Tuesday, November 3, 2009

இனப்படுகொலையாவது ஒன்றாவது...

சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கையின் தென்பகுதியிலிருந்து ஓர் இளம்வயது நாடாளுமன்ற உறுப்பினர், மக்களை அரசு கொடுமைப்படுத்துவதைப் பார்த்துப் பொறுக்க முடியாமல், ஐ.நா.வில் புகார் கொடுக்க ஜெனீவாவுக்குக் கிளம்பினார். அந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம் ஜெனீவாவுக்குச் செல்ல விமானச் செலவுக்குக்கூட பணம் கிடையாது.

சிங்கள இளைஞர்களை டயரால் எரித்துக் கொன்று ஆறுகளில் வீசிய இலங்கை அரசை எதிர்த்து, உண்மையான கோபத்தில், ஐ.நா. சபையின் மக்கள் உரிமைக் கமிஷனிடம் புகார் செய்யக் கிளம்பிய அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஒரு நண்பர் பண உதவி செய்ய முன்வந்தார்.

அந்தப் பணத்தை வைத்து ஜெனீவாவுக்குச் சென்று, மக்கள் உரிமைக் கமிஷன் கட்டடத்தின் முன்வாயிலில் நின்றுகொண்டு அந்த வழியாகச் செல்லும் ஒவ்வொருவரிடமும் இலங்கையில் நடக்கும் அநியாயத்தைக் கூறினார். யாரும் முதலில் செவிமடுக்கவில்லை. அந்த இளம் எம்.பி.யின் பிடிவாதத்தால் கடைசியில் மக்கள் உரிமைக் கமிஷன் ஒரு சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி அந்த எம்.பி.யின் கருத்துகளைக் கேட்டது.

அப்படி லட்சியத்துடன் செயல்பட்ட எம்.பி. யார் தெரியுமா? இன்று இலங்கையின் அதிபராக ஐ.நா. மக்கள் உரிமைக் கமிஷனால் கண்டிக்கப்படுகிற சாட்சாத் மகிந்த ராஜபட்சதான். அவருடைய நண்பர்கள், இன்று மகிந்தாவிடம் எல்லா பழைய லட்சியங்களும் போய்விட்டன, அவருடைய மீசையையும் அவருடைய கழுத்தைச் சுற்றிய அங்கவஸ்திரத்தையும் தவிர என்கின்றனர்.

சில நாள்களுக்கு முன் வந்துள்ள செய்தியில் யுத்தத்திற்கான எல்லா சட்டதிட்டங்களையும் புறக்கணித்ததோடு தன் சொந்த நாட்டு மக்கள் போர் அபாயத்திலிருந்து ஒதுங்கி இருந்த இடங்களில்கூட தாக்குதல் நடத்திக் கொலை பாதகச் செயல்புரிந்த இலங்கை அரசு தண்டனைக்குரியதாக பல மேற்கத்திய நாடுகளாலும் கருதப்படுகிறதென்ற செய்தி வந்துள்ளது. யுத்தத்தால் படுகாயமுற்ற மக்களுக்குச் சிகிச்சை அளித்த மருத்துவமனைகளில் இலங்கை அரசு சுமார் 30 முறை தாக்குதல் தொடுத்தது என்று புள்ளிவிவரம் கூறுகிறது.

யுத்தம் நடந்த இடத்தில் தன் சொந்த நாட்டு நிருபர்களையோ வெளிநாட்டு நிருபர்களையோ இலங்கை அனுமதிக்காததால் சாட்சிகள் இல்லாத யுத்தமாக இது நடந்தது. இலங்கை அரசு கொடுக்கும் செய்தி மட்டும் தான் வெளியில் வந்தது. ஐ.நா.வின் பிரதிநிதிகளையோ, செஞ்சிலுவை சங்கப் பிரதிநிதிகளையோ, யுத்தம் நடந்த இடத்தில் அனுமதிக்கவில்லை என்பது அகில உலகத்திற்கும் இன்று தெரிந்துவிட்டது என்று துணிந்து எழுதியவர் "ஸன்டேலீடர்' என்ற ஆங்கிலப் பத்திரிகையின் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்க என்ற சிங்களவர். தனது அரசு தவறு செய்கிறது என்று கூறியதால் அவர் கொல்லப்பட்டார். உலகம் முழுவதும் திரண்டு இதற்குக் கண்டனம் தெரிவித்தது.

சமீபத்தில் திசைநாயகம் என்பவர் இலங்கை அரசின் நீதித்துறையால் 20 ஆண்டுகள் சிறை வைக்கப்பட்டுள்ளார். இதற்கு அமெரிக்க அதிபர் ஒபாமாவிலிருந்து அனைத்து உலகினரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு லட்சியவாதியாக இருந்த மகிந்த தான் இவ்வளவு கொடுமைகளுக்கும் தலைமை தாங்குபவர். அன்று அரசு ராட்சசனாக மாறிவிட்டது என அறிந்து நியாயம் கேட்கப் போன ஒரு மனிதர்தான் இன்று ராட்சசனாக மாறி தமிழ் மக்கள் என்ற ஒரே காரணத்துக்காக தனது நாட்டின் ஒரு பகுதியினரின் இனப்படுகொலைக்குக் காரணமானவர் என்று உலக நாடுகளால் குற்றம்சாட்டப்படுகிறார்.

எல்லாவற்றுக்கும் மேலாக சுமார் இரண்டரை லட்சம் மக்கள் தனிமைச்சிறையில் தனது குடும்பத்திலிருந்தும், பிள்ளைகள், ஊரார் உற்றாரிடமிருந்தும் பிரிக்கப்பட்டுக் கம்பி வேலிகள் இட்ட சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஏன் அவர்களை முகாம்களிலிருந்து விடுதலை செய்யவில்லை என்று உலகினர் கேட்டபோது, யுத்தம் நடந்ததால் பூமி எங்கும் கண்ணி வெடிகள் உள்ளன என்ற பதிலைக் கொடுத்த இலங்கை அரசு, சமீபத்தில் 50 ஆயிரம் மக்களை விடுதலை செய்யப் போகிறோம் என்றது. அப்படி என்றால் கண்ணி வெடிகளால் தான் தமிழ் மக்களைச் சிறை வைத்துள்ளோம் என்ற வாதம் தவறுதானே! பொய்தானே! உலகையும் உலகத் தமிழ் மக்களையும் ஏமாற்றுவதற்காகக் கூறிய பொய்க்காரணம் தானே!

இலங்கையின் அரசியலோடு இந்தியாவின் ஒரு பகுதியின் அரசியல் பின்னிப் பிணைந்தது தமிழ்மொழியால். இந்த அடையாளம் இன்றைய தமிழ்ச் சந்ததியினரின் மூதாதையரால் கட்டமைக்கப்பட்டது.

தமிழர்கள் ஒரு வரலாற்று நியதியின் பாற்பட்டவர்கள். இந்த வரலாற்று நியதி இன்று சிதற ஆரம்பித்துள்ளது. பாரதி, பிஜி தமிழர்களுக்காகப் புலம்பியதும், பாரதிதாசன், தென்னாசியத் தமிழர்களுக்காகப் புலம்பித் தீர்த்ததும் இந்த நியதியில் விழுந்த அடியை உணர்ந்ததால்தான்.

சமீபத்தில் தமிழ் மக்களில் சுமார் 50,000 பேர் நம் எல்லோரின் கண்முன் செத்து மடிந்தது வரலாறு. இது சாதாரணம் என இன்று நினைத்துள்ளவர்கள் கணிப்பு தவறு. சுமார் 20 பேர் புரிந்த தற்கொலை ஏதோ ஒன்றுக்கான அறிகுறி. தமிழ் மக்களை இனி இந்தியா கவனிக்காது என்ற உற்பாதங்கள் தோன்றத் தொடங்கிவிட்டன.

இலங்கையில் நடந்த இன அழிப்பு, மேற்கத்திய நாடுகளை உலுக்கிய அளவுக்கு இந்தியாவை உலுக்கவில்லை. மேற்கத்திய நாடுகளை உலுக்கியதால் இலங்கையில் மனித உரிமை மீறல் நடக்கிறது என்று கூறி அனைத்துலக நிதியம், இலங்கை கேட்ட சுமார் 2.6 பில்லியன் டாலர் பணத்தை உடனே கொடுக்கவில்லை.

ஜெர்மனியும் ஆர்ஜென்டினாவும் இலங்கை அரசின் செயல்பாடுகள் சரியில்லை என்று கூறி பணம் கொடுக்கும் முடிவை எடுக்கும் கூட்டத்தில் பங்கெடுக்கவில்லை. சில மாதங்களுக்குப் பிறகுதான் 2009 ஜூன் மாதம் இப் பணம் இலங்கை அரசுக்குக் கொடுக்கப்பட்டது.

இந்தியாவும் சீனாவும் எதிரி நாடுகளானாலும் இரண்டையும் நடத்த வேண்டிய முறையில் நடத்த இலங்கைக்குத் தெரிகிறது. இலங்கை அரசுக்கு இந்தியாவும் சீனாவும் வேண்டிய அளவு உதவி செய்ததுபோலவே பாகிஸ்தான் (நூறு மில்லியன் டாலர்) ஈரான் (450 மில்லியன் டாலர்) லிபியா (500 மில்லியன் டாலர்) மனித உரிமையற்ற ராணுவ ஆட்சி நடைபெறும் பர்மா (50,000 டாலர்) ஆகியன பல்வேறு முறையில் உதவுகின்றன; அல்லது உதவ முன்வந்துள்ளன.

மலேசியாபோல எந்த இன அடையாளத்தையும் அங்கீகரிக்காத நாடாக இலங்கை தன்னை உருவமைக்க நினைக்கிற சூழலில் ஒரு பெரிய அடி சமீபத்தில் இலங்கைக்கு விழுந்திருக்கிறது. தமிழர்களைச் சித்திரவதை செய்து வருகிற இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் என்று அழைக்கப்படும் வியாபார ஒப்பந்தம் மூலம் இந்தப் பேரிடி விழுந்துள்ளது. அதாவது 2005-ம் ஆண்டிலிருந்து சுங்கவரி இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு இலங்கை, துணிகளை ஏற்றுமதி செய்து வந்தது. சுமார் ஒரு லட்சம் இலங்கை மக்கள் ஈடுபட்டிருக்கும் இந்த துணி ஏற்றுமதியில் சுமார் ஆயிரம் மில்லியன் யூரோ அளவு வியாபாரம் நடக்கிறது. இலங்கையின் கைகளில் தமிழ் மக்களின் ரத்தம் தோய்ந்திருப்பதால் இந்த வியாபார உடன்படிக்கையைப் பற்றி யோசிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறுகிறது.

இதற்காக ஐ.நா.வின் மக்கள் உரிமைக் கமிஷனர் நவநீதம்பிள்ளை இலங்கை அரசு ஓர் உண்மையறியும் குழுவை நியமித்தால் போதும் எனக் கூறுகிறார். ஆனால் அதற்கு உடன்பட இலங்கை மறுக்கிறது. இந்தியா இலங்கையை அது எது செய்தாலும் ஆதரிப்பது என்று கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறதுபோலும்.

அதாவது ஐ.எம்.எப். நிறுவனம் 2.6 பில்லியன் டாலர் பணத்தைக் கொடுக்காவிடில் இந்தியா அந்தப் பணத்தை இலங்கைக்குக் கொடுக்கும் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். இச்செய்தி ஓர் ஆங்கில நாளிதழில் (அக்.22. 2009) வந்துள்ளது. இலங்கையின் துணை நிதியமைச்சர் சரத் அமுனுகாமா என்பவர் இலங்கை நாடாளுமன்றத்தில் இச்செய்தியை உறுதியும் செய்திருக்கிறார்.

இப்போது நமக்குத் தெரிகிறது, நமது இந்தியா ஒரு பணக்கார நாடு என்று. நம் அரசு பணத்தில் மிதக்கிறது என்று. நம் நாட்டில் ஏழை விவசாயிகள் வாழ வழியின்றி தற்கொலை செய்வதில்லை என்பதெல்லாம் இப்போதுதான் தெரிகிறது.

இனி தமிழர்களை வதைக்காதே என்று எங்கோ இருக்கிற வெள்ளைக்கார ஐரோப்பிய நாடுகள் எச்சரிக்கையாகக்கூட வியாபாரத் தடையை ஏற்படுத்த முடியாது. பணக்கார இந்தியா இருக்கவே இருக்கிறது, பண உதவி செய்ய!

இலங்கை அரசு இனி யாருக்கும் பயப்படத் தேவையில்லை. முள்கம்பிவேலி முகாம்களில் மக்கள் அடைக்கப்பட்ட செயல் இலங்கைக்கு ஏற்படுத்திய அபகீர்த்தியைப் போக்க ராஜபட்ச அவருடைய தமிழக நண்பருக்குக் கடிதம் எழுதித் தீர்த்துக் கொண்டார். தமிழக நண்பர், பத்துப் பேர் அடங்கிய எம்.பி.க்கள் குழுவை அனுப்பி ஐரோப்பியர்களின் கவனத்தைச் சின்னாபின்னப்படுத்தியுள்ளனர். நாங்களே குறை சொல்லாதபோது ஐரோப்பியனே உனக்கென்ன கவலை?

மக்கள் உரிமை, "ஜீனோûஸட்' என்னும் இனப்படுகொலை, தமிழ் மக்களின் உரிமை என்பதெல்லாம் ஐரோப்பியர்கள் நேரம் போகாததால் கண்டுபிடித்த விஷயங்கள்!

நெஞ்சு பொறுக்குதில்லையே...!

(கட்டுரையாளர்:தமிழவன்
போலந்து நாட்டு வார்ஸô பல்கலைக்கழக ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியர்).
நன்றி : தினமணி


No comments: