Saturday, November 21, 2009

இறக்கை கட்டி பறக்குது தங்கம் விலை ஒரே மாதத்தில் சவரன் ரூ. 1,040 அதிகரிப்பு

ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரன் 12 ஆயிரத்து 944 ரூபாய்க்கு விற்றது. ஒரே மாதத்தில் மட்டும் சவரனுக்கு 1,040 ரூபாய் அதிகரித்துள்ளது.ஆபரணத் தங்கம் விலை கடந்த சில ஆண்டுகளாக ஏறுமுகமாகவே உள்ளது. சிறிது விலை குறைந்த மாதிரி தெரிந்தாலும் நேற்று முன்தினம் காலை சவரன் 13 ஆயிரத்தை தொட்டது. மாலையில் சவரனுக்கு 24 ரூபாய் குறைந்து, 12 ஆயிரத்து 976 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,622 ரூபாய்க்கும் விற்பனையானது.நேற்று காலைசவரனுக்கு 64 ரூபாய் வரை குறைந்து, 12 ஆயிரத்து 912 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,614 ரூபாய்க்கும் விற்றது. மாலையில் சவரனுக்கு மேலும் 32 ரூபாய் அதிகரித்து, 12 ஆயிரத்து 944 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,618 ரூபாய்க்கும் விற்பனையானது.கடந்த அக்டோபர் 20ம் தேதி சவரன் 11 ஆயிரத்து 904 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,488 ரூபாய்க்கும் விற்றது. கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி சவரன் ஒன்பதாயிரத்து 24 ரூபாய்க்கும், ஒரு கிராம் 1,128 ரூபாய்க்கும் விற்பனையானது. ஒரு மாதத்தில் சவரனுக்கு 1,040 ரூபாய் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.இது குறித்து சென்னை மொத்த நகைகள் சங்க துணைத் தலைவர் உதயகுமார் கூறுகையில், 'எப்போதெல்லாம் அமெரிக்க டாலரின் மதிப்பு குறைகிறதோ? அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கிறது. முதலீடுக்கு தங்கம் மிகவும் பாதுகாப்பானதாக அனைவரும் கருதுகின்றனர்.சமீபத்தில், ரஷ்யா 30 டன் தங்க பிஸ்கட்டுகளை விற்றது. அதை வெளியே போகாமல் இருக்க மத்திய வங்கி வாங்கிவிட்டது. பங்குச் சந்தை, அமெரிக்க டாலர் வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. சிறிது குறைந்ததுபோல் தெரிந்தாலும், தொடர்ந்து ஏறுமுகமாகவே உள்ளது' என்றார்.
நன்றி : தினமலர்


No comments: