அமைச்சர்களும் அதிகாரிகளும் அலுவல் நிமித்தம் பயணம் செய்யும்போது, அரசு நிறுவனமான ஏர் இந்தியாவில்தான் பயணிக்க வேண்டும் என்றும், தனியார் விமானங்களில் பயணிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது. இப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டு, நமது அமைச்சர்களும், அதிகாரிகளும் வலியுறுத்தப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருப்பதே துரதிர்ஷ்டவசமானது என்பது ஒருபுறமிருக்க, இப்போதாவது மத்திய அரசு துணிந்து ஒரு கட்டுப்பாட்டை விதிக்க முற்பட்டிருக்கிறதே என்று பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
பொருளாதார தாராளமயமாக்கலைத் தொடர்ந்து, தனியார் நிறுவனங்கள் பல விமானத் துறையில் நுழைந்தது முதல், தனியார் விமானத்தில் பயணிப்பதுதான் பெருமை. மரியாதை என்கிற தவறான கண்ணோட்டம், பெரு முதலாளிகளுக்கும், தனியார் துறை அதிகாரிகளுக்கும் ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை. தனியார் துறை என்றாலே சிறப்பாக இயங்கும் என்கிற மாயையை உலகமயம் ஏற்படுத்தி இருப்பதில் அதிசயமும் இல்லை. ஆனால், நமது அமைச்சர்களும், உயர் அதிகாரிகளும் அரசு நிறுவனமான ஏர் இந்தியாவில் பயணிப்பது தங்கள் பதவிக்கு இழுக்கு, அகௌரவம் என்று கருதி செயல்பட்டதை எப்படி ஜீரணிப்பது?
கல்வி, சுகாதாரம், ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து ஆகியவை முழுக்க முழுக்க வியாபாரக் கண்ணோட்டத்துடன் செயல்படுவதற்கும், தனியார்மயம் என்கிற பெயரில் பகல் கொள்ளைக்கு உள்படுத்தப்படுவதற்கும் மிக முக்கியமான காரணம், நமது ஆட்சியாளர்களும், நிர்வாகமும் அரசுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள், பொதுப் போக்குவரத்து மற்றும் விமானத் துறையைப் புறக்கணிக்க முற்பட்டதுதான்.
பணமும், பதவியும், அதிகாரமும் வந்தவுடன் நமது மக்கள் பிரதிநிதிகளும் சரி, அமைச்சர் பெருமக்களும் சரி, தத்தம் குழந்தைகளை அரசுக் கல்வி நிலையங்களுக்கு அனுப்பாமல், பணக்காரக் குழந்தைகள் படிக்கும் கல்விச்சாலைகளைத் தேடிப்பிடித்துச் சேர்க்க முற்பட்டனர். அவர்களைப் போலவே அதிகார வர்க்கமும் அரசுப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைப் படிக்க வைப்பது கேவலம் என்கிற மனப்போக்கைக் கடைப்பிடித்தது.
அரசுப் பள்ளிகளில் கல்வியின் தரத்தையும் கல்வி நிலையங்களின் கட்டமைப்பு வசதிகளையும் உறுதிப்படுத்த வேண்டிய மக்கள் பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள் மற்றும் அதிகாரத்தில் இருக்கும் அமைச்சர்கள் போன்றோர் ஊரார் குழந்தைகள் படிக்கும் கல்விச்சாலைகளைப் பற்றி அதிகம் கவலைப்படாமல் இருப்பதில் ஆச்சரியம் என்ன இருக்கிறது? இவர்களது குழந்தைகள் அரசுப் பள்ளிகளில்தான் படித்தாக வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டால், நமது கிராமத்து ஆரம்பப்பள்ளிகள்கூட ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தின் தரத்திற்கு உயர்த்தப்பட்டுவிடாதா?
தனியார் மருத்துவமனைக் கலாசாரம் பெருகுவதுவரை, நமது மரியாதைக்குரிய தலைவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில்தானே சிகிச்சை பெற்றனர். அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும், உயர் அதிகாரிகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்கள் எனும்போதுதானே, மருத்துவமனையின் வளர்ச்சியும், நவீனமயமாக்கப்படுதலும், பராமரிப்பும் உறுதி செய்யப்படும்?
ஆட்சி அதிகாரத்திலும், நிர்வாக மையத்திலும் உள்ளவர்களே சிகிச்சை பெறுகிறார்கள் எனும்போதுதானே, சராசரிக் குடிமகனுக்கும் அரசு மருத்துவமனைகளின்மீது நம்பிக்கை ஏற்படும்! அரசு மருத்துவமனை மருத்துவர்களையும், ஊழியர்களையும் அவமானப்படுத்தும், கேவலப்படுத்தும் செயல்தானே நமது ஆட்சியாளர்களும், நிர்வாகிகளும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது? எங்களைக் கேவலப்படுத்தாதீர்கள் என்று ஏன் நமது மருத்துவத் துறையினர் குரல் கொடுப்பதில்லை?
முன்பெல்லாம் அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் முடிந்தவரை வெளியூர் பயணங்களை பஸ்ஸிலும், ரயிலிலும்தான் செய்வது வழக்கம். இப்போது அவர்களிடம் கார் வசதி வந்துவிட்டது. போதாக்குறைக்கு, விமானப் போக்குவரத்து எல்லா நகரங்களையும் இணைக்கத் தொடங்கிவிட்டது. எதற்கெடுத்தாலும் பறக்கத் தொடங்கி விட்டார்கள். கேட்டால், நேரத்தை வீணாக்காமல் பயன்படுத்துகிறோம் என்று காரணம் கூறுகிறார்கள். இவர்கள் ஆலாய்ப் பறந்து நேரத்தை மிச்சப்படுத்துவது அவர்களுக்கு வேண்டுமானால் பயனளித்திருக்கலாம். தேசத்துக்குப் பயனளித்ததாகத் தெரியவில்லை.
சில விஷயங்களை எல்லாம் சட்டம் போட்டு நடைமுறைப்படுத்திவிட முடியாது. அவரவர் மனசாட்சி உறுத்த வேண்டும். தார்மிகக் கடமை அவர்களை வழிநடத்த வேண்டும். இதுதான் மகாத்மா காந்தி தனது தொண்டர்களுக்குச் செய்த வழிகாட்டுதல்.
அரசு உத்தரவு இல்லாமலேயே, நமது மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் தங்கள் குழந்தைகளை அரசுக் கல்வி நிலையங்களுக்கும், தங்கள் குடும்பத்தினரை அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்புவது என்று முடிவெடுத்தாலே, நமது கல்விச் சாலைகளும், மருத்துவமனைகளும் தனியாருக்குத் தண்ணீர் காட்டும் அளவுக்குச் செயல்படத் தொடங்கிவிடும்.
அதேபோல, தேவையற்ற விமானப் பயணத்தைத் தவிர்த்து பொறுப்பான பதவியிலுள்ளவர்கள் பொதுப் போக்குவரத்துகளில் பயணம் செய்தால், நாடே அவர்களை வாழ்த்தும். மக்களோடு மக்களாக வாழ வேண்டும் என்று சொன்ன காந்தியடிகளின் பெயரால் ஆட்சி நடத்துகிறோம் என்கிற உணர்வுடன் அனைவரும் செயல்பட்டால்...? ஊதுகிற சங்கை ஊதித்தான் பார்ப்போமே...!
நன்றி : தினமணி
Wednesday, August 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment