து லட்சம் கோடிகளை தாண்டி விட்டது. வங்கிகளில் லிக்யூடிட்டி சரியானதால் அவர்களிடம் இருக் கும் அதிகப்படியான பணத்தை மியூச்சுவல் பண்டுகளில் போட்டு வருவதால் இந்த வளர்ச்சி எனலாம். அட்வான்ஸ் டாக்ஸ் கட்ட நாட்கள் நெருங்கிக் கொண்டிருக்கின்றன. வரும் 15ம் தேதி அதற்கு கடைசி நாள். எந்த கம்பெனி எவ்வளவு கட்டியிருக்கிறது என்ற தகவல்கள் வெளிவரும் போது அடுத்த காலாண்டுகள் எப்படி இருக்கும் என்று தெரிய வரலாம். மறுபடியும் யூகங்களிலேயே வாழ வேண்டியுள்ளது.
52 ரூபாயை தாண்டிய டாலர் மதிப்பு: டாலர்களை மாற்றாமல் வைத்திருக்கின்றனர். இவையெல்லாம் சேர்ந்து டாலர் ரூபாய் மதிப்பு 52யையும் தாண்டி அனைவரையும் தங்கத்தை விட மலைக்க வைத்துவிட்டது.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்?: குழப்பமாகவே இருக்கிறது. கணிக்கமுடியாத நாட்கள்.
- சேதுராமன் சாத்தப்பன்
நன்றி : தினமலர்

1 comment:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பங்குச் சந்தை பணத்தைக் காகிதமாக மாற்றி பல நூற்றாண்டுகளுக்கு மனிதனை பின்னோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது