இந்தியாவின் மொத்த வளர்ச்சி அதிகரிக்க, சிவப்பு நாடா முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கண்டிப்பாக தெரிவித்தார். இந்திய தொழில்துறை கூட்டமைப்பு ( சி.ஐ.ஐ.,) மாநாட்டில் பங்கேற்ற அவர், இந்திய வளர்ச்சிக்கு தொடர்ந்து ஊக்குவிப்பு சலுகைகள் தொடரும் என்று அறிவித்தார். அடுத்து வரும் ஆண்டில் ஊக்குவிப்பு சலுகைகள் தொடராது என்று இக்கூட்டத்தில் பிரதமர் தெரிவித்த கருத்தை ஆதரித்த அவர், தொடர்ந்து ஊக்குவிப்பு தந்தால் அரசின் நிதிச் சுமை கூடும் என்ற கருத்தில் பிரதமர் பேசியதாக தெரிவித்தார். அதே சமயம், உள்நாட்டு பொருளாதாரத்தை நம்பியிருக்கும் நம்நாட்டில், ஊக்குவிப்பு சலுகை வளர்ச்சியை ஊக்குவிக்கும் என்றார். அதே சமயம் அதிக அளவு அரசு கடன் வாங்குவதால், தனியார் மூலதன அதிகரிப்பு பாதிக்கும் என்பதை ஏற்கவில்லை. அரசு தன் தேவைக்கான கடன்வசதி தேவையில் முக்கால்பகுதியை சேகரித்து விட்டது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது: வரி ஏய்ப்பு செய்பவர்கள் பற்றி மற்றநாடுகளுடன் தகவல் பகிர்ந்து கொள்ளும் நடைமுறைச் சட்டத்தை இந்தியா பின்பற்றுகிறது. இந்தியாவில் மொத்தவளர்ச்சி அதிகரிக்க வேண்டும் என்றால் சிவப்பு நாடா முறை ஒழிக்கப்பட வேண்டும். அதற்கு லஞ்சம் ஒழிப்பு, அதிகார வர்க்கத்தின் கட்டுப்பாடுகள் தகர்ப்பு ஆகியவை முக்கியம். என் துறையில் உள்ள ரெவின்யூ துறை, கறுப்புப் பணம் மீட்பு குறித்து உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார். ரிசர்வ் வங்கி: நேற்று மும்பையில், ரிசர்வ் வங்கி அணுகுமுறை குறித்து துணை கவர்னர் சியாமளா கோபிநாத் கூறியதாவது :
பொருளாதார ஊக்குவிப்பு சலுகைகளை முடிவுக்கு கொண்டு வருவதில், அரசு மிகவும் எச்சரிக்கையாக உள்ளது. பொருளாதார ஸ்திரத் தன்மையை விட்டுக் கொடுக்காமல், அதன் வளர்ச்சிக்கான நிதிக் கொள்கையை உருவாக்குவது, சவாலானது. எளிய நிதிக் கொள்கையை முடிவுக்கு கொண்டு வருவது, முதலீடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். குறுகிய காலத்தில், ஊக்குவிப்பு சலுகைகளில் இருந்து வெளிவருதல், உள்நாட்டு தேவை மற்றும் பயன்பாட்டிற்கு புத்துயிர் ஊட்டுதல் ஆகியவை கொள்கை வகுப்பவர்களுக்கு பெரும் சவாலாக உள்ளது. இந்திய வங்கி துறைகள், போதுமான முதலீட்டுடன் நல்ல நிலையிலேயே உள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி, பணப்புழக்க நிலையை கண்காணித்து, வங்கி துறையில் போதுமான நிதி இருப்பதை உறுதி செய்யும். நிதி நிலைமையை கவனமாக கண்காணித்து, தேவைக்கேற்ப நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு சியாமளா கோபிநாத் கூறினார்.
நன்றி :தினமலர்
Wednesday, November 11, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment