Wednesday, November 11, 2009

மீட்கப்பட்ட நாட்டின் மதிப்பு!

தனிமனிதர் ஒருவர், சந்தர்ப்பவசத்தால், தன் ஆஸ்தியை அடகு வைக்க நேர்ந்து, நாளடைவில் அதை மீட்டு எடுத்தால், அது ஒரு சாதனையாகப் போற்றப்படுகிறது.

இந்நிலையில், இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டுக்கு, கிட்டத்தட்ட அப்படி ஓர் அனுபவம் ஏற்பட்டால், அது ஓர் உணர்வுபூர்வமான விஷயமாகக் கருதப்படுவதில் வியப்பில்லை.

சுமார் 18 ஆண்டுகளுக்குமுன் நிகழ்ந்த அந்தச் சம்பவம் இப்போது நினைவுகூரப்படுகிறது.

மத்திய அரசு வெளிநாடுகளிலிருந்து வாங்கியிருந்த கடன்களுக்கு வட்டி செலுத்துவதற்கு கெடு நெருங்கிவிட்டது. வட்டி செலுத்துவதற்குப் போதுமான அந்நியச் செலாவணி மத்திய அரசிடம் அப்போது இல்லை.

அதேபோல் நாட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்வதற்கும் அந்நியச் செலாவணி இல்லை.

அதுசமயம் வெளிநாட்டிலிருந்து கடத்தல் செய்யப்பட்ட தங்கத்தை நமது சுங்கத்துறை பறிமுதல் செய்து வைத்திருந்தது. அந்தத் தங்கத்தை - சுமார் 70 டன் தங்கம் - பேங்க் ஆஃப் இங்கிலாந்தில் அடமானம் வைத்து அந்நியச் செலாவணி திரட்டப்பட்டது.

"இளம் துருக்கி' என மதிக்கப்பட்ட மறைந்த சந்திரசேகர் பாரதப் பிரதமராக இருந்த அந்தநேரத்தில், இப்படித்தான் அவர் ஒரு சிரமமான நிலையைச் சமாளித்தார்.

அதன்பிறகு, ஒரு சில ஆண்டுகளில் நிலைமை மாறத் தொடங்கியது. அந்நியச் செலாவணி கையிருப்பு படிப்படியாக உயர்ந்தது. இப்போது வரலாறு காணாத அளவு அதிகரித்துள்ளது.

இதற்கு முத்தாய்ப்பாக, சில தினங்களுக்குமுன் பாரத ரிசர்வ் வங்கி, சர்வதேச நிதி அமைப்புக்கு (ஐ.எம்.எஃப்.) 6.7 பில்லியன் டாலர் (ரூ. 29,490 கோடி) கொடுத்து 200 டன் தங்கத்தைக் கொள்முதல் செய்துள்ளது.

இது வெறும் தங்கக் கொள்முதல் மட்டுமல்ல; இந்தியா நியாயமான பெருமிதம் கொள்ளத்தக்க "வெற்றிக் கதை' என பலரால் கருதப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் ஐ.எம்.எஃப். விற்பனை செய்ய முன் வந்த தங்கத்தில் பாதி அளவை இந்தியா கொள்முதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொறுத்தவரை, தங்கம் வாங்குவதில் இரு வேறு நிலைப்பாடுகள் உள்ளன. சிலர், நகைச்சுவையாகக் கூறுவதுபோல், ஒலிம்பிக்கில் நாம் தங்கம் வாங்குகிறோமோ இல்லையோ, உலகிலேயே சந்தையில் அதிகம் தங்கம் வாங்குவது இந்திய மக்கள்தான். ஆண்டுக்கு சுமார் 800 டன் தங்கத்தை இந்திய மக்கள் வாங்குகிறார்கள்.

அதேநேரம், பாரத ரிசர்வ் வங்கியின் தங்கக் கையிருப்பு அப்படி ஒன்றும் பெரிய அளவில் இல்லை. இதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு.
அமெரிக்காவில் உள்ள "பெரெட்டன் உட்ஸ்' நகரில் 1944-ம் ஆண்டு பல நாடுகள் கூடி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, ஒவ்வொரு நாடும் தன் கையிலிருக்கும் தங்கத்தின் அடிப்படையில்தான், தங்கள் நாணயத்தை மாற்றிக் கொள்வதற்கான விகிதங்கள் நிர்ணயிக்கப்படும் என்பதே அது.

ஆனால், காலப்போக்கில் பல்வேறு காரணங்களுக்காக, 1971-ல் இந்த முறை கைவிடப்பட்டது.

மாறாக, கையிருப்பாக எவ்வளவு தங்கம் இருக்கிறது என்பதற்குப் பதில், கையிருப்பாக எவ்வளவு அமெரிக்க டாலர் இருக்கிறது என்ற அடிப்படையை உலக நாடுகள் பின்பற்றத் தொடங்கின.

கடந்த அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில், இந்தியாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 285 பில்லியன் டாலராக இருந்தது.

இது அன்னிய கரன்சியாகவும், தங்கமாகவும், ஐ.எம்.எஃப்.ல் எஸ்.டி.ஆர். வடிவிலும் உள்ளன. பல்வேறு உலக நாடுகளைப்போல், இந்தியாவின் தங்கக் கையிருப்பு மதிப்புக் குறைவுதான். அண்மைக்காலம்வரை இந்தியாவின் தங்கக் கையிருப்பின் மதிப்பு, பத்து பில்லியன் டாலர் அளவுதான்.

துல்லியமாகச் சொல்ல வேண்டும் எனில் 351 டன் தங்கம் மட்டுமே இருந்தது. அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்தக் கையிருப்பில் தங்கம் 4 சதவீதமாகத்தான் இருந்தது.

அண்மையில் 200 டன் தங்கம் கொள்முதல் செய்த பிறகு, இந்தியாவின் தங்கக் கையிருப்பு 557 டன்னாக உயர்ந்துள்ளது. ஒட்டுமொத்தக் கையிருப்பில் தங்கத்தின் பங்கு 4 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாக உயர்ந்துள்ளது. தங்கத்தின் அளவு 55 சதவீதம் அதிகரித்துள்ளது.

இதன் பயனாக, உலகில் அதிக அளவு தங்கம் கையிருப்பு வைத்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல்முறையாக இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வு பல உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனால், இந்தியாவைப் பின்பற்றி மேலும் சில நாடுகள் தங்கள் தங்கக் கையிருப்பை உயர்த்துவதற்கு முன்வரக்கூடும்.

ஏற்கெனவே சீனா, ரஷியா, மெக்ஸிக்கோ போன்ற நாடுகள் தங்கள் தங்கக் கையிருப்பில் பெரும் பகுதியைத் தங்கமாகத்தான் வைத்திருக்கின்றன.
அண்மைக்காலமாக தங்கத்தின் விலை ஏறிக்கொண்டே போகிறது. இந்நிலையில், மேலும் சில நாடுகளின் ரிசர்வ் வங்கிகள் தங்கள் தங்கக் கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில், தங்கம் கொள்முதல் செய்வார்களேயானால், தங்கத்தின் விலை மேலும் உயரக்கூடும்.

அதுதவிர, தங்கத்தின் விலை உயருவதற்கு முக்கியக் காரணம், அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்து வருவதுதான். கடந்த மார்ச் மாதத்துக்குப் பிறகு, உலகின் முக்கிய கரன்சிகளுக்கு நிகராக அமெரிக்க டாலரின் மதிப்பு 15 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதே காலகட்டத்தில் தங்கத்தின் விலை 15 சதவீதம் உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு சில நீண்டகால அடிப்படையிலான காரணங்களும் உண்டு.

உலக அளவில் தங்கத்தின் உற்பத்தி அதிகரிக்கவில்லை. மாறாகக் குறைந்துள்ளது.

தங்கத்தைத் தோண்டி எடுப்பதற்கான உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டு போவதற்கு இவையெல்லாமும் காரணம் ஆகும்.

ஒரு பக்கம், அமெரிக்கப் பொருளாதாரம் மந்தமடைந்து, வளர்ச்சி பூஜ்யத்துக்குக்கீழே சரிந்துள்ளது.

இன்னொரு பக்கம், அமெரிக்க டாலரின் மதிப்புக்குக் கடும் சவால் ஏற்பட்டுள்ளது.

இத்தனைக்குப் பிறகும்கூட, சர்வதேச வர்த்தகத்தில், நாணய மாற்றம் என்று வரும்போது, அமெரிக்க டாலருக்கு உள்ள உயர்ந்த இடத்தை இப்போதைக்கு தட்டிப்பறித்துவிட முடியாது.

எனினும், எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக்கூடாது என்பது எப்படி ஒரு தனி நபரின் முதலீட்டுத் திட்டத்துக்குப் பொருந்துமோ, அதேபோல், ஒரு நாட்டின் கையிருப்பை நிர்வகிப்பதற்கும் பொருந்தும்.

இந்தியாவின் கையிருப்பை ஒரே நாணயத்தில் வைத்துக் கொள்ளாமல், பரவலான வகையில் வைத்திருப்பதே விவேகமானது என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்தாகும். அந்த வகையில் பார்த்தாலும், பாரத ரிசர்வ் வங்கி சுமார் ரூ.30,000 கோடி கொடுத்து 200 டன் தங்கம் வாங்கியிருப்பது வரவேற்கத்தக்கது என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை.
கட்டுரையாளர் : எஸ். கோபாலகிருஷ்ணன்
நன்றி : தினமணி

No comments: