Wednesday, August 19, 2009

விலை உயர்வு எப்போது அமல்? பால் உற்பத்தியாளர் கவலை

அரசுடன் நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்பும் பால் கொள்முதல் விலை உயர்வு எப்போது அமலாகும் என தெரியாமல், உற்பத்தியாளர்கள் விரக்தியில் உள்ளனர். தமிழ்நாடு பால் உற்பத்தி யாளர்கள் சங்கம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முதல் கட்டமாக, பிப்ரவரி 23ல் போராட்டம் அறிவித்தனர். பால்வளத்துறை அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில், 'முதல்வர் உடல்நலம் குன்றியிருப்பதால், பேச்சுவார்த்தையை பின்னர் வைத்துக் கொள்ளலாம்' என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.அடுத்த கட்ட பேச்சுக்கு அழைக்காததால், 'மார்ச் 10ம் தேதி, பால் நிறுத்தப் போராட்டம் நடக்கும்' என, உற்பத்தியாளர் சங்கத்தினர் கூறினர். இதற்கிடையே, லோக்சபா தேர்தல் அறிவிப்பால், 'தேர்தலுக்கு பின் பேச்சு நடத்தலாம்' என, அரசு தரப்பில் கூறப்பட்டது. உற்பத்தியாளர்களின் கோரிக்கை பல்வேறு காரணங்களால், புறக்கணிக்கப்பட்டு வந்ததால், இறுதியாக, ஜூலை 9ம் தேதி, பால் நிறுத்தம் மற்றும் கறவைமாடுகளை சாலையில் நிறுத்தும் போராட்டத்தை அறிவித்தனர்.போராட்டம் வலுத்ததால், மின் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் மற்றும் அதிகாரிகள், பால் உற்பத்தியாளர்களிடம் பேச்சு நடத்தினர்.இரு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின், 'பசும்பால் லிட்டருக்கு 13.50 ரூபாயிலிருந்து 2 ரூபாய் உயர்த்தி, 15.50 ரூபாயாகவும், எருமைப்பால் 18 ரூபாயிலிருந்து, 5 ரூபாய் உயர்த்தி, 23 ரூபாயாகவும் வழங்கப்படும்' என அறிவிக்கப் பட்டது.பால் உற்பத்தியாளர் சங்க மாநிலத் தலைவர் செங்கோட்டுவேல், பொதுச்செயலர் ராஜேந்திரன் கூறியதாவது: 'சட்டசபை இடைத்தேர்தல் முடிந்ததும், 22ம் தேதி மீண்டும் பேச்சு நடத்தலாம். அன்று, பால் விலை உயர்வு குறித்த முறையான அறிவிப்பை வெளியிடலாம்' என, கடந்த மாதம் அமைச்சர்களுடன் நடந்த பேச்சு வார்த்தையின்போது கூறப்பட்டது. ஆனால், இதுவரை பேச்சு நடத்துவது குறித்து எந்த அழைப்பும் இல்லை. கோரிக்கை களில் பால் விலை உயர்வு மட்டும் தான் நிறைவேற்றப்பட்டுள்ளது; மற்ற கோரிக்கை குறித்து, 22ம் தேதி நடக்கும் பேச்சுவார்த்தையில் வலியுறுத்துவோம். ஏற்கனவே கலப்புத் தீவனங்களின் விலை உயர்ந்து வருவதால், பால் உற்பத்தி யாளர்கள் நஷ்டத்தில் உள்ளனர். 70 கிலோ மூட்டைக்கு, 35 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. உடனடியாக விலை உயர்வு அமலை, அரசு வெளியிட்டால், உற்பத்தியாளர்கள் பயன்பெறுவர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி : தினமலர்


No comments: