Wednesday, November 12, 2008

டாடா டெலிசர்வீசஸின் 26 சதவீத பங்குகளை ஜப்பானின் டோ கோ மோ வாங்குகிறது

இந்தியாவின் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் முதலீட்டில், ஜப்பானின் என்டிடி டோ கோ மோ நிறுவனமும் பங்கேற்கிறது.இதற்கான அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இதன் மூலம் உலகில் வேகமாக வளர்ந்து வரும் மொபைல் சந்தையான இந்தியாவில் டோ கோ மோ ஆழமாக கால்ஊன்றுகிறது. இந்தியாவின் ஆறாவது மிகப்பெரிய வயர்லெஸ் சேவை நிறுவனமான டாடா டெலிசர்வீஸசின் 26 சதவீத பங்குகளை ஜப்பானின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான டோ கோ மோ, 2.7 பில்லியன் டாலருக்கு ( 260 பில்லியன் யென் ) வாங்குகிறது. இதன் மூலம் ஜப்பானின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமாக இருக்கும் டோ கோ மோ, அதன் வர்த்தகத்தை அயல் நாட்டிலும் விரிவுபடுத்துகிறது என்று நிக்கி என்ற ஜப்பான் பிசினஸ் இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது. டாடா டெலிசர்வீஸசை அடுத்து டோ கோ மோ, வங்காள தேசத்தின் மூன்றாவது பெரிய மொபைல் போன் நிறுவனத்தில் 350 மில்லியன் டாலர்களை முதலீடு செய்கிறது. இதன் மூலம் அது வெளிநாடுகளில் முதலீடு செய்யும் மொத்த தொகை 63 பில்லியன் டாலர்களாகிறது. டோ கோ மோ நிறுவனம் வெளிநாடுகளில் முதலீட்டை அதிகரித்து வர்த்தகத்தை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும் போது, சமீபத்தில் இருந்துதான் வெளிநாடுகளில் கம்பெனிகளை வாங்க ஆரம்பித்திருக்கும் டாடா குரூப், உலக பொருளாதார சீர்குழைவின் காரணமாக அதன் வெளிநாட்டு வர்த்தக விரிவாக்கத்தை நிறுத்தி வைத்திருக்கிறது. டோ கோ மோ வின் இந்த நடவடிக்கையை குறித்து கருத்து சொன்ன மிட்சுபிசி யுஎப்ஜெ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தை சேர்ந்த கணிப்பாளர் சிஞ்சி மொரியுகி, இந்த ஒப்பந்தத்தால் பெரிதும் பயனடையப்போவது டோ கோ மோ தான். ஏனென்றால் இந்தியாவில் இனிமேல் வர இருக்கும் 3 ஜி மொபைல் சர்வீஸசில், டோ கோ மோ ஏற்கனவே நன்கு பயிற்சி பெற்றவர்கள். இந்தியாவை போலவே பெரும்பாலான நாடுகளில் இப்போதுதான் 3 ஜி சர்வீஸ் வந்து கொண்டிருக்கிறது. சீனாவுக்கு அடுத்ததாக உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் சந்தையாக இந்தியா இருக்கிறது. செப்டம்பரில் மட்டும் இங்கு ஒரு கோடி பேர் மொபைல் சர்வீஸ் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவில் மொத்தம் 31 கோடியே 53 லட்சம் பேர் மொபைல் சேவையை பெற்றிருக்கிறார்கள். இது அமெரிக்க மக்கள்தொகையை காட்டிலும் அதிகம். ஜப்பானின் 10 கோடியே 90 லட்சம் சந்தாதாரர்களை விட இது 3 மடங்கு அதிகம்.
நன்றி : தினமலர்


No comments: