Thursday, July 9, 2009

10 மாத இடைவெளிக்குப்பிறகு ஹட்ச் விளம்பரத்தில் மீண்டும் வந்திருக்கிறது ' பக் ' நாய்

இதற்கு முன் ஹட்ச் நிறுவன மொபைல் போன் விளம்பரத்தில் வந்த ' பக் 'நாய் மிக பிரசித்தம். பின்னர் அது வோடபோனாக மாறிய பின்னும் அந்த குட்டி நாய் எல்லோருக்கும் பிடித்த ஒரு அபிமான நட்சத்திரமாக மக்கள் மனதில் இருந்து வந்தது. ஆனால் கடந்த 10 மாத காலமாக அது விளம்பரத்தில் வராமல் இருந்தது. இப்போது மீண்டும் வந்திருக்கிறது. ஐபிஎல் - 2 போட்டியின்போது வோடபோன் நிறுவனம், முட்டை வடிவிலான கதாபாத்திரத்தை கொண்டு ஜூஜூஸ் என்ற விளம்பரத்தை வெளியிட்டு, அதுவும் பிரபலமானதும், இனிமேல் ' பக் ' நாய் வராது என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் மீண்டும் அது நடிக்க வந்து விட்டது. இது குறித்து வோடபோனுக்காக விளம்பர படங்களை தயாரிக்கும் ஆக்லிவி அண்ட் மதர்ஸ் என்ற விளம்பர நிறுவனத்தின் எக்ஸிகூடிவ் பிரான்ட் டைரக்டர் குமார் சுப்ரமணியம் தெரிவித்தபோது, நாங்கள் ஜூஜூஸ் விளம்பரத்தை டி.வி.யில் வெளியிடும்போதும் ' பக் ' நாயை விட்டுவிடவில்லை. வோடபோன் ஸ்டோர்களில் விளம்பர அட்டைகளாக அதை வைத்திருந்தோம் என்றார். அந்த ' பக் ' நாய்க்குட்டியும், குட்டி பெண்ணும் நடிக்கும் விளம்பர படங்கள் மீண்டும் இந்திய தொலைக்காட்சிகளில் வெளிவர ஆரம்பித்து விட்டது
நன்றி : தினமலர்


இந்திய ராணுவத்தில் இணைந்தார் மலையாள நடிகர் மோகன்லால்

மலையாள நடிகர் மோகன்லால் இந்திய ராணுவத்தில் சேர்ந்தார். அவருக்கு கவுரவ ‌லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டுள்ளது. டில்லியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் முன்னிலையில் மோகன்லால் பதவியேற்றுக் கொண்டார்.
நன்றி : தினமலர்


ஏர் - இந்தியா சீரமைப்பு குழுவுக்கு தலைமை ஏற்க ரத்தன் டாடாவை அனுகிய மத்திய அரசு

கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் ஏர் - இந்தியாவின் நிர்வாகத்தை சீரமைத்து, அதை நெருக்கடியில் இருந்து காப்பாற்ற ஒரு ஆலோசனை குழுவை ( அட்வைசரி போர்டு ) மத்திய அரசு நியமிக்கிறது. அந்த குழுவுக்கு பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவை தலைமை ஏற்குமாறு கேட்டிருக்கிறது. இதுகுறித்து மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிரபுல் படேல் ரத்தன் டாடாடை சமீபத்தில் சந்தித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் மத்திய அமைச்சரின் கோரிக்கையை ரத்தன் டாடா ஏற்றுக்கொண்டாரா என்று தெரியவில்லை. இந்நிலையில், ஏர் - இந்தியா நிறுவனம், அது குத்தகைக்கு வாங்கியிருக்கும் விமானங்களை கூடிய விரைவில் திருப்பி கொடுத்து விட முடிவு செய்திருக்கிறது. அதற்கான வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிகிறது. அதற்காக ஒரு குழுவை நியமித்து குத்தகை ஒப்பந்தம் குறித்து ஆராய்ந்து, இன்னும் ஒரு வாரத்திற்குள் குத்தகை விமானங்களை எல்லாம் திருப்பி கொடுத்து விட தீர்மானித்திருக்கிறது. மேலும் ஏர் - இந்தியாவின் விமானங்கள் செல்லாத வெளிநாடுகளில் இருக்கும் ஏர் - இந்தியா அலுவலகங்களை மூடி விடவும் தீர்மானித்திருக்கிறது.
நன்றி : தினமலர்


பங்குச் சந்தை சாம்ராஜ்யத்தை சரித்த பட்ஜெட்

பட்ஜெட் நன்றாக இல்லையா? இல்லை அதை பங்குச் சந்தை சரிவர புரிந்து கொள்ளவில்லையா? இது தான் அனைவரின் கேள்வியும். ஏழை, எளியவர்கள் முதல் அனைவரையும் கவர்ந்திழுக் கும் பட்ஜெட்டாக இது இருக்கும் என, அனைவரும் எதிர்பார்த்தது தான். அதனால் தான் சந்தை கடந்த பல நாட்களாக, குறிப்பாக கூறப்போனால் தேர்தல் முடிவுகள் வந்ததிலிருந்து கூடிக் கொண்டே வந்தது. 28 சதவீதம் கூடியது. அதாவது, 12,173 புள்ளிகளிலிருந்து 15,600 புள்ளிகள் வரை சென்றது. கடந்த வாரம் கூட ரயில்வே பட்ஜெட் நன்றாக இருந்தது.
மேலும், பொதுத்துறை பங்குகளை விற்பது பற்றியும், வெளிநாட்டு முதலீடுகள் பற்றியும் பொருளாதார ஆய்வறிக்கை கூறியது. வரப்போகும் பட்ஜெட் எப்படி இருக்கக்கூடும் என்று கூறாமல் கூறுவது தான் பொருளாதார ஆய்வறிக்கை. ஆனால், இந்த சர்வேயில் குறிப் பிடப்பட்டிருந்த பல முக்கியமானவை பட்ஜெட்டில் இடம் பெறாததால் சந்தை பட்ஜெட் தினத்தன்று ஒரு இறக்கி இறக்கி விட்டுச் சென்றது.
பட்ஜெட் தினத்தன்று சந்தை 870 புள்ளிகள் குறைந்தது. பட்ஜெட்டிற்கு பிறகு சந்தை 1,100 புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளது. நேற்று முன்தினம் சந்தை இவ்வளவு குறைந்துள்ளதே என்று பலரும் வாங்க ஆரம்பித்தனர். ஆதலால், சந்தை 127 புள்ளிகள் மேலே சென்றது. ஆனால், நேற்று மறுபடி மிகவும் சந்தை குறைந்தது ஏன்? உலகின் மிகப்பெரிய ரேட்டிங் கம்பெனியான எஸ் அண்டு பி, இந்தியாவின் ரேட்டிங் குறைக்கப்படலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது.
இது தவிர உலகளவில் சந்தைகளும் குறைந்தே தொடங்கியிருந்தன. இவை இரண்டும் சேர்ந்து இந்திய சந்தைகளை இழுத்து கீழே போட்டது. ஆதலால் மும்பை பங்குச் சந்தை 401 புள்ளிகள் குறைந்து முடிந்தது.
யார் இந்த சரிவில் வாங்கினர்? இப்படி 1,100 புள்ளிகள் குறைந்த சந்தையில் யாராவது வாங்கினார்களா? உள்நாட்டு நிதி நிறுவனங்களும், மியூச்சுவல் பண்டுகளும், சிறிய முதலீட்டாளர்களும் சந்தையில் பங்குகளை வாங்கினர். இது சந்தையில் நஷ்டத்தை சிறிது குறைக்க உதவியது. பட்ஜெட்டில் என்ன எதிர்பார்த்து கிடைக்காமல் போனது? செக்யூரிட்டிஸ் டிரான்ஸ்சாக்ஷன் டாக்ஸ், வங்கித்துறை, இன்சூரன்ஸ் துறை சீர்திருத்தங்கள், வருமான வரி உச்சவரம்பு கூடுதல் என பல நல்ல அம்சங்கள் பட்ஜெட்டில் இருந்தாலும் சந்தையில் ஒரு தொய்வு ஏற்பட்டது.
நேற்று இறுதியாக மும்பை பங்குச் சந்தை 401 புள்ளிகள் குறைந்து 13,769 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 123 புள்ளிகள் குறைந்து 4,078 புள்ளிகளுடனும் முடிந்தது. பட்ஜெட் நன்றாக இல்லாததால் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்க ஆரம்பித்துள்ளன. பட் ஜெட் தினத்தன்று 1,483 கோடி ரூபாய்க்கு சந்தையில் பங்குகளை விற்றன. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் விற்று பணத்தை எடுத்துக் கொண்டு சென்றதாலும், மேலும் வரத்துக்கள் குறைந்ததாலும் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்தது. ஏற்றுமதியாளர்களுக்கு லாபம். பட்ஜெட்டில், தங்கம், வெள்ளி இறக்குமதிக்கு உள்ள வரிகள் அதிகமாக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை கூடுதலாகும். அதே சமயம் சுங்கவரிகள் கூடுதலாக இருப்பதால் தங்கம் கடத்தல் தொடங்கவும் வாய்ப்புகள் உள்ளன.
இந்த வருடத்தின் முதல் காலாண்டு முடிவுகள் வரத்துவங்கியுள்ளன. இண்டஸ் இந்த் வங்கி, தனது சிறப்பான காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த காலாண் டில் மட்டும் 86.5 கோடி ரூபாய் லாபமாக சம்பாதித்து உள்ளது. இது கடந்தாண்டு இதே காலாண்டை விட 365 சதவீதம் அதிகம். ஆதலால், சந்தையில் இந்த கம்பெனியின் பங்குகள், 10 சதவீதம் வரை மேலே சென்றது.
சரிந்த வங்கிப் பங்குகள்: வங்கி சீர்திருத்தங்கள் பற்றி பட்ஜெட்டில் எதுவும் கூறப்படாததால் வங்கிப் பங்குகள் கடந்த மூன்று நாட்களாக சரிந்து கொண்டிருக்கின்றன. வங்கித் துறை குறியீடு, 11 சதவீதம் வரை சரிந்துள்ளது. மேலே செல்லுமா? நிச்சயமாக மேலே செல்லும் வாய்ப்புகள் உள்ளன. சீர்திருத்தங்கள் இல்லாவிடினும் வங்கிகள் இந்த காலாண்டில் நல்ல லாபம் காண்பிக்கும். ஆதலால், பங்கு விலைகள் கூடும்.
ரிலையன்ஸ் பங்குகள் தேர்தல் முடிவுகளுக்கு முன் இருந்த நிலைக்கு வந்து விட்டது. இந்த கம்பெனியின் பங்குகள் 1,829 ரூபாய் என்ற அளவிற்கு நேற்று வந்து விட்டது. ரிலையன்சின் இரு கம்பெனிகளுக்கிடையே எரிவாயு விற்பதில் உள்ள தகராறு இன்னும் தீராததாலும், கோர்ட்டுக்கு சென்றிருப்பதாலும் சந்தையில் அந்த கம்பெனியின் பங்குகள் கீழே சென்றன. வரும் நாட்கள் எப்படி இருக்கும்? வரும் நாட்கள் கடினமாகத் தான் இருக்க வேண்டும். காலாண்டு முடிவுகள் நன்றாக இருக்கும் பட்சத்தில் சந்தை அதை சிறிது வரவேற்று மேலே செல்லும்.
- சேதுராமன் சாத்தப்பன் -
நன்றி : தினமலர்

Wednesday, July 8, 2009

சரிந்தது பங்கு சந்தை

மும்பை பங்கு சந்தையில் இன்று ரியாலிட்டி, பேங்கிங், இன்ஃப்ராஸ்டிரக்சர், மெட்டல், டெலிகாம், ஆயில் அண்ட் கேஸ் துறை பங்குகள் அதிகம் விற்கப்பட்டதால், சென்செக்ஸ் 14,000 புள்ளிகளுக்கு கீழும் நிப்டி 4,100 புள்ளிகளுக்கு கீழும் சென்று விட்டது. அமெரிக்க மற்றும் ஆசிய பங்கு சந்தைகளில் ஏற்பட்ட சரிவு நிலையும் இந்திய பங்கு சந்தையை பாதித்தது. மே 18, 2009 க்குப்பிறகு முதல் முறையாக, வர்த்தகம் ஆரம்பித்த முதல் 15 நிமிடங்களிலேயே நிப்டி 4,100 புள்ளிகளுக்கு கீழே சென்று விட்டது. பின்னர் அது எவ்வளவு முயன்றும் 4,100 ஐ அடைய முடியவில்லை. மாலை வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 401.30 புள்ளிகள் ( 2.83 சதவீதம் ) குறைந்து 13,769.15 புள்ளிகளில் முடிந்திருக்கிறது. தேசிய பங்கு சந்தையில் நிப்டி 123.25 புள்ளிகள் ( 2.93 சதவீதம் ) குறைந்து 4,078.90 புள்ளிகளில் முடிந்திருக்கிறது.
nandri : dinamalar


சென்னையில் டீசல் இஞ்சின் தயாரிப்பை துவங்கும் ஹூண்டாய்

ஹூண்டாய் மோட்டார் இந்தியா, சென்னைக்கு அருகே இருக்கும் அதன் தொழிற்சாலையில், அடுத்த ஆண்டு முடிவில் இருந்து டீசல் இஞ்சின் தயாரிப்பை துவங்குகிறது. 50,000 இஞ்சின்களை தயாரிக்க வசதியுள்ள ஹண்டாய் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் டீசல் இஞ்சின்கள், அதன் ஐ - 20 மற்றும் வெர்னா மாடல் டீசல் கார்களுக்கு பயன்படுத்தப்படும். இப்போதைக்கு நாங்கள் டீசல் இஞ்சின்களை இறக்குமதிதான் செய்து கொண்டிருக்கிறோம். இங்கேயே அடுத்த வருடத்தின் இறுதியில் இருந்து தயாரிக்க இருக்கிறோம் என்றார் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் மேலாண் இயக்குனர் மற்றும் சி.இ.ஓ., ஹெச்.எம்.லீம். டில்லியில் ஐ - 20 டீசல் காரை அறிமுகப்படுத்தி பேசிய அவர், இதனை தெரிவித்தார். ஐ - 20 டீசல் கார்களின் விலையில் 25 சதவீதம், அதன் டீசல் இஞ்சினுக்கே போய் விடுகிறது என்றார் லீம். இங்கேயே டீசல் இஞ்சின்களையும் மற்ற உதிரி பாகங்களையும் தயாரித்தால் மொத்த காரின் விலை குறிப்பிட்ட அளவு குறைந்து விடும் என்று சொன்ன லீம், நாங்கள் டீசல் கார்களை அதிக அளவில் இங்கு விற்க முயற்சிப்பதற்கு அது மிக உதவியாக இருக்கும் என்றார். நேற்று ஹூண்டாய் நிறுவனம், அதன் ஐ - 20 கார்களின் டீசல் மாடலை டில்லியில் அறிமுகம் செய்தது. 1.4 லிட்டர் டீசல் இஞ்சின் பொருத்தப்பட்ட அதன் ஆரம்ப மாடல் விலை ரூ.6.19 லட்சமாகவும், அதிலேயே உயர் ரக மாடல் ரூ.7.20 லட்சமாகவும் இருக்கிறது.
நன்றி : தினமலர்


ஸ்டீம் டர்பைன் தொழிற்சாலை : ஜப்பான் நிறுவனம் ஒப்பந்தம்

ஆயிரம் மெகாவாட் வரை திறன் கொண்ட ஸ்டீம் டர்பைன்கள், ஜெனரேட்டர்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலையை சென்னையில் நிறுவுவதற்கான ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது. தமிழக அரசு செய்திக்குறிப்பு: மிகுந்த செயல்திறன் கொண்ட சூப்பர் அனல் மின் நிலையங்களில் அமைக்கப்படும், 1,000 மெகாவாட் வரை திறன் அளிக்கக்கூடிய ஸ்டீம் டர்பைன்களையும், ஜெனரேட்டர்களையும் தயாரிப்பதற்காக, தோஷிபா மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ., நிறுவனங்கள் இணைந்து, 'தோஷிபா ஜே.எஸ்.டபிள்யூ., டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் பிரைவேட் லிமிடெட்' என்ற கூட்டு முயற்சி நிறுவனத்தை உருவாக்கியுள்ளன. தமிழகத்தில், இந்நிறுவனத்தை நிறுவுவதற்கு உகந்த சூழ்நிலைகள் நிலவுவதையும், இதர உள்கட்டமைப்பு வசதிகள் நிறைந்துள்ளதையும் கருதி, சென்னை, எண்ணூருக்கு அருகில் இத்தொழிற்சாலையை அமைக்க முடிவு செய்தது. 800 கோடி ரூபாய் முதலீட்டில், 500 பேருக்கு நேரடியாக வேலை வாய்ப்புகளை அளிக்கும் இத்தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், முதல்வர் கருணாநிதி மற்றும் துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று நடந்தது. தமிழக அரசின் சார்பாக தொழில் துறை முதன்மைச் செயலர் பரூக்கி, தோஷிபா ஜே.எஸ்.டபிள்யூ., டர்பைன் மற்றும் ஜெனரேட்டர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பாக அதன் மேலாண்மை இயக்குனர் இடாரு இஷிபாஷி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஜப்பான் நாட்டுத் தூதுவர் காசோ மினகாவா, தமிழக அரசின் தலைமைச் செயலர் ஸ்ரீபதி மற்றும் முக்கிய அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர்.
நன்றி : தினமலர்