Tuesday, November 3, 2009

தலையங்கம்:இதுவல்ல கூட்டணி தர்மம்!

எந்த ஒரு கட்சிக்கோ, கூட்டணிக்கோ தனிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் யார் ஆட்சியமைப்பது, எப்படி ஆட்சி அமைப்பது என்கிற குழப்பம் ஏற்படுவதும், ஓர் ஆட்சி பதவி ஏற்பதில் தாமதம் ஏற்படுவதும் ஏற்புடையது. ஆனால், தேர்தலுக்கு முன்பு அமைந்த கூட்டணியாகக்கூட அல்ல, கடந்த பத்து ஆண்டுகள் தொடர்ந்து கூட்டணி ஆட்சியை வெற்றிகரமாக நடத்தி மக்களின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக வெற்றி பெற்ற பிறகும், மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் அரசு இன்னும் பதவி ஏற்காமல் இருப்பதை நினைத்து ஆச்சரியப்படுவதா இல்லை இது என்ன கூட்டணி என்று எள்ளி நகையாடுவதா என்று தெரியவில்லை.

கடந்த 2004 சட்டப்பேரவைத் தேர்தலில், கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இதே கூட்டணி ஒரு விசித்திரமான முடிவை எதிர்கொள்ள நேர்ந்தது. அதிக இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 69 இடங்களிலும், அதைவிடக் குறைந்த இடங்களில் போட்டியிட்ட தேசியவாத காங்கிரஸ் 70 இடங்களிலும் வெற்றி பெற்றபோது, நியாயமாக முதல்வர் பதவியைப் பெற்றிருக்க வேண்டிய தேசியவாத காங்கிரஸ் துணை முதல்வர் பதவியுடன் திருப்தி அடைந்து கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றியது.

இன்னும் சற்றுப் பின்னோக்கிச் சென்று 1999 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால், தேசியவாத காங்கிரஸ், தனது தாய்க் கட்சியுடனான மனமாச்சரியங்களை மறந்துவிட்டு, மதச்சார்பின்மை என்கிற ஒரே ஒரு காரணத்தை முன்னிட்டு கூட்டணி ஆட்சி அமைக்க முன்வந்தது. அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி மட்டும் சிவசேனையுடன் கைகோர்த்து ஆட்சி அமைத்திருந்தால், கடந்த பத்து ஆண்டுகள் மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பற்றி கனவே கண்டிருக்க முடியாது.

1999-ல் ஏறத்தாழ சமீபத்திய சட்டப்பேரவை முடிவுகளைப் போலத்தான் முடிவுகள் அமைந்திருந்தன. அப்போது, துணை முதல்வர் பதவி தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டதுடன், உள்துறை, நிதி மற்றும் மின்சாரம் ஆகிய முக்கிய துறைகளும் அந்தக் கட்சிக்குத் தரப்பட்டது. கடந்த 2004 தேர்தலுக்குப் பிறகு ஆட்சி அமைத்தபோதும் அதே நிலைமைதான் தொடர்ந்தது.

2009 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் கடந்த அக்டோபர் மாதம் 22-ம் தேதி வெளிவந்தபோது, காங்கிரஸ் கட்சியின் பலம் 82 ஆக உயர்ந்து, தேசியவாத காங்கிரஸ் 62 இடங்களில்தான் வெற்றி பெற்றிருந்தது. இதுதான் தருணம் என்று காங்கிரஸ் தனது "பெரிய அண்ணன்' தோரணையைக் காட்ட முற்பட்டிருப்பதுதான் பத்து நாள்கள் ஆகியும், தனிப்பெரும்பான்மை உறுதி செய்யப்பட்ட பிறகும் மகாராஷ்டிரத்தில் ஓர் ஆட்சி அமைக்க முடியாமல் இழுபறியாகத் தொடர்கிறது.

தேசியவாத காங்கிரஸ் நிலைப்பாடு தெளிவாக இருக்கிறது. 1999-ல் இருந்த அதே நிலைமை ஏறத்தாழ இப்போதும் நிலவுவதால், தேவையில்லாத மாற்றங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன என்பதுதான் அது. உதவி முதல்வர் பதவியுடன் உள்துறைப் பொறுப்பும் எந்தக் காரணம் கொண்டும் பேரம் பேசப்படக்கூடாது என்பதுதான் அந்தக் கட்சியின் தரப்பு வாதம்.

ஆனால், காங்கிரஸ் தரப்பு, இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்தி தேசியவாத காங்கிரûஸ மேலும் பலவீனப்படுத்துவது என்பதில்தான் குறியாக இருப்பதாகத் தெரிகிறது. சிவசேனை மற்றும் பாரதிய ஜனதாவுடன் எந்தக் காரணம் கொண்டும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைக்காது என்கிற தைரியம் காங்கிரஸ் தரப்புக்கு. மேலும், அடிப்படையில் மகாராஷ்டிரத்திலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் பெரும்பாலோர், தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத்பவாரின் தலைமையை ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பவர்கள்.

தனது எதிரிகள் கைகோர்த்துக் கொண்டு செயல்படுகிறார்கள் என்பதும், காங்கிரஸ் மேலிடமே தன்னை வேறு வழியில்லாமல்தான் சகித்துக் கொண்டிருக்கிறது என்பதும் அரசியல் சாணக்கியரான சரத்பவாருக்குத் தெரியாமலில்லை. அதனால்தான், அவர் எந்தவித பேச்சுவார்த்தையிலும் நேரிடையாகக் கலந்துகொள்ளாமல் தனது நம்பிக்கைக்குரிய சீடர்கள் மூலம் காயை நகர்த்தி வருகிறார்போலும்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் காங்கிரஸ் கட்சி விடுத்திருக்கும் இன்னொரு அஸ்திரம், உள்துறையை இரண்டாகப் பிரிப்பது என்பதும், 2004-ல் முதலமைச்சர் பதவிக்குப் பதிலாக அந்தக் கட்சிக்குக் காங்கிரஸ் அளித்த சுற்றுச்சூழல், தொழிலாளர் நலம் போன்ற துறைகளைத் திரும்பிப் பெறுவது என்பதும். தேசியவாத காங்கிரûஸ எவ்வளவு விரைவில் காங்கிரஸýடன் இணைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் இணைத்துவிட வேண்டும் என்பதும் காங்கிரஸ் கட்சியின் திட்டம்.

முதல்வர் உள்பட, மகாராஷ்டிர அமைச்சரவையின் அதிகபட்ச அளவு 43 அமைச்சர்களாகத்தான் இருக்க முடியும். அதனால் தேசியவாத காங்கிரஸின் கோரிக்கை 21:21 என்ற விகிதத்தில் அமைச்சரவையைப் பிரித்துக் கொண்டு, 43-வது இடம் முதல்வருக்கு ஒதுக்குவது என்பதாக இருக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ, 23 : 20 என்ற விகிதத்தில் அமைச்சரவை அமைவதுடன் தனக்கு உள்துறையும் கிடைக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது. விளைவு? முடிவுகள் வெளியாகிப் பத்து நாள்களாகியும் இன்னும் ஆட்சி அமைக்க முடியாமல் இழுபறி தொடர்கிறது.

எந்தவித சமரசமும் ஏற்படாத நிலையில், இனியும் பதவி ஏற்றுக்கொள்ளாமல் போனால் நகைப்புக்கு இடமாகிவிடும் என்பதால் முதல்வரும், துணை முதல்வரும் மட்டும் இன்று பதவி ஏற்றுக்கொள்ள இருக்கிறார்கள். அமைச்சரவை பற்றிய முடிவுகள் இன்னும் எத்தனை நாள்கள் இழுத்தடிக்குமோ யாருக்குத் தெரியும்?

சரத்பவாரின் மருமகன் அஜித்பவார் ஏற்கெனவே அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவருக்கு சுமார் 30 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவும் இருப்பதாகக் கூறுகிறார்கள். "பெரிய அண்ணன்' போக்கில் காங்கிரஸ் தொடர்ந்து நடந்தால், தேவ கௌடா பாணியில் சரத்பவாரும் அஜீத்பவாரை ஒரு குமாரசாமி ஆக்கிவிடாமல் இருக்க வேண்டும்.
நன்றி : தினமணி

No comments: