Saturday, November 21, 2009

மரணப் பாதைகளா இந்தியச் சாலைகள்?

உலகில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா, மக்கள்தொகையில் மட்டுமல்ல; சாலை விபத்துகளில் உயிரிழப்போர் எண்ணிக்கையிலும் 2-ம் இடம். தேசிய நெடுஞ்சாலை, விரைவுச்சாலை, மாவட்டச் சாலைகள், பிற மாவட்டச் சாலைகள், கிராமச் சாலைகள் என மொத்தம் 33.10 லட்சம் கிலோமீட்டர் சாலைகளைக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழக்கின்றனர். 10 லட்சத்துக்கும் அதிகமானோர் காயமடைகின்றனர். விபத்துகளால் மட்டும் ஆண்டுக்கு ரூ. 5,500 கோடிக்கு இழப்பு ஏற்படுகிறது.

வாகனப் பெருக்கத்துக்கு ஏற்ப சாலைகளை மேம்படுத்த பல ஆயிரம் கோடி ரூபாய் செலவழித்தாலும், விபத்துகள் குறையவில்லை. காரணம், சாலையை எப்படிப் பயன்படுத்துவது என்ற அடிப்படை விஷயம்கூட பொதுமக்களை முறையாகச் சென்றடையவில்லை என்பதுதான்.

இந்திய தண்டனைச் சட்டம்-1860, மோட்டார் வாகனச் சட்டம்-1988, சாலைக் கட்டுப்பாட்டு விதிகள்-1989 ஆகியவற்றின் மூலம், சாலை விதிகளை மீறுவோர், விபத்து ஏற்படுத்துவோர், முறையற்ற வாகனங்களைப் பயன்படுத்துவோர்மீது நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், இவை அனைத்துமே, இந்தியச் சாலைகளில் நிகழும் விபத்துகளைக் கட்டுப்படுத்தப் போதுமானதாக இல்லை.

விபத்து ஏற்படுத்தி ஒருவரது உயிரிழப்புக்குக் காரணமானவருக்கு அளிக்கப்படும் அதிகபட்சத் தண்டனையே, இரு ஆண்டுகள் சிறை மற்றும் அபராதம். ஆனாலும், இந்தத் தண்டனையும் பெரும்பாலான வழக்குகளில் கிடைப்பதில்லை; அபராதத்தோடு நின்றுவிடுகிறது. இதனால், சாலை விதி மீறல்கள் குறித்து எவரும் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை.

விபத்துகளைக் கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளும் மத்திய அரசு, இதற்கென சட்டத்திருத்தம் மேற்கொள்ள பல இடங்களில் இருந்தும் சட்ட முன்வரைவு பெற்று பரிசீலிக்கிறது.

இதில் ஒன்று, நீதிபதி ஏஆர். லட்சுமணன் தலைமையில் அமைக்கப்பட்ட குழு, தனது சட்ட முன்வரைவுப் பரிந்துரைகளை ஆகஸ்ட் 2009-ல் அளித்தது.

அதில், சாலைகளில் வேகமாக, மக்களை அச்சுறுத்தும் வகையில் தாறுமாறாகச் சென்று விபத்து ஏற்படுத்தி, உயிர்ச்சேதம் விளைவிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு ஐபிசி - 304ஏ பிரிவில் அதிகபட்சம் 2 ஆண்டு என உள்ள சிறைத் தண்டனையை 10 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும். இதை, ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவாகவும் மாற்ற வேண்டும்.

ஐபிசி - 304பி எனும் புதிய பிரிவை ஏற்படுத்தி, விபத்தில் உயிர்ச்சேதம் அல்லது காயம் ஏற்படுத்தி, நிற்காமல் சென்றுவிடும் வாகன ஓட்டுநர்களுக்கு 7 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்க வேண்டும்.

மேலும், ஐபிசி - 279ஏ என்ற புதிய பிரிவை ஏற்படுத்தி, அதிக பாரம் ஏற்றி, மக்கள் உள்ள பகுதிகளில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு 6 மாதங்கள் சிறை, அபராதம் விதிக்க வேண்டும் எனச் சட்டவிதிகளைக் கடுமையாக மாற்ற பரிந்துரை செய்துள்ளது.

இதற்கிடையே, "செல்போன் பேசியபடி வாகனத்தில் சென்றால் 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்க வேண்டும்' என வெங்கய்யநாயுடு தலைமையில் மக்களவைக்குழு அளித்த முன்மொழிவை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளக்கூடும் எனும் எதிர்பார்ப்பும் தற்போது நிலவுகிறது.

ஏற்கெனவே பல சட்டங்கள் இருந்தும் அதை அமல்படுத்துவதில் குறைபாடு இருக்கும்போது, மேலும் கடுமையான சட்டங்களை விதித்து என்ன பயன்? அதை அமல்படுத்துவது யார்?

அதிவேகம், அதிக பாரம், சாலைகளில் இயங்கத் தகுதியற்ற வாகனங்கள், குடித்துவிட்டு, போதை மருந்து உட்கொண்டு வாகனம் ஓட்டும் ஓட்டுநர், விதிகளைப் பின்பற்றாதது, உரிமம் பெறத் தகுதியற்ற ஓட்டுநர் எனப் பல காரணிகள் விபத்துகளுக்கு வழிவகுக்கின்றன.

இவற்றைக் கட்டுப்படுத்த, கண்காணிக்க போதிய அடிப்படை வசதிகளை மேற்கொள்ளாமல் வெறுமனே சட்டத்தைக் கடுமையாக்குவதால் மட்டும் பயன்கிடையாது.

வாகன ஓட்டுநர்களுக்கு மட்டுமன்றி, பொதுமக்களுக்கும் சாலைகளை எப்படிப் பயன்படுத்துவது என்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவது முதல் அவசியம்.

வாகன உற்பத்தி இடத்திலேயே வேகத்தைக் கண்காணிக்கும் கருவி பொருத்துவது, சாலையில் இயங்கும் அனைத்து வாகனங்களிலும் இக்கருவியைக் கட்டாயம் பொருத்தச் செய்வது, கட்டாயக் காப்பீடு, தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டண வசூல் மையங்களில் வாகனம் நிற்கும்போது, அதன் அதிக எடையைக் கண்டறிய எடை மேடை அமைப்பது போன்றவை தேவை.

குடித்துவிட்டு, செல்போன் பேசியபடி, சீட் பெல்ட், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவோர், விதிமீறுவோரைக் கண்காணிக்க ஆங்காங்கே வாகனத் தணிக்கையில் ஈடுபட வேண்டும்.

அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்து, அவற்றை ஒருங்கிணைத்து, மாவட்டத் தலைநகரில் கண்காணிப்பு, கட்டுப்பாட்டறை அமைக்க வேண்டும்.

விதிமீறலில் ஈடுபடுவோர் மீது வழக்குத் தொடர்வது, அந்த வழக்குகளை விரைந்து விசாரித்து, அபராதம், தண்டனை விதிப்பது ஆகியவற்றுக்கென பிரத்யேக நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். விபத்துகளால் ஏற்படும் பொருள், மனித இழப்புகளைவிட, இவற்றுக்கு அதிகம் செலவாகிவிடாது.

இதில் முக்கியமாக, இவை அனைத்தையும் அமல்படுத்தும் பணியை போலீஸôரிடம் அளித்துவிடக் கூடாது. தமிழகத்தில் உள்ள ஒரு லட்சம் காவலர்களுக்கு நிகராக, போக்குவரத்துக்கு எனத் தனியாக காவலர்கள் நியமிக்க வேண்டும். இருக்கும் பற்றாக்குறையில், மீண்டும் வழக்கமான போலீஸôரிடம் இப் பணிகளை ஒப்படைப்பதால், விதிமீறல்கள் தொடரச் செய்யுமே தவிர, குறையாது.

இந்தியச் சாலைகளில் பயணிப்போரின் உயிர் என்றாவது ஒருநாள் சாலையில் பறிபோகும் எனும் அச்சத்தைப் போக்குவதும், சாலை விதிமுறைகளைச் சரியாகப் பின்பற்றி பயணிப்போரின் உயிருக்கு உத்தரவாதம் அளிப்பதும் அரசின் கடமை. இதற்கான அடிப்படை வசதிகளை அதிகப்படுத்தி, சட்டத் திருத்தங்களைச் செய்வது அவசியமாகும்.
கட்டுரையாளர் : எஸ். ஜெய்சங்கர்
நன்றி : தினமணி

1 comment:

fundoo said...

விபத்துல ஆளைக் கொன்றவருக்கு தண்டனை கம்மி என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் இந்த அளவிற்கு தண்டனை கடுமையாக்கும் அளவிற்கு சாலைகள் தரம் கொண்டவைகளா? நம்மூர் சாலைகள் அதன் பிரிவுகள், வளைவுகள் என்பதில் ஒரு ஒழுங்கு கிடையாது. நிறைய Blind Points. அதில மக்களுக்கும் விழிப்புணர்வு கிடையாது. என்ன செய்யறது சொல்லுங்க.