Tuesday, November 25, 2008

அமெரிக்க அரசின் உறுதிமொழியால் சிட்டி பேங்க்கின் பங்கு மதிப்பு 58 சதவீதம் உயர்ந்தது

மோசமான நிதி நிலையால் திவால் நிலை வரை வந்த அமெரிக்காவின் சிட்டி பேங்க்கை காப்பாற்ற, அதில் 20 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய அமெரிக்க நிதித்துறை ஒத்துக்கொண்டதை அடுத்து, பாதாளத்திற்கு சென்றிருந்த அந்த வங்கியின் பங்கு மதிப்பு நேற்று 58 சதவீதம் உயர்ந்து விட்டது. இது தவிர அந்த வங்கியில் வராக்கடனாக நீண்டகாலமாக இருக்கும் 306 பில்லியன் டாலர்களுக்கும், அமெரிக்க நிதித்துறை மற்றும் பெடரல் டெபாசிட் இன்சூரன்ஸ் கார்பரேஷன் பொறுப்பேற்றுக்கொள்வதாகவும் அறிவித்திருக்கிறது. கடந்த மாதத்தில் தான் சிட்டி பேங்க்கில் பொதுமக்கள் பணம் 25 பில்லியன் டாலர்களை அமெரிக்க அரசு முதலீடு செய்திருக்கிறது. 2006ல் 270 பில்லியன் டாலர்களாக இருந்த சிட்டி பேங்க்கின் மதிப்பு, மோசமான நிதி நிலைக்கு தள்ளப்பட்டதால் கடந்த வாரம் வெள்ளி அன்று வெறும் 20.5 பில்லியன் டாலராக இறங்கி இருந்தது. கடந்த வாரத்தில் மட்டும் அதன் சந்தை மதிப்பு 60 சதவீதம் குறைந்திருந்தது. ஆனால் இழந்த 60 சதவீத மதிப்பில் 58 சதவீதத்தை நேற்று திரும்ப பெற்று விட்டது. கடும் நிதி நெருக்கடியில் இருந்து வரும் அந்த வங்கி, உலகம் முழுவதிலும் இருக்கும் அதன் கிளைகளில் பணியாற்றி வருபவர்களில் 75,000 பேரை பணிநீக்கம் செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தது நினைவிருக்கலாம்.
நன்றி : தினமலர்


No comments: