புவிவெப்பத்தைக் குறைப்பதில் தனது பங்கு என்ன என்பதை அமெரிக்கா அறிவித்துவிட்டது. அதாவது 2005-ம் ஆண்டு வெளியேற்றிய பசுமை இல்ல வாயுக்களின் அளவில் 18 சதவீதம் குறைத்துக் கொள்ளப்போவதாக தெரிவித்திருக்கிறது. வளரும் நாடுகளில் மிக அதிகமாக பசுமை இல்ல வாயுக்களை வெளியேற்றும் சீனா, தான் 35 முதல் 40 விழுக்காடு குறைக்கப் போவதாக அறிவித்துள்ளது. சீனாவைப் போலவே இந்தியாவும் ஓரளவு இதே அளவை அறிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
தற்போது வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவை இந்தியா 40 சதவீதம் குறைத்துக் கொள்ள வேண்டுமானால், அதற்காக இந்தியா இழக்க வேண்டிய தொழில்வளர்ச்சியும் எதிர்கொள்ள வேண்டிய செலவினங்களும் மிக அதிகம். இந்தியாவின் மின்உற்பத்தியில் பெரும்பங்கு அனல்மின் நிலையங்களிலிருந்துதான் கிடைக்கிறது. இவற்றின் மூலம் வெளியேற்றப்படும் கரியமில வாயு அளவும் அதிகம். இதற்காக அனல்மின் நிலையங்களை உடனடியாக மூடுவதோ, மின்உற்பத்தியைக் குறைத்துக்கொள்வதோ இயலாத காரியம்.
இந்தியாவில் சூரியசக்தி மூலமாக மின்சாரம் தயாரித்து, இழப்பை ஈடு செய்ய முடியும் என்பது உண்மையே என்றாலும், அதற்காகும் செலவு பல ஆயிரம் கோடி ரூபாய். இதில் ஒரு பகுதியை ஐக்கிய நாடுகள் சபை வழங்கும் என்றாலும், புதிய மின்உற்பத்தி முறைக்கு அது முற்றிலும் பயன் அளிக்காது.
தொழில்துறைகளில் வெளியேற்றப்படும் கரியமில வாயு அளவைக் குறைப்பதற்காக, தொழிற்கூடங்களில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்த வேண்டுமானால், அதற்காக இத்தொழில் துறைக்கு மானியம் மற்றும் சலுகைகள் அறிவித்தாக வேண்டும். இதனால் இந்தியாவுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும். வளர்ச்சிப் பணிகள் தடைப்படும்.
இந்தியா அதன் பிரச்னையை எதிர்கொள்ளும் அதே வேளையில், இந்தியர் என்ற முறையில் ஒவ்வொருவரும் புவிவெப்பத்தைக்
குறைக்க சில வழிகள் இருக்கின்றன. மின்சாரத்தை அளவாகப் பயன்படுத்துவது, வாகனப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வது, சீர்வளி அரங்குகள் மற்றும் குளிர்பதன பெட்டி பயன்பாட்டை கட்டுக்குள் வைப்பது போன்றவற்றை மேற்கொள்ளலாம். இவை யாவற்றையும் காட்டிலும் மிக அதிகமாக ஒரு மனிதன் இந்தப் புவிக்கு நன்மை செய்ய விரும்பினால், அவர் சைவ உணவுக்கு மாறுவதன் மூலம் அதைச் செய்ய முடியும்.
அண்மையில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிடுகையில் "மாட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்துவதன் மூலம் புவிவெப்பத்தைக் குறைக்கலாம்' என்று கூறிய கருத்து உண்மையே. இதை நோபல் பரிசு பெற்றவரும் ஐக்கியநாடுகளின் ஒரு பிரிவாகிய பருவநிலை மாற்றத்துக்கான சர்வதேச அமைப்பின் தலைவர்
ராஜேந்தர் கே. பச்செüரி பல கருத்தரங்குகளில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
ஒரு கிலோ மாட்டிறைச்சியைத் தவிர்ப்பதன் மூலம் வளிமண்டலத்தில் 36.4 கிலோ கரியமில வாயு கலப்பதைத் தவிர்க்க முடியும் என்று அவர் சொல்வது வெறும் புள்ளிவிவரம் அல்ல. நடைமுறை வாழ்க்கைக்கு சாத்தியமானதும்கூட. ஆடு, மாடுகள் வளர்ப்பதற்காக அழிபடும் காடுகள், இறைச்சியை வேறு இடங்களுக்குக் கொண்டு செல்வதற்கான வாகனப் போக்குவரத்து, இறைச்சியை குளிர்பதனப் பெட்டியில் வைத்திருத்தல் போன்ற தொடர்நடவடிக்கையால் ஏற்படும் கரியமில வாயுவை கணக்கிட்டு இந்தக் கணக்கீடு செய்யப்படுகிறது.
இறைச்சிக் கடைகள் என்பது ஊருக்கு ஒரு சிலவாக இருந்த நாள்கள் என்பது முற்றிலுமாக மாறிப்போய், இப்போது எல்லா நாள்களிலும் எல்லா இடங்களிலும் தெருவுக்குத் தெரு இறைச்சிக் கடைகளும், பிரியாணிக் கடைகளும் இருப்பதைக் காண்கிறோம். 2006 ம் ஆண்டு உலகம் முழுவதும் 28 கோடி டன் இறைச்சி உணவுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவைக் காட்டிலும் 5 மடங்கு அதிகம்.
ஒரு எக்டேர் நிலப்பரப்பில் வேளாண்மை செய்து உருவாக்கப்படும் காய்கறி, கனிகள் பருப்புவகைகள் மூலம் ஒரு ஆண்டுக்கு 30 பேருக்கு உணவளிக்க முடியும். ஆனால் இதே நிலப்பரப்பை கால்நடை வளர்ப்புக்குப் பயன்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் முட்டை, பால்,
இறைச்சி ஆகியவற்றின் மூலம் ஒரு ஆண்டுக்கு 10 பேருக்கு மட்டுமே உணவளிக்க முடியும் என்றும் கணக்கிடப்படுகிறது.
ஒரு கிலோ கிராம் மாட்டிறைச்சி பெறுவதற்கு 10 கிலோ கால்நடைத் தீவனம் தேவைப்படுகிறது. ஒரு கிலோ பன்றிக் கறிக்கு 5 கிலோ தானியமும் ஒரு கிலோ கோழிக்கறிக்கு 3 கிலோ தானியம் தேவையாக இருக்கிறது. ஆனால் இந்த தானியத்தைக் கொண்டு பல வேளை உணவை ஒரு மனிதன் உண்ண முடியும். மேலும், காய்கறி உணவைச் சமைக்கத் தேவைப்படும் எரிசக்தியைக் காட்டிலும் இறைச்சி உணவு தயாரிக்க 25 மடங்கு எரிசக்தி தேவையாக இருக்கிறது. இவை யாவற்றையும் கருத்தில் கொள்ளும்போது, ஒருவர் சைவ உணவுக்கு மாறுவது மண்ணுலகிற்கு மட்டுமல்ல, வளிமண்டலத்திற்கும் நன்மை செய்ய முடியும்.
சைவ உணவு மனிதருக்கு எளிமையான உணவு என்பதுடன், வளிமண்டலத்தை மாசுபடுத்தும் பசுமை இல்ல வாயுக்களில் கரியமில வாயுவைவிட 30 மடங்கும் அதிக தீமை விளைவிக்கும் மீத்தேன் வாயுக்கு இறைச்சி காரணமாக இருக்கிறது என்பதை எண்ணும் போது, இந்தியர்கள் ஒவ்வொருவரும் மாமிச உணவைத் தவிர்ப்பதும், வசதிகளைக் குறைத்துக் கொண்டு எளிய வாழ்க்கை வாழ்வதும் அர்த்தமுள்ள வாழ்க்கையாக இருக்கும். மேலும், புவி வெப்பத்தைக் குறைத்து பருவநிலை மாற்றங்களை கட்டுக்குள் கொண்டுவரவும் உதவும். ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவில் வளிமண்டலத்தைக் காப்பது என்று உறுதியை ஏற்றுக் கொண்டால், புவியைக் காக்கலாம். நாடு அதனளவில் பசுமை இல்ல வாயுக்களைக் குறைக்க முற்படும்போது குடிமகன்களாகிய நாமும் நம்மால் முடிந்த பங்களிப்பைச் செய்தால் என்ன!
நன்றி : தினமணி
Saturday, December 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment