Friday, November 28, 2008

டீசல் சப்ளை செய்ய ஐ.ஓ.சி., மறுப்பு : அரசு விரைவு பஸ்கள் திடீர் நிறுத்தம்

டீசல் பணம் செலுத்தாததால் தமிழகத்தில் பல இடங்களில் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் நேற்று முதல் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சென்னையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இப்போக்குவரத்துக்கு 14 நகரங்களில் டெப்போக்கள் உள்ளன. அரசு விரைவு பஸ்களுக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்(ஐ.ஓ.சி.,) மூலம் டீசல் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக விரைவு பஸ் டெப்போக்களால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு ஒருமுறை பணம் பட்டுவாடா செய்யப்படும்.
மதுரையில் பல நாட்களாக டீசலுக்கான தொகை சுமார் ஒரு கோடி ரூபாயை விரைவு போக்குவரத்துக் கழக பஸ் டெப்போ நிர்வாகம் செலுத்தவில்லை. தமிழகம் முழுவதும் 5 கோடிக்கு மேல் பாக்கி உள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்ததால் தொடர்ந்து டீசல் தர ஐ.ஓ.சி., மறுத்து விட்டது. எனவே விரைவு போக்குவரத்துக் கழகத்தால் அனைத்து பஸ்களையும் இயக்க முடியவில்லை. பாதியளவு பஸ்களை ரத்து செய்துள்ளது. நிறுத்தப்பட்ட பஸ்கள், சாதாரண கட்டண பஸ்கள் என பல பஸ்களில் இருந்து டீசலை எடுத்து, வெளிமாநிலம் செல்லும் பஸ்களுக்கு நேற்று சப்ளை செய்துள்ளனர். மழை நேரத்தில் பயணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி போன்ற நகரங்களில் இருந்து வரும் பஸ்களில் சில சீட்களை காலியாக வைத்திருக்கும்படி தெரிவித்து மதுரை பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த 'திடீர் நெருக்கடி' நிலையால் தமிழகம் முழுவதும் 40 சதவீத பஸ்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
நன்றி :தினமலர்


No comments: