Monday, November 23, 2009

நெடுந்தொடர்களா? கொடுந்தொடர்களா?

இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழில், கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பாய், நல்லார்க்கும் பொல்லார்க்கும் நலமளிக்கும் நலமாய், வல்லார்க்கும் அல்லார்க்கும் வரமளிக்கும் வரமாய், எல்லார்க்கும் எளிதாகப் புரிகின்ற கலையாய் விளங்குவதுதான் நாடகத்தமிழ்.

நாட்டு மக்களைக் கவர்ந்த நாடகங்கள் பலவற்றை அரங்கேற்றிப் புகழ்பெற்ற டி.கே. சண்முகம் சகோதரர்கள், சங்கரதாஸ் சுவாமிகள் போன்றோர் பெரிதும் பாராட்டுக்குரியவர்கள். விருதுபெற்ற சிறந்தபல திரைப்படங்கள், பல நூறுமுறை மேடையில் கோடை மழையாய்க் குளிர்வித்தவைதாம்.

இன்றும் திரைப்படமாக எடுக்கத் தயங்குகிற கல்கியின் “சிவகாமியின் சபதம்’ என்கிற சரித்திர நாவலை டி.கே. சண்முகம் மேடை நாடகமாக்கிக் காண்பவரை வரலாற்றுக் காலத்துக்கே அழைத்துச் சென்று வியப்பில் ஆழ்த்தினார். நாடகக்கலைக்கு அது ஒரு பொற்காலம்.

நாடகத்தமிழ் இன்று சின்னத்திரையில் சிறைப்பட்டுப் போயிற்று. நெடுந்தொடர்கள் என்கிற பெயரில் அவை கொண்டுள்ள கோலங்கள் கொஞ்சநஞ்சமல்லை. மக்கள் மனத்தை எளிதாகக் கவர்கின்ற ஊடகமாகச் சின்னத்திரையே சிறந்து விளங்குகிறது. தமிழர்களின் பண்பாட்டு வளர்ச்சியை, ஒப்பற்ற குறிக்கோள்களை, முன்னேற்றும் தன்னம்பிக்கையை, மனத்தை விரிவாக்கும் புதியபுதிய சிந்தனைகளை, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் நெறியை குடும்ப பாசத்தை, உறவுகளை வளர்த்தெடுக்கும் உன்னதத்தை நெஞ்சங்களில் எளிதாகப் பதியவைப்பதற்கு மற்ற நிகழ்ச்சிகளைவிட நெடுந்தொடர்களுக்கு வாய்ப்புகள் அதிகம்.

நூல்கள் இல்லாத இல்லங்கள் உண்டு. ஆனால், தொலைக்காட்சிப் பெட்டிகள் இல்லாத இல்லங்கள் இல்லை. உழைத்துக் களைத்து வீட்டுக்கு வருபவரின் அறிவுப் பசிக்குத் தீனிபோடவும், உணர்ச்சிகளைச் செம்மைப்படுத்தவும் தொடர்களால் இயலும். ரஸ்கின் எழுதிய “கடையனுக்கும் கடைத்தேற்றம்’ என்ற ஒரு நூல் காந்தியடிகளின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது என்றால், நெடுந்தொடர்களால் முடியாதா என்ன?

ஆனால், இன்று நெடுந்தொடர்களின் போக்கு அவ்வாறு இல்லையே. வேறு வழியின்றிப் பார்த்தாக வேண்டியிருக்கிறது.

தமிழ்த் தொலைக்காட்சி தொடங்கிய புதிதில் வந்த பல தொடர்கள் நெஞ்சை நிறைத்த அருமையுடையவை. இன்று வருபவையோ நஞ்சை விதைப்பவை. பல இல்லங்களில் பிரச்னைகளை உருவாக்குபவையே நெடுந்தொடர்கள் தாம்.

பத்துக்கும் மேற்பட்ட அலைவரிசைகளில் விதவிதமான தொடர்கள். தாய்க்கு ஒரு தொடரைக் காண ஆசை. பிள்ளைகளுக்கோ வேறு ஒரு தொடரைக் காண விருப்பம். பலஇல்லத்தரசிகள் வீட்டுவேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டுத் தொடர்களுக்குள் மூழ்கிப் போகிறார்கள். அடுப்பில் வேகும் உணவு அடிப்பிடித்த பிறகுதான் பலருக்கு நினைவே வருகிறது.

தொடர்களின் மையப் பொருள்கள் பெரும்பாலும் பெண்களே. பெண்ணின் பெருமையை விளக்க அன்று; இயற்கையான அவர்களின் பலவீனங்களைக் கொச்சைப்படுத்திக் காட்டும் காட்சிகள்தாம். பொறாமையின் வடிவமாய்ச் சில பெண்கள்; கொடுமைக்காரிகளாய்ப் பல பெண்கள். பழிவாங்கும் அரக்கிகள் உருவில் பல பெண்கள்; அரிவாளை ஏந்திக் கொலைசெய்யத் துடிக்கும் சிலபெண்கள். ஏற்கெனவே திருமணமானவன் என்று தெரிந்தும் அவனை வளைத்துக்கொள்ள எண்ணும் பெண்கள்; வஞ்சனை, சூது, நம்பிக்கைத் துரோகம் முதலிய வக்கிர எண்ணங்களின் வடிவமாகவே பெண்கள் சித்திரிக்கப்படும் கொடுமைகள் தொடர்கின்றன. இதில் என்ன வேதனையென்றால் பெண்களே இந்தத் தொடர்களை மெய்மறந்து ரசிப்பதுதான்.

மாமியார் மருமகள் என்றால் கீரியும் பாம்புமாகத்தான் இருப்பார்களா? எத்தனையோ இல்லங்களில் மாமியாரைத் தாயாகக் கருதும் மருமகளும், மருமகளைத் தன் பெண்ணாகக் கொண்டாடும் மாமியார்களும் வாழ்கிறார்கள். பழங்கதையை மாற்றக்கூடாதா? “மாற்றம் என்பது மானிடத் தத்துவம்’ என்பார் கவிஞர் கண்ணதாசன்.

“அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்’ என்பார் பாரதிதாசன். நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, திமிர்ந்த ஞானச்செருக்கு பெண்கட்கு வேண்டும்’ என்று சிந்துக்குத் தந்தை பாரதி பாடுவார். இன்று மகளிர் தகவல் தொழில்நுட்பத் துறையில் மிகத்திறமை பெற்றுத் தனியே வெளிநாடுசென்று உயர்ந்த லட்சியத்துடன் லட்சங்களையும் தேடி வருகிறார்கள்.

தொடர்களின் கதையம்சம் பற்றிப் பார்த்தால் கதைக்கருவே சிதைந்து போய்க்கிடக்கிறது. கதைப்பஞ்சம் வந்துவிட்டதா என்ன? வாழமுயல்பவனுக்கு மற்றொருவன் தான் தீயவனாக (வில்லன்) வரவேண்டுமா? மழை, வெள்ளம், புயல், இலங்கைவாழ் தமிழர்கள் துயர் போன்ற சூழ்நிலைகள் தடையாக வராதா? அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருந்தால் அலுப்புத் தட்டாதா?

தொடர்களின் தலைப்புகள், வெளிப்புறக் காட்சிகள், வீடுகளின் தோற்றங்கள், தொழில்நுட்பங்கள், ஜொலிக்கும் நட்சத்திரங்கள் ஆகியன கண்ணுக்கு விருந்து தருகின்றன. இவையெல்லாம் பாராட்டுக்குரியவை.

தமிழில் ஏராளமான சிறுகதைகள் வெளிவந்துள்ளன. சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து, ஒரு நாளைக்கு ஒன்றாகவோ, வாரத்துக்கு ஒன்றைத் தொடராகவோ ஒளிபரப்பலாகாதா? நாட்டில் நடப்பதையும் மக்கள் விரும்புவதையும் தானே தொடர்களில் காட்டுகிறோம்’ என்பார்கள். நேயர்கள் விரும்புவதற்குமேல் தேவை எவையோ மாண்புகள் பெற வேண்டியவை எவையோ அவற்றைக் கருவாக அமைத்தால் தொடர்கள் உருப்படும். சமூகக் கண்ணோட்டத்துடன் பொறுப்புணர்ந்து படைக்காதபோது வெறுப்பும் மறுப்பும் தான் தோன்றும்.

தொடர்களை ஐந்தாண்டுகள், பத்தாண்டுகள் என்று இழுத்துக் கொண்டு போவதால் மட்டும் அவை வெற்றிப்படைப்புகள் ஆகிவிடுமா? நெடுந்தொடர்கள் கொடுந்தொடர்களாக இருக்கின்றனவே, இதற்கு யார் எப்போது முற்றுப்புள்ளி வைக்கப்போகிறார்கள்?
கட்டுரையாளர் : சு. சுப்புராமன்
நன்றி :தினமணி

2 comments:

ஸ்ரீதர் said...

ஓய்வின்றி உழைத்த காலம் போய்
உழைப்பில் சிறிது ஓய்வெடுத்ததும்
உழைத்து முடிந்து ஓய்வெடுத்ததும்
டிவி தொடர்களை பார்காதவரைதான்.
வயோதிக காலத்தில் இதிகாச புராணம்
படிக்காமல் கொடுந்தொடர்களை பார்த்து தன்னையும் அதுவாக பாவித்து
சுயபட்சாதாபம் கொண்டு அடுத்த தலைமுறையினறையும் வீனடிக்கும் கும்பல், உழைப்பின்றி ஓய்வெடுத்து டிவி தொடர்களை பார்த்து இதிகாச புராண தர்மங்களை மறந்து நேரத்தை
வீனடிக்கும் கும்பலுக்கு மனதுக்கு
ஆத்ம திருப்தி ஏது?

பாரதி said...

silkworm வருகைக்கு நன்றி