Friday, November 21, 2008

10 சதவீத ஊழியர்களை குறைக்கிறது அசோசியேட்டட் பிரஸ்

அமெரிக்க செய்தி நிறுவனமான அசோசியேட்டட் பிரஸ் ( ஏ.பி.) அதன் ஊழியர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்தை அடுத்த வருடத்தில் குறைக்க முடிவு செய்திருக்கிறது. நேற்று நியுயார்க்கில் நடந்த ஒரு கூட்டத்தில் ஏ.பி.,யின் தலைவர் மற்றும் தலைமை அதிகாரி டாம் கர்லி இதனை தெரிவித்தார். தற்போது அவர்களுக்கு, உலகம் முழுவதிலு ம் 3,000 செய்திப்பிரிவு ஊழியர்கள் உள்பட 4,100 ஊழியர்கள் இருக்கிறார்கள். இதில் 10 சதவீதத்தை குறைக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்கள். அப்படியானால் சுமார் 400 பேர் வேலை இழப்பர் என்று தெரிகிறது. உலக அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியில் பிரபல செய்தி நிறுவனமான அசோசியேட்டட் பிரஸ் சும் தப்பவில்லை என்கிறார்கள். அமெரிக்காவில் வெளியாகும் சுமார் 1,500 பத்திரிக்கைகள் ஏ.பி.,யின் செய்தி மற்றும் போட்டோக்களை சந்தா செலுத்தி வாங்கி பயன்படுத்துகின்றன. இப்போது ஏ.பி.,யின் சந்தா தொகை அதிகரிக்கப்படுகிறது என்ற செய்தியும் அமெரிக்க பத்திரிக்கைகளை கலக்கமடைய செய்திருக்கிறது. உலகின் மூன்று பிரபல செய்தி நிறுவனங்களில் ஒன்றாக அசோசியேட்டட் பிரஸ் இருந்து வருகிறது. மற்றவை இங்கிலாந்தின் ராய்ட்டர் மற்றும் பிரான்சின் ஏஜென்ஸ் பிரான்ஸ் பிரஸ்.
நன்றி : தினமலர்


No comments: