Thursday, October 22, 2009

அம்பானி சகோதரர்கள் பிரச்னையால் பங்குச் சந்தையில் தள்ளாட்டம்

பங்குச் சந்தையில் கடந்த சனியன்று தீபாவளி வர்த்தகம் துவங்கியது. அன்றைய தினம் நடந்த வர்த்தகத்தில் சந்தை லாபமும் இல்லாமல் நஷ்டமும் இல்லாமல் முடிந்தது. திங்களன்று சந்தைக்கு விடுமுறை. ஆனால் நேற்று முன்தினம், அம்பானி சகோதரர்களின் பிரச்னைக்கு கோர்ட் என்ன தீர்ப்பு வழங்கப் போகிறதோ என்ற பயத்திலேயே சந்தை சரிந்தது.
நேற்றும் சந்தை ஒரு பெரிய சரிவை சந்தித்தது. நேற்று சந்தை ஏன் சரிந்தது? உலகளவிலும், ஆசிய அளவிலும் சந்தைகள் கீழேயே இருந்ததால், இந்தியாவிலும் அதன் எதிரொலி இருந்தது. இது தவிர ரிலையன்ஸ் பிரச்னையும் ஒரு காரணம். மேலும், வங்கிகள் கடன் களுக்கு வாங்கும் வட்டி விகிதங்களில், ரிசர்வ் வங்கி மாற்றம் கொண்டு வரும் என்ற செய்தி சந்தைக்கு வந்ததால், அது வங்கிகளிடையே போட்டியை ஏற்படுத்தும், ஆதலால் வங்கிகளின் லாபம் வருங்காலங்களில் குறையலாம் என்ற எதிர்பார்ப்புகள் சந்தையில் வங்கிப் பங்குகளை சரித்தன. நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 213 புள்ளிகள் குறைந்து, 17,009 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 50 புள்ளிகள் குறைந்து, 5,063 புள்ளிகளுடனும் முடிந்தது.
சாப்ட்வேர் பங்குகள்: அமெரிக்காவில் உள்ள சாப்ட்வேர் கம்பெனிகளின் லாபம் கூடிவருவதால், அதன் எதிரொலி இந்தியாவிலும் இருந்தது. இங்கும் சாப்ட்வேர் பங்குகளின் விலை கூடியது. ஏனெனில், இந்தியாவின் 50 முதல் 60 சதவீதம் வரை மொன்பொருள் ஏற்றுமதி அமெரிக்காவிற்குத் தான் நடக்கிறது. அங்கு பிரகாசம் என்றால் இங்கும் பிரகாசம் தான். டி.சி.எஸ்., கம்பெனியின் ஆர்டர் புக் நன்றாக இருப்பதாகவும் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தேவையான ஆர்டர் இருக்கிறது எனவும் கூறப்படுகிறது. ஆதலால், நீண்ட கால நோக்கில் அந்த கம்பெனியின் பங்குகளை உங்கள் போர்ட்போலியோவில் சேர்க்கலாம்.
கசக்கும் சர்க்கரை: சந்தையில் சர்க்கரை பங்குகள் கசந்தன என்றே சொல்லலாம். ஆமாம். இறக்குமதிக்கு அரசு கொடுத்திருந்த காலக்கெடுவை நீட்டியதால் சந்தையில் சர்க்கரை கம்பெனியின் பங்குகள் விலை குறைந்தன. டிசம்பர் வரை இது நீட்டிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு முடிவுகள்: யெஸ் பாங்க் நல்ல காலாண்டு முடிவுகளைத் தந்தாலும், அந்த வங்கியின் வராக்கடன்கள் கூடியிருந்ததால், சந்தையில் அந்தப் பங்குகளின் விலை குறைந்தது. இது தவிர என்.ஐ.ஐ.டி., - சக்தி சுகர்ஸ் கம்பெனிகளும் நல்ல காலாண்டு முடிவுகளைத் தந்துள்ளன. வந்துள்ள காலாண்டு முடிவுகளை வைத்துப் பார்க்கும் போது, பல கம்பெனிகளில் காலாண்டு லாபம் கூடியுள்ளது. ஆனால், காலாண்டு விற்பனை அந்த அளவு கூடவில்லை. இது ஒரு கவலையளிக்கக் கூடிய விஷயம்.
வழுக்கும் கச்சா எண்ணெய்: தினமும் என்னை கவனி என்று மறுபடி சொல்ல வைத்து விடும் போலிருக்கிறது கச்சா எண்ணெய். பேரலுக்கு 80 டாலர் அளவிற்கு வந்து நிற்கிறது. இது கடந்த 12 மாதத்தில் அதிகபட்ச உயர்வு. இதனால், மத்திய அரசு எண் ணெய் கம்பெனிகளின் பங்குகள் களையிழந்து காணப்படுகின்றன. அதே சமயம், எண் ணெய் உற்பத்தி செய்யும் கம்பெனிகளின் பங்குகள் உயர்ந்து செல்கின்றன. வரிசையில் காத்திருக்கும் அரசு வெளியீடுகள்: என்.எச்.பி.சி., மற்றும் ஆயில் இந்தியா ஆகிய வெளியீடுகளைத் தொடர்ந்து, பல அரசு வெளியீடுகள் வரத்தயாராகி வருகின்றன. என்.டி.பி.சி., சட்லெஜ் ஜல வித்யூத், செயில் ஆகியவை அரசால் அனுமதி அளிக்கப் பட்டுள்ளன. விரைவில் எதிர்பார்க்கலாம். அப்படி வரும் பட்சத்தில் சிறிய முதலீட்டாளர்களுக்கு 5 சதவீதம் விலையில் கிடைக்கும் என்றும் செய்திகள் வருகின்றன.
ஜொலிக்கும் தங்க ஆபரண ஏற்றுமதி: உலகளவில் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால், தங்க ஆபரண ஏற்றுமதியும் கூடியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 20 சதவீதம் கூடுதலாக ஆர்டர்கள் கிடைத்துள்ளன.
வரும் நாட்கள் எப்படி இருக்கும்? சந்தை குறுகிய காலத்தில் அதிகம் ஏறியுள்ளது போல வல்லுனர்கள் நினைக்கின்றனர். ஆதலால், ஏதாவது மாற்றம் வருமா என்று யோசிக்கத் தோன்றுகிறது.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்

No comments: