Tuesday, November 3, 2009

மனம் நோகாமல் சொல்

தமிழகத்தில் செயல்படும் கல்வியியல் கல்லூரிகளில், ஆசிரியர் பயிற்சிப் பாடத்திட்டத்தில் "கற்றல் உளவியல்' ஒரு பாடமாக இருக்கிறது. ஆனால், அந்தப் பாடத்திட்டத்தின் உள்ளீடுகள், இக்காலத்துக்கேற்றவையாக இருக்கிறதா என்றால், இல்லை என்றே சொல்லிவிடலாம். மாறிவரும் உலக நடைமுறைகளால் மாற்றம் பெற்றுள்ள இக்கால வளர்இளம் பருவ மாணவர்களின் மனப்போக்கு, அவர்களை நுட்பமாகக் கையாளும் அவசியங்களை உள்ளடக்கியதாக உளவியல் பாடங்கள் மாற்றப்பட வேண்டிய தேவை இன்று உருவாகியுள்ளது.

மாணவர்களைப் பிரம்பால் அடிப்பது, முட்டிபோடச் செய்வது என்பது இன்று சட்டப்படி குற்றம் என்பதால், விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரைத் தவிர, ஆசிரியர்கள் எவருமே இதில் ஈடுபடுவதில்லை. இருப்பினும், அடிப்பதற்குப் பதிலாக, அவமானப்படுத்துவது என்பதாக தண்டனைகள் மாறியுள்ளன. இது புதுவகையான சிக்கலை ஆசிரியர்-வளர்இளம் பருவ மாணவர் இடையே ஏற்படுத்தி விடுகிறது.

பிரம்படி ஏற்படுத்தும் வலியைவிட மனதைக் காயப்படுத்தும் அவமானத்தின் வலி கொடூரமானது. ஆசிரியர் தன்மீது நிகழ்த்தும் இந்த வலியைத் தாங்கிக்கொள்ளும் வளர்இளம் பருவ மாணவர்கள், அதை சமூகத்தில் வன்முறைகளாக வெளிப்படுத்திவிடுகிறார்கள். வகுப்பறையில் தாங்கிக்கொள்ள முடியாமலும், அந்த வலியை வெளிப்படுத்தி மனஇறுக்கம் தளர வழிதெரியாதவர்களும், நொறுங்கிப்போய்த் தாழ்வு மனப்பான்மையால் பயனற்றவர்களாக மாறுகிறார்கள். அவர்களில் மிகச் சிலர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு செங்கம் அருகே, தாமதமாக வந்த மூன்று மாணவிகளைத் தலைமையாசிரியர் பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் அவர்கள் அதை ஓர் அவமானமாகக் கருதி, வீடு திரும்பாமல் அங்கே அழுது நின்றபோதும் மன்னிக்காமல் விரட்டப்பட்டனர். மூவரும் கிணற்றில் குதித்ததில், இருவர் இறந்தனர். வருந்தியழும் நிலையில் மன்னித்திருந்தால் இந்தச் சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கும்.

கோவையில் ஒரு பள்ளி மாணவி, வகுப்புத் தேர்வில், துணுக்குச் சீட்டுகளை மறைத்துவைத்து எழுதினார். அதை அப்படியே பெற்றோரிடம் காட்டுகிறோம் என்று, அவர் வீட்டுக்குத் தகவல் கொடுத்து வரச்செய்தனர். பெற்றோர் வரும் முன்பாகவே மாணவி மாடியிலிருந்து குதித்து இறந்தார். விடைத்தாளைக் கிழித்துப்போட்டுவிட்டு மறுபடியும் எழுதச் செய்திருக்கலாம்.

ஒரு மாணவனும் மாணவியும் ஒன்றாக நகரைச் சுற்றியதை வகுப்பறையில் வெளிப்படுத்தி அவமானப்படுத்தியதால், ஆம்பூரில் ஒரு மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

இன்றைய வளர்இளம் பருவத்தினரின் மனநிலை முற்றிலுமாக மாறிக் கிடக்கிறது. அவர்களுக்கு எல்லாமும் பத்து வயதிலேயே தெரிந்துவிடுகிறது. காதல், காமம், சுயமரியாதை, அறிவு, ஏமாற்று, செல்போன் பயன்பாடு, கணினியில் செயல்பாடு, இணையதளத்தில் அனைத்தையும் திறந்து பார்க்கும் வாய்ப்பு என எல்லாவற்றிலும் நாம் துரத்திப் பிடிக்க முடியாத அளவுக்கு வேகமாகப் பறந்தோடிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரிய விஷயங்கள் தெரிந்திருக்கும் தங்களைப் பெரியவர்களாக மதிக்க வேண்டும், அவ்வாறு நடத்த வேண்டும் என்று வளர்இளம் பருவத்தினர் பெற்றோர்களிடமும் சமூகத்திடமும் எதிர்பார்ப்பதில் தவறில்லை. தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பது பழைய உளவியல். இன்றைய நாளில் அறிவில் மிஞ்சியவன் ஆசான். ஆசிரியருக்கு இணையாக அல்லது கூடுதலாக விஷயங்கள் தெரிந்திருக்கும் வளர்இளம் பருவ மாணவனுக்கு, பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றுமில்லாத சாதாரண நிகழ்வாகக் கருதப்பட்ட நடவடிக்கைகள்கூட, இன்று தங்கள் உணர்வு மீதான அவமதிப்பாகக் கருதும் சூழல் இருக்கிறது.

நாளுக்குநாள் மாறிக்கொண்டிருக்கும் நவீன வாழ்க்கையில் வளர்இளம் சிறார்களின் போக்கு என்ன?, அவர்கள் எதனை "சீரியஸôன' விஷயமாகக் கருதுகிறார்கள், எது அவர்களுக்கு "சப்பை மேட்டராக' இருக்கிறது, எவையெல்லாம் அவர்களுக்கு "சான்சே இல்ல' என்பதாய் புறக்கணிக்கப்படுகிறது, எதை அவர்கள் "கிரேட் இன்சல்ட்' என்கிறார்கள், எதில் "அட்ஜஸ்ட்' செய்யத் தயாராக இருக்கிறார்கள் என்பதெல்லாம் அவர்களுடன் இருக்கும் ஆசிரியர்களால்தான் நன்கு உணர முடியும். அதே நேரத்தில் அவர்களை அவமானப்படுத்தாமல், மனம் நோகாமல் தவறைச்சுட்டிக் காட்டும் உளவியல் அவர்களின் இன்றைய தேவையாக இருக்கிறது.

வகுப்பறை என்பது வெறுமனே கற்பித்தல் மட்டுமல்ல, அது ஒரு பழகு சூழல். அங்கு சக மாணவர்களுக்கு முன்பாகவும், பெற்றோருக்கு முன்பாகவும் எப்படி நாகரிகமாக நடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இன்றைய மாணவர்களிடம் இருக்கின்றன.

உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்குமே இது பற்றிய புத்தொளிப் பயிற்சி தருவதுடன், கல்வியியல் கல்லூரி பாடத்திட்டத்திலும் மாற்றங்களைச் செய்தால், மாணவர்- ஆசிரியர் இடையிலான ஆரோக்கியமான உறவுக்கு வழியேற்படும். வகுப்பறையில் நடக்கும் இந்தச் சம்பவங்களின் கசப்பும் இனிப்பும் சமூகத்திலும் பிரதிபலிக்கும் என்பதால் இது மிகவும் முக்கியம்.
நன்றி : தினமணி

1 comment:

ரோஸ்விக் said...

அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள். :-)