Wednesday, November 12, 2008

ரஷ்ய எண்ணெய் கம்பெனி இம்பீரியலை வாங்க இன்னும் 28 நாளில் ஏற்பாடு : ஓ.என்.ஜி.சி

ஓ.என்.ஜி.சி.,யின் வெளிநாட்டு அங்கமான ஓ.என்.ஜி.சி.,விதேஷ் நிறுவனம், ரஷ்ய எண்ணெய் நிறுவனமான இம்பீரியல் எனர்ஜியை, 2.6 பில்லியன் டாலருக்கு வாங்குவதற்கு தேவையான டாக்குமென்ட்களை இன்னும் 28 நாளில் அனுப்பும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் முதலீட்டாளர் களிடையே இதை இப்போது வாங்க வேண்டுமா என்ற பயமும் இருந்து வருகிறது. இம்பீரியல் எனர்ஜி நிறுவனத்தை ஓ.என்.ஜி.சி.,க்கு விற்க, ரஷ்ய அரசாங்கமும் அனுமதி கொடுத்துவிட்டது. திங்கள் அன்று வெளியான பத்திரிக்கை செய்தியில், இப்போது கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால் இம்பீரியல் எனர்ஜிக்கு ஓ.என்.ஜி.சி., கொடுக்க இருக்கும் தொகை மிக அதிகம் என்று இந்திய அரசாங்கம் எண்ணுகிறது என்றும், இந்த விலையில் அதிருப்தியில் இருப்பதாகவும் எழுதப்பட்டிருந்தது. இதனையடுத்து அன்றைய தினம் இம்பீரியல் எனர்ஜியின் பங்கு மதிப்பு வெகுவாக குறைந்து போனது. ஆகஸ்ட்டில் இம்பீரியல் எனர்ஜியை ஓ.என்.ஜி.சி., வாங்கிக்கொள்வதாக சொன்னபோது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 128 டாலராக இருந்தது. இப்போது அது 63 டாலராகத்தான் இருக்கிறது. இருந்தாலும் ஓ.என்.ஜி.சி.,கொடுப்பதாக சொன்ன விலையை குறைக்கப்போவதில்லை என்று இப்போது அறிவித்திருப்பதால் மீண்டும் இம்பீரியல் எனர்ஜியின் பங்கு மதிப்பு கூடி விட்டது.
நன்றி: தினமலர்


No comments: