Thursday, October 22, 2009

கோடிகளைக் குவிக்கும் குவாத்ரோச்சி!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த குடும்பத்தினரைச் சுற்றிச்சுற்றி வந்த போஃபர்ஸ் ஊழல் வழக்கு தொடர்பான உண்மைகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக உச்ச நீதிமன்றத்தின் சிக்னலுக்காகக் காத்திருக்கிறது மத்திய அரசு.

போஃபர்ஸ் ஊழல் விவகாரத்தில் இத்தாலிய வர்த்தகரான குவாத்ரோச்சி மீதான வழக்கை விலக்கிக் கொள்ள முடிவு செய்துள்ளதாக கடந்த செப்டம்பர் 29-ம் தேதி மத்திய அரசு, உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிவிட்டால் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் மூலம் இந்தியப் பணத்தை கொள்ளையடித்த ஒரு கும்பலின் கதை எளிதில் முடிந்துவிடும்.

அரசுத் தரப்பினரே குற்றவாளிகளுடன் சேர்ந்துகொண்டு இந்த ஊழல் விவகாரத்தை மூடி மறைக்க நினைக்கும்போது உச்ச நீதிமன்றம் உள்பட எந்த நீதிமன்றம்தான் நீதியை நிலைநாட்ட முடியும்?

உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுவிட்டால் ஊழல் பேர்வழிகள் உச்ச நீதிமன்றமே எங்களுக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்துவிட்டது; இது எங்களுக்குக் கிடைத்த வெற்றி; பொய் வழக்குப் போட்டு அரசியல் ரீதியில் எங்களைப் பழிவாங்க நினைத்தவர்கள் தோல்வி அடைந்துவிட்டார்கள் என்று பேசக்கூடும்.

ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது போஃபர்ஸ் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை வெளிப்படையாகவே பாதுகாத்து வந்தார். ஆனால், 1991-ம் ஆண்டு பிரதமராக வந்த பி.வி. நரசிம்மராவ், ஒருபுறம் குவாத்ரோச்சியைப் பிடிக்க வேண்டும் என்ற சிபிஐயின் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்ததுடன் மறுபுறம் குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பியோடவும் உதவினார்.

பின்னர் 1999-ல் குவாத்ரோச்சிக்கு நெருக்கமானவரான சோனியா காந்தி அரசியலில் நுழைந்தார். தனது நாட்டைச் சேர்ந்தவரான குவாத்ரோச்சி நேர்மையானவர் என்று சான்றிதழ் அளித்தார். பின்னர் பத்திரிகையாளர்கள் சோனியா காந்தியைச் சந்தித்தபோது, போஃபர்ஸ் ஊழல் வழக்கில் குவாத்ரோச்சியின் பெயர் அடிபடுகிறதே என்று கேட்டதற்கு, "அவரைச் சந்தேகத்துக்குரிய நபராகத்தான் சிபிஐ கருதுகிறதே தவிர, அவருக்கு இதில் நேரடித் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை' என்று கூறினார்.

மேலும் குவாத்ரோச்சி குற்றவாளி என்பதற்கான ஆதாரங்களை ஆளுங்கட்சியினர்தான் (தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு) அளிக்க வேண்டும் என்றார் சோனியா. போஃபர்ஸ் விவகாரத்தில் குவாத்ரோச்சி பணம் பெற்ற விவகாரம் ஆதாரங்களுடன் இருந்தபோதிலும் வழக்கு பல ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டது.

இனி போஃபர்ஸ் பீரங்கி பேரத்தில் குவாத்ரோச்சி பணம் பெற்றது, அதற்கான ஆதாரங்கள் உள்ளிட்ட தகவல்களைச் சற்று நினைவுபடுத்திப் பார்ப்போம்.

1985-ல் ராஜீவ் காந்தி தலைமையிலான அரசு, பிரிட்டன், ஆஸ்திரியா, ஸ்வீடன் ஆகிய மூன்றில் எந்த நாட்டு பீரங்கிகளை வாங்குவது என்பது தெரியாமல் குழப்பத்தில் இருந்தது. இந்நிலையில் சுவீடனைச் சேர்ந்த போஃபர்ஸ் நிறுவனம் இரண்டு தரகர்கள் மூலம் பேரத்தை முடிக்கத் திட்டமிட்டது. ஆனால், அதன் முயற்சி உடனடியாகப் பலிக்கவில்லை. ஆனால், அந்த ஆண்டின் பிற்பகுதியில் லண்டனைச் சேர்ந்த ஏஇ சர்வீசஸ் (ஏஇஎஸ்) என்ற நிறுவனம் போஃபர்ஸ் நிறுவனத்தை அணுகி ஆயுதப் பேரத்தைச் சுமுகமாக முடித்துத் தருவதாக உறுதியளித்தது.

அதாவது, 1986-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் ஆயுத பேரத்தை முடித்துக் கொடுத்தால் 3 சதவிகித கமிஷன் தர வேண்டும் என்றும் அப்படியில்லை எனில் எதுவும் தர வேண்டாம் என்று, ஏஇஎஸ் நிறுவனம் கூறியது. இதை போஃபர்ஸ் நிறுவனம் ஏற்றுக்கொண்டது. இது தொடர்பாக இரு நிறுவனத்துக்கும் இடையே 1985-ம் ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி உடன்பாடு ஏற்பட்டது.

ஏஇஎஸ் நிறுவனத்தின் பின்னணியில் ஓர் ஆணோ அல்லது பெண்ணோ செயல்படுகிறார்கள். அவர்களால் ராஜீவ் காந்தி அரசிடமிருந்து ஆயுத விற்பனைக்கான கான்ட்ராக்டைப் பெற்றுத் தர முடியும் என்பது உறுதியாகத் தெரிந்ததால்தான் போஃபர்ஸ் நிறுவனம் அதனுடன் உடன்பாடு செய்துகொண்டது.

சொல்லிவைத்தபடியே ஏஇஎஸ் நிறுவனம் கெடு தேதிக்கு 7 நாள்கள் முன்னதாக, அதாவது மார்ச் 22-ம் தேதி ஆயுத விற்பனை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்துப் பெற்றுவிட்டது. அடுத்த 6 மாதத்துக்குள் அந்த நிறுவனம் முதல்கட்டமாக 7.3 மில்லியன் டாலரைக் கமிஷனாகப் பெற்றது. இந்தப் பேரத்துக்காக அந்த நிறுவனத்துக்குக் கிடைக்க வேண்டிய தொகை 36.5 மில்லியன் டாலர். கமிஷன் பணம் இத்தாலிய வர்த்தகரான குவாத்ரோச்சிக்குச் சென்றதும், பேரத்தின் பின்னணியில் அவர் செயல்பட்டதும் பின்னர் தெரியவந்தது.

போஃபர்ஸ் நிறுவனம் 1986-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி, ஜூரிச்சிலுள்ள நார்டுபினான்ஸ் வங்கியில், ஏஇஎஸ் நிறுவனக் கணக்கில் (வங்கிக் கணக்கு எண்: 18051-53) 7.3 மில்லியன் டாலரைச் செலுத்தியது.

இதற்கு இரண்டு வாரங்கள் கழித்து, அதாவது செப்டம்பர் 16-ம் தேதி ஏஇஎஸ் நிறுவனம் அதிலிருந்து 7 மில்லியன் டாலரை எடுத்து குவாத்ரோச்சி மற்றும் மரியா இருவரின் கட்டுப்பாட்டில் உள்ள கால்பர் இன்வெஸ்ட்மென்ட்ஸ் கணக்கில் சேர்த்தது.

1988-ல் போஃபர்ஸ் ஊழல் விவகாரம் விசுவரூபம் எடுத்ததும் குவாத்ரோச்சியும், மரியாவும் அந்தப் பணத்தை வட்டியுடன் எடுத்து வேறு இடங்களில் மறைத்து வைத்தனர். 1988-ம் ஆண்டு ஜூலை 25-ல் 7.9 மில்லியன் டாலரை கால்பர் நிறுவனத்திலிருந்து எடுத்து ஜெனீவாவில் உள்ள வெடல்ஸன் ஓவர்சீஸ் எஸ்ஏ என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தனர். 1990 மே 21-ம் தேதி 9.2 மில்லியன் டாலரை அங்கிருந்து எடுத்து சானல் தீவுகளில் உள்ள ஐஐடிசிஎல் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்தனர். பின்னர் அதே ஆண்டு ஜூன் 5-ம் தேதி 2.4 மில்லியன் டாலரை ஸ்விஸ் வங்கிக் கணக்கிலிருந்து எடுத்து கார்ஃபின்கோ என்ற வங்கியில் ரோபஸ்டா என்ற ரகசியக் கணக்கில் போட்டனர். ஜூன் 12-ம் தேதி 5.3 மில்லியன் டாலர் ஆஸ்திரியாவில் உள்ள வங்கியில் "அராபிகா', "ரொபஸ்டா', "லக்ஸர்' என்ற ரகசிய கணக்கில் போடப்பட்டது.

பின்னர் 2003 ஜூனில் இன்டர்போல் அமைப்பு குவாத்ரோச்சி, மரியா இருவருக்கும் லண்டனில் உள்ள ஸ்விஸ் வங்கிக் கிளையில் இரண்டு கணக்குகள் 5அ5151516க, 5அ5151516ங மூலம் முறையே 3 மில்லியன் டாலர், 1 மில்லியன் டாலர் இருப்பதைக் கண்டுபிடித்தது. சிபிஐ வேண்டுகோளின் பெயரில் இவ்விரு கணக்குகளும் முடக்கி வைக்கப்பட்டன.

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு முதன்முறையாகப் பதவியேற்றதும் செய்த முதல்வேலை முடக்கி வைக்கப்பட்ட இந்த வங்கிக் கணக்கை விடுவித்ததுதான். அடுத்த கட்டமாக ஆர்ஜென்டினாவில் பிடித்து வைக்கப்பட்ட குவாத்ரோச்சி தப்பிக்க வழிசெய்தது.

இப்போது இரண்டாவது முறையாகப் பதவியேற்றுள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு போஃபர்ஸ் ஊழல் வழக்கை முழுமையாகக் குழிதோண்டிப் புதைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதுவும் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியுடன். குவாத்ரோச்சியைப் பாதுகாக்க வேண்டும் என்பது மத்திய அரசின் நோக்கம் அல்ல; இந்த விவகாரத்தின் மூலம் சோனியாவுக்கு எந்தத் தொந்தரவும் வந்துவிடக்கூடாது என்கிற எண்ணம்தான் முக்கிய காரணம்.

1993-ல் குவாத்ரோச்சியின் வீட்டில் சிபிஐ நடத்திய சோதனையின்போது சோனியா, மரியா, குவாத்ரோச்சி ஆகிய மூவரும் நெருங்கிய குடும்ப நண்பர்கள் எனத் தெரியவந்தது. அவர்கள் அனைவரும் விடுமுறையை ஒன்றாகக் கழித்ததும், ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டதும், ஒன்றாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டதும், ஒருவரின் குழந்தைகள் மற்றொருவர் அரவணைப்பில் இருந்து வந்ததும் தெரியவந்தது.

இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் மேலும் சிக்கல் ஏற்படுமே என்பது தெரிந்துதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்த வழக்கைக் கைவிட முடிவு செய்தது.

சுவீடனில் போஃபர்ஸ் வழக்கை விசாரித்த சுவீடன் நாட்டுப் புலனாய்வு அதிகாரியான ஸ்டென் லிண்ட்ஸ்ட்ராம், இந்த ஊழல் விவகாரம் தொடர்பாக சோனியா காந்தியிடம் விசாரிக்க வேண்டும், அவருக்கும் குவாத்ரோச்சிக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்று ஏற்கெனவே இந்திய அரசிடம் தெரிவித்திருந்தார். ஆனால், அதுகுறித்து மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இந்த வழக்கை மூடிமறைப்பதிலேயே ஆர்வம் காட்டி வருகிறது.

இப்போது உள்ள இளந்தலைமுறையினர் போஃபர்ஸ் ஊழல் விவகாரம் வெளியானபோது குழந்தைகளாக இருந்திருப்பார்கள். எனவே அவர்களுக்கு போஃபர்ஸ் ஊழல் 320 மில்லியன் டாலர் தொடர்புடையது என்பது தெரியாது. ஏஇஎஸ் நிறுவனத்துக்கான கமிஷன் 36.5 மில்லியன் டாலர் தொகையும் இதில் அடங்கும். இந்த ஊழல் விவகாரம் வெளியானபோது 20 சதவிகிதத் தொகையே அதாவது 64 மில்லியன் டாலரே வழங்கப்பட்டிருந்தது. ஆயுத ஒப்பந்தத்துக்கான மொத்தத் தொகையில் அப்போது இந்திய அரசு 20 சதவிகிதம் மட்டுமே கொடுத்திருந்ததால் அப்போது வழங்கப்பட்ட கமிஷன் தொகையும் 20 சதவிகிதம்தான். இந்த ஊழல் விவகாரம் வெளியானதால் இந்திய அரசு பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டது. இதையடுத்து கமிஷன் பணமும் கொடுக்கப்படவில்லை.

இப்போது குவாத்ரோச்சி மீதான வழக்கை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதால் போஃபர்ஸ் நிறுவனத்துக்குச் சேரவேண்டிய 227 மில்லியன் டாலரும், குவாத்ரோச்சிக்கு கமிஷன் பாக்கி 29 மில்லியன் டாலரும் கிடைக்க வழியேற்பட்டுள்ளது.

அதாவது குவாத்ரோச்சிக்கு 29 மில்லியன் டாலர் கமிஷனாகக் கிடைக்கும் என்றால் இந்திய ரூபாயில் அவருக்குக் கிடைக்க இருப்பது ரூ. 140 கோடி. இந்த ஊழல் விவகாரத்தில் கிடைக்கும் மொத்த லஞ்சப் பணத்தை ரூபாயில் கணக்கிட்டால் அது ரூ.600 கோடியைத் தாண்டிவிடும். இதற்காக 20 ஆண்டுகள் காத்திருந்ததில் நஷ்டம் ஒன்றும் இல்லையே?
கட்டுரையாளர் : எஸ். குருமூர்த்தி
நன்றி : தினமணி

2 comments:

hayyram said...

இத்தாலிக்காரிய ஒழிச்சா எல்லாம் சரியாப்போய்டும்

பாரதி said...

hayyram வருகைக்கு நன்றி