கல்வித்துறையில் அவசரமாகச் சீர்திருத்தம் செய்து முன்னேற்றம் ஏற்படாவிட்டால், இந்தியா தனது பொருளாதார முன்னேற்றத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது எனும் உண்மையை நோபல் பரிசுபெற்ற இந்தியா வம்சாவளி அறிஞர் அமார்த்தியா சென் கூறியுள்ளார்.
மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில்சிபல் தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரையில் பல சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் கல்வியில் இந்தியாவுக்கே வழிகாட்டி மாநிலம் என இருந்த நிலைமை மாறி மிகவும் மோசமான நிலைமைக்கு கல்வித்துறை போய்விட்டது. உயர்கல்வியில் நாம் எவ்வளவு பின்தங்கியுள்ளோம் என்பதை முழுமையாக அறிந்தும், எப்படி இந்தத் துறையை முன்னேற்றலாம் என்கிற சிறிய முயற்சிகூட நமது அரசால் செய்யப்படாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்பிஏ பாடத்திட்டத்தை வாங்கிப் படித்துப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது. மேலை நாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் எம்பிஏ மாணவர்கள் இரண்டு செமஸ்டர்களில் சுமார் 6 மாதங்களில், படிக்கும் அளவுக்கான பாடங்களை நம்மவர்கள் 2 ஆண்டுகள் கற்கிறார்கள் என்ற கசப்பான உண்மையும் பெருவாரியான பாடங்கள் எண்பதுகளில் அமெரிக்காவில் எம்பிஏ படித்தவர்கள் கற்ற பழமையான பாடத்திட்டம் என்பதும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கின.
மேலும் சென்னை பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒருவருடன் இதுபற்றி விவாதித்தபோது, ""இது எவ்வளவோ பரவாயில்லை. தமிழகத்தின் மற்ற பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்கள் இதைவிடக் குறைந்த அளவும் தரமும் உடையன'' என்று அவர் குறிப்பிட்டபோது திகைப்பதா சிரிப்பதா என்று தெரியவில்லை.
சுமார் 30 மாணவர்கள் அடங்கிய எம்பிஏ வகுப்புக்குச் சென்று அங்கே பயிலும் மாணவர்களின் பட்டப்படிப்பு பற்றிக் கேட்டபோது, அவர்கள் எல்லோருமே தமிழைப் பயிற்றுமொழியாகக் கொண்டு படித்துப் பட்டம் பெற்றவர்கள். இப்போது ஆங்கிலப் பயிற்றுமொழியில் எம்பிஏ பாடங்களைக் கற்க வேண்டும். சரியான முறையில் ஆங்கிலம் தெரியாமல் மாணவர்கள் ஆங்கிலச் சொற்பொழிவுகளைப் புரிந்து கொள்ள முடியாமல் திணறுகிறார்கள். நிச்சயமாக அவர்களால் ஆங்கிலப் பாடப்புத்தகங்களைப் படித்துப் புரிந்து கொள்ள முடியாது.
எம்பிஏ பட்டப்படிப்பில் ""ஆர்கனைஷேசனல் பிஹேவியர்'' அதாவது, நிறுவனங்களின் நடைமுறைகள் என்பது ஒரு பாடம். அதைப்பற்றி விளக்க முயற்சிக்கும்போது, அந்த இரண்டு ஆங்கிலச் சொற்களுக்கும் மாணவர்களுக்கு அர்த்தம் புரியவில்லை. ஆக, ஆங்கிலம் புரியாத மாணவர்கள் கஷ்டப்பட்டு பாடங்களை மனப்பாடம் செய்து தேர்வு எழுதிப் பட்டம் பெற்று வேலையிலும் சேர்ந்துவிடுகிறார்கள். இவர்களால் எப்படித் தங்கள் வேலையைத் திறமையுடன் செய்ய முடியும்? உயர்கல்வியில் தமிழ் பயிற்றுமொழி ஆனதன் பலன்தான் இது!
சமீபகாலத்தில் "நாஸ்காம்' எனும் அகில இந்திய கம்ப்யூட்டர் கட்டமைப்பு, மெக்கின்ஸி என்னும் சர்வதேச அமைப்புடன் சேர்ந்து நடத்திய ஆய்வின்படி இந்தியாவில் எம்.ஏ., எம்.எஸ்சி., பட்டம் பெற்றவர்களில் பத்தில் ஒரு மாணவரும், பொறியியல் பட்டம் பெற்ற நான்கில் ஒரு மாணவரும் தான் வேலை செய்யத் தகுதியானவர்களாக இருக்கிறார்கள். மற்றவர்கள் தங்களது படிப்புக்கு ஏற்ற வேலையில் திறம்படப் பணியாற்றும் சக்தியற்றவர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நம் நாட்டில் உயர்கல்வி தரம்தாழ்ந்துள்ள நிலையிலும் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது மேலும் பல சிக்கல்களை உருவாக்கலாம். இந்தியாவின் பல்கலைக்கழகங்கள் சராசரியாக பத்தாண்டுகளுக்கு ஒரு முறைதான் பாடத்திட்டங்களை பரிசீலனை செய்து, அதிகாரத்துடன் கூடிய புதிய பாடத்திட்டங்களை உருவாக்குகின்றன என தேசிய உயர்கல்விக்குழு தெரிவிக்கிறது. அவர்களின் கருத்தாய்வின்படி நம்நாட்டின் 90 சதவீதக் கல்லூரிகளில், 70 சதவீதப் பல்கலைக்கழகங்களும் மிக மோசமான தரத்தில் கல்வியைப் போதிக்கின்றன.
கடந்த 5 ஆண்டுகளில் முந்தைய மத்திய அரசின் ஊழல் மிகுந்த கல்வி நிர்வாகம், லஞ்ச லாவண்யங்களில் திளைத்து, தகுதியில்லாத வகையில் நிறைய தனியார் கல்லூரிகளுக்கு சுயாட்சிப் பல்கலைக்கழகங்கள் எனும் தகுதியை வழங்கிவிட்டது. நாடு சுதந்திரம் பெற்ற பின் 50 ஆண்டுகளில் 44 தனியார் சுயாட்சிப் பல்கலைக்கழகங்கள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக அர்ஜுன் சிங் பதவிவகித்த 5 ஆண்டுகளில் 49 தனியார் கல்வி நிலையங்கள் சுயாட்சித் தகுதி பெற்றன.
சுயாட்சி வழங்குமுன்னர் மத்திய அரசின் அங்கீகரிப்புத்துறை அதிகாரிகள் தனியார் கல்லூரிகளை தணிக்கைக்காகப் பார்வையிட வரும்போது கையூட்டுப்பெற்றுக் கொள்வதும் பின் தலைநகர் தில்லியில் நிறைய இடைத்தரகர்கள் அமைச்சர் வரை சிபாரிசு செய்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றுக்கொண்டும்தான் தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளன. வியாபார நோக்கில் நடத்தப்படும் தனியார் சுயாட்சி பல்கலைக்கழகங்களால் இதுபோல் அதிகமான பணத்தைச் செலவுசெய்து கல்லூரியை அமைக்க நிலங்கள், பெரிய கட்டடங்கள் மற்றைய தளவாடச் சாமான்கள் ஆகியவற்றுக்குச் செலவும் செய்துவிட்டு தாங்கள் போட்ட பணத்துக்கு ஏற்ப வருமானத்தைப் பெற முடிவதில்லை.
விளைவு, மிக அதிகமான கல்விக்கட்டணத்தை மாணவர்களிடம் வசூலிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தனியார் கல்வி நிறுவனங்கள் தள்ளப்படுகின்றன. குறிப்பிட்ட தொகைக்கு மேல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என மாநில அரசின் கெடுபிடி. வேறு வழியில்லாமல், கட்டணம் என்கிற பெயரில் ரசீது போட்டு வசூலிக்கும் சரியான தொகை ஒருபுறம் இருக்க, அதற்குமேல் கணக்கில் காட்டப்படாமல் பல்வேறு இனங்களில் வெவ்வேறு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. அனுமதிக்கப்பட்டதைவிட அதிகமான கல்விக் கட்டணத்தை இதுபோன்ற சுயாட்சி பெற்ற கல்வி நிறுவனங்கள் வெளிப்படையாகச் சொல்லாமல் மறைமுகமாக வசூல் செய்கின்றன. நடவடிக்கை எடுக்காமல் இருக்க மாநில அரசின் உயர்கல்வித் துறைக்கும் கப்பம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறைக்கும் கப்பம். கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் கவனிக்கப்பட்டு விடுகிறார்கள்.
இவை எல்லாவற்றையும்விட மிகவும் வேதனைதரும் விஷயம் உயர்கல்வி எதிர்கொள்ளும் ஆசிரியர் பற்றாக்குறை. ஆசிரியர்கள் அதிகம் தேவை என்பதால் அவர்கள் கேட்கும் சம்பளம் அதிகமாகிறது.
புதிதாக ஒரு தனியார் பொறியியற் கல்லூரி அல்லது உயர்கல்விக் கல்லூரி தொடங்கப்படும் வேளையில் மத்திய அரசின் யுசிஜி அனுமதி கிடைக்க குறிப்பிட்ட எண்ணிக்கையில் உயர்கல்விப் பட்டங்கள் உடைய அனுபவமிக்க ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். உதாரணமாக, ஒரு பொறியியல் கல்லூரி தொடங்க அதன் முதல்வர் வேலைக்கு பி.ஹெச்டி. பட்டம் பெற்ற கல்லூரி முதல்வர் பணியமர்த்தப்பட வேண்டும்.
இதுபோன்ற பட்டம் பெற்று உயர்கல்வி ஆசிரியர்களின் அனுபவம் உள்ளவர்கள் நிறையப்பேர் இல்லையென்பதால் மத்திய யுசிஜி அனுப்பும் தணிக்கைக்குழு புதிய கல்லூரியைப் பார்வையிட வரும்போது, ஏற்கெனவே ஒரு கல்லூரியில் முதல்வராக வேலையில் இருக்கும் ஒருவரை, தணிக்கை செய்யப்பட இருக்கும் கல்லூரியின் முதல்வராக வேலை செய்வதாகப் போலி தாக்கீதுகளை உருவாக்கி அவரையும் ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து தணிக்கை நாளில் தொடங்கப்பட இருக்கும் கல்லூரி வளாகத்தில் இருக்கச் செய்து தணிக்கையை வெற்றிகரமாகப் பல கல்லூரிகள் நடத்தி முடித்து விடுகின்றன.
அனுமதி பெற்றபின் முன் அனுபவம் இல்லாத புதுப் பட்டதாரிகளையும் அல்லது பணியில் இருந்து ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர்களையும் கல்லூரியில் விரிவுரையாளர்களாக அமர்த்தி இதுபோன்ற கல்லூரிகள் நடத்தப்படுகின்றன. எனவே, தரமான கல்வி என்பதற்கு அர்த்தமே இல்லாமல் போய்விடுகிறது.
ஆரம்ப காலங்களில் அரசுக் கல்லூரிகளை அதிகம் தொடங்கி நடத்த பட்ஜெட்டில் பணம் இல்லை என்பதால், கல்வியை தனியார் மயமாக்க வேண்டிய கட்டாயம் நம்நாட்டில் உருவானது. பின் வியாபார நோக்கத்தில் நடத்தப்படும் இக் கல்லூரிகள் லஞ்ச லாவண்ய சூழ்நிலைகளால் சரியானபடி கல்வி போதனையில் கவனம் செலுத்தச் செய்ய முடியாத சூழ்நிலை.
தரமற்ற கல்வியைப் பெறும் அதிக மாணவர்கள் சமூகத்தின் அடித்தட்டில் இருந்து வருபவர்களே! வசதி படைத்தவர்கள் நம் நாட்டில் கல்வி நிலையங்களிலோ அல்லது வெளிநாட்டின் பல்கலைக்கழகங்களிலோ சேர்ந்து பட்டம் பெற்று விடுகிறார்கள். வெளிநாட்டில் சென்று பட்டம் பெறும் இந்திய மாணவர்கள் ஆண்டுக்குச் செய்யும் செலவு மட்டும் ரூ. 35,000 கோடி என ரிசர்வ் வங்கியின் கணக்கு கூறுகிறது. இவர்கள் நிச்சயமாக அடித்தட்டு மாணவர்களாக இருக்க வழியில்லை.
பள்ளிக் கல்வியின் தரம்தாழ்ந்த நிலையில் நம் பொருளாதாரத்துக்குத் தேவையான தொழிலாளர்கள் கிடைக்கமாட்டார்கள் என்பதும், உயர்கல்வித்தரம் பாதிக்கப்பட்டால் ""அறிவார்ந்த சமூகம்'' உருவாகாது என்பதும் ஆராச்சியாளர்களின் சித்தாந்தம். அதாவது பள்ளிக்கல்வி, ஐடிஐ எனப்படும் தொழிற்கல்வி, பி.ஏ., பி.காம்., போன்ற பட்டப்படிப்புகளில் தேறியவர்களே நமது பொருளாதார உற்பத்தி அங்கமான தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பல தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் வேலைக்குச் சேர்ந்து உற்பத்தியைப் பெருக்க முடியும். கல்வி வளர்ச்சியில் முன்னேறாத பல நாடுகளுக்குக் கேரளத்திலிருந்து வேலைக்குச் செல்பவர்களை நினைவில் கொள்க.
அதுபோல, தரமான உயர்கல்வியில் உருவாகும் பட்டதாரிகள் தான் அரசு மற்றும் தனியார் நிறுவன உயரதிகார வேலையில் சேர முடியும். இவர்கள்தான் உயர்கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்களாகப் பணியாற்றப் போகிறவர்கள்.
இதுபோன்றவர்கள் உருவாக்கும் அறிவார்ந்த சமூகம் இனி வரும் காலங்களில் ஒரு நாடு முன்னேறுமா இல்லையா என்பதை முடிவு செய்யும். ""இனி உலக அரங்கில் ஏழை பணக்கார நாடுகள்' என்பதைவிட அறிவாற்றல்மிக்க, அறிவற்ற நாடுகள் என்கிற பாகுபாடுதான் செய்யப்படும். அதாவது பெரிய அளவில் தொழிற்சாலைகள் வியாபாரங்கள் உள்ளநாடு என்பதைவிட நிறைய அறிவார்ந்த மக்களைக் கொண்ட நாடுகள்தான் பணக்கார நாடாக அமையும்'' என்றார் பீட்டர் ட்ரக்கர் என்னும் மேதை.
தரமான உயர்கல்விதான் ஆராய்ச்சிக்கு அடிப்படை. இதுபோன்ற ஆராய்ச்சியில் உருவாகும் புதிய கண்டுபிடிப்புகள் உலகெங்கிலும் விற்பனை செய்யப்பட்டு வெளிநாட்டுப் பணம் தரமான அறிவுசார்ந்த சமூக அமைப்புடைய நாடுகளுக்குச் சென்றுவிடும் என்ற அடிப்படையில் இந்தியா தற்காலத்தில் பின்னேறி வருகிறது என்பதுதான் அதிர்ச்சி அளிக்கும் உண்மை.
நம்நாட்டின் இளைஞர்களில் 11 சதவீதத்தினர்தான் கல்லூரிப் படிப்புக்குச் செல்ல முடிகிறது. அமெரிக்காவில் 83 சதவீதம் இளைஞர்கள் கல்லூரிப் படிப்பில் சேர்கிறார்கள்.
2012-ம் ஆண்டு 11 சதவீதம் இந்திய இளைஞர்கள் கல்லூரியில் சேருவதை 15 சதவீதமாக அதிகரிக்க நம்நாட்டில் மேலும் 1500 பல்கலைக்கழகங்கள் தோன்ற வேண்டும். இன்றைய கணக்குப்படி நம்நாட்டில் 300 பல்கலைக்கழகங்கள் உள்ளன. அதிக எண்ணிக்கையில் மாணவர்களைச் சேர்ப்பது என்பது வேறு. அவ்வாறு சேர்ந்த மாணவர்களுக்குத் தரமான உயர்கல்வியை அளிப்பது என்பது முற்றிலும் வேறு.
தற்போதைய 11 சதவீதம் 2012-ம் ஆண்டு 15 சதவீதமாக உயர்கல்வி மாணவர் சேர்க்கையாக உயர ரூ. 2 லட்சத்து 26 ஆயிரத்து 410 கோடி தேவை எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால், மத்திய அரசின் 11-வது வளர்ச்சித் திட்டத்தில் உயர்கல்விக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.77 ஆயிரத்து 933 கோடி மட்டுமே.
இலவசங்களைவிட மிக முக்கியமானது உயர்கல்வி என்பது திண்ணம். விழித்துக் கொள்ளுமா மத்திய, மாநில அரசுகள்?
கட்டுரையாளர் : என். முருகன்
நன்றி : தினமணி
Monday, November 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment