""வெள்ளிப் பனிமலை மீதுலாவுவோம்'' என்று பாடிய பாரதி, கூடவே "GLACIERS' என்ற ஆங்கிலச் சொல்லுக்கு ஓர் அழகிய தமிழ்ச்சொல்லை ""வெள்ளிப்பனி'' என்று பாடிக்காட்டிய தேசியக்கவிக்கு வணக்கம் செலுத்தும் அதேசமயத்தில், 2035-ல், அதாவது இன்னும் 25 ஆண்டுகளில், காலநிலையின் தடுமாற்றம் விளைவாக, இமயமலை திருவண்ணாமலைபோல் ஆகிவிடும் என்று சில காலநிலை வல்லுநர்கள் எச்சரித்துள்ளதை எண்ணிப் பார்த்தால், நெஞ்சு பொறுக்குதிலையே.
"மன்னும் இமயமலை எங்கள் மலையே' என்று இப்போது நாம் பாடினால் பாகிஸ்தான், நேபாளம், திபெத், பூடான் ஆகிய நாடுகள் எங்கள் பங்கு எங்கே என்று கேட்கும்? இமயமலையின் பரந்த விஸ்தீரணம் மத்திய ஆசியாவிலும் விரிந்து பரந்துள்ளது. ஆனால் வெள்ளிப்பனிமலைகள் மட்டும் மேற்கூறிய நான்கு நாடுகளுடன் இந்தியாவுக்கும் சேர்ந்து சொந்தம். காலநிலைத் தடுமாற்றத்தால் வேகமாக வெள்ளிப்பனி உருகும் சூழ்நிலையை மனதில் கொள்ளாமல் சொந்தம் கொண்டாடும் ஐந்து நாடுகளும் இந்த வெள்ளிப்பனி மலையை ஒரு மாபெரும் பவர்ஹவுஸôக மாற்ற எண்ணுகின்றன.
÷உயிர்ச்சூழல் வளத்தைப் புறக்கணித்துவிட்டு தென்கோடியில் செயல்பட்ட சேது சமுத்திரத் திட்டம் ஓசை இழந்துவிட்டது. இது சூழல் பாதுகாப்பு காரணமாக இல்லை. கால்வாயில் மண் அள்ள அள்ள மீண்டும் தூர்ந்து வருகிறதாம். ட்ரட்ஜர் கார்ப்பரேஷனுக்கு வரவேண்டிய பணம் வரவில்லையாம். சேதுராமர் சேஃபாகிவிட்டார். இப்போது லிபரான் கமிஷன் அறிக்கையில் அயோத்திராமர் பிரச்னையாகிவிட்டார். ராமர் பிரச்னை நமக்கு ஏன்? இப்போதுள்ள பூதாகாரமான பிரச்னை வடகோடியில் உள்ள இமயத்தின் பனிமலைகள். ராமருக்கு வந்த ஆபத்து இப்போது சிவனுக்கு இடம்
பெயர்ந்துவிட்டது. மேருமலைக்கும் கைலாசத்துக்கும் ஆபத்து காத்திருக்கிறது. காலநிலைத் தடுமாற்றத்துக்கு உலகிலேயே முதல் பலி இமயத்தின் வெள்ளிப்பனிமலைகள் என்று I.C.I.M.O.D.. கருதுகிறது. அதாவது International Centre For Integrated Mountain Development-ல் காலநிலைத் தடுமாற்றத்தை ஆராயும் விஞ்ஞானிகளின் அறிக்கையின் அடிப்படையில், I.C.I.M.O.D., இமயமலைப் பகுதிகளில் 2100-ஐ நெருங்கும்போது வெப்பநிலை 5.5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும் என்பதால், பனிமலைகள் அழியும் என்று கூறுகிறது. ஆகவே, கயிலைமலை திருவண்ணாமலையாகிவிட்டால்.... இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளை நம்பி வாழும் இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள், பர்மியர்கள், நேபாளிகள், பூட்டானிகள், சீனர்கள் எத்தனை கோடி, எத்தனை கோடி, இறைவா இவர்கள் கதி என்னவாகும்? நினைத்துப் பார்க்கவே குலைநடுங்கும் ஒரு சூழ்நிலையில் எத்தனை கோடி எத்தனை கோடி டாலர்கள் செலவழித்து நிலையற்ற நீர் மின்சாரத்திட்டங்களை இந்தியா மட்டுமல்ல; பாகிஸ்தான், பூடான் நிறைவேற்ற முனைந்துவிட்டது. இந்தியாவில் தைபாங் திட்ட மதிப்பீடு, பூடானின் தலா திட்டம், பாகிஸ்தானில் டையாமர் பாஷா திட்டம் ஆகிய மூன்றும் உலகிலேயே அதிகச் செலவுள்ள நீர்மின்சாரத் திட்டம் என்று கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 1,50,000 மெகாவாட் மின் உற்பத்தித் திட்டம்.
÷இந்தத் திட்டங்களுக்கு இந்தியாவில் மட்டுமல்ல; சீனாவிலும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளது. சீன நிபுணர் குழு மூத்த பொறியாளர் சின்-யுவான் ஹாங், பனிமலை-உருகுவது தீவிரமாகும் என்பதால் ஜீவநதிகள் பாலாறாகிவிட்டால் (வறண்டுவிட்டால்) இல்லாத நீரில் எப்படி மின்சாரம் எடுக்க முடியும்? என்கிறார். ""கான்கிரீட் மலைகள்: இமயமலைகளின் அணைக் கட்டடங்கள்'' என்று I.C.I.M.O.D., சார்பில் ஆய்வு நிகழ்த்திய ஸ்ரீபத் தர்மாதிகாரி என்ற பொறியாளர், ""செயலாற்ற முடியாத இம் மாபெரும் திட்டங்களில் கோடி கோடியாகப் பணம் செலவழிப்பது முட்டாள்தனமானது. அதுவும் உலகளாவிய நிதி நெருக்கடியுள்ள சூழ்நிலையில் இச்செலவு அடிமுட்டாள்தனம்'' என்று குறிப்பிட்டுள்ளார். ""காலநிலைத் தடுமாற்றத்தை மனதில் வைக்காமல் இமயமலையில் உற்பத்தியாகும் நதிகளின் போக்கு நிலையானது என்ற கருதுகோளில் செயல்படுவது ஆபத்தானது. பனி ஏரிகள் வெடித்து உடைப்பு எடுத்தால் தோன்றக்கூடிய பயங்கர வெள்ளம் அணைக்கட்டுகளை உடைத்துவிடும். காலப்போக்கில் நதியில் நீரோட்டம் இல்லாவிட்டாலும் மின் உற்பத்தி செய்ய முடியாது...'' என்று தர்மாதிகாரி கூறியுள்ளார்.
""பனி ஏரி வெடிப்பு'' என்பது எதுவோ தரைப்பகுதியில் உள்ள சாதாரண ஏரி உடைவதுபோல் அல்ல. ஆங்கிலத்தில் Glacial Lake Outburst Floods - GLOF என்பார்கள். 1985-ல் நேபாளத்தில் ஒருக்ளாஃப் ஏற்பட்டதன் விளைவால் மலைப்பகுதியில் 14 பாலங்களையும், 1 நீர்மின் திட்ட அணையையும் உடைத்துப் பெருகிய வெள்ளத்தில் மக்கள் மடிந்தனர். பள்ளத்தாக்குப் பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி நாசமாயின. பூடான் பகுதியில் மட்டும் 2,600 பனி ஏரிகள் உள்ளன. இவற்றில் 25 வெடிக்கும் அபாயத்தில் உள்ளது. இதே நிலை இந்தியாவிலும் உண்டு. வெள்ளிப்பனி உருகி ஆங்காங்கே பனிக்கட்டி ஏரிகள் உருவாகி அவை வெடிக்கின்றனவாம்.
÷வளர்ச்சி வளர்ச்சி என்று பேசி எவ்வாறு பொது மூலதனத்தைக் கொள்ளையடிக்கலாம் என்பதில் தீவிர கவனம் செலுத்தப்படுகிறது. இந்த நோய் இந்தியா, பாகிஸ்தான், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளில் பரவி இமயத்தையே அசைத்துப் பார்க்கிறது. இப்போதுள்ள பிரச்னை, வெள்ளிப்பனிமலை உருகுவதால் தோன்றக்கூடிய தண்ணீர்ப்பஞ்சம். காலநிலைத் தடுமாற்றத்தை மனத்தில் கொண்டு எதிர்கால நீர்த்தேவையை எப்படிச் சமாளிப்பது என்று யோசிப்பதை மறந்து கோடி கோடியாகப் பணத்தைக் கொட்டி வற்றப்போகும் நதிகள் மீது நீர்மின்சாரத் திட்டங்களைச் செயல்படுத்துவது புத்திசாலித்தனமான ஆட்சி அதிகாரத்தின் லட்சணம் ஆகாது.
÷அனைத்துலக நிலை இப்படி உள்ளபோது, இந்த அவசரகாலப் பிரச்னையை இந்தியா எவ்வாறு மதிப்பீடு செய்கிறது? மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், வெள்ளிப்பனி உருகுவது பற்றிய விஷயத்திற்கும் காலநிலைத் தடுமாற்றத்திற்கும் உறவு இருப்பதாகச் சொல்லப்படும் விஷயம் ஆதாரமில்லாதது என்று கூறுகிறார். மதிப்பிற்குரிய அமைச்சர் எந்த அடிப்படையில் கூறுகிறார் என்றால், அரசு கூறுவதற்கெல்லாம் தலையாட்டியபடி உண்மையை ஒளித்து எழுதுவதற்கும் சில விஞ்ஞானிகள் கிடைத்தவண்ணம் உள்ளனர். அப்படிக்கிடைத்த வி.கே. ரெய்னா ஓய்வு பெற்ற புவியியல் விஞ்ஞானி. ""வெள்ளிப்பனி மெல்ல மெல்லப் பின்னோக்கிச் செல்வது - உருகி ஏரியாவது 19-ம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியிலேயே தொடங்கிவிட்டது என்றும், அலாஸ்கா அல்லது கிரீன்லேண்டுடன் ஒப்பிடும்போது பின்னோக்கிச் செல்லும் வெள்ளிப்பனி அவ்வளவு அதிகமாயில்லையாம். வெள்ளிப்பனி இயக்கம் விழும் வெள்ளிப்பனி அளவுகொண்டும், தட்பவெப்பம் கொண்டும் நிர்ணயமாகிறதேதவிர தட்பவெப்பத் தடுமாற்றத்துக்கும் வெள்ளிப்பனி மறைவுக்கும் தொடர்பு இல்லை என்றும் கங்கை உற்பத்திக்குக் காரணமான கங்கோத்ரி வெள்ளிப்பனி நின்ற நிலையில் உள்ளதாகவும் ரெய்னா கூறியுள்ளதை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஏற்றுக்கொண்டுள்ளார்.
÷இந்தியா-பாகிஸ்தான் ஜீவநதி சிந்துவுடன் ஐந்து கிளை நதிகளுடன், இந்தியாவுக்கே சொந்தமான கங்கை-பிரம்மபுத்திரா நதிகளுக்கும் சேர்த்து ஒரு பிரச்னையும் இல்லையென்று ஒரு ஜால்ரா விஞ்ஞானி கூறியுள்ளதை அப்படியே I.P.C.C. என்று சொல்லப்படும் Inter Governmental Panel On Climate Change-ன் தலைவரான ராஜேந்திர பாச்செளரி தனது எதிர்ப்பை ""கார்டியன்'' பத்திரிகையில் குறிப்பிடும்போது, "இப்படி ஓர் அர்த்தமில்லாத ரெய்னாவின் அறிக்கையை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் ஒப்புக்கொண்டது எப்படி?' என்று வியந்துள்ளார். I.P.C.C. என்பது நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளை உள்ளடக்கியது. அமைச்சரின் கூற்றில் உள்ள கருத்து வேற்றுமை இத்துடன் அடங்கவில்லை. TERI என்று சொல்லப்படும் The Energy and Resources Institute-ன் வெள்ளிப்பனி விஞ்ஞானி சையத் இக்பால் ஹசன், வனம்-சுற்றுச்சூழல் அமைச்சரகம் தன்னிடம் தட்பவெப்பத் தடுமாற்றத்தினால் இமயத்தின் வெள்ளிப்பனி மலையின் பாதுகாப்பு பற்றிய அறிவியல் அறிக்கை கேட்கப்பட்டதாகவும், தனது கருத்துகள் புறக்கணிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.
ரெய்னா அறிக்கைக்குத் தக்க பதில் வழங்கியுள்ளார். ""1980-களிலேயே பசுமையக நச்சு ஆவிகள் இமய வெள்ளிப்பனிகளைத் தாக்க ஆரம்பித்துவிட்டன என்றும், இதனால் இமயத்தின் வெள்ளிப்பனி வேகமாக உருகுவதையும் கண்டறிந்துள்ளதாகவும், நேபாளம், சிக்கிம், பூடான் பகுதிகளில் வெடிக்கக்கூடிய பனிக்கட்டி ஏரிகள் வெள்ளிப்பனி உருகுவதால் தோன்றியுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார். எனினும் பூடான் அரசு அத்தகைய வெடிக்கும் ஏரிகளைக் கண்டறிந்து அதை ஆபத்தில்லாமல் நீரை வெளியேற்ற முயற்சி செய்கிறது. உத்தராஞ்சலில் உள்ள கார்வால் பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞானிகளின் ஆய்வுப்படி, "கடந்த 200 ஆண்டுகளில் கங்கோத்ரியின் வெள்ளிப்பனி 2 கிலோமீட்டர் அளவுக்குப் பின்னோக்கிவிட்டது. அதாவது உருகிக்குறைந்துவிட்டது.
ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் மட்டும் 800 மீட்டர் உள்ளடங்கிவிட்டது'' இந்த உண்மை நிலையை மூடி மறைத்து கங்கோத்ரி வெள்ளிப்பனி உள்ள இடத்தில் மாறாமல் இருப்பதாக அமைச்சர் கூறுவது நகைப்புக்கு இடம் அளித்தாலும், வெள்ளிப்பனி இழப்பால் ஏற்படும் வெடி ஏரிகள் அல்கொய்தா தீவிரவாதிகளின் வெடிகுண்டைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய செய்தி நகைப்புக்குரியது இல்லை.
கட்டுரையாளர் : ஆர்.எஸ். நாராயணன்
நன்றி : தினமணி
Saturday, December 5, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment