Monday, November 24, 2008

மியூச்சுவல் பண்டில் 58 ஆயிரம் கோடி போச்சு!

சர்வதேச நிதி நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பங்குச் சந்தையில், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு மட்டும் 58 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் வருமான இழப்பு ஏற்பட்டதை அடுத்து, பலரும் போட்ட பணத்தை திரும்பப்பெறும் நிலை ஏற்பட்டது. இதனால், திட்டமிட்டு அமல் செய்யப்பட்ட குறுகிய கால மியூச்சுவல் பண்ட் திட்டங்களில் இருந்து பலரும் பணத்தை திரும்பப்பெறுவது அதிகரித்தது. முதிர்ச்சி பெறாமலேயே பலரும் பணத்தை திரும் பப் பெற முடிவு செய்ததால், நிறுவனங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது.
குறிப்பிட்ட காலம் வரை டிபாசிட் பணத்தை வைத்திருந்தால் தான் அதற்கு லாபம் தர முடியும். ஆனால், முதிர்ச்சி பெறாமலேயே போட்ட பணத்தை திரும்பப்பெற முடிவு செய்ததால், மியூச்சுவல் பண்ட் நிதியை அவசர அவசரமாக திரட்டி திரும்பத் தர வேண்டிய நிலை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.நிதி நெருக்கடியால், மியூச்சுவல் பண்ட் நிறுவனங்களுக்கு முதலீட்டு பணம் மொத்தம் 58 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 'பிக்சட் மெச்சூரிட்டி பிளான்' கள் உட்பட, குறுகிய கால மியூச்சுவல் மெச்சூரிட்டி திட்டங்களில் இருந்து மட்டும் 11 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.ஐ.சி.ஐ.சி.ஐ., ப்ரூடென்ஷியல் உட்பட பல நிறுவனங்களுக்கும் இந்த வகையில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பொது மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில், நிதி ஆதாரத்தை திரட்டி காட்ட வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.இது குறித்து மியூச்சுவல் பண்ட் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், 'அரையாண்டு, ஓராண்டு மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் உள்ளன. அவற்றில் இருந்து பணத்தை திரும்பப்பெறுவது, நிறுவனங்கள் தந்த உத்தரவாதத்தை மீறிய செயலாகிறது. இப்படி செய்யும் போது, நிறுவனத்துக்கு தான் அதிக இழப்பு ஏற்படுகிறது.பணத்தை திரும்பப்பெற வேண்டாம் என்று நாங்கள் வாடிக்கையாளர்களை தடுத்து வருகிறோம்; அதே சமயம், தற்போது இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கையூட்டவும் செய்து வருகிறோம்' என்று தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்


No comments: