Wednesday, October 21, 2009

கனவு கானல்நீர் ஆனதுவோ...?

சமத்துவம் என்பது அரசியல், பொருளாதார, சமுதாய ரீதியாக அடையப்பட வேண்டிய லட்சியமாக சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் கருதினார்கள். வெள்ளையர்களிடமிருந்து நாம் பெற்ற சுதந்திரத்தின் முழுப்பயனையும் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காகவே பல்வேறு திட்டங்களையும் தீட்டினார்கள்.

பொருளாதார வல்லரசாக இந்தியா உயர வேண்டும் என்று விரும்பி ஐந்தாண்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார் பிரதமர் ஜவாஹர்லால் நேரு. நம் நாட்டில் ஏழை, பணக்காரர்களிடையேயான வேற்றுமை மறைய வேண்டும், நாட்டின் பொருளாதார வளங்களின் பலன்களை அனைவரும் அடைய வேண்டும் என்று பாடுபட்டார் அவர்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனம், பாரத் மிகுமின் நிறுவனம் போன்ற அரசுத்துறை தொழில்நிறுவனங்கள்கூட தொழிலாளர் குடியிருப்புகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் வாயிலாக அனைவருக்கும் எல்லா வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்தன. பொதுக் கல்வி, பொதுக் குடியிருப்பு, பொதுச் சுகாதாரம், பொது வேலைவாய்ப்பு என்று சீராகச் சென்று கொண்டிருந்த நாட்டை கடந்த 20 ஆண்டுகளில் மடைமாற்றிவிட்டனர் இப்போதைய ஆட்சியாளர்கள். அதிலும் குறிப்பாக பொருளாதாரச் சீர்திருத்தம், தாராளமயம், உலகமயம் என்றெல்லாம் பேசி ஏழைகளை மேலும் சுரண்டவும், சாதாரண லட்சாதிபதிகளைக் கோடீஸ்வரர்களாக்கவும் வழிகோலுகின்றனர் என்பதுதான் வேதனை.

இப்போது நாட்டின் செல்வ வளம் வெகுசில குடும்பங்களுக்கே சொந்தம் என்ற அளவுக்குச் செல்வக்குவிப்பு தீவிரம் அடைந்து வருகிறது.

இந்த நிலையில் தேசிய அளவில் வேலைவாய்ப்பு, ஊதிய விகிதம் போன்றவற்றை ஆராய்ந்த ஓர் அமைப்பு, தனியார் துறையில் கம்பெனிகளின் உயர் அதிகாரிகளுக்குத் தரப்படும் ஊதியம், படிகள் ஆகியவற்றைச் சாமானியர்களின் ஊதியங்களுடன் ஒப்பிட்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாட்டைப் போல இருக்கிறது என்று சுட்டிக்காட்டியது.

உலகிலேயே இந்தியாவில்தான் இத்தனை வித்தியாசமுள்ள ஊதிய விகித முரண்பாடு இருக்கிறது என்றும் அது சுட்டிக்காட்டியது.

விவசாயத்துறையில் அனைவரையும் ஈடுபடுத்த நில உச்ச வரம்புச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நாளில் அதை மிக மிக முற்போக்கான சட்டமாகவே கருதினார்கள். உச்ச வரம்பு அளவு மாறுபட்டாலும் எல்லா மாநிலங்களிலும் அது அமல் செய்யப்பட்டது. அந்தச் சட்டத்தாலும் அடுத்து அறிமுகம் செய்யப்பட்ட பசுமைப் புரட்சியாலும் நம்முடைய விவசாயம் வளர்ந்ததா வீழ்ந்ததா என்பது மிகப்பெரிய கேள்வி. ஆனால் அப்படியொரு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அடுத்தபடியாக தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் சட்டம் இயற்றியபோதுகூட, ஆலை அதிபர்கள் அதிகம் சிரமப்பட்டுவிடக்கூடாதே என்று அந்த போனஸ் அளவுக்கும் உச்ச வரம்பு வைத்து சட்டம் இயற்றியது மத்திய அரசு. இன்றுவரை அந்தச் சட்டத்தை மறந்தும் திருத்துவதற்கு நமது ஆட்சியாளர்களுக்கு நேரமே கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு பரம ஏழைகளுக்காகவே உழைத்து ஓடாக உருகிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தனியார் துறையில் உயர் பதவியில் இருப்பவர்களின், கண்களைக் கூசும்படியான அதிகபட்ச சம்பளத்தைக் கட்டுப்படுத்துங்கள் என்று அரசுக்குப் பரிந்துரை செய்தது தன்னார்வக் குழுவொன்று. அதைப் பரிசீலிப்போம் என்றுகூட கூற மனம் இல்லாமல், அப்படியொரு எண்ணமே இல்லை என்று கூறிவிட்டது அரசு.

சமத்துவம் என்ற லட்சியத்துக்கு நம்முடைய ஆட்சியாளர்கள் காட்டும் மரியாதை இதுதான். ஆனால் இதுவெறும் கோஷம் அல்ல;

""இறையாண்மைமிக்க, சமத்துவ, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு'' என்று நம்மைப்பற்றி பெருமையுடன் கூறிக் கொள்கிறோம். நமது அரசியல் சட்டத்திலேயே இதைக் குறிப்பிட்டுப் பெருமை தட்டிக் கொள்கிறோம். ஏழை பணக்கார இடைவெளியைக் குறைப்பதைப் பற்றி முன்பெல்லாம் உதட்டளவு ஆர்வம் காட்டிவந்ததுகூட இப்போது இல்லை என்கிற நிலைமை. அதைப் பற்றியே சிந்திக்காமல் லட்சாதிபதிகளைக் கோடீஸ்வரர்களாக்குவதைப் பற்றி மட்டுமே நமது ஆட்சியாளர்கள் சிந்திக்கத் தொடங்கி விட்டார்களோ என்றுகூடத் தோன்றுகிறது.

இந்தியாவில் வாழும் அத்தனை மக்களுக்கும் உண்ண உணவு, உடுக்க உடை, குடியிருக்க வீடு, அனைவருக்கும் கல்வி, நோயுற்றால் இலவசச் சிகிச்சை ஆகியவற்றை உறுதி செய்வது என்பதுதான் சுதந்திர இந்தியா எதிர்நோக்கும் சவால் என்றும், ஏழை பணக்கார இடைவெளி குறைக்கப்பட்டு, சமத்துவ, சமதர்ம, மதச்சார்பற்ற சுதந்திர நாடாக உலகில் தலைநிமிர்ந்து நிற்பதுதான் குறிக்கோள் என்றும் சுதந்திரம் பெற்ற அன்று நமது முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு ஆற்றிய உரையை தினமும் அதிகாலையில் நமது ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் படிக்கவோ, கேட்கவோ செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
நன்றி : தினமணி

No comments: