ஒரு வழியாக ஐரோப்பியக் கூட்டமைப்பு, பெல்ஜியப் பிரதமர் ஹெர்மன் வேன் ரோம்பையை ஐரோப்பியக் கவுன்சிலின் நிரந்தர அதிபராகத் தேர்ந்தெடுத்துத் தொடர்ந்து கொண்டிருந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. இந்தத் தேர்வுக்குப் பின்னில் நடந்த அரசியல் மற்றும் கூட்டு ராஜதந்திரப் போட்டிகள் ஏராளம் ஏராளம். அதையெல்லாம் மீறி, ஒரு முடிவு ஏற்பட்டிருக்கிறது என்றால் அதற்கு சுவீடன் பிரதமர் ஃபிரடரிக் ரெய்ன்பெல்ட்டைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
ஐரோப்பியக் கூட்டமைப்பு என்பது ஒரு நீண்டநாள் கனவு. ஒன்றோடு ஒன்று போர் தொடுத்துக் கொண்டிருந்த சரித்திரம்தான் ஐரோப்பிய நாடுகளுக்கு உண்டு. தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளையும், போட்டிகளையும் மறந்து ஒன்றாகக் கைகோர்த்துக் கொண்டாக வேண்டும் என்கிற எண்ணத்துக்கு முதலில் வித்திட்டது இரண்டாம் உலகப் போர். ஐரோப்பியக் கூட்டமைப்புக்கு வித்திட்டது அரசியலும், ஒற்றுமை உணர்வும் என்பதைவிட வியாபாரமும், பொருளாதாரமும் என்பதுதான் நிஜம்.
1950-ல் ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு உற்பத்தியாளர்கள்தான் ஐரோப்பியக் கூட்டமைப்பு என்கிற எண்ணத்துக்குப் பிள்ளையார் சுழி போட்டவர்கள். தங்களது வியாபாரம் தங்கு தடையின்றி நடைபெற்று செழிப்பதற்கு ஐரோப்பாவில் அமைதியும் ஒற்றுமையும் நிலவ வேண்டும் என்பதை உணர்ந்த நிலக்கரி மற்றும் எஃகு உற்பத்தியாளர்களின் முயற்சியின் விளைவாக பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய ஆறு நாடுகள் இணைந்து உருவாக்கிய ஐரோப்பியப் பொருளாதார ஒருங்கிணைப்புதான் இன்று ஐரோப்பியக் கூட்டமைப்பாக உருவாகி இருக்கிறது.
1973-ல் டென்மார்க், அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஐரோப்பியக் கூட்டமைப்பில் இணைந்தது. எண்பதுகளில் கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலும் இணைந்தபோது, ஐரோப்பியக் கூட்டமைப்பு என்பது ஒரு வலுவான பொருளாதார அமைப்பாகவும், பலமான சக்தியாகவும் உருவாகும் வாய்ப்புகள் ஏற்பட்டன. தங்களது எல்லைகளைப் பரஸ்பர வர்த்தகத்துக்கும், பயணங்களுக்கும் உடைத்து எறிந்து, ஐரோப்பாவை ஓர் ஒட்டுமொத்த சந்தையாக உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியின் இணைப்பும், ஆஸ்திரியா, ஃபின்லாந்து, சுவீடன் போன்ற நாடுகள் உறுப்பினர்களாகச் சேர்ந்ததும் ஐரோப்பியக் கூட்டமைப்புக்கு மேலும் வலு சேர்த்தன.
சுமார் பத்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளும் பொதுவுடைமைத் தத்துவத்தைக் கைவிட்டு சந்தைப் பொருளாதாரத்துக்குத் தயாரானதுடன், ஐரோப்பியக் கட்டமைப்பு மேலும் வலுவடைந்து பல்கேரியா மற்றும் ருமேனியா போன்ற நாடுகளும் தங்களைக் கூட்டமைப்பில் இணைத்துக் கொண்டபோது, 27 நாடுகளுடன் வல்லரசான அமெரிக்காவுக்கே சவால் விடும் அளவுக்கு ஐரோப்பியக் கூட்டமைப்பு பலம் வாய்ந்ததாகக் காட்சி அளிக்கிறது.
பொது நாணயமாக "யூரோ' ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்டதற்குப் பிறகு, டாலருக்குப் போட்டியாக உலக அரங்கில் யூரோ தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது என்பதும், சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் நிகரான வல்லரசாக ஐரோப்பியக் கூட்டமைப்பு காட்சி அளிக்கிறது என்பதும் மறுக்க இயலாத யதார்த்தம்.
இந்த நிலையில்தான், ஐரோப்பியக் கௌன்சிலின் நிரந்தர அதிபராக ஒருவரைத் தேர்ந்தெடுத்து, கூட்டமைப்பை வலுப்படுத்தும் முயற்சியில் அவருக்கு முழு அதிகாரம் அளிப்பது என்கிற முடிவு எடுக்கப்பட்டது. இந்தப் பதவியில் முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேயரை நியமித்து விட்டால், தனது நன்மைகள் பாதுகாக்கப்படும் என்று அமெரிக்கா கருதியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
ஐரோப்பியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பல நாடுகள் ஒரு பலமான நிரந்தரப் பதவியில் டோனி பிளேயரைப் போன்ற உலக நாடுகளுடன் நட்புறவுள்ள பிரமுகர் ஒருவர் அமர்வதை விரும்பவில்லை என்பது ஒருபுறம். மேலும், ஜெர்மன் அதிபர் அன்ஜெலா மெர்க்கலும், பிரெஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்க்கோசியும், டோனி பிளேயருக்கு எதிராக மறைமுகமாகக் காயை நகர்த்தினர் என்பது மறுபுறம்.
நடந்து முடிந்த தேர்வின் பின்னணியில் ஐரோப்பியக் கூட்டமைப்பு எதிர்கொள்ளும் உறுப்பினர் நாடுகளுக்கு இடையேயான மனமாச்சாரியங்கள் வெளிப்பட்டுள்ளன. முக்கியமான பிரச்னைகளில் இப்போதும் உறுப்பினர் நாடுகள், தங்களது நலனின் அடிப்படையில் ஐரோப்பியக் கூட்டமைப்பை அணுகுகிறார்களே ஒழிய அதைத் தங்கள் அனைவருக்கும் பொதுவான ஒட்டுமொத்த அமைப்பாகவும், ஒற்றுமையின் அடையாளமாகவும் பார்ப்பதில்லை என்று தெரிகிறது.
இந்தியா அணிசேரா நாடுகளுக்குத் தலைமை வகித்து நடத்தும் தைரியத்தையும், தார்மிக உரிமையையும் இழந்துவிட்ட நிலையில், ஐரோப்பியக் கூட்டமைப்பின் முக்கியத்துவம் இன்றியமையாதது.
ஐரோப்பியக் கூட்டமைப்பு என்பது அமெரிக்காவும் சீனாவும் இரண்டு வல்லரசுகளாக வளர்ந்து வரும் சூழலில், உலக அமைதியையும், பொருளாதார சமத்துவத்தையும் நிலைநாட்ட மிகவும் அவசியம்.
சக்தி வாய்ந்த ஐரோப்பியக் கூட்டமைப்பு உருவானால் மட்டுமே சீனாவும், அமெரிக்காவும் போட்டியோ, எதிர்ப்போ இல்லாத பொருளாதார வல்லரசுகளாகவும், ஏகாதிபத்திய சக்திகளாகவும் உருவாகாமல் தடுக்க முடியும். இதை ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகள் உணர்ந்து செயல்படுவதுதான் உலகின் வருங்கால நன்மைக்கு உத்திரவாதமாக இருக்கும்!
நன்றி : தினமணி
Saturday, December 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment