Friday, November 20, 2009

தங்கத்தின் மீதான முதலீடு குறைகிறது

தங்கத்தில் முதலீடு செய்வது, இந்திய அளவில் 42 சதவீதம் குறைந்துள்ளதாக, உலக தங்க கவுன்சில் அமைப்பு கூறியுள்ளது. இந்தியாவில் தங்கத்தின் விலை உச்சத்தில் சென்று கொண்டிருக்கிறது. சுத்த தங்கத்தின் நேற்றைய மதிப்பு, 10 கிராமுக்கு, ரூ.17 ஆயிரத்து 280 என்ற அளவிலும், ஆபரணத் தங்கத்தின் மதிப்பு, 10 கிராமுக்கு, ரூ.16 ஆயிரத்து 220 என்றும் 'எகிறி' உள்ளது. இதையடுத்து, ஆபரணத் தங்கத்தின் மீதான முதலீடு மிகவும் குறைந்துள்ளது.உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது என்றாலும், கடந்த ஜூலை செப்டம்பர் மாதங்களில், 34 சதவீதம் குறைந்துள்ளது என்று, உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் மீதான முதலீடு குறைந்துள்ளது என்று கூறியுள்ள கவுன்சில், இதுவரை 111.6 டன் மட்டுமே இந்தியா வாங்கியுள்ளது என்றும் கூறுகிறது. இது கடந்த ஆண்டை விட, 42 சதவீதம் குறைவு. ஆபரணத்தைத் தவிர, மற்ற பயன்பாட்டுக்கான தங்கம் வாங்குவதும், 67 சதவீதம் குறைந்துள்ளது.உலக அளவில், இந்த ஆண்டுக்கான முதல் ஒன்பது மாதங்களில் 800 டன் தங்கம் விற்பனை ஆகியுள்ளது. எனினும், கடைசி மூன்று மாதங்களில் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது.இந்தியாவுக்கு நேர் எதிராக, சீனாவில் தங்கத்தின் மீதான முதலீடு 12 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆபரணத் தங்கத்தின் மீதான முதலீடு 8 சதவீதம் அதிகரித்துள்ளது. ஒன்பது மாதங்களில் 120 டன் தங்கம், சீனாவில் விற்பனை ஆகியுள்ளது. மேலும், 24 கேரட் சுத்த தங்கம் வாங்குவோர் எண்ணிக்கையும் சீனாவில் அதிகரித்துள்ளது.சீனாவின் அபரிமித வளர்ச்சியை இது காட்டுவதாக, பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நன்றி : தினமலர்


No comments: