கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் எம்பிபிஎஸ் (ரூரல்) என்ற மருத்துவப் படிப்பு அடுத்த கல்வியாண்டு முதல் தொடங்கப்படும் என்று இந்திய மருத்துவக் குழுமத்தின் தலைவர் டாக்டர் கேதன் தேசாய் கூறியுள்ளார்.
இது பாராட்டத்தக்க முடிவு போலவும், கிராமப்புற மக்களுக்கு மருத்துவம் கிடைக்கவில்லை என்ற அவலத்தைப் போக்கிவிட வந்த மாற்று ஏற்பாடு என்பதைப் போலவும் தோற்றம் தந்தாலும், இதனால் கிராம மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் கிடைக்க வாய்ப்பே இல்லை.
கிராமப்புறத்துக்குச் சேவை செய்ய கிராமப்புற மாணவன் மட்டுமே எம்பிபிஎஸ் (ரூரல்) என்ற படிப்பைப் படிக்க வேண்டும் என்றால், மலைவாழ் மக்களுக்கு மருத்துவம் பார்க்க அந்த மக்களில் ஒருவருக்கு எம்பிபிஎஸ் (டிரைபல்) என்று ஒரு மருத்துவக் கல்வியைத் தொடங்குவார்களா என்ன?
கிராமப்புற மாணவனின் அறிவை கிராமத்திலேயே இருத்தி வைப்பதற்கும், நகர்ப்புற மாணவனின் அறிவை நகரத்திலேயே வளரச் செய்வதற்கும் மட்டுமே இந்தப் புதிய முறை உதவியாக அமையுமே தவிர எதிர்பார்க்கும் பயன்களை அளிக்காது.
கிராமத்தில் உள்ள தொடக்கக் கல்வி ஆசிரியருக்கும், சென்னை மாநகராட்சி தொடக்கக் கல்வி ஆசிரியருக்கும் ஒரே விதமான தகுதியை நிர்ணயிக்கும்போது, ஊரகப் பகுதியில் உள்ள கல்லூரிப் பேராசிரியருக்கும் சென்னையில் உள்ள கல்லூரிப் பேராசிரியருக்கும் ஒரு விதமான தகுதி, சம்பளத்தை நிர்ணயிக்கும்போது, மருத்துவத்தில் மட்டும் இரு வேறு தகுதிகளை- நகரம், கிராமம்- புகுத்துவதன் மூலம் அலோபதி மருத்துவத் துறையில் தேவையற்ற ஒரு பிளவை ஏற்படுத்துவதாக அமைந்துவிடும்.
மேலும், பொதுமக்கள் மத்தியில் இத்தகைய கிராம டாக்டர் என்பவர், நகர டாக்டரைவிட அனுபவம் மற்றும் அறிவில் குறைந்தவர் என்ற எண்ணத்தை அரசே உருவாக்கி, கிராம மக்களை நகரத்துக்கு வரச் செய்வதாக அமைந்துவிடும் அபாயமும் உள்ளது. கிராம மக்களே தங்கள் கிராம டாக்டர்களைப் புறக்கணிக்கவைப்பதாக அமைந்துவிடும்.
அத்தோடு, எம்பிபிஎஸ் (ரூரல்) படிப்பவர் மற்ற எம்பிபிஎஸ் (நகரம்) ஆக மாறவே விரும்புவார். இதற்கான சங்கம் உருவெடுக்கும்; போராட்டமும் நடக்கும். அரசு செவி மடுக்கும்போது, இவர்கள் அனைவரும் ஒரிஜினல் எம்பிபிஎஸ் ஆகிவிடுவார்கள்.
கேதன் தேசாய் ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளதைப் போல, இந்தியாவில் மொத்தம் 299 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே உள்ளன. ஆண்டுதோறும் இந்தியா முழுவதிலும் 34,000 பேர் மட்டுமே மருத்துவக் கல்வி பயில முடிகிறது. இதில் முதுகலை மருத்துவம் படிக்க 14,000 பேருக்கு மட்டுமே வாய்ப்பு உள்ளது. இதிலும் சிறப்பு மருத்துவம் பயில 709 இடங்களே உள்ளன. நடப்பாண்டு அக்டோபர் மாத நிலவரப்படி அவரே தெரிவித்துள்ள புள்ளிவிவரம் இது.
மருத்துவப் படிப்பில் தற்போதுள்ள இடங்களை ஆண்டுக்கு 34,000 என்பதை இரட்டிப்பாக்கினால் எம்பிபிஎஸ் டாக்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இதைப் புதிய கல்லூரிகள் திறப்பதைக் காட்டிலும், தற்போதுள்ள அரசு மருத்துவமனைக் கல்லூரிகளில் 100 இடங்களுக்கு பதிலாக 200 மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள அனுமதிப்பதும், வகுப்புகளை காலை மாலை என்று பிரித்துக் கொண்டு பயிற்றுவிப்பதும், இந்தியாவில் டாக்டர்கள் எண்ணிக்கையைப் பாகுபாடு இல்லாமல் பரவலாக்க முடியும்.
கிராமப் புறங்களில் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ள டாக்டர்களுக்கு முதுகலை மருத்துவப் படிப்பில் சேர 50 சதவீத இடங்கள் ஒதுக்கப்படும் என்ற கருத்தையும் தெரிவித்துள்ளார். அதேபோன்று சிறப்பு மருத்துவப் படிப்பில் 10 சதவீதம் கிராமங்களில் பணியாற்றிய டாக்டர்களுக்கு என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த நடைமுறை முறைகேடு இல்லாமல், நியாயமான முறையில் கடைப்பிடிக்கப்படும் என்றால், நிச்சயமாகக் கிராமங்களில் டாக்டர்கள் சேவை கிடைப்பது எளிதாகிவிடும்.
இந்தியாவில் எம்பிபிஎஸ் படித்த மாணவர் ஒவ்வொருவரும் கிராமங்களில் பணியாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்க வேண்டும். மருத்துவமனைகளில் சுமார் ஓராண்டுக்கும் மேலாகப் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றும் காலத்தில், இவர்களைச் சுழற்சி முறையில் கிராமங்களில் பணியாற்றச் செய்வதன் மூலமும், கிராம மருத்துவமனைகளில் எப்போதும் மருத்துவச் சேவை கிடைப்பதை உறுதி செய்ய முடியும்.
டாக்டர்களை கிராமங்களுக்கு அனுப்பும் சக்தி அரசுக்கு இல்லை என்பதற்காக, கிராமத்து மாணவர்களை எம்பிபிஎஸ் (ரூரல்) ஆக்குவது எந்த வகையிலும் சரியானதாக அமையாது.
நன்றி : தினமணி
Friday, November 20, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment